Saturday, January 12, 2013

2012 ஆம் ஆண்டின் சிறந்த கதாநாயகன் : அப்புகுட்டி



நடிகர் அப்புகுட்டி பற்றி எழுதியே ஆக வேண்டும். ஏறக்குறைய அழகர்சாமியின் குதிரை மூலம் கதாநாயக வழிப்பாட்டு உணர்வைக் கொஞ்சமாய் அசைத்துப் பார்த்திருக்கும் கதாபாத்திரம் அப்புகுட்டி. குள்ளநரிக்கூட்டம், வெண்ணிலாகபடி குழு, சுந்தரப் பாண்டியன் போன்ற படங்களில் துணைக்கதாப்பாத்திர வேடங்களில் நடித்த அப்புகுட்டி இப்பொழுது மன்னாரு என்ற படத்தில் கதாநாயகனாக மீண்டும் நடித்திருக்கிறார். 'அழகர்சாமி குதிரை' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்று சாதித்துள்ளார். இதுவரை தமிழ் சினிமா ஹீரோ என்றால் எப்படியிருக்க வேண்டும் என்ற கற்பிதங்களை உருவாக்கி வைத்திருக்கிறதோ அதற்கு முரணான ஓர் உடலமைப்புத்தான் அப்புகுட்டியினது தோற்றமும் முகமும்.


விடுப்படவே முடியாத சாபமாக தமிழ் சினிமாவின் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் கதாநாயகப் பிம்பங்களை மறுகண்டுபிடிப்பு செய்தே ஆக வேண்டும் என்ற சூழல் வரும்போது 'அப்புகுட்டி' போன்ற கதைப்பாத்திரத்தை சிறந்த கதாநாயகனின் வருகை எனச் சொல்லலாம். முடிந்தால் கதாநாயக உணர்வையே நாம் விட்டொழித்தாக வேண்டும் இருப்பினும் இது போன்ற முயற்சிகள் வரவேற்க்கத்தக்கதே. அப்புகுட்டியை கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குனர் சுசிந்திரனைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அப்புகுட்டியின் உடல் அசைவுகள் என்பது கொஞ்சமும் பாசாங்கற்றது. ஒரு கிராமத்து வெகுளியின் அசலான வெளிப்பாடு. அழகர்சாமி குதிரை படம் அப்புகுட்டியின் உடல் மொழி ஆற்றலைத் தமிழில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. கிராம வாழ்வின் எல்லைகளையும் கலாச்சார நுண்ணுர்வுகளையும் மொத்தமாகத் திரட்டி அப்புக்குட்டியின் உடல் மொழியிலும் பேச்சிலும் கவனிக்க முடிகிறது. தன் சிறுவ்யது முதல் வளர்த்த குதிரை கிராமத்துக்காரர்களால் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் சைக்கிளைக் கீழே போட்டுவிட்டு கதறிக் கொண்டே ஓடிவரும்போது அங்குச் சினிமாவையும் காமேராவையும் மறக்கடித்துவிடுகிறார். பாராட்டுகள் அப்புகுட்டி.


 - கே.பாலமுருகன்

No comments: