Friday, February 15, 2013

பீட்சா – பயம் என்கிற மிகுந்த இடைவெளி - கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 2 -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் கடந்த வருடம் இயக்கப்பட்டு வெளிவந்து தமிழில் திரைக்கதை சார்ந்து பெரும் சலனத்தை உருவாக்கிய படம் பீட்சா. இப்படத்தை ஒரு மர்ம படம் என்றும் பேய் படம் என்றும் பரவலாக விமர்சித்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் வெகு இயல்பாகக் கடந்துப்போய் இதுவரை தமிழ் சினிமா வெளி தடுமாறிக்கிடந்த திரைக்கதை அமைப்பில் மாபெரும் முயற்சியைத் துவக்கி வைத்திருப்பதே கவனத்திற்குரியது.

விஜய சேதுபதி மிக இயல்பான தான் செய்யும் வேலையும் பொருந்தி வெளிப்படக்கூடிய கதாபாத்திரம். ஆயிரம் குழப்பங்களும் தடுமாற்றங்களும் மன அழுத்தங்களும் நிரம்பிய ஒரு நடுத்தரவர்க்க இளைஞனாகவே நடித்திருக்கிறார். இதுபோன்ற நடிப்போ அல்லது வெளிப்பாடோ தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தில் அதிகமான பிரேம்கள் இல்லை. குறிப்பிட்ட களங்களுக்கிடையே படத்தின் காட்சிகள் எவ்வித சோர்வுமின்றி நகர்வதே பெரிய வெற்றி.

பேய்களும் தேவதைகளும்

இப்படத்தின் மையச்சரடை பேய்களுக்கும் அது குறித்த திகைப்புகளுக்கும் மத்தியிலேயே வைத்து முன்னெடுத்திருக்கிறார்கள். பேய்க்கதை என்றல்ல ஆனால் பேய் குறித்த நம்பிக்கைகளை மையப்படுத்திய கதை எனப் புரிந்துகொள்வதன் மூலமே பீட்சா படம் சாதாரண வணிக எல்லைகளைக் கடந்து செல்கிறது. திரைக்கதையின் வாயிலாக பேய்ப்படம் எனப் கதையோட்டத்தின் உச்சம்வரை தடுமாறாமல் போய்க்கொண்டிருக்கும் படம் இறுதியில் மனிதனின் மூலதனமான பயம், பேய்கள் போன்ற விசயங்களைத் தழுவி மீட்படைகிறது. எப்படி மீட்படைகிறது?

Friday, February 8, 2013

கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து


விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு சினிமாவை நோக்கி கலைத்தனமிக்க மதிப்பீடுகளை வைத்திருந்தால், ஒருவேளை கலை மக்களின் மனத்தைப் பாதிக்கும் என்றும், சமூகத்தைக் கூர்போடும் வேலையையும் செய்யும் எனப் பயப்படுவதில் அர்த்தமுண்டு. நமிதா உதட்டைக் கடிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஆண்கள் அதிகமான கற்பழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என நம்பும் அரசு கமல் என்கிற தனிமனிதனின் அரசியல் பிழைகள் சமூகத்தையும் இஸ்லாமிய சகோதரர்களின் பகையையும் சேகரித்துவிடும் எனப் பயப்படுவதற்குப் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றால் நம்புவதற்கில்லை.

அப்படித் தடை என்று வந்துவிட்டால் தமிழ் சினிமாவின் எத்தனையோ காட்சிகளையும் வசனங்களையும் தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? இரட்டை அர்த்தமிக்க ஆபாச வசனங்களே சினிமாவில் கூடாது என்ற தணிக்கைவிதி இருக்கிறது. அப்படியானால் முதலில் நகைச்சுவை நடிகர் சந்தானத்தையே தமிழ் சினிமாவிலிருந்து தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? அதற்கும் பின்னோக்கி போனால் எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் இரட்டை அர்த்தமிக்க வசனங்களிலேயே பேசி வாழ்ந்தவர்கள் அல்லவா?

Monday, February 4, 2013

டேவிட்: திரைவிமர்சனம் - முன்முடிவுகளும் கலையும்


டேவிட் திரைப்பார்வை: அநேகமாகப் பல வலைத்தல விமர்சகர்களும் முகநூல் நண்பர்களும் அதிகமாக வெறுத்தொதுக்கிக் கொண்டிருக்கும் படமாக டேவிட் இருக்கக்கூடும். முதலில் நாம் சினிமா குறித்த முன்முடிவுகளை மேலும் விரிவாக ஆராய வேண்டும். சினிமாவை நோக்கிய ஒரு சாமான்யனின் எதிர்பார்ப்புகள் என்ன?

 1. படம் அவனை மகிழ்ச்சிப்படுத்தவதாகவே இருக்க வேண்டும். சோகமும் சோம்பலும் மற்ற மனித உணர்வுகளின் உச்சங்களும் அவனுக்கு அநாவசியம்.
 2. பொழுதைக் கழிக்க மட்டுமே அவன் சினிமாவைத் தேடி வருகிறான்.
3. சினிமா மிக எளிமையானதாக இருக்க வேண்டும். அதிகம் மூளை உழைப்பைப் பார்வையாளனிடமிருந்து கோராத சினிமாவே வேண்டும். இவையனைத்தும் சினிமாவை கலை என்பதிலிருந்து நகர்த்திக் கொண்டு போய்விட்டது.

இப்பொழுது சினிமா என்பது நிச்சயம் கலை இல்லை எனும் முன்முடிவுகளை அழுத்தமாக நம்புகிறவர்களிடம் இப்படம் குறித்து நான் விமர்சிக்கவே தேவையில்லை. அவர்களுக்குரிய படமே இல்லை.

Sunday, February 3, 2013

Life of Pi - பசியும் வாழ்தலும்


“நியதி எனும் பேருண்மைக்கு முன் அனைத்து உயிரினங்களும் சந்தர்ப்பவாதிகளே’

அங் லீ இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் உலகமெங்கும் பரவலாக விமர்சிக்கப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது. நிறைய பேர் ஏன் அங் லீ இந்தியாவைப் படத்திற்கான பின்புலமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்கள். அது கலைஞனின் தேர்வுக்கும் மனநிலைக்கும் தேடலுக்கும் உட்பட்டது. இதுபோன்ற கேள்விகளைவிட படம் எதனை நோக்கி ஒரு பார்வையாளனை இழுத்துச் செல்கிறது அல்லது எப்படி அவனுடைய நம்பிக்கைகளுடன் விவாதம் செய்கிறது என்பதே விமர்சனம்.

கதைச்சுருக்கம் / கதைக்களம்

பிரான்ஸ் காலனிய ஆட்சிக்குக் கீழ் இருந்த பாண்டிச்சேரி பார்ப்பதற்கே ஒரு குட்டி பிரான்ஸ் மாதிரித்தான் இருக்கும். பாண்டிச்சேரியில் மிருகக்காட்சி சாலையை வைத்துப் பராமரித்து வரும் ஒரு குடும்பத்தின் கடைசி மகனான ‘பை’ என்பவனின் கதைத்தான் இது. பை-யின் அப்பா வைத்திருக்கும் மிருகக்காட்சி சாலையின் நிலத்தை உள்ளூர் அரசாங்கம் மீட்கவே, மிருகக்காட்சி சாலையை விற்றுவிட்டு மிருகங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பை-யின் அப்பா கனடாவிற்குச் செல்லத் தீர்மானிக்கிறார். இடையில் மிருகங்களை நல்ல விலைக்கு விற்றுவிடுவதாகத் திட்டம். இந்தியாவை விட்டுச் செல்ல ‘பை’க்கு மனமில்லை. ஜப்பான் கப்பல் ஒன்றில் மிருகங்கள் அனைத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்படும்போது பை சக்தியின்றி அழுகிறான்.