அன்றிரவு
அ.ராமசாமி ஐயா என்னை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு அறைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.
எழுத்தாளர் இமையமும் எங்களுக்காகக் காத்திருக்கிருப்பதாகக் கூறினார். மலாயாப்பல்கலைக்கழகத்தின்
மாணவர்களுக்கான தங்கும் விடுதி அது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வந்ததில் அ.ராமசாமி
ஐயாவையும் எழுத்தாளர் இமையத்தையும் சந்தித்து உரையாடுவது மகிழ்ச்சியாகவே இருந்தது.
நானும் தினாவும் அறையிலேயே அவரின் நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
அந்தக் கல்லூரி மாணவனை எனக்கும் நன்றாகத் தெரியும். ஓர் அதிர்ச்சியான இரவு அது. பிறகு
அ.ராமசாமி அறைக்குப் போனதும் இந்தத் தற்கொலை தொடர்பான உரையாடல் கொஞ்சம் நேரம் நீண்டது.
பின்னர்
இமையம் நான் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலைப் பற்றி விசாரித்தார்.
அக்கதையை முதலிலிருந்து சொல்லத் துவங்கினேன். அ.ராமசாமி இது முக்கியமான நாவலாகக் கருதுவதாகக்
குறிப்பிட்டார். தோட்டத்துக்குப் புலம்பெயர்ந்ததைப் பற்றி நிறைய நாவல்கள் வந்துவிட்ட
சூழலில் தோட்டத்திலிருந்து நகரத்துக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாறாக இந்த
நாவல் இருக்கிறது. நாவலின் தேவை பிரிவேக்கமாக மட்டும் இருந்துவிடக்கூடாது, அது காலத்திற்கேற்ப
பதிவுகளை முன்னகர்த்த வேண்டும் எனச் சொன்னார். இமையத்துக்கு என் நாவலை அனுப்பி வைப்பதாகச்
சொன்னேன். தனது நாவல் ஆய்வுக் கட்டுரையில் அதை இணைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு இமையம்
உறக்கத்தில் ஆழ்ந்தார். பிறகு நாங்களும் அ.ராமசாமியுடன் கொஞ்சம் நேரம் பேசியிருந்துவிட்டு
விடைப்பெற்றோம்.
அன்று
முழுவதும் தினா கூறிய அந்தத் தற்கொலை தொடர்பான எண்ணங்களே நினைவுக்குள் மீந்திருந்தன.
தற்கொலைகள் தொடர்பான ஒரு அழுத்தமான கதை வைத்திருக்கிறேன். ஆனால், அதனைக் கதையாக்க எப்பொழுதும்
தடுமாற்றம் இருக்கும். எழுத நினைக்கும்போதெல்லாம் அக்கதை ஒரு மிரட்டலாக தெரியும். மரணத்தை
நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது யதார்த்தம். ஆனால், தற்கொலை யதார்த்தம் கிடையாது.
அது தூண்டுதல். அது ஒரு வகையான தேர்வு. அந்த உளவியலை இன்னமும் ஆழமாக விவாதிக்காமல்;
படிக்காமல் ஏன் எழுத வேண்டும் என்றே தோன்றியது.
தற்கொலைகள் பற்றி நாம் எவ்வளவோ விவாதிக்கலாம்;
பொதுக் கருத்துக் கூறலாம். ஆனால், அந்த வெளிக்குள் குறைந்தது ஒரு நாளாவது நாம் நுழைந்திருப்போமா?
நான் இரண்டு நாட்கள் அந்த மனநிலையில் அலைந்த அனுபவம் உண்டு. 2012ஆம் ஆண்டில் அது நடந்தது.
இப்பொழுதும் உணர்கிறேன், வெளியிலிருந்து கொண்டு தற்கொலைகள் மீது ஆயிரம் கருத்துகளையும்
வசைகளையும் அபிப்ராயங்களையும் சொல்லலாம்தான். ஆனால், அந்த வெளிக்குள் நுழைபவர்கள்,
அதிலிருந்து மீள்வதும் அல்லது அதிலேயே நீடித்து தன்னைத் தானே கொலை செய்து கொள்வதும்
நம் பொதுப்புத்திக்கு அப்பாற்பட்டவை. அவர்களின் தேர்வின் மீது நமக்கு பயம் உண்டு. அதைக்
கண்டு உண்மையில் நாம் இரக்கப்படவில்லை; பயப்படுகிறோம். மரணம் தன்னை வேறொரு ரூபத்தில்
வந்து அச்சுறுத்துவதாகப் பயம் கொள்கிறோம். அந்தப் பயத்தைக் கருத்துகளாக்கி, வசைகளாக்கி,
தண்டனைகளாக்கி வெளிப்படுத்துகிறோம்.
அன்று
படுப்பதற்கு முன்பு நானும் தினாவிடம் அதையே கேட்டு வைத்தேன். “தற்கொலை செய்து கொள்ளும்
அளவுக்கு அவனுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்?”. இருவரிடமும் பதில் இல்லை. வாழ்க்கை
எப்படியோ ஒரே ஒரு அழுத்தாக மனத்தைப் போட்டு வதைத்துவிடுவதால் இந்தத் தேர்வை அவர்கள்
செய்கிறார்களா? அல்லது ஏதோ ஒரு சிக்கல் அவர்களைத் துரத்துகிறதா? அல்லது சமூகம் அவர்களைத்
தூண்டுகிறதா? இமையத்தின் பெத்தவன் சிறுகதை மீண்டும் நினைவுக்கு வந்தது. திடீரென்று
மனம் அடையும் சலனங்களுக்கு இலக்கியமே கைக்கொடுக்கிறது. யாரோ ஒரு படைப்பாளி எங்கோ ஒரு
படைப்பின் மூலம் வாழ்க்கை குறித்தான எல்லாம் சந்தேகங்களையும் பதற்றங்களையும் பதிவுகளையும்
தன் இலக்கியங்களில் சொல்லி வைத்திருக்கிறான். வாசிப்பும் தேடலும் அதனைக் கண்டடைய வைக்கிறது.
பெத்தவன்
சிறுகதை சாதி மீது ஒரு மேல்சாதி மக்கள் வைத்திருக்கும் அதீதமான கௌரவ மனநிலைகளை அலசுகிறது.
சாதி கௌரவக் கொலைகள் கிராமங்களில் நடந்து கொண்டிருந்த காலக்கட்டம். அதுவும் பெத்தவன்
சிறுகதைக்குப் பிறகு தற்செயலாக தருமபுரி மாவட்டத்தில் நடந்த கௌரக் கொலை இலக்கியம் வாழ்வின்
நிஜத்தையே பேசுகின்றன என்பதை வலுப்படுத்தின. இப்பொழுதுள்ள சமூகத்தின் மனநிலையை உள்வாங்கிக்
கொண்டு அடுத்த நகர்வை நோக்கி இலக்கியவாதி சிந்திக்கிறான். அவனுடைய தீர்க்கத்தரிசனம்
என்பது தெய்வநிலையெல்லாம் இல்லை. மிகவும் யதார்த்தமான சரியான கணிப்பாக இருக்கிறது.
இமையமும் பழனி, பழனியின் மகள் மேல்சாதிப் பெண் பாக்கியத்தின் மூலம் தமிழகத்தின் கிராமங்களில்
ஊறிப்போய்க்கிடக்கும் சாதி மீதான முதலாளியக்குணங்களின் அடுத்த கட்டம் என்ன என்பதாகவே
இக்கதையை நகர்த்துகிறார்.
மகளைக் கொலை செய்தே ஆக வேண்டும் என ஊர்மக்கள் நிர்பந்திக்க
மூன்றுமுறை கீழ்சாதி பையனுடன் ஓடிப் போய் இப்பொழுது மீண்டும் பிடிப்பட்டிருக்கும் பாக்கியத்தை
என்ன செய்யலாம் எனப் பழனியின் வாழ்வில் கழியும் மிகக் கொடூரமான ஓர் இரவைக் கதையாக்கியிருக்கிறார்
இமையம். கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் பாக்கியத்தின் வாயில் பூச்சி மருந்தை
ஊற்றிக் கொல்லும்படி இரக்கமில்லாமல் சொல்கிறாள். வாழ்வது பற்றியோ சாவதைப் பற்றியோ அவளுக்கு
எந்தக் கவலையும் இல்லை. ஆனால், ஒரு சமூகம் சாதியை எத்தனை இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கிறது
என்பதற்கு பதில்தான் அப்பெண் கதைப்பாத்திரம்.
கதையின்
முடிவு நம் மனத்தை சாதிய இரத்தத்திற்குள் வைத்து அலசி எடுக்கிறது. ஒரு கதையின் ஒட்டுமொத்த
திறப்பும் அக்கதையின் முடிவில் நிகழலாம். பெத்தவன் கதையின் முடிவும் அப்படியே. அவ்வளவு
நேரம் கதையில் உடன் வந்த இறுக்கமும் பதற்றமும் அந்த முடிவை நோக்கி இழுத்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும்.
பாக்கியத்தின் தந்தையான பழனியின் மரணம். சாதி இல்லை எனச் சொல்வது ஒரு மோசமான பொய் என்றால்; சாதி இன்னமும் மனத்தின் ஒரு இருளான பகுதியில் இருந்து கொண்டு நம் பெருமைகளையும் கௌரங்களையும் கட்டமைத்துக்கொண்டே இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
அதுவரை
சாதிய கொலைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த; புகார் செய்து கொண்டிருந்த இலக்கிய சூழலில்
இமையம் சாதியப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அப்பா எனும் குடும்பத் தலைவன்
தன் தற்கொலையின் மூலம் சாதிய கௌரவக் கொலைக்கு எதிராக மிக அழுத்தமான வதையை விட்டுச்
செல்கிறார். சாதியைக் காரணம் காட்டி நாம் பெற்ற பிள்ளைகளைக் கொலை செய்வதைவிட, இப்படியொரு
வன்முறைமிக்க மனம் படைத்தமைக்காகச் செத்தொழியலாம் எனச் சமூகத்தை ஓங்கி அறைகிறது பெத்தவன்
சிறுகதை.
அப்படியென்றால்
தற்கொலை ஒரு அறிவிப்பாகவும் இருக்கலாம் என்றே தோன்றியது. தினாவின் நண்பன் எதை அறிவித்துவிட்டுப்
போயிருக்கிறான்? அந்தக் கல்லூரி பையன் சமீபமாகத்தான் என்னுடன் முகநூலில் பேசத் துவங்கியவன்.
என் சிறுகதை ஒன்றின் கீழ் அவன் இட்ட கருத்தைக்கூட இப்பொழுதும் காணலாம். ஆர்வத்துடன்
வாசிக்கிறான் என நினைத்தேன். மனம் பக்குவப்படவில்லை என அவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிடலாமா?
எந்தக் கருத்தையும் பதிவிட மனம் ஒவ்வவில்லை. அமைதியாக இருவரும் மறுநாள் அ.ராமசாமி ஐயாவுடன்
கடாரத்துக்குப் புறப்படுவதைப் பற்றி நினைத்துக்கொண்டே உறங்கினோம்.
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment