Friday, February 8, 2013

கமலின் சினிமா அரசியலையும் மத நல்லிணக்க உரையாடல்களையும் முன்வைத்து


விஷ்வரூபத்தின் தடைக்குப் பிறகுத்தான் நாம் கமலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கில்லை. விஷ்வரூபம் படத்தின் தடைக்குப் பின்னணியில் வெறும் மதம் மட்டும் அல்ல அரசியலும் கலந்திருப்பதாக இன்று விரிவாக விவாதிக்கப்படுகிறது. சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பாவிக்கும் தமிழக அரசு ஏன் அதைக் கண்டு அஞ்ச வேண்டும்? அரசு சினிமாவை நோக்கி கலைத்தனமிக்க மதிப்பீடுகளை வைத்திருந்தால், ஒருவேளை கலை மக்களின் மனத்தைப் பாதிக்கும் என்றும், சமூகத்தைக் கூர்போடும் வேலையையும் செய்யும் எனப் பயப்படுவதில் அர்த்தமுண்டு. நமிதா உதட்டைக் கடிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஆண்கள் அதிகமான கற்பழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார்கள் என நம்பும் அரசு கமல் என்கிற தனிமனிதனின் அரசியல் பிழைகள் சமூகத்தையும் இஸ்லாமிய சகோதரர்களின் பகையையும் சேகரித்துவிடும் எனப் பயப்படுவதற்குப் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை என்றால் நம்புவதற்கில்லை.

அப்படித் தடை என்று வந்துவிட்டால் தமிழ் சினிமாவின் எத்தனையோ காட்சிகளையும் வசனங்களையும் தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? இரட்டை அர்த்தமிக்க ஆபாச வசனங்களே சினிமாவில் கூடாது என்ற தணிக்கைவிதி இருக்கிறது. அப்படியானால் முதலில் நகைச்சுவை நடிகர் சந்தானத்தையே தமிழ் சினிமாவிலிருந்து தடை செய்திருக்க வேண்டும் அல்லவா? அதற்கும் பின்னோக்கி போனால் எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி போன்றவர்கள் இரட்டை அர்த்தமிக்க வசனங்களிலேயே பேசி வாழ்ந்தவர்கள் அல்லவா?



வன்முறையை எந்த வகையிலுமே நியாயப்படுத்தும் காட்சிகளை எடுக்கக்கூடாது என்பது தணிக்கைக் குழுவின் அடுத்த விதி. அப்படியென்றால் விஜய் நடிக்கும் படங்களில் எந்தச் சண்டை காட்சிகளையும் தமிழக அரசு அனுமதிருக்கக்கூடாது அல்லவா? அப்படியிருக்க தணிக்கைக் குழுவிற்கும் அரசுக்கும் என்ன பகை? தணிக்கைக் குழு யார் சார்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது? தன் விதிகளுக்குப் புறம்பான காட்சிகளைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாத தணிக்கைக் குழு அதேபோல பிற மத உணர்வுகளைத் தூண்டுவதாக நம்பப்படும் விஷ்வரூபத்தையும் அனுமதித்துவிட்டது. சரி, தணிக்கைக் குழு எப்பொழுதோ தன் நேர்மையை இழந்துவிட்டது ஆகையால் அதைப் புறக்கணித்துவிடலாம்.

ஆனால், இதுநாள்வரையில் தணிக்கைக் குழுவால் அனுமதிக்கப்பட்ட  தன் விதிகளுக்கு முரணான காட்சிகளையும் படங்களையும் தமிழக அரசு ஒரு கேள்வியும் எழுப்பாமல் விட்டுவிட, இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை எழுப்பியதும் உடனே விஷ்வரூபத்தைத் தடை செய்தது. (நான் விஷ்வரூபம் படத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.கவனிக்கவும். அதன் மீதான தடை உருவாக்கப்பட்ட விதத்தையே பேசுகிறேன்) ஏன் தமிழக அரசு முதலில் தணிக்கைக்குழுவை விசாரிக்கவில்லை அல்லது சட்டத்திற்கு முன் நிறுத்தவில்லை?

அடுத்ததாக, விஷ்வரூப படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள் 'உன்னைபோல ஒருவன், தசாவதாரம்' போன்ற படங்களின் போது எங்கே போயிருந்தது? தசாவதாரம் படத்தில் விருப்பத்திற்குக் குழந்தைகளைப் பெற்றுக் குவிப்பவர்கள்தான் இஸ்லாமியர்கள் எனும் கமலின் கேலியை ஏன் அவர்கள் அப்பொழுது பொருட்படுத்தவில்லை? உன்னைப் போல ஒருவன் படத்தில் தீவரவாதத்தை முன்னெடுக்கும் இஸ்லாமியர்களைச் சுட்டுத்தள்ள வேண்டும் என்ற கருத்திற்கு முன்  என்ன மாதிரியான வாதத்தை அவர்கள் முன்னெடுத்தார்கள்? அல்லது கமலின் மீதான ஒட்டுமொத்த வெறுப்பின் தூண்டுதலாக இதை எடுத்துக்கொள்ளலாமா? சிந்திக்க வேண்டிய விசயம். பஷிர் என்கிற ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவர் தொலைகாட்சி உரையாடல் ஒன்றில் விஷ்வரூபம் படத்தில் காட்டப்பட்டிருக்கும் தாலிபான் அப்கானிஸ்தான் தொடர்பான தீவிரவாத உருவாக்கம் குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால் அல்குர்ரானை அவமதித்திருப்பது கண்டனத்திற்குரியது எனச் சொல்கிறார். இஸ்லாமியர்களே தீவிரவாதிகள் எனக் காட்ட முயலும் கமலின் பார்வை சார்புடையது என்றால் இஸ்லாமிய தீவிரவாதம் உருவாக்கம் குறித்து ஒப்புக்கொள்ளும் பஷிர் போன்றவர்கள், இனம் ஒடுக்குமுறை என்பதைத் தாண்டி மதத்தின் புனிதத்தையே கெட்டியாகப் பிடித்துக் கொள்வதன் மூலம் சார்புத்தன்மையையே வெளிப்படுத்துகிறது. கமலின் விஷ்வரூபத்தில் மொத்த நியாயமும் இல்லையென்றாலும் அதை எதிர்ப்பவர்களின் தர்க்கநிலை என்ன என்பதே என் கேள்வி.

எந்த இடத்தில் இருந்துகொண்டு அவர்கள் தன் சிறுபான்மை மக்களுக்காகப் பேசுகிறார்கள் எனக் கவனிக்க வேண்டியுள்ளது. ஒரு சமூகம் எப்படித் தன் எதிர்ப்புணர்வைக் காட்டுகிறது, ஓர் இனம் எப்படித் தீவிரவாதம் என்கிற சர்வதேச மதிப்பீட்டுக்குள் வந்துவிழுகிறது, ஏன் உலக அரசியல் அமெரிக்கச் சார்பாக மாறிவிடுகிறது, இப்படிப் பல விசயங்களை அவர்கள் தீவிரமாக விவாதித்து விஷ்வரூபத்தின் மீது விமர்சனம் வைத்திருக்க வேண்டும் அல்லவா? அதென்ன மொத்த எதிர்ப்பையும் அல்குர்ரானை மட்டும் காரணம் காட்டி விலக நினைப்பது? அல்குர்ரானை அவமதிப்பதைவிட இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாகக் காட்டி அமெரிக்கார்களை உத்தமர்களாகக் காட்ட முயல்வதுதான் மிகப்பெரிய அமெரிக்கச் சார்பு மனப்பான்மை என நினைக்கிறேன்.

இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் நலனுக்காக வாதிடும் அமைப்புகள் அனைத்தும் மதவாத சிந்தனைக்குள்ளிருந்து தன் கருத்துகளை உற்பத்தி செய்வதன் விளைவாகவே இன்றைய விஷவரூபம் குறித்த உரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பிரச்சனை என்ன? இஸ்லாமியர்கள் கொலை செய்யலாம் ஆனால் கொலை செய்யும்போது அல்குர்ரான் வசனத்தை உச்சரிப்பது தவறாகும். இஸ்லாமியர்கள் நியாயமே இல்லாமல் தூக்கிலிடப்படலாம் ஆனால் தூக்கிலிடப்படும்போது ஏன் பின்னணியில் கடவுளின் நாமம் உச்சரிக்கப்படுகிறது? இதுதான் மதத்தின் அடிப்படையில் மனித உரிமையைப் புறக்கணித்துவிட்டு எழுப்பப்படும் கேள்வியாகும். மனித உரிமையை முன்வைத்து அடுத்தக்கட்டத்திற்குள் கொண்டு போயிருக்க வேண்டிய உரையாடல்கள் மீண்டும் மீண்டும் மத நல்லிணக்கம் பாதிக்கப்படாமலிருப்பதையே மையப் பேச்சாகக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

அடுத்ததாக கமல். இரண்டு வருடத்திற்கு முன்பே கமலின் நடிப்பை நான் விமர்த்திருக்கிறேன். அவர் ஒரு நடிகர் என்பதாலேயே முதலில் அவருடைய நடிப்பை விமர்சிப்பதுதான் சிறந்த விமர்சன அணுகுமுறை. 4 வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்த கமல் இறுதிவரை சினிமாவை நம்பியே வாழ்ந்துகொண்டிருக்கும் நல்ல கலைஞன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கு சினிமாவைத் தவிர வேறொன்றும் தெரியாது எனச் சமூகத்திடம் ஒப்புக்கொண்ட சினிமா கலைஞன் அவர். அவரை அங்கு வைத்துத் தகர்க்க நினைப்பது அவர் வயிற்றில் அடிக்கும் செயல். அவர் கருத்தை நாம் விமர்சிக்கக் கடமைப்பட்டிருக்கும். ஆனால், நடிப்பில் கமல் என்றுமே திறமையானவர்தான்.

நாயகன் படத்தின் மூலம் உருவான கமலின் உடல்மொழி என்பது அசலானதல்ல. மார்லன் பிராண்டோவைப் பார்த்து உருவாக்கிக்கொண்டவை. காட் பாதர் படத்தின் நகல்தான் நாயகன். அதன் மூலமே கமலின் அடுத்த பரிணாமம் தமிழ் சினிமாவுலகில் நிகழ்கிறது. தமிழ் சினிமாவை உலக திரைப்படக் கவனத்திற்குக் கொண்டு போகவேண்டும் என்கிற சிந்தனை பாய்ச்சல் கமலுக்குள் சிறுக சிறுக தலைத்தூக்கிய காலக்கட்டம். சினிமாவைப் பற்றி சிந்திப்பதையே அவர் கடமையாகக் கொண்டிருந்தார். குறிப்பாகக் கமலிடம் துணிச்சல் இருந்தது.

தமிழகத்தில் நிகழும் ஏதேனும் ஒரு சம்பவத்தைத் தன் சினிமாவில் விமர்சிப்பதும், அதைக் காட்சியப்படுத்து கேலி செய்வதும் கமல் அதிகபடியாகத் தன் சினிமாவில் கைக்க்கொள்ளும் உத்தி. இது கலைஞனின் சுதந்திரம். உலக நிகழ்வோடு அல்லது சமக்கால அரசியலோடு/சமூகத்தோடு தன் படைப்பின் வழி இணைவதும் அது குறித்து கருத்துரைப்பதும் படைப்புச் சுதந்திரம். இதை யாராலும் மறுக்க இயலாது. ஆனால், வரலாற்றின் ஒரு பகுதியோடு தன்னை இணைத்துக்கொள்ள முயலும் கலைஞன், சட்டென ஒரு முன்முடிவுக்குள் ஒரு அரசியல் பிழைக்குள் சிக்கிக் கொண்டு அதையே தன் வாழ்நாள் கொள்கையாகப் பின்பற்றத் துவங்குவதும் ஒரு விபத்தே. சமூகத்தின் மீதும் அதன் நிகழ்வுகள் மீதும் தத்துவார்த்த அக்கறை கொண்ட கமல் அப்படியொரு விபத்தில் சிக்கிக் கொண்டு உருவானதுதான் அவருடைய இஸ்லாமிய பார்வை என நான் நினைக்கிறேன்.

அன்பே சிவம் படத்தில் தமிழ் சினிமா உலகில் இன்னும் பேச முற்படாத உலகமயமாக்கல் குறித்தும், தொய்ந்துபோன கம்னியுஸ்ட் சித்தாத்த மறுபார்வையையும் புகுத்திய கமல்தான் உலக அரசியலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்போது தனக்குரிய மிகச்சிறிய இடத்தைச் சினிமாவின் மூலம் பிடித்துக் கொண்டு கருத்துரைக்கத் துவங்கிவிடுகிறார். அங்கிருந்து அவருடைய பலவீனமும் கண்டறியப்பட்டுக் கடுமையாகத் தாக்கவும் படுகிறார். கலைஞன் தனக்கு எட்டிய இடத்தில் சரணடைந்து பொதுமக்களுக்கும் அதைப் பரிந்துரைப்பது தவிர்க்க வேண்டிய விசயம். அவனுடைய படைப்பின் மூலம் சமூகம் அரசியலையும் வரலாற்றையும் பார்க்க முனைகிறது. ஆகவே, தனக்கிருக்கும் தத்துவார்த்த சிக்கலையும் பலவீனமான அரசியல் பார்வையையும் அவன் சீர்படுத்துக்கொள்வதே நல்லது. ஒருவேளை கமல் அப்படியொரு நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டால் கட்டாயம் தமிழ்நாட்டின் சினிமா வரலாற்றை மாற்றியமைக்கக்கூடிய ஆளுமையை வளர்த்துக்கொள்ள முடியும்.

குறிப்பு: கமலின் இஸ்லாமிய சித்தரிப்பும் , இஸ்லாமிய மத அமைப்புகளின் மதக்குறிக்கோளும் இரண்டுமே விமர்சனத்திற்குரியவைத்தான். இக்கட்டுரை கமலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கமற்றவை.

கே.பாலமுருகன்

No comments: