Saturday, October 11, 2014

என் அடுத்த நாவல் உருவாகும் கதை - 1


கடந்த 5 வருடத்தில் மலேசியாவில் நாவல் இலக்கியம் தொய்வடைந்துவிட்டது என்றே தோன்றுகிறது. எல்லோரும் தமிழ்நாட்டின் மெகாத்தொடர்களுக்கு இணையான ரமணிசந்திரன், சிவசங்கரி என தமிழ்நாட்டு மூன்றாம்தர நாவலாசிரியர்களின் நாவல்களில் உறைந்து கிடக்கிறார்கள். உண்மையில் நாவல் என்பது அத்தனை சாதூர்யமாக எழுதிவிட முடியாதது. மிகுந்த உழைப்பும் கள ஆய்வும் மேற்கொண்டே ஒரு நாவலை முழுமைப்படுத்த முடியும். எந்த ஆய்வுமின்றி, அது குறித்து யாரையும் சந்திக்காமல் வெறும் செய்தியை வைத்து ஒரு நாவலை எழுதுவது அதன் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கிவிடும்.

இங்கு நாவல் வளர்வதைப் போட்டியெல்லாம் வைத்துத் தீர்மானிக்க முடியாது. போட்டி ஒரு உந்துதல் மட்டுமே. அதன் தீவிரம் கம்மியாகவே இருக்கும். அதையும் தாண்டி இந்த நாட்டில் எந்தத் தடையும் இல்லாமல் நாவல் இலக்கியம் வளர வேறுவகையில் மெனக்கெட வேண்டியுள்ளது. இங்குத்தான் வைரமுத்து நாவலுக்கெல்லாம் விருதும் பாராட்டும் கிடைக்கிறதே!

என்னுடைய அடுத்த நாவல், பெரியோர்களுக்கானது. இன்று அதன் இரண்டாம்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது. நவீன், சஞ்சய், குழலி, பாண்டியன் என நால்வரிடமும் அந்த நாவலின் தேவை குறித்துப் பேசினேன். அனைவரும் அது ஒரு முக்கியமான நாவலாக வரும் என நினைக்கிறார்கள். நாவலின் களம் மலேசிய நாவல் இலக்கிய சூழலுக்கு மிகவும் புதியது. அதனை எத்தனை ஆழம் கொண்டு செல்ல வேண்டும் என்றே முதல் கட்டத் திட்டமிடலை இன்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


இயக்குன்ர் சஞ்சய் அவர்கள், இதையே இன்னும் 10 வருடங்களில் ஒரு திரைப்படமாக எடுக்கும் திட்டம் இருப்பதாகச் சொன்னார். முதலில் நீங்கள் அந்த நாவலை எழுதுங்கள், அதனையும்கூட என் திரப்படமாக்கலுக்கு மேற்கோளாகப் பாவித்துக் கொள்வென் என நம்பிக்கையை அளித்தார். நண்பர் நவீன் அவர்களும் யாரையெல்லாம் இந்த நாவல் தொடர்பாகச் சந்திக்கலாம் என்ன செய்யலாம் எனக் கூறினார். மலேசிய நாவல்களைத் தீவிரமாக விமர்சித்தவர் நவீன். அதன் போக்கையும் கவனித்து வருபவர். ஆகையால், அவருடைய பங்களிப்பும் எனக்கு அவசியம் தேவைப்படுகிறது.

மலேசியாவின் தமிழர் வரலாற்றை ஓரளவிற்காவது இந்த நாவல் தொட்டுச் செல்லும். அது முழுமையானதொரு அலசலாக இருக்க முயற்சிக்குமாறு நேற்றே மணிஜெகதீசன் அவர்கள் கூறியிருந்தார். அவர் மேற்கத்திய நாவல்களை மிகவும் ஆர்வத்துடன் வாசிக்கக்கூடியவர் என்பதால் அவரின் பார்வை நிச்சயம் விசாலமானவையாகும். அடுத்து, உளவியல், அரசியல் என மிகுந்த சமூகப் பரப்பை ஊடுருவிச் செல்லக்கூடியதாக ஒரு நாவல் கட்டமைக்கப்பட வேண்டும்.

நண்பர் பாண்டியன் ஒரு மேற்கத்திய எழுத்தாளர் தன் நாவலை எப்படி மெல்ல மெல்ல உருவாக்குகிறார் என்பது பற்றி சொல்லியிருந்தார். அது மிகவும் ஆச்சர்யமானது. தன் வீட்டின் சுவரிலெல்லாம் அந்த நவால் குறித்த குறிப்புகளை எழுதி வீட்டின் பெரும் சுவரையே நிறைத்துவிடுவாராம். பின்னர் எங்கேயும் விடுப்படாமல் அந்த நாவலை எழுதி முடிப்பாராம். நாவல் என்பது திட்டமிடலில் மிகவும் அழுத்தமான உழைப்பைக் கோரக்கூடியது. நாவலை 100 பக்கத்திற்குள் எழுதிவிட வேண்டும் என விதிமுறை கொடுப்பதெல்லாம் அபத்தமானது. ஒரு பெரும் வாழ்க்கையின் கதையை எப்படிப் பக்க வரையறைக்குள் அடக்க முடியும்?

இன்னும் ஒரு வாரத்திற்குள் நாவல் தொடர்பாக இரு மனிதர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். ஒரு ஆய்வாளரின் ஆய்வேட்டுக்காகக் காத்திருக்கிறேன். அது இந்த நாவல் உருவாக்கத்திற்குப் பெரிதும் உதவும் என நம்புகிறேன். எந்த அவசரமும் பதற்றமும் இல்லாமல் இந்த நாவலை ஒரு வருடத்திற்குள் எழுதி முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

நாவலின் தலைப்பு: 'நொண்டி மணியம்'.

- கே.பாலமுருகன்

No comments: