Wednesday, December 31, 2014

எனது 2014ஆம் ஆண்டு : ஒரு மீள்பார்வை

எப்பொழுதும் போல அல்லாமல் இந்த 2014ஆம் ஆண்டு எனக்கு மிக முக்கியமான நினைவுகளை விட்டுச் சென்றுள்ளது. சிலரைப் புதிதாகப் பெற்றேன்; சிலரை இழந்தேன். சில இனிமையான அனுபவங்கள்; சில கசப்பான அனுபவங்கள். 

தேவைப்படும்போது பாராட்டிக்கொண்டும் தேவைப்படாதபோது தூற்றிக்கொண்டும் திரியும் உலகத்திடம் நன்றியுணர்ச்சியோடு இல்லாமல் போனதை நினைத்து மகிழ்ச்சியே கொள்கிறேன். இப்பொழுது ஒரு புத்துணர்ச்சியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி விரைகிறேன். எந்த அழுத்தமும் இல்லை, எந்த நெருக்குதலும் இல்லை. எனக்காக நான் சிந்திக்கிறேன், சொந்த கால் மண்ணில் ஆழ வேரூன்றி நிற்பதன் மூலம் தரும் கதகதப்பிற்கு நிகராக வேறென்ன சுதந்திரம் இருக்கிறது என்பதைப் போன்று தோன்றுகிறது.

எப்பொழுதுமே ஒவ்வொரு வருடமும் பல மன வருத்தங்களையும் சண்டைகளையும் சந்தித்து சந்தித்து மனம் அடைந்த பக்குவம் எனக்குக் கிடைத்த கொடை என்றே சொல்ல வேண்டும். மனிதர்களைப் புரிந்துகொள்ளும் தருணம் மகத்தானது. குறிப்பாக அடுத்தவன் முதுகில் தெரியும் வடுக்களைக் கண்டு அங்கலாய்க்கும் உலகம் கொடூரமானதுதான். எனக்கு உலகின் பொதுபுத்தி பற்றி கவலையில்லை. என் எழுத்தின் ஊடாக அந்தப் பொதுபுத்தியைக் கொஞ்சம் கீறிப்பார்க்கவே முயல்கிறேன்.
நான் ஒழுக்கமாக வாழ்ந்தேன்; வாழ்கிறேன் என்ற எந்தப் போலித்தனமும் அறிவிப்பும் என்னிடம் இல்லை. நான் நானாக எனது குறைகளுடன் என் பலவீனங்களுடன் எனது இயல்புடன், சிலருக்குப் பிடித்ததைப் போலவும் பலருக்குப் பிடிக்காததைப் போலவும் வாழவே செய்கிறேன். உங்களுக்கு நடக்க, சிரிக்க, செயல்பட இந்த உலகில் இடம் இருப்பதைப் போல எனக்கும் உண்டு.

எல்லோரும் புகழும்படி வாழ வேண்டும் அல்லது எல்லோரும் இகழும்படி வாழ வேண்டும் என்கிற எந்தக் கொள்கையும் இல்லாமல் வாழ்ந்தோம், செம்மையாக வாழ்ந்தோம் என்றிருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். நம் வாழ்வு கலைக்கும், மனித சிந்தனைக்கும், சமூகத்திற்கும் ஏதாவது ஒரு துரும்பை அசைத்த வகையிலான ஒரு மாற்றத்தைக் கொடுக்க வேண்டும் என உணர்கிறேன்.

 ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் கடந்த பாதையை நினைவுக்கூரும்போது மனம் சட்டென ஒரு கணமான மூட்டையைக் கீழே இறக்கி வைப்பது போன்றே தோன்றுகிறது.

இந்த மீள்பார்வையை, கடந்து வந்த பாதையைச் சடங்கிற்காக ஒருமுறை திரும்பிப் பார்ப்பதாக எடுத்துக்கொள்ளலாம். 
  1. அப்பாவின் மரணம்

என்னை அதிகம் பாதித்த சம்பவம் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அப்பாவின் திடீர் மரணம் ஆகும். 3 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடியிருந்துவிட்டு இறந்துவிட்டார். அப்பா இறக்கும்வரை சுமார் 2 மணி நேரம் உடன் இருந்தேன். மருத்துவர் என் அப்பா இறந்துவிட்டார் எனச் சொன்னதும் உள்ளே சென்று பார்த்தேன். கண்களில் நீர் ஒழுகியிருந்தது. எத்தனையோ மணி நேரம் சுய நினைவில்லாமல் இருந்தவர் கடைசியாக மரணிக்கும் முன் ஒரு கணம் நினைவு வந்து வலியால் போராடியிருக்கக்கூடும். விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் அழுதிருக்கிறார். அந்த மரணத்தைவிட அவர் கடைசியாக விட்ட கண்ணீர் மனத்தை உலுக்கியது. அப்பா எல்லாமுமான மனிதர். அந்த இழப்பிற்கு நிகரான வேறு எந்த இழப்பையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவரே போய்விட்ட பிறகு வேறு யார் என்னை நீங்கிப் போனால் என்ன என்பதைப் போல இருந்தது.

2. செந்தமிழ் பயிற்றி உருவாக்கம்

கடந்த வருடம் கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடக்குழுவின் பொருளாளராக நியமிக்கப்பட்ட தருணம் எனக்கு உவப்பாக இருந்தது. தமிழ் மொழி சார்ந்து தீவிரமாக இயங்கும் பல இளைஞர்களுடன் ஒன்றிணைந்தேன். ஒரு குடும்பமாக அனைவரும் நெருக்கமாயினர். ஐயா திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்கள் எங்கள் அனைவரைரின் உழைப்பையும் கோரும் வகையில் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான ‘செந்தமிழ் பயிற்றி’ எனும் யூ.பி.எஸ்.ஆர் வழிகாட்டி நூல் ஒன்றினை உருவாக்குவதற்கு வாய்ப்பளித்தார். ஏறக்குறைய இரண்டு மாதங்களில் பலமுறை சந்தித்து அந்த நூல் தொடர்பான படைப்புகளைத் தயாரித்தோம். இனிமையான நினைவுகளுடன் கூடிய உழைப்பு அது.

3. சிறுவர் நாவல்

மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும் எனும் எனது மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் (தமிழ் தொடர்நாவல் என்பதன் மூலம் முதல் முறை என்கிற கவனத்தைப் பெறுகிறது) இவ்வருடத்தின் மிகப்பெரிய முயற்சியாகக் கருதுகிறேன். பல மாணவர்கள் படித்துவிட்டுத் தொடர்ச்சியாக அழைத்து வாழ்த்தையும் ஆர்வத்தையும் தெரிவித்துக் கொண்டனர். சிலர் அடுத்த பாகம் இரண்டு நாவலுக்காக்க் காத்திருக்கிறோம் எனக் கூறினர். இந்தச் சிறுவர் நாவலை விற்க எனக்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விற்பனையாளர் இல்லாமல் இந்தச் சிறுவர் மர்ம நாவலைச் சொந்த முயற்சியிலேயே நாடேங்கிலும் விற்பனை செய்தேன். அதற்கு உறுத்துணையாக இருந்தவர்கள் கெடா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தமிழ்மொழிப் பாடக்குழு உறுப்பினர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களுக்கு என் அன்பு. மேலும் இந்தச் சிறுவர் நாவல் வெளியீட்டுக்கு வந்த 300க்கும் மேற்பட்டோருக்கும் என் அன்பும் நன்றியும். மண்டமபே நிறைந்து உட்கார இடமில்லாமல் நின்றிருந்தவர்களும் உண்டு. என் மனமும் நிறைந்தே இருந்தது.


4. சிங்கப்பூர் பயணம்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த டிசம்பரில் சிங்கப்பூர் சென்று புதிய நண்பர்களையும், அருமை நண்பர் பாண்டித்துரையையும், ஐயா கண்ணபிரான் அவர்களையும் சந்தித்து வந்தது இவ்வருடத்தின் முக்கியமான நாளாகக் கருதுகிறேன். வெகுநாட்களுக்குப் பிறகான இலக்கியப் பேச்சாக அது இருந்தது. சிங்கப்பூர் இலக்கிய நண்பர்கள் எப்பொழுதும் எனக்கு நெருக்கமானவர்கள். அந்த நட்பும் அன்பும் இன்றும் தொடர்கின்றன.

5. பயிற்றுப்பணிக்காக வந்த தம்பிகள்

என் பள்ளிக்குப் பயிற்றுப்பணிக்காக வந்த இரு தம்பிகள் இவ்வருடத்தில் எனக்கு கிடைத்த நல்ல உறவு என்றே நினைக்கிறேன். கார்த்திக் & சஞ்சய் அவர்கள் இருவருடன் அலைந்த இடங்களும் பெற்ற நினைவுகளும் ஏராளம். இரவில் அவர்களைச் சந்தித்து உரையாடுவது, சாப்பிடுவது எனக் கழிந்த பல நாட்கள் என் நினைவில் எப்பொழுதும் இருக்கின்றன. அந்தத் தம்பிகளுக்கு என் அன்பு. 

6. எனது முன்னாள் மாணவர்கள்

எனது முன்னாள் மாணவர்களுடன் கழிந்த 2014ஆம் ஆண்டின் அனைத்து நாட்களும் எனக்குப் பிடித்தமான நாட்களே. சிவசந்திரன், சிவசங்கரி, அர்ஷினி, சகுந்தளா, ஷிவனிதா, வனுஷ்யா, தனுஷா போன்ற அனைவருமே மனத்திற்கு நெருக்கமான மாணவர்கள். பலமுறை சந்தித்தோம்; கொண்டாடினோம்; சிரித்தோம்; மகிழ்ந்தோம். அந்த்த் தருணங்களில் நான் முழுமையான ஒரு மகிழ்ச்சியை உணர்ந்தேன்.


7. தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்

வல்லினம் பதிப்பகம் சார்பாக இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரசுரமான எனது கவிதை தொகுப்பு இது. முகநூலில் ஆர்வமாக இயங்கிக் கொண்டிருந்த நாட்களில் எழுதிய அரசியல் கவிதைகள். அதனை நூலாகத் தொகுத்து வெளியிட்டோம். வெளியிட்டு நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் வந்ததே மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். ஆனால், அந்தக் கவிதை நூல் சரியான முறையில் விற்பனை ஆகவில்லை என்பதே வருத்தமான விசயமாகும். ஏறக்குறைய 300 பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டிக்கலாம்.

8. ஜெயமோகனுடன் பினாங்கு  கொடிமலை இலக்கிய முகாம்

நண்பர்களுடன் சேர்ந்து கொடிமலைக்கு மூன்று நாள் இலக்கிய முகாம் சென்றதே இவ்வருடத்தின் இனிமையான நினைவுகள். அடர்த்தியான காடு, சுகந்தமான காற்று, பேய்த்தனமான தனித்த பங்களா, அருமையான இலக்கிய நண்பர்கள் எனப் பலர் சூழ மூன்று நாள் மிகச்சிறப்பாகச் சென்றது. இரவில் பேய்க்கதைகள், கிண்டல்கள், சிரிப்பொலிகள், உறக்கம் எனத் தீர்ந்த அந்த நாட்களை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். ஜெயமோகனின் இலக்கிய உரை என்றென்றைக்குமான புதிய கற்றலாக இருந்தது.

9. சிறுவர் நாவல் எடுக்க மேற்கொண்ட பயணம்

மூன்றுமுறை கோலாலம்பூரிலிருந்து சிறுவர் நாவலைக் காரிலேயே சென்று எடுத்து வந்த அனுபவம் அலாதியானது. இரண்டு முறையும் மறுக்காமல் நண்பர் ஹென்ரி உடன் வந்தார். முதல்முறை போனபோது காஜாங்கில் தங்கியிருந்துவிட்டு, ஹென்ரியின் பழைய நண்பர்களையெல்லாம் போய்ப் பார்த்துவிட்டு இரவில் காஜாங் நகரிலேயே தூங்கிவிட்டு மறுநாள் நாவலை எடுத்துக் கொண்டு வந்தோம். நிறைய உரையாடல்கள், கேலிச்சிரிப்புகள், நகைச்சுவைகள் என அந்தப் பயணம் போனதே தெரியாமல் இருந்தது. அதே போல இரண்டாவது முறை எங்களுடன் ஆசிரியை கலைமலர் அவர்களும் உடன் வந்தார். அவருடைய அப்பா அர்ஜுனன் அவர்கள் நல்ல இலக்கிய வாசகர். கலைமலர் அவர்களும் ஆர்வமிக்க நிபுணத்துவ ஆசிரியர் ஆவார். அவருடன் மேற்கொண்ட பயணம் நிறைய தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தது.

மூன்றாவது முறை போகும்போது ஓர் ஆசிரியர் குழுவே என்னுடன் வந்தார்கள். ஆசிரியை சசிகலா, ஆசிரியைக் கோமதி, ஆசிரியைக் கலைமலர் அவர்களும் உடன் வந்தார்கள். அனைத்துப் பயணங்களுமே எனக்கு அலுப்பில்லாமல் தனிமை இல்லாமல் இருந்தன. இவர்களின் எப்பொழுதுமான நட்பை நான் மதிக்கின்றேன்.

10. இரயில் இலக்கியம்

நான், அ.பாண்டியன், தம்பி தினகரன் மூவரும் மேற்கொண்ட இரயில் இலக்கியப் பயணங்கள் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். உறங்காமல் பல மணி நேரம் இரயிலில் பேசிக்கொண்டே கழித்த இரவுகள் பயனுள்ளவையாகும். இலக்கியம் குறித்த உரையாடல் புத்துணர்ச்சியை வழங்கிய தருணங்கள் அவை. இலக்கியத்தில் எனக்குக் கிடைத்த அருமையான நண்பர்கள் இருவரும்.

11. நாடு முழுக்க சிறுகதை பட்டறைகள் நடத்த பயணம் செய்ததே எனக்கு இவ்வாண்டின் தவிர்க்க முடியாத அனுபவமாகும். ஜொகூர், முவார், தெலுக் இந்தான், பினாங்கும் கோலா சிலாங்கூர், கோலாலம்பூர் என அந்தப் பயணம் நீண்டது. 

இப்படி 2014ஆம் ஆண்டு எனக்குப் பல அனுபவங்களை, வலிகளை, மகிழ்ச்சியை வேதனைகளைக் கொடுத்திருக்கின்றது. அவற்றுள் சிலவற்றை மறக்கவே நினைக்கிறேன். காலம் என்பது எண்களால் ஆனதா என்ன? 365 நாட்கள் என்பது மனித கணக்கே.

அடுத்த வருடத்தில் பல புதிய திட்டங்களுடன் முன் நகர்கிறேன். எப்பொழுதும் நான் விரும்பும் இலக்கியத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதே முதல் செயல்பாடாக இருக்கும். குறிப்பாக அடுத்த தலைமுறை மாணவர்களின் கற்பனையாற்றலையும் இலக்கிய ருசியையும் வளப்படுத்த வேண்டும் என்பதே எனக்கான தேவையாக உணர்கிறேன்.

அ. சிறுவர் நாவல் பாகம் 2

சிறுவர் நாவல் பாகம் இரண்டின் வேலைகள் பாதி முடிந்துவிட்டேன். இனி நாவல் விரைவில் வரவிருக்கிறது. அடுத்த நாவல் அந்த மூன்று சிறுவர்களின் மலைப்பயணங்களை ஒட்டிய மர்மங்களைக் கொடுப்பதாக இருக்கும். இப்படிப் பல இடங்கள், பல மனிதர்கள், பல இரகசியங்கள் என இந்தச் சிறுவர் நாவலை 10 பாகம் வரை கொண்டு போகலாம் எனத் திட்டமுண்டு.

ஆ. சிறுவர் சிறுகதை வழிகாட்டி நூல்

சிறுவர் சிறுகதை எழுதும் முறையை மேலும் செம்மைப்படுத்தி வழிகாட்டி நூல் ஒன்றினை மே மாத்த்தில் கொண்டு வரும் திட்டமுண்டு. அதன் மூலம் நாட்டில் உள்ள சில தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களின் சிறுவர் சிறுகதைகளைத் தொகுக்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். இது நாளை ஒரு நல்ல வழிகாட்டியாக அடுத்து வரும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

இப்படி இன்னும் சில எளிமையான திட்டங்கள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற நண்பர்களின் உதவியும் ஊக்கமும் தேவை. நிச்சயமாக உங்கள் உழைப்பிற்கு ஏற்ற மதிப்பும் வழங்கப்படும் என்பதில் ஐயமில்லை. என்னோடு இணைய விரும்புபவர்கள் தாராளமாக வரவேற்கின்றேன். இது சமூகத்திற்கான இலக்கியத்திற்கான கல்விக்கான ஒரு முன்னெடுப்பே ஆகும். சேர்ந்தே செயல்படுவோம்.

என் மீது எப்பொழுதும் எந்த எதிர்ப்பார்ப்புமின்றி நிபந்தனைகளுமின்றி அன்பு செலுத்தும் நண்பர்கள் ஹென்ரி, யோகேஸ்வரன், என் குடும்பத்தினர், அ.பாண்டியன், தினகரன், தங்கைகள்  புனிதா கலைவாணி, தமிழ்மொழிப் பாடக்குழு நண்பர்கள், யோகி, சந்துரு, சிவா, சங்கரி, அர்ஷினி, முன்னாள் மாணவர்கள் , அன்பிற்கினிய ஆசிரியர்கள், தம்பி புவனேஸ்வரன் மேலும் அனைத்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் என் நன்றியும் அன்பும். (யாராவது விடுப்பட்டிருந்தால் மன்னிக்கவும்)


2014ஆம் ஆண்டின் கடைசி நாளில்,  சற்றுமுன் வீட்டின் பழைய பொருள்களை ஏற்ற வந்த ஒரு லாரி ஓட்டுனரிடமிருந்து வாழ்க்கையின் ஒரு ருசியைக் கற்றுக் கொண்டேன். அவருடைய செயல், சொல் இவ்வாண்டின் இறுதி சொல்லாக எனக்குள் விதையுண்டு போகின்றன.

ஒரு சைக்கிள், ஒரு பெரிய அலமாரி, ஒரு சிறிய அலமாரி, ஓர் அடுப்பு, ஏற்கனவே இருந்த சோபா நாற்காலி மேலும் சில பொருள்கள் என இவையனைத்தையும் பார்க்கும்போது லாரியில் அடுக்க முடியுமா என நினைத்தேன். ஒரு கட்டத்தில் முடியுமா அங்கிள் எனக் கேட்டேவிட்டேன். இதென்ன சிரமமா ஐயா? என ரொம்பவும் சாதாரணமாகக் கூறிவிட்டு ஒவ்வொன்றையும் அவர் இலாவகமாக அடுக்கிய விதம் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. சிறிது நேரத்தில் பொருள்கள் ஒன்றையொன்று விழுங்கிக் கொண்ட நிலையில் எல்லாமும் லாரியின் சிறிய இடத்தில் அடக்கமாயின. வாழ்க்கை எத்தனை ஆச்சர்யமானது? எவ்வளவு கசப்பான நினைவுகளாக இருந்தாலும் எத்தனை இனிமையான நினைவுகளாக இருந்தாலும் கோடி கோடி வலிகளாக இருந்தாலும் அவற்றை அந்த லாரிக்காரரைப் போல நிதானமாகவும் சாமர்த்தியமாகவும் மனத்திற்குள் அடுக்கினால் இந்த மனத்தின் வீரியத்தைப் பாதுகாக்கவே முடியும். வாழ்க்கையை அதன் இயல்பிற்கும் போக்குக்கும் ஏற்ப இலாவகமாக நகர்த்தினால் எதுவுமே சிரமமில்லை எனத் தோன்றியது. நன்றி.

-    கே.பாலமுருகன்

No comments: