Friday, August 23, 2013

Elysium - 21 ஆம் நூற்றாண்டை நோக்கிய மிகைக்கற்பனை சினிமா

Neill Blomkamp என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் புனைவு ' Elysium'. இவர் ஏற்கனவே 'district 9 ' என்கிற படத்தை இயக்கியவர். 21ஆம் நூற்றாண்டில் பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. அப்பொழுது இரண்டு வகையான சூழல் உருவாகின்றது. ஒன்று இந்தச் சிதைவிலேயே வாழ்ந்து சாகும் எளிய மனிதர்கள், இன்னொன்று பூமியைவிட்டு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் செயற்கை விண்வெளி உலகத்தில் வாழும் உயர்தர மேல்வர்க்கத்து மக்கள். சக்கர வடிவில் இருக்கும். பூமி அந்த மேட்டுக்குடி வர்க்கத்தால் கண்கானிக்கப்படுகின்றன. அவர்களின் சட்டத்திட்டங்களுக்கேற்ப உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விண்வெளி உலகத்திலிருந்து வரும் முதலாளிமார்களின் தொழிற்சாலைகளில் வேலை வாங்கப்படுகிறார்கள். குற்றம் இழைத்தவர்கள் சிறைக்குப் பதிலாகத் தொழிலாளிகளாக மாற்றப்பட்டு வருடக் கணக்கில் உழைக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

பூமியில் வாழும் எளிய மக்களின் கனவே அந்த விண்வெளி உலகத்தில் எப்படியாவது ஒருநாள் போய் சேர்ந்துவிட வேண்டும் என்பதே. அங்குள்ளவர்களுக்கு வயதாகுவதில்லை, எந்தவிதமான நோயும் அண்டுவதில்லை. பூமியிலிருந்து கள்ளத்தனமாக அந்த விண்வெளி உலகத்திற்குள் நுழைய நினைக்கும் விமானங்கள் தகர்க்கப்படுகின்றன. ஏறக்குறைய கள்ளக்கூடியேறிகளின் மீது ஒரு நாடு விதிக்கும் அத்தனை தடைகளையும் பூமியில் வாழ்பவர்களின் மீது விதிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கற்பனையாக இந்தப் படத்தைக் காண்கிறேன்.



கார் திருடி மாட்டிக்கொள்ளும் Matt damon தொழிற்சாலையில் நிகழும் விபத்தில் அதிகப்படியான கதிர்வீச்சு தாக்கத்திற்கு உள்ளாகுகிறார். அவர் உயிர் வாழ 5 நாட்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அந்த விண்வெளி உலகத்திற்குள் கள்ளத்தனமாக நுழைந்துவிட்டால், அவருடைய நோயைக் குணப்படுத்திவிடலாம் என நினைத்து அந்த விண்வெளி உலகத்திற்குக் கள்ளத்தனமாக ஆட்களை அனுப்பும் ஒருவனுடன் இணைகிறார். இப்படியாகக் கதையின் அடுத்த பாதி சண்டையில் நீள்கிறது.

எவ்வளவு பெரிய அறிவியல் பிரம்மாண்டமான புனைவாக இருந்தாலும் கதையின் உயிர்ப்பே அதில் சொல்லப்படும் பால்ய சிநேகிதமும் அன்பும் மட்டுமே. இதுதான் இப்படத்தின் வெற்றியும்கூட. மேற்கத்தியர்களின் பிரம்மாண்டங்களையும் சினிமா தொழில்நுட்பத்தையும் தமிழ் படங்களில் பயன்படுத்தி கதை ரீதியில் அதன் ஆன்மாவையும் கைவிடும் சங்கர் போன்ற இயக்குனர்களைவிட, எத்துனைப் பிரம்மாண்டங்களைக் கையாண்டாலும் Neill Blomkamp போன்ற இயக்குனர்கள் கதையில் அவர்கள் விடாமல் பிடித்து மானுடத்திற்கு உணர்த்துவது எந்த ஜோடனையும் இல்லாத எளிய அன்பைத்தான். படத்தை ஒரு முறை பாருங்கள். அறிவியல் புனைக்கதைகள். அறிவியல் படங்கள் மானுட விழிப்புணர்வுக்கு மட்டுமல்ல அதையும் தாண்டி நிறைய இருக்கின்றது. - கே.பாலமுருகன்

No comments: