Tuesday, February 17, 2015

அ.ராமசாமியுடன் கழிந்த 7 நாட்கள்: பாகம் 1 (இமையத்தின் வருகை)

கடந்த வருடமே முகநூலின் வழி மலேசிய வருகையை எழுத்தாளர் பேராசரியர் அ.ராமசாமி அவர்கள் தெரிவித்திருந்தார். மலேசியாவில் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். உடனடியாக இரண்டு இலக்கிய சந்திப்புகளுக்குச் சொல்லியிருந்தேன். அ.ராமசாமி ஐயா அவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் அனுப்பியிருந்தேன்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக முன்னமே சிங்கப்பூர் வந்தவுடன் அவருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் உறுதியானது. இது தொடர்பாக நானும் அ.ராமசாமி அவர்களும் பலமுறை முகநூலில் பேசித் திட்டமிட்டோம். 29ஆம் திகதி காலையில் நானும் தினகரனும் விரிவுரைஞர் மணியரசன் அவர்களும் காரில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது யோகியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

“உங்க ஆளு இங்கத்தான் இருக்காருலா” என்றார். உடனே தெரிந்துவிட்டது அ.ராமசாமி ஐயாவைத்தான் யோகி அப்படிச் சொல்கிறார் என. மலாயாப்பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த அ.ராமசாமி அவர்களால் உடனே பதிய முடியாததால் தடுமாறிவிட்டார். காலை பதிவுக்கான நேரம் தாண்டிவிட்டதால் குறிப்பிட்ட நபர்கள் யாரும் பதிவிடத்தில் இல்லை. பின்னர், யோகிதான் அவரை அழைத்துக் கொண்டு போய் மாநாட்டின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவரை கவனித்துக்கொண்டார்.

பிறகு அ.ராமசாமி அவர்களை மாநாட்டின் துவக்க விழாவிற்கு முன் சந்தித்தேன். பயண அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். மாநாட்டின் தொடக்க விழா பொது உரைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் குழலி அவர்கள் எழுத்தாளர் அண்ணன் இமையம் அவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை இமையம் வருவது எனக்கு தெரியாது. தமிழர்களின் பொது அடையாளம் சார்ந்த உரையாடலாக இமையத்தின் பேச்சு இருந்தது. அவரின் இயற்பெயர் அண்ணாமலை. பள்ளி ஆசிரியர் ஆவார்.

அன்றைய இரவு இமையத்தின் மாநாட்டுக் கட்டுரை தலைப்பைக் கவனித்துவிட்டு நானும் தினகரனும் கட்டாயம் இந்த உரைக்குச் செல்ல வேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதும் எங்களுக்குத் தெரியாது அண்ணாமலைத்தான் இமையம் என. ‘2000க்குப் பிறகு வந்த தமிழ் நாவல்கள்’ குறித்து யாரோ அண்ணாமலை பேசப்போகிறார் என நினைத்தோம். பிறகுத்தான் மறுநாள் காலையில் அண்ணாமலை என்பது இமையம் எனத் தெரிந்தது.

அ.ராமசாமி ஐயாவின் மாநாட்டுக் கட்டுரையைக் கேட்க மறுநாள் நானும் தினகரனும் சென்றிருந்தோம். பலர் கொடுக்கப்பட்ட சுருக்கமான நேரத்தில் முழுமையான ஆய்வையும் சுருக்கிச் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் ஐயா அ.ராமசாமி அவர்கள் 13ஆவது நிமிடம் வரை மிகவும் கச்சிதமாகத் தன் ஆய்வை ஓர் இலக்கிய உரையைப் போல நிகழ்த்தினார். குறிப்பாக அவர் பேசிய தினைக் கோட்பாடுகள் பிரமிக்க வைத்தது. சங்க இலக்கியம் என்பது எத்துனைத் துல்லிதமான நுட்பமான இலக்கியம் என்பதை ஆழமாக உணர வாய்ப்பாக இருந்தது. உடல்கள் தீராப் பசியுடன் இன்னொரு உடல்களைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கின்றன என அவர் சொல்லும்போது உடல்களின் அரசியல் குறித்த புரிதல் உருவானது. உடல் என்பது வெறும் இரத்தத்தாலும் சதையாலும் ஆனது மட்டும் அல்ல; உடலுக்கு ஒரு மிகப்பெரிய தேவை இருக்கின்றது; உடலுக்கு பசி இருக்கின்றது; உடலுக்கு இயக்கம் இருக்கிறது; வயிற்றுப் பசியைப் போல உடலுக்கும் பசியிருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அன்று மாநாட்டிற்குப் பிறகு நானும் தினாவும் இரவில் அ.ராமசாமி தங்கியிருந்த அறைக்குச் சென்றோம். அங்கு இமையமும் இருந்தார். மலேசிய நாவல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அ.ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை கொடுத்தார். மேலும் கோட்பாடுகள் தொடர்பான எளிய விளக்கங்கள் உள்ள ஒரு நூலை நான் கேட்டதற்கிணங்க தமிழகத்திலிருந்து வாங்கி வந்திருந்தார். அதனையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.


மறுநாள் இமையத்தின் உரைக்குச் சென்றோம். அவர் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போதே நேரம் முடிவடைந்துவிட்டதால் முழுக் கட்டுரையையும் வாசிக்க முடியாமல் போயிற்று. 2000க்குப் பிறகான நாவல்களில் பிராமணியத் தாக்கம் குறைந்து ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்க்கைகளைச் சொல்லும் நாவல்கள் அதிகம் வரத் துவங்கியதை மிகவும் விமர்சனப்பூர்வமாகக் குறிப்பிட்டார். அவரைப் பாதியிலேயே நிறுத்தும்படி கூறிய அரங்கத் தலைவரின் மீது தவிர்க்க முடியாத கோபம் உருவானது. நானும் தினாவும் முனகிக் கொண்டே அரங்கத்தைவிட்டு வெளியேறினோம்.

-    தொடரும்

கே.பாலமுருகன்

No comments: