1
கனவுக்கும் நிசத்திற்கும் மத்தியில்
எத்தனை முறை திரும்புவது?
ஒவ்வொரு கணமும் ஆயிரம் கைகள்,
ஆயிரம் குரல்கள்.
தப்பித்து மீள்கையில்
பலநெடுங்காலத்தின் நோய்படுக்கை.
2
ஆதாரமற்ற இரவொன்றில்
எந்த அறிவிப்புமின்றி
நிகழ்ந்துவிடுகிறது.
2
நிர்வாணமாய் அவிழ்ந்துகிடக்கின்றன
கடைசி நிமிடங்கள்.
3
நிர்கதியாய் தொங்கின
கடைசியாய் உடுத்திய உடையும்
அதில் மிச்சமாய் வீசிய வியர்வை நெடியும்.
4
புதைந்தவர்கள்
தான் விட்டு வந்தவைகளைக்
கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் கடைசி சுவாசம்
அவற்றில் ஒளிந்திருப்பதாக நம்புகிறார்கள்.
எப்பொழுதோ அவர்கள் புதைத்த எண்ணங்கள்
அவர்களின் நிலத்தடி இருளை களைத்தவாறு
அலைகின்றன.
வாழ்ந்த கணங்களில் விட்டதும் உறிஞ்சியதுமான
புதைந்தவர்களின் மிச்ச சுவாசங்களை
இருப்பவர்கள் உறிஞ்சி வாழ்கிறார்கள்.
காற்றில் உலாவும் அவர்களின் இறுதி நிமிடங்கள்
தீராத கதறல்களுடன் எஞ்சியிருக்கின்றன.
இல்லாமை என்பதைத்தவிர அவர்கள் வேறெந்த
அதியசங்களையும் விட்டுச்சென்றதில்லை.
சுற்றித்திரியும் காற்றினூடே ஓலங்கள்
தகிக்கும் சுவாசமே ஆதாரம்.
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment