Saturday, July 28, 2012

ஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக்கா


கடந்த 20ஆம் திகதி மலாக்கா மாநிலம் சென்றிருந்தேன். பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு.ராஜா அவர்களின் மூலம் மலாக்கா ஆசிரியர்களுக்கு படைப்பிலக்கியம் பட்டறையை வழிநடத்த வாய்ப்புக் கிடைத்திருந்தது. காலையிலேயே 7.00மணிகெல்லாம் மலாக்கா செண்ட்ரலை வந்தடைந்திருந்தேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு ஆசிரியர் ராஜா பள்ளியிலிருந்து கிளம்பி என்னை அழைத்துப் போவதற்கு வந்தார்.

பள்ளி வளாகத்திலேயே குளித்துக்கொள்ளலாம் என்றதும் எனக்கு அசூசையாக இருந்தது. இருந்தபோதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டேன். அங்கிருந்து அவருடைய பள்ளியான பத்தாங் மலாக்காவிற்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் எடுத்தது. மலாக்கா காடுகளைக் கடந்து பாதை நீண்டுகொண்டே போனது. மிகவும் சிறிய பாதை. இரு வழிக்கு ரொம்பவும் நெருக்கடியாக இருந்தது. பத்தாங் மலாக்கா பற்றியும் மலாக்கா தமிழ்ப்பள்ளிகள் பற்றியும் திரு.ராஜா சொல்லிக்கொண்டே வந்தார். தமிழ் மொழி சார்ந்து இவ்வருடத்தில் அங்கு நிகழும் முதல் நிகழ்ச்சி இதுவென்று தெரிவித்தார். மற்றபடி அவர் தன் சக நண்பர்களுடன் இணைந்து தனிப்பட்ட முறையில் பல நிகழ்ச்சிகளை அங்குச் செய்து வருகிறார்.

Friday, July 27, 2012

வாலைப் பிடிப்பவர்களும் வாலாட்டிகளும்

கதை, கவிதை, கட்டுரைகள் என ஆயிரம் ஆயிரமாக எழுதித் தள்ளிய பிறகும் ஒரு தனிப்பட்ட எழுத்தாளனின் வாலைப் பிடித்துக்கொண்டு அவனைக் கொண்டாடித் திரிவதுதான் இலக்கியத்தின் மூலம் ஒருவன் ஆகக் கடைசியாகக் கற்றுக்கொள்ளும் பாடமா? அப்படியானால் வாலைப் பிடித்துக்கொண்டிருக்கும் அந்த இலக்கியவாதியின் நிலைப்பாடுத்தான் என்ன? ஒரு பிம்பத்தின் மீது மிகையான பற்று வைத்துக்கொண்டு அவனுக்காகச் சேவையாற்றுவது, பிரச்சாரம் செய்வது, அவனுக்காக விவாதிப்பது, எல்லாவற்றுக்கும் அவனை மட்டுமே பரிந்துரைப்பது என ஒரு தனி மனிதனின் அத்துனைச் சக்தியும் அறிவும் சுரண்டப்பட்டு எவனோ ஒருவனின் காலடியில் அடமானம் வைக்கப்படுகின்றன. இதைப் பலவேளைகளில் நான் உணர்ந்து அதிலிருந்து மீண்டிருக்கின்றேன்.

Saturday, July 14, 2012

பில்லா 2 – அறத்திற்கு வெளியே



அஜித் படம் என்பதால் வழக்கம்போலவே ஆங்காங்கே ஆர்பாட்டம், பாலாபிஷெகம் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். தன் சொந்த உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஓர் அடையாளத்தைத் தேடிக்கொண்ட நடிகர் அஜித். சினிமா துறையில் எந்தச் சிபாரிசும் இன்றி பின்னணியும் இன்றி கதாநாயகத்துவத்தை உருவாக்கிக்கொண்டவர். பில்லா படமும் அவருடைய கதாநாயகத்துவத்தை வழிப்படும் ஒரு படைப்புத்தான். கமல் எப்படித் தன் ஆற்றலை, தன் அறிவை தானே கொண்டாடிக்கொள்ள படம் எடுப்பாரோ அதே போல பில்லாவும் அஜித்தின் பிம்பத்தை உயர்த்திக் காட்டப்படும் தருணங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது.

பில்லா படத்தின் நேர்மை மிக முக்கியமான விவாதிக்க வேண்டிய விசயமாகும். எந்த இடத்திலும் ‘பில்லா’ தான் நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ நியாயப்படுத்தவில்லை.

Thursday, July 12, 2012

சிறுகதை: வீட்டைத் தொலைத்தவர்கள்


நான் மணியத்தின் மகன் சிவா

அப்பா பெயர் மணியம். அப்படிச் சொன்னால் சிலருக்கு மட்டுமே தெரியும். வழக்கமாக அவரைக் ‘கட்டை மணியம்’ என்றுத்தான் அழைப்பார்கள். வழியில் சந்தித்தத் தெரிந்தவர்களிடம் ‘கட்ட மணியத்தெ பாத்தீங்களா?” எனக் கேட்டேன். தெரியாதவர்களிடம், “ தலை சொட்டெ, இலேசா கூன் வலைஞ்சிருக்கும், கட்டையா இருப்பாரு... சொந்தமா பேசிக்கிட்டு இருப்பாரு..அவரெ எங்காவது பாத்தீங்களா?” எனக் கேட்டேன். அங்கு யாரும் யாரையும் தேடுபவர்கள் கிடையாது. அதிர்ச்சியைத் தரக்கூடிய எந்தவொரு கேள்வியையும் அவர்கள் சந்திக்கத் தயாரில்லை. அதிர்ச்சியான விசயங்கள் அவர்களின் நேரத்தில் சிலவற்றை பிடுங்கிக்கொள்ளும் என்கிற அச்சம். சாரை சாரையாகக் கடந்து போகும் வாகனங்களுக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் கட்டை மணியம் எங்கு இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்?

எங்குத் தேடியும் அப்பா கிடைக்கவில்லை. வெகுநேரம் மங்கிய வெளிச்சத்துக்கு மத்தியில் நகரம் முழுக்கவும் தேடி அலைந்துவிட்டு சீன ஆப்பே கடையில் வந்து அமர்ந்துவிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை வெறும் விட்டுவிட்டு மின்னும் வெளிச்சமும் இருளும்தான். சாலைகள் பாம்பு போல பளபளவென நெளிந்தன. வெள்ளை காற்சட்டை, கோடு போட்ட நீல சட்டை. அப்பா வீட்டிலிருந்து வெளியேறும்போது அணிந்திருந்த உடையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திவிட்டு வருவோர் போவோரைக் கவனித்துக்கொண்டிருந்தேன்.

Wednesday, July 4, 2012

தினக்குரல் ஞாயிறு பதிப்பில் நேர்காணல்


“படைப்பிலக்கியத்தின் குரல் கூர்மையானது”

1.   உங்களுக்குள் ஓர் இலக்கியவாதி இருப்பதை எப்போது உணர்ந்தீர்கள் பாலா?

பதில்: என்னுடைய இலக்கிய செயல்பாடு 15 வயதிருக்கும்போது நயனத்தில் பிரசுரமாகிய ஷோபியின் உண்மை கதையின் வாசகனாக இருக்கும்போதே தொடங்கிற்று எனத்தான் சொல்ல வேண்டும். வெள்ளிக்கிழமை வந்ததும் நயனம் இதழ் வாங்குவதற்காகச் சைக்கிளில் நகரத்தை நோக்கி பயணிப்பேன். ஆனால் அப்பொழுது நான் ஒரு வாசகனாக மட்டுமே இருந்தாலும்கூட கதை மீதான ஆர்வம் மிகுதியாக இருந்தது. கதைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். புனைவு மீதான அழுத்தமான ஈடுபாடு எனக்குள் இருக்கும் ஓர் இலக்கியவாதியை மெல்ல வளர்த்திருக்கிறது. 2004ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்த பிறகு சிறுகதைகள் எழுதி வெற்றிப்பெற்று இலக்கிய வெளிக்குள் எனக்கொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டேன். கல்லூரியில் நடைப்பெற்ற ‘இளவேனில்’ நூல் வெளியீட்டு விழாவில் என் முதல் சிறுகதைக்கான பரிசும் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. என்னுடைய தமிழ் விரிவுரையாளர் திரு.ப.தமிழ்மாறன் அவர்களே எனக்குள் இருக்கும் எழுத்தாற்றளுக்கு வலு சேர்த்தவர். எனக்குள் நான் கண்டடைந்த மாற்று மனம் நிஜ உலகிற்குள்ளிருந்து புனைவை நோக்கி அப்பொழுதிலிருந்தே செயல்படத் துவங்கியது.

2.   உங்களுடைய இலக்கியப் பயணத்திற்கு தங்களின் குடும்ப சூழல் உறுதுணையாக (இப்போதும் அப்போதும்) இருந்ததா?