இதுவரை மலேசிய சினிமா அப்படி என்ன சாதித்திருக்கிறது எனக் கேட்டால் ஒட்டுமொத்த வரலாற்றையும் நீண்டு கவனிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு விதமான பாதிப்புக்களுக்குள்ளாகிய மலேசிய சினிமா அதன் தனித்துவத்தை அடைந்திருக்கிறதா என்பதே மிக முக்கியமான கேள்வி. ஒரு நிலப்பரப்பின் சினிமாவுக்கான தனித்துவம் என்றால் எப்படியிருக்க வேண்டும் எனக்கேட்டால், அந்த மண்ணின் வாழ்க்கையை, அங்குள்ள ஆதி உணர்வை, கலாச்சார வெளியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே முதன்மை பதிலாக இருக்கும்.
இதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்.
இதற்கு முதலில் ஓர் இயக்குநர் அந்த மண்ணைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த மண்ணின் ஒட்டுமொத்த அரசியலின் வரலாற்றையும் கலாச்சாரத்தின் வேர்களையும் அறிந்தவராக அல்லது தேடல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனால் மட்டுமே அந்த மண்ணையும் மண் சார்ந்த வாழ்வையும் அடையாளம்காட்ட முடியும்.
மலேசியாவை எடுத்துக்கொண்டால் காலனிய காலக்கட்டத்தில் இந்த மண்ணை ஊடுருவி, இங்குள்ள கலாச்சார வெளிக்குள் தங்களின் வாழ்க்கையை நிறுவிக்கொண்ட தமிழர்களின், அல்லது தேசிய அரசியலுக்குள் ஒரு சிறுபாண்மை மக்களாகத் தன்னைப் பிரதிநிதித்துவம் வகுத்தக் கொண்ட தமிழர்களின் வாழ்க்கையை இங்குள்ள கலைகள் ஆவணப்படுத்தியதுண்டா? அப்படி இல்லையெனில் மானுட கலை எனச் சொல்லப்படுவதெல்லாம் வெகுஜன கூட்டங்களை குஷிப்படுத்த மட்டும் பாவிக்கப்பட்டதோடு அல்லாமல் அதிகார வர்க்கத்தின் வீட்டு நாய்களைப் போல ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மலேசியாவின் அசலான மக்களின் வாழ்வையும் குடிப்பெயர்ந்து அடுத்த தலைமுறைகளை உருவாக்கிக்கொண்ட மக்களின் வாழ்வையும் வெளிப்படுத்தும் ஒரு தேசிய சினிமா இதுவரை இங்கு உருவாக்கப்பட்டதில்லை என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும். யஷ்மின் அமாட் உட்பட அனைவரும் தேசிய சினிமாவுக்கான எந்த முயற்சியிலும் இதுவரை தங்களையும் தங்கள் கலை படைப்புகளையும் முன்னெடுத்ததில்லை என்பதே உண்மை.
மத சார்பற்ற சினிமாவை உருவாக்குவதன் வழி மதத்தீவிரங்களின் மூலம் ஏற்படும் சமூக வேற்றுமையை அழித்தொழித்துவிடலாம் எனக் கற்பனை செய்து தன்னுடைய கலை படைப்புகளை ஒரு நல்ல சினிமாவுக்கான அடையாளத்துடன் படைத்துக் காட்டி அதைச் சர்வதேச அளவிற்குக் கொண்டு போய் கவனம் பெறச் செய்த மலேசியப் படைப்பாளி யஷ்மின் அமாட் மலேசியா சினிமாவுக்கான ஒரே சிறந்த முன்னுதாரணமாகக் குறிப்பிட முடிகிறது. ஆனால் அவராலும் மலேசியாவில் ஒரு தேசிய சினிமாவை உருவாக்க முடியாமல் போயிற்று. மதத்திற்கு வெளியே வைக்க முயன்ற அவரது முயற்சி மீண்டும் ஒரு மதம் என்கிற அதிகாரத்திற்குள்ளே தன்னுடைய அரசியலைப் பரப்பிவிடுகின்றன. மதசார்பற்ற ஒரு வெளிக்குள் ஒரு தூய்மையான இஸ்லாத்தை உருவாக்கிப் பார்ப்பதே யஸ்மின் கலை படைப்புகளின் அரசியலாகத் தேங்கி நிற்கின்றன. இங்கு ஏற்கனவே மதம் சார்ந்த தீவிரங்களும் அதன் விளைவாக சமூக இடைவெளிகளும் நிறையவே தோன்றிவிட்டன. நல்ல சினிமாவுக்கான முதிர்ச்சியான பயிற்சியுடைய மூத்தப் படைப்பாளி யஸ்மின் அவர்களுக்கும் மதத்தின் மீதான அடிப்படைவாத சிந்தனை தவிர்க்க முடியாத கருத்தாக்கமாகப் படைப்புகளுக்குள் பரவியிருக்கின்றன.
அவருடைய படைப்புகள் ஏன் தேசிய சினிமாவுக்கான தனித்துவங்களை இழந்திருக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது. முதலாவதாக அவர் உருவாக்க நினைக்கும் உலகம் என்பது ஒரு பரிசுத்தமான மிகத் தூய்மையான இஸ்லாமியத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் அவர்களையெல்லாம் முக்கியத்துவப்படுத்தக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆளுமையாக இஸ்லாம் திகழ வேண்டும் என்ற கருத்தையே அவர் முன்வைக்கிறார். இதற்கு மலேசியாவின் அரசியல் பின்புலம் தெரிந்திருந்தால் மட்டுமே யஸ்மின் அமாட் திரைப்படங்களிலுள்ள கலைத்தன்மைமிக்க முயற்சிகளை மீறிய மாற்றுப்பார்வையை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
Talenttime படத்தில் இந்திய மாதுவின் தம்பியைக் கொலை செய்த மலாய்க்காரக் குடும்பம் அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி ஒரு பெருமைப்படக்கூடிய மிகத் தைரியமான முயற்சி என்று விமர்சிக்கப்பட்டது. இப்படி விமர்சிப்பதே இங்கு இனங்களுக்குடையே அழுத்தமாக விழுந்துகிடக்கும் மத இடைவெளியையே சுட்டிக்காட்டுகிறது. யஸ்மின் அமாட் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாம் மன்னிப்புக் கேட்டு ஓர் இந்தியரின் காலில் விழுவது எத்தனை புனிதமான செயல் என்றும் எத்தனை பெரிய மீறல் என்றும் படத்தில் காட்டியிருப்பார். அதை ஒரு சாதாரணமான நிகழ்வாக யாரும் கடந்துவிடக்கூடாது என்பதற்காக அக்காட்சி பலவிதமான நாடங்கத்தனங்களுடன் இறைத்தன்மைமிக்கதாகவும் படைக்கப்பட்டிருக்கும். இஸ்லாம் தன்னுடைய புனிதத்தை உலகிற்குக் காட்டுவதற்காக எத்தகைய மீறலையும் மேற்கொள்ளும் என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுப்பதாகவே கருதப்படுகிறது. மதங்கள் இனங்கள் என்பதுக்கு அப்பாற்பட்ட ஒரு மானுடத்தன்மையை அது இழந்ததற்கு அவர் அக்காட்சியின் மீது காட்டிய இலட்சியவாத மதச்சிந்தனையே அடிப்படை காரணம். மதத்தின் புனிதத்தை மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் எத்தகைய கலை முயற்சியைக் கொண்டிருந்தாலும் ‘தேசிய சினிமா’ என்ற வகைக்குள் கொண்டு வரவே இயலாது.
அடுத்ததாக, “Sepet” திரைப்படம் கவனிக்கத்தக்க படமாகும். மலாய்க்காரப் பெண்மணியும் சந்தையில் திருட்டு வி.சி.டி விற்பனை செய்யும் இளைஞனும் காதலிப்பதை மையப்படுத்தி ஒரு மதசார்பற்ற சினிமா என்ற பாவனையில் யஸ்மின் அப்படத்தைப் படைத்திருப்பார். ஆனால் அப்படத்தின் மையம் மதத்தின் ஒழுங்குகளை நேர்த்தியாகப் பாதுகாத்திருக்கிறது என்று சொல்லலாம். கடைசிவரை அவர்களை ஒன்று சேரவிடாமல் சீன இளைஞனை சாலை விபத்தில் கொன்றுவிடுவார். மரணம் ஒரு எதிர்பாராத விதியாக அவர்களைப் பிரிப்பதாகக் காட்டி ஒரு முக்கியமான மலேசிய அரசியலைப் பேசக்கூடிய படத்தை சாதாரணக் காதல் படமாக ஆக்கிவிட்டிருந்தார். அவர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய தடையாக மாற வேண்டிய மதத்தைக் குறித்த எல்லா பிரக்ஞையையும் அழித்துவிட்டு, ஒரு தேசிய காதலை முதன்மையாகக் காட்டி ஒரு போலியான கற்பனைவாதத்தை இறுதியாக மக்கள் மத்தியில் திணிக்க முற்படுகிறார்.
மதம் விட்டுக் காதலிப்பது என்பது இஸ்லாத்தைத் தவிர மற்ற எல்லா மதங்களிடையேயும்கூட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விசயமாக இருக்க, அதன் அசாத்தியங்கள் என்ன என்பதை மலேசிய அரசியலைப் பின்புலமாக வைத்துப் பேச வேண்டியுள்ளது. இந்து மதம் என எடுத்துக்கொண்டாலே காதல் என்பது சாதிய ரீதியில் கவனிக்கப்பட்டு வழிநடத்தப்படுகிறது. சாதிகள் இல்லை என ஒரு வேடத்தை வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளலாமே தவிர மலேசியர்களிடையே சாதி சிந்தனை உயிர்ப்புடன் ஜீவித்துக்கொண்டுத்தான் இருக்கின்றது. அதே போல யஸ்மின் அமாட் மையப்படுத்திய இந்தக் காதல் கதை மலேசிய அரசியல் பிரச்சனையை மதப்பிரச்சனையை முதன்மைப்படுத்தி நேர்மையுடன் படைக்கப்படிருக்க வேண்டும். மதம் என்ற ஒன்றை எப்படி இரு இனத்தைச் சேர்ந்தவர்கள் கடந்து ஒரு வாழ்வை உருவாக்கிருக்க முடியுமா அல்லது அது சாத்தியமா என விவாதித்திருக்க வேண்டும்.
ஆனால், மதம் ஏதோ எந்தப் பிரச்சனையும் இல்லாததைப் போலவும், இஸ்லாத்தைப் பொருத்தவரையிலும் மதம் மாறி காதலிப்பது ஒரு பிரச்சனையே இல்லை என்பது போலவும் கற்பிக்க முயன்றுள்ளார். அது சமக்கால அரசியலில் வைத்துப் பார்த்தால் மிகவும் போலித்தனமான கற்பனையாகும். உண்மையில் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் ஓர் இஸ்லாமியப் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் அவர் கட்டாயம் மதம் மாறியாக வேண்டும். இதுதானே இங்குள்ள சட்டம்? பிறகென்ன யஸ்மின் மரணம் அவர்களைப் பிரிப்பது போல சால்ஜாப்பெல்லாம் செய்ய முயன்றுள்ளார். இது ஒரு கலைஞனுக்குரிய நேர்மையா? சமகால அரசியலிலிருந்து தப்பித்து ஓடி அதற்கு மாற்று விசயமாக இயற்கையையும் விதியையும் காட்டிப் புலம்புவது கலையாக இருந்தாலும் விமர்சிக்கப்படக்கூடியதே ஆகும்.
அடுத்ததாக, தமிழில் எடுக்கப்பட்ட சினிமாவையெல்லாம் மொத்தமாக வைத்துப் பார்த்தால், தீபக் மேனன், சஞ்சய் குமார் பெருமாள் தவிர்த்து வேறு யாரையும் குறிப்பிட முடியவில்லை. இவர்களும் தேசிய சினிமாவை உருவாக்க முயன்றுள்ளார்களா எனப் பார்த்தால், அவர்கள் ஒரு நல்ல சினிமாவை நோக்கியே இப்பொழுதுதான் நகர்ந்துள்ளார்கள். இதுவே முக்கியமான முயற்சிகள்தான். மேலும் தனக்கென அடையாளத்தை நிறுவியப்பின்பே மலேசிய தமிழர்களின் வாழ்க்கையை அரசியல், கலாச்சாரப் பின்புலத்துடன் படைப்பாக்கி சொல்லக்கூடிய அளவில் ஒரு தேசிய சினிமாவை ஆவணப்படுத்துவார்கள் என நம்புவோம். தொடர்ந்து தேசிய சினிமாவுக்கான தன்மைகளை அடுத்த கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன்.
கே.பாலமுருகன்
thanks to vallinam.com
No comments:
Post a Comment