Wednesday, October 15, 2014

கவிதை: கரை சேராதிருப்போமாக

கரையைச் சேர்ந்துவிடுவதைவிட
கரையைத் தேடி அலைவதில்தான்
அத்தனை ஆச்சர்யங்கள்.
கரையைக் கண்டுபிடிப்பதைவிட
கரையைத் தேடி அலைவதில்தான்
அத்தனை அனுபவங்கள்.
கரையின் திசையறிந்து சேர்வதைவிட
கரை அறியாமல் தேடுவதில்தான்
அத்தனை திருப்பங்கள்.


ஆகவே கரையைச்
சேராதிருப்போமாக.

கரை சேர்வது ஆபத்தானது.

நம்மை சோர்வாக்கிவிடும்
நம்மை ஆற்றுப்படுத்திவிடும்
நம்மை திருபதிப்படுத்திவிடும்
நம்மை நிதானமாக்கிவிடும்.
நம் பயணங்களை முடித்துவிடும்.


இதோ வந்துவிடும்
என்கிற கரை குறித்த
நம்பிக்கைகள்
தூரத்தில் கரை இருக்கும்
என்கிற ஊகங்கள்
என்றாவது கரை வந்துவிடும்
என்கிற எதிர்ப்பார்ப்புகள்
அனைத்தும்
ஓயாமல் பயணத்தை
ஓர் அடி முன்னேற்றுகிறது.

பயணம் முடிகிறது
என்கிற நடுக்கம்
இல்லாமல்போனது
பயணம் நீடிக்கச் செய்யும்
அற்புதங்களும் அவலங்களும்
அலைச்சல்களும்
தெய்வமாகி விரியும்போது.
- கே.பாலமுருகன்

No comments: