Friday, February 15, 2013

பீட்சா – பயம் என்கிற மிகுந்த இடைவெளி - கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 2 -

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் கடந்த வருடம் இயக்கப்பட்டு வெளிவந்து தமிழில் திரைக்கதை சார்ந்து பெரும் சலனத்தை உருவாக்கிய படம் பீட்சா. இப்படத்தை ஒரு மர்ம படம் என்றும் பேய் படம் என்றும் பரவலாக விமர்சித்தார்கள். ஆனால், அவற்றையெல்லாம் வெகு இயல்பாகக் கடந்துப்போய் இதுவரை தமிழ் சினிமா வெளி தடுமாறிக்கிடந்த திரைக்கதை அமைப்பில் மாபெரும் முயற்சியைத் துவக்கி வைத்திருப்பதே கவனத்திற்குரியது.

விஜய சேதுபதி மிக இயல்பான தான் செய்யும் வேலையும் பொருந்தி வெளிப்படக்கூடிய கதாபாத்திரம். ஆயிரம் குழப்பங்களும் தடுமாற்றங்களும் மன அழுத்தங்களும் நிரம்பிய ஒரு நடுத்தரவர்க்க இளைஞனாகவே நடித்திருக்கிறார். இதுபோன்ற நடிப்போ அல்லது வெளிப்பாடோ தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. இப்படத்தில் அதிகமான பிரேம்கள் இல்லை. குறிப்பிட்ட களங்களுக்கிடையே படத்தின் காட்சிகள் எவ்வித சோர்வுமின்றி நகர்வதே பெரிய வெற்றி.

பேய்களும் தேவதைகளும்

இப்படத்தின் மையச்சரடை பேய்களுக்கும் அது குறித்த திகைப்புகளுக்கும் மத்தியிலேயே வைத்து முன்னெடுத்திருக்கிறார்கள். பேய்க்கதை என்றல்ல ஆனால் பேய் குறித்த நம்பிக்கைகளை மையப்படுத்திய கதை எனப் புரிந்துகொள்வதன் மூலமே பீட்சா படம் சாதாரண வணிக எல்லைகளைக் கடந்து செல்கிறது. திரைக்கதையின் வாயிலாக பேய்ப்படம் எனப் கதையோட்டத்தின் உச்சம்வரை தடுமாறாமல் போய்க்கொண்டிருக்கும் படம் இறுதியில் மனிதனின் மூலதனமான பயம், பேய்கள் போன்ற விசயங்களைத் தழுவி மீட்படைகிறது. எப்படி மீட்படைகிறது?

பீட்சா படத்தின் கடை முதலாளியின் பெண்ணுக்குப் பேய் பிடித்திருப்பதாகக் காட்டுகிறார்கள். நம் வாழ்நாளில் நம்மால் அதிகபடி புரிந்துகொள்ள முடியாமல் விதி, நம்பிக்கைகள், கடவுள் போன்ற விசயங்களிடம் சட்டென நாம் ஒப்படைத்துவிடும் பிரச்னைகளில் பேய்ப்பிடித்தலும் ஒன்று. பேய் பிடித்தவர்களால் உறங்க முடியாது, ஆகையால் கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றியிருக்கும். பேய்ப்பிடித்தவர்களால் தலையை ஒழுங்காகச் சீவியிருக்க முடியாது; ஆகையால் தலைவிரிக் கோலமாய் இருப்பார்கள். பேய்ப்பிடித்தவர்களால் தெளிவான குரலில் பேச முடியாது; ஆகையால், கரடு முரடான குரலில் கத்துவார்கள். எல்லாம் வகையில் பொருத்தமான ஒரு கதைப்பாத்திரமாகத் தோன்றி பேய் இருப்பதை நம்ப வைக்கும் காட்சிகள் வருகின்றன. தேவதைகள் குறித்து நமக்கு எப்பொழுதும் பல கற்பனைகள் இருக்கும். கதைகளின் வழி தேவதைகள் நம் ஆழ்மனத்தைச் சூழ்ந்திருக்கிறார்கள். இது சிறுவயது முதல் நம் சமூகத்தால் வழங்கப்பட்டவை. எப்படிப்பட்ட பகுத்தறிவு சிந்தனைகளுடன் நான் நம்மை மறு உருவாக்கம் செய்திருந்தாலும் ஆழ்மனம் அவ்வப்போது நம் நம்பிக்கைகளுடன் விவாதித்துக் கொண்டேயிருக்கும். இது தொடர் உரையாடல். இதிலிருந்து நாம் தப்பிக்கவே முடியாது.

அப்படிப்பட்ட விவாதங்களின் வழி உறங்கிப் போன நம் ஆழ்மன தேவதைகள் அவ்வப்போது கிளர்ந்தெழுந்து நம் சேகரித்து வைத்திருக்கும் பகுத்தறிவான சிந்தனைகளுடன் போராடிக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மனநிலையை உசுப்பிவிடுவதுதான் பீட்சா படத்தின் முயற்சி. முதலில் பேயை நம்பாத அல்லது மறுக்கும் நம் எண்ணங்களை நமக்கு வழங்கபட்ட பழங்காலத்து நம்பிக்கைகளை உயிர்ப்பிப்பதன் மூலம் பயமுறுத்துகிறது. சட்டென எந்தக் கேள்வியும் எழுப்பாமல் பேயை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறோம். பீட்சா படத்தின் துவக்கக் காட்சியிலேயே நம்முடைய நனைவு மனத்தை பேய்க் குறித்த ஆராச்சிகளுக்குள் புகுத்திவிடுகிறார்கள்.

எரிந்து சாம்பலான ஒரு நூலகம். பலர் அந்தத் தீ விபத்தில் எரிந்து இறந்துவிடுவதால் அங்குப் பேய்கள் நடமாடுவதாகச் சொல்லப்படுகிறது. அதை ஒரு குழு நேரடியாகச் சென்று ஆராய்வதைப் படத்தில் காட்டுகிறார்கள். பேய்களை ஏன் ஆராய வேண்டும்? அது பேய்களை ஆராய்வது அல்ல சம்பவங்களின் மூலம் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பயங்களை ஊடுருவி ஆராய்வது எனப் பொருள் கொள்ளலாம். நேசனல் ஜோகராப்பி சேனல்கூட இது போன்ற பேய்கள் ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது.

படத்தின் முதல் துவக்கக் காட்சியே பேய்கள் இருக்கிறதென நம்மை நம்ப வைக்கின்றது. மறந்துபோன நம் பேய் குறித்த பயங்களைக் கிளறிவிடுகின்றது. அப்படியென்றால் இது ஒரு சாதாரணப் பேய் படம் என்ற இலட்சியங்களுடன் ஒரு பார்வையாளனுக்கு முன் விரிகிறதா என்றால் நிச்சயம் இல்லை. திரைக்கதை நம்மை வென்றெடுக்க அது தொடுக்கும் முயற்சிகள் இவை. ஒரு மாபெரும் வித்தியாசமான திரைக்கதைக்கு முன் நாம் மெல்ல தயார் செய்யப்படுகிறோம். ஏமாற்றப்படுகிறோம். 3 மணி நேரம் படத்துடன் இணைந்து நாம் சிக்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் அவை. இதைப் படத்தின் இறுதி காட்சிகளிலேயே புரிந்துகொள்ள முடிகிறது.

கடை முதலாலியின் வீட்டிற்குச் செல்லும் சேதுபதி பேய்ப்பிடித்திருக்கும் அவர் பெண்ணைச் சந்திக்கிறார். சேதுபதிக்கு ஏற்கனவே பேய் என்றால் பயம். அவருடன் அவர் வீட்டில் தங்கியிருக்கும் அவர் காதலியோ பேய்கள் குறித்த ஆய்வில் உள்ளவர். இரவில் அன்றாடம் பேய் படத்தையே பார்க்கிறார்கள். சேதுபதியைச் சுற்றிய வாழ்வு பேய் என்ற எண்ணங்களால் நிரம்பியிருக்கின்றன. ஆகவே, அவர் பேய்களுக்குப் பயப்படுவது இயல்பான விசயமே. பேய்ப்பிடித்த அப்பெண் சட்டென சேதுபதியைக் கோடூரமாகப் பார்ப்பது பயத்தை மேலும் அதிகரிக்கிறது. பார்வையாளனாக நாமும் அக்காட்சியைக் கண்டு மிரள்கிறோம். பிறகு, ஒருநாள் கடை முதலாளி தான் பதுக்கி வைத்திருக்கும் வைரங்களை ஒளித்து வைத்துத் தன் வீட்டில் கொடுத்துவிடும்படி சேதுபதியிடம் சொல்கிறார். வழியில் ஒரு பெரிய வீட்டில் பீட்சா கொடுக்கச் செல்கிறார் சேதுபதி. இங்கிருந்துதான் படத்தின் திரைக்கதை கூர்மையாகின்றது. பீட்சா கொடுக்கச் சென்ற வீட்டுக்குள் சேதுபதி மாட்டிக் கொள்கிறார்.

மர்மங்களும் திகைப்பான சம்பவங்களும் தொடர்ந்து நம்மை பயமுறுத்துகின்றன. சேதுபதியுடன் மிக இயல்பாக நாமும் அந்த வீட்டுக்குள் சிக்கிக் கொள்கிறோம். எப்படியும் வெளியேற முடியாது மிக மிரட்டலான எலி பொறி அது. திடீரென அந்த வீட்டுத் தொலைப்பேசியில் சேதுபதியின் காதலி பேசுகிறார். உனக்கெப்படி இந்த எண் கிடைத்தது என நடுக்கத்துடன் சேதுபதி கேட்க, நான் உன் தொலைப்பேசிக்குத்தானே அழைத்திருக்கிறேன் என அவர் காதலி சொல்கிறார். மன இறுக்கம் படம் போடும் மேலும் அடர்த்தியான முடிச்சுகளுக்குள் சிக்கி உக்கிரமடைகின்றது.

இறுதியில் தப்பித்தோடும் சேதுபதி அவர் முதலாளியிடம் நடந்ததைக் கூறுகிறார். ஏற்கனவே பயந்த சுபாவம் கொண்ட சேதுபதியையும், முதலாளியின் பெண் அவரைக் கொடூரமாகப் பார்த்த விதத்தையும் இணைத்து சேதுபதியின் நிலைமையை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். அவன் கொண்டு போன அனைத்தும் அந்த வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவதால் மேற்கொண்டு வைரங்களைப் பற்றி கேட்கவும் முடியாமல் முதலாளி தடுமாறுகிறார். அதன் பிறகு திக் பிரமையில் இருக்கிறார் சேதுபதி. ஒவ்வொன்றையும் பார்த்து மிரண்டு போகிறார். அவருடன் வேலை செய்யும் நண்பர்கள் அவரைச் சமாதானப்படுத்த முடியாமல் தடுமாறுகிறார்கள்.

திரைக்கதை எழுச்சி

இதுவரை பேய்கள் தேவதைகள் பயங்கள் என நகர்ந்த படம் இறுதி காட்சியில் இதற்கு முன் பின்னிய அனைத்து வலைகளிலிருந்தும் மீண்டு புதிய எல்லையை அடைகிறது. துவக்கக் காட்சியிலிருந்து இறுதிவரை படம் உருவாக்கிய தன்னுடைய பார்வையாளனை கடைசியில் ஏமாற்றி திகைப்படைய செய்கிறது. நீ அல்ல என் பார்வையாளன் எனப் படம் அவனை மீள்கனவுக்குள் ஆழ்த்துகிறது. இது கொஞ்சமும் படத்தில் நாம் எதிர்ப்பார்க்காத தருணம்.

பேயும் அல்ல பிசாசும் அல்ல அனைத்துமே சேதுபதியும் அவன் காதலியும் முதலாளியால் கொடுக்கப்பட்ட வைரங்களைக் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம். ஏற்கனவே அந்தப் பேய்ப்பிடித்த பெண் சேதுபதியைப் பார்த்ததையும், ஏற்கனவே பேய்கள் நடமாடுவதாகச் சொல்லும் கொலைகள் நடந்த பெரிய வீட்டையும் இணைத்து ஒரு கதையைச் சேதுபதியும் அவன் காதலியும் உருவாக்குகிறார்கள். அதன் மீது அவர்களின் நாடகத்தைச் சாமர்த்தியமாக நடத்துகிறார்கள். கடைசியில் திருடப்பட்ட வைரங்களுடன் அவனுடைய காதலி அனு வெளிநாடு சென்றுவிட சேதுபதி இங்குள்ளவர்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டுப் புறப்படுவதாகத் திட்டமிடப்படுகிறது.

சமூகத்தின் பேய்கள்

பீட்சா ஒரு மர்ம படம் என்பதிலிருந்து விலகி ஒரு தரிசனத்தை நமக்குக் காட்டும் படமாக மாறுவது அதன் திரைக்கதை உச்சத்தால் மட்டுமல்ல. மாறாக இச்சமூகத்தின் பயத்தின் மீது அது முன்வைக்கும் விமர்சனமே ஆகும். பேய்கள், தேவதைகள் என சர்வகாலமும் இச்சமூகம் ஒரு பயத்தை உருவாக்கிக் கொண்டு காரணங்கள் அறிய முடியாத பல விசயங்களுக்கு முன் தன்னை ஒப்படைத்துவிடுகிறது. அதிகபடி நம் மனங்கள் அடையும் சிக்கல்கள் குறித்து ஆராயாமல் அல்லது யோசிக்க முடியாமல் தனக்குப் புரியாத ஒன்றின்மீது பழிகளைச் சுமத்துகிறது. அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் ஏற்கனவே உள்ள நம்பிக்கைகளை இம்மி பிசகாமல் பின்பற்றுவதன் மூலம் அவற்றை நிஜமாக்குகின்றது. வெகு இயல்பாக மனித பயங்களைப் பயன்படுத்தி சாமர்த்தியமாகத் தப்பிகின்றான் சேதுபதி. பயங்கள் மிகுந்த இடைவெளிகள் உடையது. எதைக் கொண்டும் பயந்தவனை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அத்தகையதொரு பயம் என்ற விரிந்த இடைவெளிகளில் தன் கதையை இட்டு நிரப்பி கவனம் பெறுகின்றது பீட்சா. தமிழ் சினிமா உலகின் முக்கியமான பாய்ச்சல்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
பீட்சா – பயம் என்கிற மிகுந்த இடைவெளி

No comments: