குழு உருவாக்கம்: மே 2014
நேரம்: ஓய்வு மணி அடிப்பதற்கு 5 நிமிடத்திற்கு
முன்
உறுப்பினர்கள்: பிரபா, சிவா , குமார்
குழுவின் நிரந்திர எதிரி: முகுந்தனும் அவனுடைய
நாற்காலியும்
குழு உறுப்பினர்களின்
சுயசரிதை
பிரபா
வகுப்பிலேயே இவன்
தான் கோபக்காரன். ஆனால் கோபப்படும்போது அழுவான். முகத்தை எப்பொழுதும் பல வகைகளில் நவரசமாக வைத்துக்கொள்வான். ஒரு முரட்டுத்தனமான பாவனை இருக்கும். சக மாணவர்கள் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என நினைப்பான். ஆனால், யாரும் இதுவரை பயந்ததில்லை. அதற்குக் காரணம் அவனுடைய ஓட்டை சிலுவார்தான். அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. ‘ஓட்டைச் சிலுவாரு பிரபா’. கடந்த மூன்று வருடத்திலும் அவன் சிலுவார் ஓட்டையாகவே இருக்கும். அது எப்படி உருவாகும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், நிச்சயம் அவன் சிலுவாரில் எங்கேயாவது ஓட்டை இருக்கும். அதை அவன் தைத்து தைத்து மீண்டும் கிழிந்து மீண்டும் தைத்து தைத்து, ஒரு நாள் அவனுக்கு சலிப்பேற்பட்டுவிட்டது. அதன் பிறகு தைப்பதை நிறுத்திக்கொண்டான்.
சிவா
கொஞ்சம் ஆர்வக்கோளாறு
அதிகம் உள்ளவன். ஆனால், எதையும் முழுமையாக முடித்ததில்லை. வகுப்பில் ஆசிரியரின் அதிகப்படியாகத் தண்டனைகள் பெற்று முதல்
இடத்தில் இருக்கிறான். ரிப்போர்ட் கார்ட்டில் சொந்தமாக அப்பாவின் கையொப்பம் வைப்பதில் கெட்டிக்காரன் என்பதால்
அவ்வப்போது குமாரும் பிரபாவும் இவனிடம்தான் கையொப்பம் வாங்குவார்கள். மகா நல்லவன் என்ற பெயரும் அவனுக்குண்டு.
குமார்
இவன் ஒரு அனுபவமிக்க
தலையாட்டி. எதற்கெடுத்தாலும் தலையாட்டுவான். குமாருக்கு அவன் நண்பர்கள் எடுக்கும் அனைத்து முடிவிற்கும் எப்பொழுதும்
சம்மதம்தான். அதனால், அவர்கள் இவன் அனுமதியையோ கருத்தையோ கேட்பதற்கு முன்பே தலையாட்டி
வைப்பான். பள்ளியில் தலைமை மாணவன் என்பதால்
எல்லோரும் இவன் சொல்லாமலேயே இவனைக் கண்டால் பயப்படுவார்கள். குமாரை எல்லோரும் ‘may I go out’ என்றுத்தான் விடைப்பார்கள். வகுப்பில் பாதி நேரம் இருக்கவே மாட்டான். வெளியே போக அனுமதி தாருங்கள் எனக் கேட்டு எங்குப் போவான் என
யாருக்குமே தெரியாது.
முகுந்தனின் நாற்காலி கதையும் ‘முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்’ செயல்திட்டமும்
இந்த நாற்காலியின் பெயர் ‘xyz’. அப்படித்தான் அழைக்க வேண்டும் என்கிற விதிமுறை. முகுந்தனின் பிரியமான நாற்காலி. கடந்த நான்கு வருடங்களில் அவன் இந்த நாற்காலியை மாற்றாமல் பயன்படுத்தி வருகிறான். ஒவ்வொரு வருடமும் வகுப்பு மாறி வரும்போது முகுந்தன் மட்டும் பழைய வகுப்பில் போய் அவனுடைய நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்துவிடுவான். அவனை நண்பர்கள் வேடிக்கையாகப் பேசுவார்கள். இதில் உட்கார்ந்து படித்தால்தான் அவன் ‘ஏ’ எடுப்பான் என்றெல்லாம் கிண்டலடிப்பார்கள். ஆனாலும், வகுப்பில் அவன்தான் கெட்டிக்காரன். ஒரு மகா நல்ல பையனின் வாழ்க்கையில் அவன் வகுப்பு நண்பர்கள் மூவர் எப்படி விளையாடினார்கள் என்பதுதான் ‘முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழுவின்’ மையக்கொள்கையாகும்.
சிவாவிற்கும் இந்த நாற்காலிக்குமான பகை அதிகபட்சம் முகுந்தன் இல்லாத நேரங்களில் அதனை எட்டி உதைத்திருக்கிறான். அவன் பெயர் எழுதப்பட்டிருக்கும் இடத்தைச் சேதப்படுத்தியுள்ளான். அவ்வளவுத்தான். முகுந்தனுக்கு அந்த நாற்காலியின் மீதிருக்கும் பற்றைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தால் அவனை ஜெயித்துவிடலாம் என்கிற ஒரு எண்ணம்தான். ஆனால், அவன் அந்த நாற்காலியை விட்டப்பாடில்லை. மீண்டும் பெயர் எழுதி வைத்துக்கொள்வான்.
ஒருநாள் அந்த நாற்காலியைக் கடத்த இவர்கள் மூவரும் திட்டமிட்டார்கள். அவனிடமிருந்து அவன் நேசிக்கும் ஒன்றைப் பிரித்துவிடுவதன் மூலம் அவன் படும் துன்பம் இவர்களுக்குள் இருக்கும் பொறாமையைச் சாந்தப்படுத்தும் என நம்பினார்கள். பிரபாத்தான் நாற்காலி கடத்தலில் எல்லாம் திட்டமும் வகுத்தான். அவன் பேசும்போது முகத்தைக் கொஞ்சம் குரூரமாக வைத்துக்கொள்வான் என்பதால் அவனே குழுவிற்குத் தலைவன் என்றானது. முதலில் அக்குழுவிற்கு ‘நாற்காலி கடத்தல் குழு’ எனப் பெயரிட்டார்கள்.
இந்தத் திட்டத்தில் மொத்தம் மூன்று பேர் ஏகமனதாகக் கலந்து கொண்டார்கள். பிரபா என்கிற ஓட்டைச் சிலுவாரு தலைவனாக இருக்க, குமார் என்கிற தலையாட்டி அவனுக்குத் துணையாக இருக்க, உலக நல்லவன் அதாவது சிவா தான், இருவருக்கும் உதவியாக இருக்க, இவர்களின் நாற்காலி கடத்தல் திட்டம் சரியாக ஞாயிற்றுக்கிழமை காலையில் துவங்கியது.
முகுந்தன் சைக்கிளில்தான் பள்ளிக்கு வருவான். அவனைவிட 10 நிமிடம் முன்னதாகப் பள்ளிக்கு வந்து சேர்வது சிவா. ஐந்தாம் நம்பர் பேருந்து ஏறுவதால் விடிவதற்கு முன்பே அந்தப் பேருந்தில் ஏறும் சிவா பள்ளிக்கு வந்துவிடுவான். ஆகவே, எல்லோருக்கும் முன்பாக வகுப்பிற்குள் நுழையும் பொறுப்பு சிவாவுடையது. அவனுக்கு அடுத்தப்படியாக அதாவது ஐந்தாம் நம்பர் பேருந்தின் வாலைப் பிடித்துக்கொண்டே வந்து சேரும் பேருந்து குமாருடையது. குமார் அப்பா அந்தப் பேருந்துக்குச் சொந்தக்காரர் இல்லையென்றாலும் அவன் அப்படித்தான் சொல்லிக்கொள்வான். ஆகவே, சிவா இரண்டாவது மாடியில் இருக்கும் அவர்களின் வகுப்பிலிருந்து முகுந்தனின் நாற்காலியைக் கடத்திக் கொண்டு வந்து கீழே வைப்பான்; அந்த நாற்காலியை அங்கிருந்து தூக்கிக் கொண்டு பள்ளியின் பெரியக் குப்பைத்தொட்டி ஓரம் இருக்கும் பழைய பொருள்கள் வைப்பறைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு குமாரினுடையதாகும். திட்டப்படி அவன் மட்டுமே அங்குச் செல்ல முடியும். அவன் தான் பள்ளியின் சட்டாம்பிள்ளை. அதாவது தலைமை மாணவன். ஆகவே, அவன் எதை எங்குக் கொண்டு போனாலும் ஆசிரியர்கள் தவிர வேறு யாரும் கேட்க முடியாது.
இந்தத் திட்டத்தையெல்லாம் வகுத்த பிரபாவிற்கு பெரிய வேலையெல்லாம் இல்லை. அவனும் சைக்கிளில் வருவதால், அடுத்த 10 நிமிடத்திற்குள் பள்ளிக்கு வந்துவிடும் முகுந்தனின் பயணத்தைத் தாமதப்படுத்த வேண்டும். இதற்காக பெரிய அளவில் சிந்தித்து பிரபா எடுத்த முடிவு என்னவென்றால் அவனுடன் பேச்சுக்கொடுத்துக் கொண்டே வருவதன் மூலம் முகுந்தனைத் தாமதமாக்கலாம் என்பதே. ஆக, பிரபா இரவு முழுக்க முகுந்தனிடம் என்ன கேள்விகள் கேட்கலாம் எனத் திட்டமிட்டு மன்னம் செய்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாம் திட்டமிட்டப்படி அன்று காலையில் நடந்தது. வகுப்பில் நுழைந்ததும் கொஞ்சம் நடுங்கினாலும் சிவா நாற்காலியைத் தூக்கிக் கொண்டு படியிலிருந்து கீழே இறங்கி ஓரத்தில் வைத்துவிட்டான். குமார் அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது. அவன் நிதானமாகச் சொந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டு போகும் பாவனையில் தயாராக இருந்தான். அவ்வளவாக விடியாததால் குமார் படு மகிழ்ச்சியில் இருந்தான்.
பிரபா திட்டமிட்டத்தைப் போலவே முகுந்தனைத் தற்செயலாக முற்சந்தி மரத்தோரம் சந்திப்பதைப் போல ஆச்சர்யம் மிகுந்த கண்களுடன் காட்சியளித்தான்.
“டேய் முகு … மலாய் சார் கொடுத்த பாடத்த செஞ்சிட்டியா?”
பேச்சை ஆரம்பிப்பதற்கு உகந்த கேள்வியாக அதனை முன்வைத்தான் பிரபா.
“என்ன? மலாய் பாடமா? நேத்து அந்த சார் பள்ளிக்கே வரலையே?” என
முகுந்தன் கூறியதும் பிரபாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது.
“ஓ
அப்ப நான் கனவு கண்டிருப்பனோ?” என அடுத்த நொடியே பிரபா தன் பாணியில் சமாளித்தான்.
இருவரும் பேசிக்கொண்டே சைக்கிளை மிதித்தனர். இடையிடையே முகுந்தனிடம் கேள்விக் கேட்பதும் மாட்டிக்கொள்வதுமாக மூச்சிரைக்கப் பள்ளிக்கு வந்து சேர்ந்தான் பிரபா. இனி இதுபோன்ற திட்டம் வேலைக்கு ஆகாது என
முடிவெடுத்தான். நன்றாக விடிந்தது. மேல் மாடியிலிருந்து குமாரும் சிவாவும் எல்லாம் நல்லப்படி முடிந்ததற்குச் சாட்சியமாக மகா கள்ளத்தனத்துடன் ஒன்றாகச் சிரித்தார்கள். வில்லன்களுக்கே உரிய சிரிப்பு அது.
முகுந்தன் வகுப்பிற்குச் சென்றதும் நாற்காலி காணாமல் போனதைக் கண்டு அலறப் போகிறான், அவன் அழுவதைப் பார்த்துக் கைத்தட்டி சிரிக்கப் போகிறோம் எனப் பற்பல கனவுகளுடன் மூவரும் நின்றிருந்தனர். ஆனால், முகுந்தன் மேலே வகுப்பிற்கு ஏறவே இல்லை. சிறிது நேரம் கழித்து அவனுடைய நாற்காலியுடன் உள்ளே வந்தான். அதிர்ச்சி என்கிற உணர்வு உருவம் பெற்று கைகால்கள் முளைத்து பளார் பளார் என
மூவரின் கன்னத்திலும் மாறி மாறி அறைந்தது. கண் விழிப்பிதுங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“என்னடா மாயம் இது?”
பிரபா அவனிடம் விசாரிப்பதைப் போல மீண்டும் பேச்சைக் கொடுத்தான்.
“என்னடா ஆச்சி? நாற்காலியே எங்கிருந்து தூக்கிட்டு வந்த?”
“எவனோ என் நாற்காலிய தூக்கிக் குப்பைத்தொட்டிலெ போட்டுருக்கான். தோட்டக்கார அண்ணன் பார்த்து இப்பத்தான் கீழ கொடுத்துட்டுப் போனாரு”
ஆக மொத்தம், அது முகுந்தனின் நாற்காலி எனத் தோட்டக்காரர் முதல் பள்ளியில் இருக்கும் மற்ற நாற்காலிகள் வரை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவர்களின் திட்டம் மட்டக்கரமாகப் பாழாய் போனது. நாற்காலி கடத்தல் திட்டம் கைவிடப்பட்டது.
பிரபாவுக்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. ஐஸ் கோசோங் குடித்து குடித்து வயிறு புடைத்துக் காணப்பட்டான். இருப்பினும் மனம் தளராத அவன் மீண்டும் அடுத்த திட்டத்திற்குத் தயாரானான்.
“என்னடா செய்யப் போறே?”
“நாற்காலி காலை உடைச்சிடலாம்டா”
“டேய் அது தப்பில்லையா? மாட்டனமா அவ்ளத்தான்”
“அதுலாம் பாத்துக்கலாம். எப்படியாவது இந்த முகுந்தனை அழ வைக்கணும், அதான் முக்கியம்”
எனப் பிரபா கூறியதும், அனைவருக்கு ஆர்வமும் நம்பிக்கையும் கூடின.
அவர்களின் இரண்டாவது திட்டம் முகுந்தனின் நாற்காலியின் காலை உடைப்பது ஆகும். எப்படியிருந்தாலும் அதை நினைத்து அவன் உள்ளூர மனம் வருந்துவான். அப்போதைக்கு அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகும். குறிப்பாக பிரபா திட்டம் தீட்டுவதில் கெட்டிக்காரன் எனப் போற்றப்படுவான்.
முதலாவது திட்டத்தைப் போலவே சிவாதான் நாற்காலியின் காலை உடைக்க வேண்டும். ஆனால், அவ்வளவு எளிதாக ஒரு நாற்காலியின் காலை உடைக்க முடியாது. அதற்கு ஆயுதம் தேவை. அந்த ஆயுதத்தைக் கொண்டு வரும் வேலைத்தான் குமாரினுடையதாகும். அவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஏன் என மீண்டும் காரணம் கேட்டால், அவன் தான் மாணவர்த்தலைவன் ஆகவே அவன் என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்றுத்தான் சொல்ல வேண்டும். ஆகவே, கேட்காதீர்கள்.
திட்டப்படி மீண்டும் பிரபாவிற்கு அதே வேலைத்தான். முகுந்தனுடன் பேச்சுக்கொடுத்துக் காதைப் புண்ணாக்கிக் கொண்டாலும் வேறு வழியில்லை. ஆகவே, ஒரு நாள் விட்டு செவ்வாய்க்கிழமை அவர்களின் திட்டம் அமலுக்கு வந்தது.
சிவா வகுப்பில் தயாராக இருந்தான். சுத்தியலைப் பத்திரமாக வைப்பறையின் ஓரத்திலிருந்து எடுத்துக் கொண்டு குமார் மாடியில் ஏறினான். ஒவ்வொரு அடிக்கும் பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டான். சுத்தியல் கொஞ்சம் பெரியது என்பதால் அதனை சட்டென மறைக்க முடியவில்லை. எப்படியோ தட்டுத்தடுமாறி அதனைக் கொண்டு போய் சிவாவிடம் சேர்த்தான். அத்துடன் அவனுடைய வேலை முடிவடைந்தது. இனி சிவா சுத்தியலைக் கொண்டு முகுந்தனின் நாற்காலியின் காலை உடைக்க வேண்டும். யாரும் வருகிறார்களா என
வேவு பார்க்க வேண்டிய வேலை குமாருக்குத்தான். ஆனால், கொஞ்சம் தொலைவிலேயே நின்று கொண்டு அந்த வேலையைக் குமார் செய்தான்.
இம்முறை சிவாவிற்குப் பயங்கரமாக நடுங்கியது. அப்பொழுது அவன் ஒரு பிரபுதேவாவாக நின்றிருந்தான். ஒரு பாட்டு இல்லாத குறைத்தான். முகுந்தனின் நாற்காலியைத் தரையில் சாய்த்தான். ஒரே அடியில் அந்தக் கால் உடைந்துவிட்டால் பரவாயில்லை என மனத்தில் நினைத்தான்.
அடுத்த நொடியே வகுப்பில் ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த மாணவியான சசிகலா சட்டென பூதம் போல குரலை எழுப்பினாள்.
“அவன் நாற்காலிய கீழ சாய்ச்சி என்னடா பண்ற?”
அதுவரை சிவா அவள் உள்ளே இருப்பதைக் கவனிக்கவே இல்லை. வகுப்பில் எல்லாம் பலகையும் கருநீல அட்டையில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். சசிகலாவும் கருநீல சீறுடையை அணிந்து கொண்டு படித்துக் கொண்டிருந்ததால் சிவாவால் அவளை அடையாளக்காண முடியவில்லை.
“ஆங்ங்ங்…இல்ல சசி. அவன் அன்னிக்கே சொன்னான் நாற்காலி காலு ஆடுதுனு, அதான் உதவி செய்யலாம்னு” என சிவா சமாளித்தான். கெட்டவர்களுக்கு உடனே சமாளிக்கத் தெரிய வேண்டும்.
சசிகலா தலையை ஒருமுறை ஆட்டி, இச்சி கொட்டிவிட்டு சிவாவின் நட்புணர்வைப் பாராட்டினாள். சிவாவிற்கு வயிறு கலங்கி காலையில் சாப்பிட்ட நாசி லெமாக் நடனமாடிக்கொண்டிருந்தது. உடனே நாற்காலியின் காலைச் சடங்கிற்கு ஓரிருமுறை மெதுவாகத் தட்டிவிட்டு அதனைத் தன் புத்தகப்பைக்குள் மறைத்தான். இதையெல்லாம் தெரியாமல் அப்பாவியாகக் குமார் இன்னமும் வேவுப் பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென முகுந்தன் வருவதைப் பார்த்துவிட்டுத் தலைதெறிக்க வகுப்பிற்குள் மெதுவாகக் கூவிக் கொண்டே ஓடி வந்தான்.
“சிவா நிப்பாட்டு! வந்துட்டான்” எனக் குமார் கூவியதைச் சசிகலா விநோதமாகப் பார்த்தாள். நல்ல பையன் போல உட்கார்ந்திருந்த சிவா குமாரைப் பார்த்து பல்லிழித்தான்.
இரண்டாவது திட்டம் பாழாய் போனதும் பிரபா குழுத்தலைவன் என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டு இருமுறையும் ஆபத்தான ரிஸ்க் எடுத்த சிவா தலைவனானான். இவர்கள் அந்தக் குழுவிற்கு வேறு பெயர் வைத்தார்கள். ‘Mugunthan’s chair Demolish group’. அதாவது தமிழில் ‘முகுந்தனின் நாற்காலி ஒழிப்புக்குழு- 2014’ என அவர்களே சொல்லிக்கொண்டார்கள். அந்தக் குழுவின் முதல் திட்டவரைவு அவனுடைய நாற்காலியை அவனிடமிருந்து பிரிப்பதாகும். இருப்பினும் இரண்டுமுறை தோற்றுப்போன அனுபவத்தின் வழி அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்கள். வேறு எப்படியாவது அந்த நாற்காலியை ஒழிக்க எதிர்காலத் திட்டங்களைப் பிறகு வகுக்கலாம் எனத் தள்ளிப்போட்டார்கள்.
நான்காம் ஆண்டின் இறுதி தேர்வு வந்தது. மூவரும் போட்டிப்போட்டுக் கொண்டு படித்தார்கள். எப்படியாவது முகுந்தனைவிட புள்ளிகள் அதிகம் எடுத்து அவன் மூக்கை உடைக்க வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். இரவில் குழுமுறையிலெல்லாம் படித்தார்கள். அவர்களின் ஆர்வ மிகுதியைக் கண்டு அவர்களே வியந்தனர். ஆனாலும், இறுதி தேர்வில் முகுந்தனே வகுப்பின் முதல் மாணவனாகத் திகழ்ந்தான்.
“டேய்ய்ய், அவன் அடுத்த வருசமும் இந்த நாற்காலியைத்தான் கட்டிக்கிட்டு அழுவான். அதனாலே நம்ப திட்டத்தை அடுத்த வருசம் வச்சிக்கலாம்” என
சிவா பள்ளியின் இறுதி நாளில் சொல்லிவிட்டு அவன் அப்பாவுடன் மோட்டாரில் போனவன் தான். ஒரு மாத விடுமுறை ஆரம்பமானது.
2015ஆம் ஆண்டு புதிய திட்டங்களுடன் மூவரும் ஐந்தாம் ஆண்டு வகுப்பிற்கு வந்தார்கள். அவர்களின் நான்காம் ஆண்டு வகுப்புத்தான் இப்பொழுது ஐந்தாம் ஆண்டு வகுப்பாக நிலைத்திருந்தது. ஆகவே, பழகிப்போன வகுப்பறை. புது ஆடை, புது புத்தகப்பை என
எல்லோரும் புதியதாகக் காட்சியளித்தார்கள். பிரபா, சிவா, குமாரும் ஆர்வத்துடன் இருந்தார்கள். முகுந்தனின் நாற்காலி அதே இடத்தில் அதே பொலிவுடன் இருந்ததை மூவரும்
கவனித்துக் கொண்டிருந்தனர். அதனைக் குரூரமாகப் பார்த்தார்கள். பிரபா தன் ஐந்து விரல்களையும் மடக்கி முகத்திற்கு நேராக வைத்து சிலமுறை அதிரச்
செய்தான். அது இவ்வருடம் இந்த நாற்காலிக்கு
ஒரு வழி செய்துவிடுவோம் என்பதற்கான சமிக்ஞை.
பள்ளி மணி அடித்தும்
முகுந்தன் வகுப்பில் நுழையவில்லை. புதியதாக வந்த வகுப்பாசிரியைத் தன்னை அறிமுகப்படுத்திவிட்டு இந்த வகுப்பில் படித்த
முகுந்தன் என்ற மாணவன் ஜொகூருக்கு மாற்றலாகிப் போய்விட்டதாக அறிவித்தார். மூவரும் அதிர்ச்சியுடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
அன்று ஓய்வு மணிக்குக்கூட
அவர்களால் கீழே இறங்க முடியவில்லை. முகுந்தனின் நாற்காலியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவ்விடம் காலியாக இருந்தது. பிரபாவின் கண்கள் அவனின் அனுமதியில்லாமலேயே கலங்கிக் காணப்பட்டன. சிவா உடனே தன் புத்தகைப்பையில் ஒளித்து வைத்திருந்த லிக்குயிட்
பேப்பரை எடுத்து அந்த நாற்காலியில் ‘முகுந்தனின் நாற்காலி’ என எழுதிவிட்டு அதனை வகுப்பின் பின்புறம் கொண்டு போய் வைத்தான்.
எவ்வித அறிவிப்புமின்றி
‘Mugunthan’s chair Demolish group’ அன்றோடு யாருக்கும் தெரியாமல் கலைக்கப்பட்டது.
-
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment