Monday, March 25, 2013

கமலின் நினைவுகள்

கதாநாயக வழிபாட்டின் கீழ் புதைந்துபோன சினிமா சமூகத்தின் மனநிலையில் வளர்க்கப்பட்ட என்னிடமிருந்து கமல் என்கிற பிம்பத்தைப் பிரித்தெடுக்கவே முடிந்ததில்லை. முதன் முதலாக திரையரங்கில் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது 'கட்டை' கமலஹாசன் திரையில் தோன்றியதும் நாற்காலியின் மீது ஏறி கைத்தட்டினேன். அப்பொழுது எனக்கு வயது 7. வீடு திரும்பியதும் அதே போல காலை மடக்கிக் கட்டி கமலைப் போல செய்து எல்லோரின் கைத்தட்டலையும் பெற்றேன். வெறும் சிறுவனாக இருந்த காலங்களில் என்னை முற்றிலும் கவர்ந்தவர் கமல்.

இன்று ஒரு சினிமா விமர்சகனாக கமல் என்கிற தனிமனிதனின் சில வரலாற்று அரசியல் கருத்துகளின் மீது எதிர்வினையாற்றும்போது அவ்வப்போது அந்தச் சிறுவன் எனக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கின்றான். தமிழ் சினிமாவின் மோசமான கதாநாயகப் பிம்பங்களிலேயே காலத்திற்கும் தன்னை சினிமாவிற்காக மாற்றி மாற்றி தொய்ந்துபோன கமலின் மீது கூடுதல் மரியாதை உருவாகின்றது. சினிமாவிலும் நடிப்பிலும் கமல் என்றுமே நம் காலத்து கலைஞன்தான். 



எந்தத் தர்க்கம் கொண்டும் அல்லது அணுகுமுறை கொண்டும் எனக்குள் இருக்கும் கமலை விரட்டிய சிறுவனை அடக்கவே முடிந்ததில்லை. மிக மோசமாகக் கமலின் சினிமாவை விமர்சித்த கணங்களில்கூட அந்தச் சிறுவனை ஏமாற்றவே முனைந்தேன். ஏதோ சில தருணங்களில் எனக்குள் இருந்து வளர்ந்த அந்தச் சிறுவன் கமலுக்காகச் சத்தமில்லாமல் கைத்தட்டி விடுகிறான். விஷ்வரூபம் திரைப்படத்திற்காக மீண்டும் தேசிய விருதைப் பெற்ற கமலுக்கு என் பாராட்டுகள். இந்தச் சிறுவனின் அன்பு வேண்டுகோள்: உலக அரசியலின் உலக வரலாற்றின் ஏதோ ஒரு புள்ளியில் தன்னை இணைத்துக் கொள்ளத் துடிக்கும் கமல் அதை மிகச் சரியாக முன்னெடுக்க வேண்டும்.


ஹேராம் திரைப்படத்தில் 'காந்தி' என்கிற பிம்பத்தை ஒரு இந்துத்துவப் பின்னணியிலிருந்து பார்த்த அதே கமல்தான், இன்று 'ஒசாமாவை' ஒரு அமெரிக்க மனநிலையிலிருந்து பார்க்கிறார். உலக அரசியலைப் புரிந்து கொண்ட கமல் யார் சார்பிலும் அண்டி யோசிக்காமல் ஒரு நல்ல படைப்பாளியாக மேலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

கே.பாலமுருகன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அவர் அவரை புரிந்து கொண்ட அளவிற்கு, மற்றவர்களும் அவரைப் புரிந்து கொள்ள வேண்டும் - என்று அவர் நினைக்காதது அவரின் பலம்... பலவீனமும் கூட...

ஆனால் அந்த பலவீனம் இருந்தால் புதிய எண்ணங்கள் தோன்றாது என்பதும் உண்மை...