Monday, July 8, 2013

சிறுகதை: புத்தகப்பை

பெக்கான் பாரு முற்சந்தி. அடிக்கடி விபத்து நடந்து பழகிப் போய்விட்ட பகுதி. எப்பொழுதாவது யாராவது நகரத்தில் விபத்து எனச் சொன்னால் உடனே ‘பெக்கான் பாரு முச்சந்தியா?’ என்றுதான் கேட்கத் தோன்றும். எல்லாம் நகரங்களிலும் அப்படிப்பட்ட விபத்திற்குப் பேர்போன ஒரு பகுதி இருக்கும்.

எப்பொழுது வெளியே கிளம்பினாலும் ‘டேய் அந்தப் பெக்கான் பாரு முச்சந்தி பக்கம் பாத்து போ’ என்றுதான் எல்லாம் வீட்டிலும் சொல்வார்கள். நம் வீட்டிலோ அல்லது நண்பர்களிலோ யாராவது அங்கு விபத்துள்ளாகி இறந்திருக்கக்கூடும். அல்லது இடையில் தென்படுவோர் யாரிடம் கேட்டாலும் அந்த முற்சந்தியில் நிகழ்ந்த ஒரு கோரவிபத்துக் குறித்து ஆச்சரியங்களை வைத்திருப்பார்கள்.

கன்சில் சிறிய காரும், எக்ஸ்சோரா பெரிய காரும் அன்று அங்கு பெக்கான் பாரு முற்சந்தியில் மோதிக் கொண்டன. தூரத்திலிருந்து பார்க்கும்போது அதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. வழக்கமான ஒரு காலையை எந்தச் சுரணையுமின்றி கடந்தாக வேண்டும். ஏதோ ஒரு சிலர் மட்டும் காரை ஓரமாக வைத்துவிட்டு விசாரிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தனர். காலை என்பது திட்டவட்டமானது. அதில் ஒரு நிமிடத்தைக்கூட இழக்க யாரும் தயாராக இருப்பதில்லை.

ஒரு புத்தகப்பையும் சில புத்தகங்களும் மட்டும் சாலையில் சிதறிக் கிடந்ததை அனைவரும் பார்த்தப்படியே சென்றார்கள்.

1

பவித்திரா அப்படிச் செய்தது கமலாவிற்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. மீண்டும் வீட்டிற்குச் செல்லவேண்டுமென்றால் கடுமையான நெரிசலைக் கடந்தாக வேண்டும். முன்னாடி தெரியும் சமிக்ஞை விளக்கைக் கவனித்துக் கொண்டே எறும்பைப் போல ஊர்ந்து தொலைக்க வேண்டும்.

“அவ்ள பெரிய பேக்கை எப்படி நீ மறந்துட்டே? அக்கறை இருந்தாதானே?”

பவித்திரா மௌனமாக வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். வெளியில் அப்படி என்ன இருக்கிறது? அம்பாங் பாசா வரிசைக்கடைகள் மெல்ல திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. சீனக்கிழவிகள் வட்ட நாற்காலியை வெளியில் போட்டு அமரத் தயாராகினர். கடைகளுக்கு முன் அமர்ந்துகொண்டு நாள் முழுக்க வேடிக்கையின் வழி இந்த நகரத்தைத் தின்று தீர்ப்பார்கள்.

“ஆங்ங்ங் வேடிக்கை பாரு...உனக்கு வச்சிப்போச்சி” கமலாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. தன்னுடைய பரப்பரப்பான காலையின் சில அநாவசியமான நேரத்தை அவள் பிடுங்கிக் கொண்டதன் வெறுப்பு அவள் கண்களில் பிதுங்கிக் கொண்டிருந்தது.

“ஒங்கப்பா கொடுக்கற செல்லம்.. அதான்” கமலா காரின் வேகத்தைக் கூட்ட நினைத்தாலும் அடுத்ததடுத்து கார்கள் முனகிக் கொண்டிருந்தன.

பவித்திரா பயன்படுத்தும் புத்தகப்பை வகுப்பிலேயே விலையுயர்ந்தது. தரையில் இழுத்துக் கொண்டு போகலாம். பார்க்கப் பெரியதாக இருக்கும். மற்ற மாணவர்களின் புத்தகப்பையின் விலையை எல்லாம் விசாரித்துவிட்டுத்தான் அவள் புத்தகப்பை குறித்து அவளுக்குப் பெருமிதமான போக்கு ஏற்பட்டது. ஒய்யாரமாய் புத்தகப்பையை இழுத்துக் கொண்டு வருவாள். வீட்டின் விலை உயர்ந்த வெளிநாட்டு நாயை நடைக்கு அழைத்துப் போகும் பாவனை அதில் தெரியும்.

“ஏய்ய் என் பேக்கை மட்டும் தொடாதே! புரியுதா?”

“டேய்ய்ய் பாத்து பேக்கை இடிச்சிடாதே!”

“புக்கு வேணும்னா கேளு, அதுக்கு ஏன் என் பேக்கைத் தொடப் பார்க்கற?”

“உங்கப்பா கிட்டெ சொல்லி உனக்கொரு நல்ல பேக்கா வாங்கிக்கோ..யேன் உங்ககிட்டெ காசு இல்லையா?”

பவித்திராவின் ஒரே ஒரு புத்தகப்பை பல குடும்பங்களில் இரைச்சலை உருவாக்கியுள்ளது. அவள் அந்தப் புத்தகப்பையை வாங்கியவுடன் மற்ற மாணவர்களும் வீட்டில் தொல்லைப்படுத்தத் தொடங்கினார்கள். தங்களிடமிருந்த புத்தகைப்பையுடன் மகிழ்ச்சியாக இருந்த அனைத்து மாணவர்களின் கனவுகளையும் பவித்திராவின் புத்தகப்பை உடைத்தது. பவித்திராவின் ‘ஏங்கிரி பேர்ட்’ புத்தகப்பையின் வர்ணம், அதன் பளபளப்பு, பல பாகங்கள் கொண்ட வசதி என அனைத்தும் கவரும்படி இருந்தன.

“உங்கப்பா நீ கேட்டதை எல்லாம் வாங்கித் தர்றாருலே.. அதான் உனக்கு இவ்ள கொழுப்பு”

கமலாவின் அதட்டல் காருக்குள்ளே சிக்கிக்கொண்டன. பவித்திரா வெளியில் வேடிக்கை பார்ப்பதை நிறுத்தவில்லை. அன்றுதான் அந்த நகரம் எவ்வளவு வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என அவள் உணர்ந்தாள். எல்லோரும் ஏதோ கோபத்துடன்தான் இருந்தார்கள்.

பெக்கான் பாரு முற்சந்திக்குள் நுழையும் பெரிய பாதை வந்தது. அதனுல் நுழைய கொஞ்சம் மெனக்கெட வேண்டும். எதிரிலிருந்து வரும் கார்கள் இடம் கொடுத்தால்தான் முடியும். கமலா பதற்றம் காரிகளின் நான்கு சக்கரங்கள்வரை எட்டியிருந்தது. ஒரு பெரிய லாரி கடந்துபோனதும் சட்டென பெரிய சாலைக்குள் நுழைந்து அவசரமாக அதன் வேகத்திற்கு இணையாகத் தன் காரைச் சரிப்படுத்தினாள். அதற்குள் அவசரம் தாளாமல் பெக்கான் பாரு முற்சந்தி வந்துவிட்டது. இடது புறத்திலிருந்து வந்த கன்சில் கார் கமலாவின் காரை மோதி அடுத்த சாலைக்கு இழுத்துக் கொண்டு போனது.

பவித்திரா எதையும் கவனிக்கவில்லை. கண்ணாடி உடைந்து சாலையில் விழும்போது ஒரு புத்தகப்பை கிழிந்து புத்தகங்களைக் கக்கிக் கொண்டே காரின் கதவின் இடுக்கில் மாட்டிக் கொண்டிருப்பதை மட்டும் பார்த்தாள்.


2

ஏஞ்சலின் காருக்குள் அமர்ந்ததும் புத்தகப்பையை எடுத்து மடியில் வைத்தாள். இன்று ஆசிரியர் புத்தகப்பை சுத்தமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். ஆகையால் புத்தகப்பை விழுங்கி வைத்திருக்கும் மிட்டாய் தாள்கள், தேவைப்படாத பழைய தாட்கள், பென்சில் தீட்டிய மிச்சங்கள் என அனைத்தையும் வெளியில் எடுத்துக் கொண்டிருந்தாள்.

“வீட்டுலேயே இதையெல்லாம் செய்ய தெரியாதாமா?” எனக் கேட்டுவிட்டு மரியா கன்சில் காரை இலாவகமாக பெரிய சாலைக்குள் கொண்டு வந்தாள்.

கன்சில் காரை இயக்குவது என்பது பெரிய காரியம் இல்லை. பெண்களுக்கென்ற வெகு கச்சிதமான கார். அதைச் சொன்னால் மரியாவிற்கு உடனே கோபம் வந்துவிடும். “ஏன் நாங்கலாம் ‘பி.எம்.டபிலியூ’ காரை ஓட்டினால் சக்கரம் ரோட்டுலே சுத்ததா?” என வேடிக்கையாகக் கேட்பாள். ஷார்ப் தொழிற்சாலையில் 8 வருடமாக வேலை செய்யும் மரியா அதிகப்படியாகத் தன் காரினாலேயே கேலி செய்யப்பட்டிருக்கிறாள். பெரும்பாலும் பெண்கள் பேருந்திலோ மூடுந்திலோ வந்துவிடுவார்கள். அங்கேயும் இங்கேயும் முதலீட்டுப் பணத்தைக் கடன் வாங்கி மாதச் சந்தாவிற்கு ஒரு சிறிய காரை வாங்கிவிட்டாள். ஏஞ்சலினைப் பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல இதைவிட வேறு வழி அவளுக்கு இல்லை.

ஏற்கனவே ஒரு சீனர் பயன்படுத்திய கார் என்பதால் காருக்குள் எப்பொழுதும் ஓர் ஊதுபத்தி வாடை இருக்கும். சீனர்கள் பயன்படுத்தும் ஊதுபத்தி. எவ்வளவு முயன்றும் காருக்குள்ளிருந்து அந்த வாடையை விரட்ட முடியவில்லை.

ஏஞ்சலின் புத்தகைப்பையைக் கிளறிக் கொண்டேதான் இருந்தாள். ஒழுங்கற்ற நிலையில் புத்தகங்கள் ஒன்றோடொன்று முட்டிமோதி திணறியிருந்தன. அதில் ஒரு ஜீப்பைச் சரியாக இழுத்து மூடமுடியாது. இலேசான காற்றுக்கோ அல்லது அசைவிற்கோ சடாரென்று திறந்துகொள்ளும்.

“ஏஞ்சிலின் பேக்கை எடுத்து வை மா.. அப்புறம் பாத்துக்கெல்லாம்.. அந்தப் பக்கம் காடி வருதான்னு சொல்லு” என மரியா கூறியதும், கையில் வைத்திருக்கும் மிட்டாய் தாள்களை வெளியே வீசுவதற்காகக் கண்ணாடியைத் திறந்தாள் ஏஞ்சலின்.

வகுப்பில் ஏஞ்சலின் புத்தகப்பை மட்டும்தான் கொஞ்சம் கிழிந்த நிலையில் இருக்கும். மேல் ஜீப்பைப் போல புத்தகப்பையின் அடிபாகத்தில் ஓர் ஓட்டை இருக்கும். மாணவர்கள் அதை ‘ஏர்கோண்ட் சேர்வீஸ்’ எனக் கேலி செய்வார்கள். என்றாவது ஆசிரியர் கொடுத்த பாடத்தைச் செய்யவில்லையென்றால் அன்று முழுவதும் தன் புத்தகப்பையில் எதையோ தேடுவது போல பாவனை செய்து கொண்டிருப்பாள். ஏதோ சுரங்கத்தில் இருளைச் சுரண்டுவது போன்றிருக்கும். முடிந்தவரை தலையையும் புத்தகப்பையின் வாயில் நுழைத்துக் கொள்வாள். அது தேடுதலின் தீவிரத்தை வெளிப்படுத்தும் என அவளுக்குத் தெரியும். ஆசிரியர் இரண்டு மூன்றுமுறை மிரட்டுவார். பிறகு மறந்துவிடுவார் என்கிற தைரியம்.

பெரும்பாலான சமயங்களில் புத்தகப்பையை கையில் தூக்கிக் கொண்டுதான் வருவாள். பின்னாடி தோளில் மாட்டினால் சிறியதாக இருக்கும் ஓட்டை அழுத்தத்தினால் பெரியதாகும் அபாயம் இருக்கின்றது. மேலும் இரண்டு தோள் வார்களும் சுமையைத் தாங்கும் சக்தியை இழந்திருந்தன.

“கண்ணாடியெ ஏன் திறக்கறே” எனக் கேட்டுவிட்டு மரியா பெக்கான் பாரு முற்சந்திக்குள் வலது பக்கம் திரும்பினாள். எதிரே வந்த எக்ஸ்சோரா பெரிய காரை அவள் கவனிக்கவில்லை.

3
கடைசியாகத் தன் மடியில் வைத்திருந்த புத்தகப்பை காரின் கதவிடுக்கில் சிக்கி தரதரவென சாலையில் இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் என்பதையும் புத்தகப்பையின் வாயிலிருந்து புத்தகங்கள் சிதறியிருக்கும் என்பதையும் ஏஞ்சலின் கவனித்திருக்க வாய்ப்பில்லை. காரையும் காரின் சிதறிய பாகங்களையும் அகற்றியவர்கள் அந்தப் புத்தகப்பையை அப்படியே விட்டுவிட்டார்கள்.

-     கே.பாலமுருகன்
       (07.07.2013)