Friday, January 9, 2015

சிறுகதை: தனியனின் கதைக்குத் தலைப்பே இருக்கக்கூடாது


வெகுநேரம் முனியாண்டி வழியிலேயே விழுந்து கிடந்தார். வழக்கமாக அவர் மெதுநடை போகும் பாதைத்தான். எல்லாம் காலைகளிலும் அவர் உற்சாகமாக உலா வருவார். அநேகமாக அங்கு வரும் அனைத்துச் சீனர்களுக்கும் முனியாண்டியை நன்றாகத் தெரியும். இன்று எல்லோரையும்விட சீக்கிரமே வந்து மயங்கி விழுந்துவிட்டார்.

இலேசாக விடியத் துவங்கிய நேரம். வானம் இருட்டிக் கொண்டிருந்ததால் ஆட்கள் சிலர் வந்து வானத்தையும் திடலையும் பார்த்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தனர். சிலர் குடையைப் பிடித்துக் கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். மழைக்காற்று அவர்களுக்கு அசௌகரிகத்தை வழங்கியிருக்கலாம். யாரும் நடைப்பாதைக்கு வரவில்லை.

50 வயது நிரம்பிய முனியாண்டி அந்தப் பழகிப்போன வழியிலேயே மூர்ச்சையாகிக் கிடந்தார். சட்டென பார்ப்பவர்களுக்கு அவர் அங்கு விழுந்து கிடப்பது தெரிய வாய்ப்பில்லை. மிகப்பெரிய மரங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் பூச்செடி தொட்டிகளும் பாதைக்கு அருகில் அடர்த்தியாக இருக்கும். கொஞ்ச நேரத்தில் மழைப் பெய்யத் துவங்கியதும் இருந்த கொஞ்ச ஆட்களும் களைந்து வீட்டை நோக்கி நகர்ந்தனர்.

நாகா லீலீட் கம்பத்தில் முனியாண்டியை லோரிக்காரர் என்றால் பலருக்கும் தெரியும். 1970களிலேயே கோலாலம்பூருக்கு நடை போய் அனுபவம் உடைய ஒரே ஆளாக அறியப்பட்டவர். தெம்பான ஆனால் எப்பொழுதும் வியர்த்த நெடி வீசும் உடல். வாரத்திற்கு மூன்றுமுறையாவது கோலாலம்பூர் நடைக்குப் போய்விடுவார். முதலில் வாடகைக்கு லாரி ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் சொந்தமாகச் சிறிய லாரி வாங்கி ஓட்டத் துவங்கினர். அதன் பிறகுத்தான் முனியாண்டிக்குக் கலை கட்டியது.

இருந்த ஒரு பையனும் கல்யாணம் செய்து சிங்கப்பூருக்குப் போய்விட்டான். இங்கே பிழைப்புக்கு வழியில்லாமல் கிடைக்கும் வேலைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகச் செய்திருந்துவிட்டு மனைவியுடன் சிங்கப்பூருக்குப் போனவன், பல வருடங்களுக்கு முனியாண்டியைத் திரும்பிப் பார்க்க வரவில்லை.

பிறகென்ன? மனைவி செத்தவன் தனிக்கட்டைதான். முனியாண்டியே சமைப்பார் ; முனியாண்டியே சாப்பிடுவார்;முனியாண்டியே சிரிப்பார்; முனியாண்டியே அழுவார். நாகாலீலீட் சாலையோரக் கடைகளுக்கு எப்பொழுதாவது போய் தனியாக அமர்ந்துவிட்டு ஆட்கள் குறைந்ததும்ரொட்டி சானாய் ஒன்னுஎன்பார். அக்கடையில் அவர் பேசும் முதல் வார்த்தையும் கடைசி வார்த்தையும் அதுதான். அதற்கடுத்து அவர் எதையும் பேசியதில்லை. மீண்டும் வீட்டுக்குப் போய்விடுவார்.


அவர் இல்லாதபோது பலரின் அரட்டைகளில் முனியாண்டி ஒரு முக்கியமான பங்கு வகித்தார். நிறைய வாய்களுக்கு அவுளாகியுள்ளார். அரைத்து அரைத்து மீண்டும் அரைத்து பிறகு சலித்துத் துப்பிவிடுவார்கள். அவ்வளவுத்தான். கொஞ்ச நாட்களுக்கு மறந்திருப்பார்கள். பிறகு எந்தப் பரப்பரப்பும் இல்லாமல் போய்விட மீண்டும் முனியாண்டியை அவுளுக்காகத் தேடுவார்கள்.

நாகாலீலீட் 234ஆவது வீட்டைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். தனித்த வீடு. எப்பொழுதும் இருண்டு போயிருக்கும். முனியாண்டிக்கு சுவாதினம் வந்து விளக்கைப் போடுவதற்குள் வீடு இருளில் உறைந்திருக்கும். தனியனின் வீட்டிற்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. நாள் முழுக்க விளக்கே எரியாவிட்டாலும் யாரும் பதற மாட்டார்கள். தனியன் யாரிடமும் சொல்லிக்கொள்லாமல் காணாமல் போகலாம்; செத்தும் போகலாம்; ஆனால் ஒரு பெண்ணுடன் மட்டும் வீட்டுக்குள் வந்துவிடக்கூடாது. பிறகு ஒழுக்க சீலர்கள் கிளம்பி வந்துவிடுவார்கள். ஒழுக்க சீலர்களுக்கென்று ஒரு தொனியும், தோற்றமும் பேசும் முறையும் உண்டு. அது முனியாண்டிக்கு பழக்கமானது.

முனியாண்டியின் மனைவி சரசு சட்டென உறக்கத்திலேயே இறந்தவள்தான். மறுநாள் காலையில் முனியாண்டி எழுந்து முன்வாசலைத் திறந்துவிட்டு பெரிய வாளியில் இருந்த மழை நீரையைக் கொண்டு செம்மண் சாலையை நனைத்துவிட்டு, அல்லூர் ஓரமாக உட்கார்ந்து பல் துலக்கிவிட்டு பக்கத்து வீட்டு மாரிமுத்துவிடம் பேச்சுக் கொடுத்துவிட்டு, அன்றைய நாள் வழக்கமான நாள் என்கிற அலட்சியத்துடன் மீண்டும் அறைக்குப் போய் சரசை எழுப்பியிருக்கிறான். அவ்வளவுத்தான்.

பிறகு இரண்டொருமுறை முனியாண்டி வேறொரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். நாகாலீலீட்டே பப்பரப்பே என்று கண் கொட்டாமல் முனியாண்டியின் வீட்டை நோட்டமிட்டது. தனியன் யாரிடமும் சொல்லாமல் செத்துக்கூட போகலாம்; ஆனால் ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என்கிற அலாதியான விதிமுறை நாளடைவில் முனியாண்டிக்கு எதிராக வழக்கத்திற்கு வந்தது. பிறகு மீண்டும் தனியன் மற்றும் தனியனின் வீடென்றாகிப் போனது.

முனியாண்டிக்கு ஒரு லாரியும் அந்த நாகாலீலீட் வீடும்தான் சொத்து. மற்றப்படி சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. கடைசியாகச் சில நாட்களுக்கு முன்தான் உயிர் பயம் வந்திருக்கிறது. அதுவும் சும்மா வரவில்லை. நாகாலீலீட் புதுப்பிகப்பட்டு புது தோற்றம் பெற்று இரண்டு மாதங்களிலேயே பலியான முதல் உயிர், பெரிய வீட்டு இராமசாமி. முனியாண்டியின் ஒத்த வயது நண்பர். முனியாண்டியின் ஓரிரு நண்பர்களில் இவரும் ஒருவர். மாரடைப்பில் ஆள் வீட்டிலேயே செத்துவிட்டார். தூக்கிப் போடும்போது முனியாண்டியின் கைகால்கள் நடுங்கியே விட்டன. ஏதோ பக்கத்து வீட்டில் சாவகாசமாக நின்று கொண்டு ஒரு பழக்காமன் நண்பனின் நெருக்கத்துடன் மரணம் தன்னையே கவனிப்பதை உணர்ந்தார். இராமசாமியின் மௌனமான உடல். அசைவில்லாத நிலை, அனைத்துமே முனியாண்டியைப் பயங்கரமாக மிரட்டின.

இப்பொழுது இப்படிக் காலையில் சீனர்களைப் போல வழக்கம் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறார். ஒரு தனியன் எடுக்கும் முடிவில் அவன் மட்டுமே ராஜாவாக இருப்பான். இப்படிக் கீழே விழுவதற்கு முன் முனியாண்டி என்ன யோசனையில் இருந்திருப்பார்? ஒரு தனியன் அப்படியென்ன ஆழ்ந்த சிந்தனையில் இருந்துவிடப் போகிறான். கடன் தொல்லையும் இல்லை; பொருளாதார சிக்கலும் இல்லை; சமூகத்திடம் அண்டியது இல்லை; நண்பர்களும் அதிகபட்சமாக இரண்டே இரண்டு பேர்தான். பிறகு எந்த யோசனையும் இல்லாத ஒரு சமயத்தில்தான் தலை சுற்றிக் கீழே விழுந்திருக்கலாம்.

மழை இலேசாக நின்றது. காலை இன்னும் குளிர்ச்சியுடன் தான் இருந்தது. ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடைப்பாதைக்குள் வர ஆரம்பித்தார்கள். முதலில் யார் முனியாண்டியைப் பார்ப்பார் எனத் தெரியவில்லை. அல்லது அப்படி முனியாண்டியைப் பார்க்கும்போது அவர் உயிருடன் இருக்கிறாரா எனக் கண்டறிய முடியும். அல்லது அவரை எழுப்பி விழுந்ததற்கான காரணத்தைக் கேட்கலாம்.

ஒருவேளை ஒரு தனியன் இறந்தால் என்ன செய்வார்கள்? சொந்தக்காரர்களுக்குச் சொல்லியனுப்புவார்கள். முனியாண்டிக்கு உடன் பிறந்தவர்கள் என யாரும் இல்லை. சரசுக்கு ஒரு அண்ணன் இருந்தார்; அவரும் விபத்தில் இறந்துவிட்டார். முனியாண்டியின் மகனும் மருமகளும் மட்டுமே செய்தி கேட்டு ஓடி வந்து அவசரமாக ஈமச் சடங்குகளைச் செய்து முடித்துவிட்டு அவருக்கு இருக்கும் ஒரே லாரியை விற்று பணம் பண்ணிவிட்டு மீண்டும் சிங்கப்பூர் வேலைக்கு ஓடப்போகிறார்கள். மறு வருடம் தவுசத்திற்குக்கூட அவர் மகன் வருவார் என்பதும் நிச்சயம் இல்லை.. முனியாண்டி செத்துவிட்டார் என்ற செய்தி அதிகப்படி ஒரு வாரம் நாகா லீலீட் மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள தேநீர் கடைகளின் கதையாடல்களில் ஒரு இடைச்செறுகலாகப் பேசப்படும்.

பிறகென்ன அதுவெல்லாம் மறந்துபோய்விடும். வழக்கம்போல பூமி சுழலும். பகலும் இரவும் தோன்றும். நாகாலீலீட் சாலையோரக்கடைகளில் வழக்கம்போல ஆட்கள் நிரம்பும்; காலியாகும்; மீண்டும் நிரம்பும்.

ரொட்டி ஜானாய் ஒன்னு”.

இப்படித்தான் முனியாண்டியன் கதை. தனியனின் கதைக்குத் தலைப்பே இருக்கக்கூடாது. அது அவர்களுக்குப் பிடிக்காது. இந்தத் தனியனான முனியாண்டியின் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கும் நான் யார் எனக் கேட்கத் தூண்டுமே? முனியாண்டி விழுந்து கிடக்கும் பத்தடிக்குப் பக்கத்திலிருந்து கொண்டுத்தான் முனியாண்டியின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் எத்தனையோ முனியாண்டிகளைப் பார்த்தாகிவிட்டது. போத்தக்கார முனியாண்டி, பாஞ்சாங் முனியாண்டி, கல்லுக்கடை முனியாண்டி, பாயா பெசார் முனியாண்டி, கோவில்கார முனியாண்டி, கட்டை முனியாண்டி இன்னும் பலர். சிலர் செத்துவிட்டனர். சிலருக்கு வயதாகிவிட்டது. சிலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இந்த முனியாண்டியை ஒரு லாரிக்காரராக மட்டுமே பழக்கம். ஆகையால் அவரை லாரிக்கார முனியாண்டி என்றே அழைப்பேன். சிலரிடம் அவன் இவன் என்பேன். சிலரிடம் அவர் இவர் என்பேன். பல சமயங்களில் நடை பேசிவிட்டுள்ளேன். பல சமயங்களில் உதவிக்கு ஆட்கள் பேசிக்கொடுத்துள்ளேன்.  சில மாதங்களுக்கு முன் விரோதமாகிவிட்டது. அவ்வளவாகப் பேச்சில்லை.

எனக்கு உயிர் பயம் வந்து இப்படிக் காலையிலேயே மெதுநடைக்குப் போகும் இந்தக் காலக்கட்டத்தில்தான் முனியாண்டியை அன்றாடம் இங்குச் சந்திக்கிறேன். தனியன் என்றாலே திமிர் பிடித்தவனாகத்தானே இருப்பான்? “ஒரு வார்த்தை பேசலே. என்ன திமிர் அவனுக்கு?”

இப்பொழுது வேறு யாரும் கவனிப்பதற்கு முன்பு அருகில் சென்று பார்க்கப் போகிறேன். ஒருவேளை இந்த முனியாண்டியும் இன்றோடு என் முனியாண்டிகளின் பட்டியிலிருந்து நீங்கலாம்; அல்லது ஒரு எதிரி தன்னைக் காப்பாற்றிவிட்டான் என வாழ்நாள் முழுவதும் இவன் நொந்து போகலாம்; அல்லது இன்னொரு நாள் சந்திக்கும்போது நன்றி சொல்லி மீண்டும் என்னுடன் பேசலாம்; அல்லது இன்றோடு இந்த முனியாண்டி ஒரு நினைவாகலாம், இதற்கு முன் எத்தனையோ பேர் நினைவாக மட்டுமே ஆனதைப் போல.

சரி. என் முன்னே விழுந்து கிடக்கும் இந்தத் தனியன், முனியாண்டிக்கு என்ன ஆனது எனப் பார்த்துவிட்டு வருகிறேன்.


கே.பாலமுருகன்

2 comments:

Pandiaraj Jebarathinam said...

தனியன் மீண்டு வந்து உங்களுக்கு நன்றி கூறுவான் அல்லது கூறுவார்...

அழகான சொல் நடை....

Unknown said...

நீங்கள் ஒருவர் போதும் தலைப்பு மற்ற விவரங்கள் தனியனைப் பார்த்துவிட்டு பிறகு கூறலாம்.