இன்று எனது உறக்கத்தில் ஒரு கனவு. அந்தக் கனவுக்குள் நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன். அப்பொழுது ஒரு கனவு வருகிறது. திடீரென அப்பா ஒரு பெரிய ஜீப்பில் வந்திறங்குகிறார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு இதுவே அவர் என் கனவில் வரும் முதல் நாள். உறக்கத்திலிருந்து எழுந்து அப்பா வந்ததைக் கூற வீட்டிற்குள் ஓடுகிறேன். பிறகு அதுவும் கனவென தெரிந்து சடாரென்று எழுந்து கொண்டேன்.
இது போல கனவுக்குள் கனவை நான் கண்டதே இல்லை. ஆச்சர்யமாக அப்பா என் கனவில் வராமல் கனவுக்குள் ஒரு கனவைத் தேர்ந்தெடுக்கின்றார். அவர் குறித்த என் நினைவுகள் ஆழ்மனத்தையும் தாண்டியதாகத் தோன்றுகிறது. இப்படி யாருக்காவது வந்ததுண்டா? இது ஏன் நடக்கிறது? கனவுக்குள் நான் உறங்குவதைப் போலவும் அங்கு இன்னொரு கனவு வருவதைப் போலவும். மிகவும் பயங்கரமான அனுபவம் அது. இயல்பு நிலையிலிருந்து தப்பித்து கனவுக்குள் போவதே ஆச்சர்யமானவை. ஆனால், அந்தக் கனவுலகிலிருந்து இன்னொரு கனவுலகத்திற்குப் போவது பயத்தை உருவாக்குகின்றது.
எனக்கு டிகாப்பிரியோ நடித்த 'inception' படம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு கனவுக்குள்ளிருந்து இன்னொரு கனவுக்குள் நுழைந்து இரகசியங்களைத் திருடும் ஏஜேண்டாக அவர் வருவார். ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவுக்குள் நுழையும்போது நேரம் வேறுப்படுவதைக் காட்டியிருப்பார்கள். அப்படி நுழைந்து ஒரு கனவுக்குள் மாட்டிக்கொள்ளும் ஒருவர் ஆயுள் முடியும்வரை அந்தக் கனவிலேயே இருந்து வாழ்ந்து முடித்து சலித்து இறக்கும்போது மீண்டும் கனவு கண்டு கொண்டிருக்கும் இடத்திற்குத் திரும்பினால் எப்படி இருக்கும்? இனி வாழ்வதற்கான ஒரு உந்துதலே இல்லாமல் போய்விடும். அப்படியொரு மிரட்டலான பின்நவீனத்துவப் படம் அது.
- கே.பாலமுருகன்
No comments:
Post a Comment