Saturday, March 16, 2013

பரதேசி திரைவிமர்சனம் :கவனிக்கப்படாத ஒரு துயரவெளி


'ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக அமர்ந்து நாக்கின் ருசிக்காக நாம் உறிஞ்சும் ஒரு தேநீர் என்பது வெறும் நீராலும் தேயிலையாலும் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. அதில் ஓடுவது வலுக்கட்டாயமாக உறியப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தம் சகோதரர்களே.'

பாலாவின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் இது. 1939ஆம் ஆண்டில் சாலூர் கிராமத்திலிருந்து பச்சை மலைக்கு ஆசை வார்த்தைகள் காட்டி தேயிலை வேலைக்காக அழைத்துச் செல்லப்படும் தமிழர்களின் கதை இது. புலம்பெயர்ந்த ஓர் இனத்தின் வரலாற்று படமாக இதை அடையாளப்படுத்தலாம். இன்று இந்தியாவைத் தவிர்ந்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களே. கூலி வேலைக்காக நாடு விட்டு நாடு வந்து உழைப்புச் சுரண்டப்பட்டு உறிஞ்சி சக்கையாக வெளியே வீசப்பட்டவர்களின் அவலக் குரலைப் பாலா எவ்வித அதிகார நெடியும் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளார். 19ஆம் ஆண்டின் தொடக்கம்தான் தமிழர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்ட காலக்கட்டம். அவர்கள் எப்படிக் கொத்தடிமைகளாக்கப்பட்டு பின்னர் சிறுக சிறுக முதலாளிய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை வரலாற்று பிழையில்லாமல் பாலா தமிழ் சினிமாவிற்குக் கொடுத்துள்ளார். 

புலம்பெயர்வு சமூகம்

இப்படம் சாலூர் கிராமத்தில் தொடங்கி பச்சைமலையில் முடிகிறது.1939ஆம் ஆண்டின் பின்னணி என்பதே அதிக உழைப்பிற்குரியது. நிஜமான கிராம சூழலையும், பேச்சு வழக்கையும் கவனமாகக் கையாண்டுள்ளார்கள். வழக்கமான பாலா படத்தில் வரும் எந்தவித திரட்சியான மிரட்டலான கதாநாயகப் பிம்பங்கள் மிகைப்படுத்தப்பட்ட முயற்சிகள் இல்லாமல் சர்வதேச புலம்பெயர் சமூகத்தின் வலியை வரலாற்றை பதிவு செய்துள்ளார். (இந்தப் பாராட்டுக்குரிய படம் இது).

தற்போதையை இளம் சினிமா இரசிகர்களை இப்படம் கவரவில்லை எனும் குற்றசாட்டைக் கேள்வியுற்றேன். வரலாறு என்பது இளம் பருவத்திலேயே கசப்பான ஒன்றாகக் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டும் ஒரு சமூகத்திலிருந்து வரும் அடுத்த தலைமுறை வேறு எப்படி இருக்கும்? மலேசியத் தமிழர்களின் வரலாறு என எடுத்துக்கொண்டாலும் இங்கு வந்து சேர்ந்த பெரும்பாலான இந்தியர்கள் சஞ்சி கூலிகளாக இரப்பர் தொழிலுக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள்தான். பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டிலிருந்து குடும்பத்தையும் காடு மலையையும் சனங்களையும் விட்டுப் புலம்பெயர்ந்து கப்பலில் வந்து சேர்ந்த நம் முன்னோர்களின் அவலங்களை, அதிகாரத்தால் பலவகைகளில் ஒடுக்கப்பட்ட அவர்களின் குரலை இப்படம் மீட்டெடுக்கிறது.

உலகத்தில் பல்வேறு நிலங்களில் இன்று வாழ்ந்துவரும் தமிழர்கள் ஒரு காலத்தில் தன் நிலத்தை விட்டு இரண்டு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்தவர்கள். முதலாவதாக, போர் காரணமாக இடம் தேடி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள புலம் பெயர்ந்தவர்கள். அப்படி இலங்கயிலிருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்தவர்கள் இன்று பிரான்ஸ், லண்டன், கனடா போன்ற நாடுகளில் நாடற்ற இரண்டாம் பிரஜையாக வாழ்ந்து வருகிறார்கள். இரண்டாவதாகச் சொந்த நாட்டில் வாழ வழியில்லாமல் பிழைப்புத் தேடி புலம்பெயர்ந்தவர்கள். பிழைப்புத் தேடி புலம்பெயர்ந்தவர்களிலும் இரண்டு வகை உள்ளனர். முதலாவதாக, 18ஆம் நூற்றாண்டிலேயே வியாபாரம் செய்ய வெளிநாடுகளுக்குச் சொந்த முயற்சியில் கிளம்பியவர்கள். அப்படிப்பட்ட தமிழர்கள் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வந்து வாழ்ந்து இங்கேயே நிலைத்திருக்கிறார்கள். அடுத்ததாக, போர் காலக்கட்டத்தில் தான் ஆட்சியை நிறுவியிருந்த வெள்ளையர்களின் தோட்டங்களிலும் காடுகளிலும் வேலை செய்வதற்காக அழைத்துவரப்பட்டவர்கள்.

அப்படி நாடு விட்டு நாடு வந்து இரப்பர் காடுகளில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களுள், மலேசியத் தோட்டப்புறங்களில் குடியமர்த்தப்பட்டவர்களும் ஒரு குழுவினர் ஆவர். 1930களில் இங்கு வந்து சேர்ந்த தமிழர்கள் தோட்டப்புறங்களிலேயே கோவில், பள்ளிக்கூடம், கல்லுக்கடை எனும் சலுகைகள் வழங்கப்பட்டு தோட்டத்தைவிட்டு வெளியேறாதபடிக்கு உழைப்பு சுரண்டலுக்கு ஆளானார்கள். அதேபோல இந்தியாவிலும் கிராமங்களிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரு வரலாற்றின் துயரத்தை இப்படம் கதையாக்கியுள்ளது. இந்தக் கதைக்களமே இரக்கமற்ற ஒரு வரலாற்றின் பகுதியாகும். ஆகையால், படம் முடிவற்ற ஒரு துயரவெளியை நம் முன்னே காட்டிவிட்டு பெரும் அவலக் குரலுடன் முடிவுறுகிறது. வரலாறு ஒரு பைத்தியக்கார விடுதி என்று ஒரு கவிஞன் உவமைப்படுத்தியிருந்தான். ஆனால், வரலாறு கவனிக்கப்படாத குரலற்ற குரல்களின் சேமிப்புக் கிடங்கு என நினைக்க வைக்கின்றது.

கங்கானி முறை

வெள்ளையர்களுக்கு அல்லது முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் வேலையைச் செய்தவர்கள்தான் கங்கானிமார்கள். அதே சமயம் தோட்டங்களில் கூலிகளை அடிமைப்படுத்தி முதலாளிமார்களின் கைப்பிள்ளையாகவும் இருந்திருக்கிறார்கள். சொந்த மக்களையே காசுக்காக அடித்துக் கொடுமைப்படுத்தி பெரும்முதலாளிகளின் விசுவாசிகளாக இருந்து அவர்களின் காலை நக்கிப் பிழைத்தவர்கள்தான் கங்காணிகள். வெள்ளையன் தன் வேலையை எளிமையாக்குவதற்காக இந்த 'கங்காணி முறையை' அமல்படுத்தினான். பச்சைமலை தேயிலைத் தோட்டத்திலிருந்து சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆள் பிடித்துக் கொண்டு வரும் வேலையைச் செய்யும் ஒரு கங்கானியிடம்தான் சாலூர் கிராம மக்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.

ஒரு வருடம் உழைத்தால் போதும் நிறைய பணம் சம்பாதித்து விடலாம் என்கிற ஆசை வார்த்தைகளுக்குப் பலியாகின்றார்கள். கங்கானிகளின் ஆயுதமே இதுபோன்ற ஆசை வார்த்தைகள்தான். கிராமங்களில் நிலைத்திருக்கும் வறுமைத்தான் கங்கானிகளின் மூலதனம். அதன் மீது அனைத்துவிதமான நம்பிக்கைகளையும் நிறுவி ஆட்களைப் பிடித்துச் செல்லும் வேலையைச் செய்து வந்திருக்கிறார்கள். அந்தக் கங்கானியை நம்பும் கிராம மக்கள் உறவுகளை விட்டு வீட்டை விட்டு நிலத்தைவிட்டு பயணப்படுகிறார்கள். சுமார் 48 நாட்கள் காடு மலைகளைத் தாண்டி பயணிக்கிறார்கள். பீதியை உருவாக்கக்கூடிய பயணம் அது.

அனைவருக்கும் தாடி முளைத்து முகம் சோர்ந்து உடல் மெலிந்துவிடுகிறது.இடையில் ஒருவர் மயங்கி விழுகிறார். அவரை அதற்குமேல் சமாளிக்கவோ அல்லது குணப்படுத்தவோ இயலாது என்பதால் அவரைத் தூக்கி வீசிவிட்டு அவருடைய மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார்கள். பஞ்சம் பிழைக்கச் சென்ற நம் மக்களின் மீது நிகழ்த்தப்படும் ஓர் ஆரம்பக்கால வன்முறை இது. இது அடுத்தடுத்து உக்கிரம் அடையக்கூடியது. அதேபோல மலேசியாவிற்குச் சஞ்சி கூலிகளாகக் கப்பலில் கொண்டு வரப்பட்டு சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்கள் என்ற குறிப்புகள் உள்ளன. அப்படி இறந்தவர்களைக் கடலிலேயே தள்ளிவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டுகிறது. தன் தலைமுறையின் நிலையை மாற்றியமைக்கக் கிளம்பியவர்கள் பஞ்சம் பிழைக்கச் சென்ற நாட்டின் மண்ணத் தொடுவதற்கு முன்பே பிணமான கதை நெடிய துயரமானவையாகும். வரலாறு தமிழர்களுக்குக் கொடுத்த சாபம் இது.

சர்வதேச உணர்வு/ தொன்ம குறியீட்டு வாழ்க்கை

ஆதி மனிதர்களின் வாழ்வியல்முறையைப் பயிலும்போது தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் மனிதர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்று தகவல்கள் உள்ளன. அப்படி ஓரிடத்தில் இல்லாமல் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்களை 'நாடோடிகள்'என்றும் அழைத்திருக்கிறார்கள். ஆதி மனிதர்களிடமிருந்து தொடங்கிய இந்தத் தொன்ம பழக்கம் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஒரு சர்வதேச பிரச்சனையாக மாறியிருக்கிறது. வந்தேறிகளாக ஒரு நாட்டிற்குள் நுழைந்த சமூகம் மெல்ல மெல்ல அந்த நிலத்தின் பூர்வ மக்களைத் தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து அவர்களையே துரத்தியடித்த துயரமும், அவர்களைக் கொன்று குவித்த துயரங்களையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். பிரிட்டிஸ் அரசு தன் ஆட்சிக்குக் கீழ் இருந்த அனைத்து நிலங்களிலிருந்தும் அப்பாவி மக்களை அடிமைகளாக்கி அவர்களின் குறுதியை உறிஞ்சிய வரலாறும் இந்த நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்கிறது.

பாலாவின் பரதேசி நமக்குள் மறக்கப்பட்ட நம் பூர்வ மக்களின் வரலாற்று குரலை மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இந்தத் தேயிலை தோட்டத்தின் அடிமை வாழ்க்கையோடு தங்கள் சனங்களின் வரலாற்றையும் வலியையும் தொடர்புப்படுத்தி இணையும் ஒரு மகத்தான இடைவெளியைப் பாலா உருவாக்கியிருக்கிறார்.

'ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக அமர்ந்து நாக்கின் ருசிக்காக நாம் உறிஞ்சும் ஒரு தேநீர் என்பது வெறும் நீராலும் தேயிலையாலும் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. அதில் ஓடுவது வலுக்கட்டாயமாக உறியப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தம் சகோதரர்களே.'

-கே.பாலமுருகன்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்க வேண்டும்... விமர்சனத்திற்கு நன்றி...

ஜி.எஸ்.தேவகுமார் said...

அருமையானப் படம். அருமையான விமர்சனம். நன்றி நண்பா,

ஜி.எஸ்.தேவகுமார் said...

நல்ல படம். அருமையான விமர்சனம். நன்றி நண்பா..