இவ்வருடம் தீபாவளிக்கு அஜித் நடித்த ‘வேதாளம்’ படமும் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படமும் திரைக்கு வந்தன. மலேசிய அளவில் வேதாளம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தப் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் கதாநாயகனை முன்வைத்தே ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. கதாநாயக வழிபாடு எப்படி உருவானது என்றால் ஒரே மாதிரியான மசாலா படங்களில் நடித்து நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற பிறகு ஒரு கதாயாகன் கொண்டாட்டத்திற்குரியவனாக மாறுகிறான்.
அவ்வகையில் கமல் அஜித் அளவிற்கான மாஸ் கதாநாயகன் கிடையாது. நடிப்புக்கும் கதைக்கும் தன்னைத் தைரியமாக அர்ப்பணித்துக் கொள்ளும் கலைஞன். தன்னைப் பின்னே வைத்துக் கதையை முன்னுக்குத் தள்ளும் படங்களில் கமல் நடித்திருந்தாலும் விஷ்வரூபம் போன்ற படங்களில் தன்னை மட்டுமே முன்னிறுத்துபவராகத் தோன்றினார். இதற்கிடையில் தன்னால் மாஸ் ஹீரோவாக மட்டுமே தோன்ற முடியும் எனத் தன் படங்களில் காட்டி வந்தாலும் ‘என்னை அறிந்தால்’ போன்ற படங்களுக்காகத் தன் கதாநாயகத்துவங்களை விட்டுக் கொடுக்கவும் அஜித் தயங்கியதில்லை என்றே சொல்ல வேண்டும். ஆக, இரண்டு முக்கியமான கதாநாயகர்களின் சினிமாவான தூங்காவனமும் வேதாளமும் தமிழுக்கு மேலும் நல்ல ஜனரஞ்சகத்தனமான படம் என்றே அடையாளப்படுத்தலாம்.
வேதாளம்
தமிழ் சினிமாவின் அரதப்பழசான தங்கை பாசத்தை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட படம். திருப்பங்கள் மிக்க திரைக்கதையால் வேதாளம் அதனை மறக்கடிக்கிறது. தத்தெடுத்துக் கொண்ட தன் தங்கையின் குடும்பத்தைக் கொன்ற சர்வதேசக் குற்றவாளிகளான சகோதரர்களை வேதாளத்தைப் போல பழி வாங்குகிறார் முன்னாள் ரௌடி அஜித். இதுதான் படத்தின் மையக் கதை. பழிவாங்குதலும் தங்கை பாசமும் தமிழ் சினிமாவின் சலித்துப் போன கூறுகளாகும். மொத்த தமிழ் சினிமாவும் பழி வாங்குதலின் நியாயங்களைப் பேசியே புழுத்துப்போனவையாகும். பேய் படத்திலிருந்து நாய் படம் வரை பழிவாங்குதலின் மையச் சரடைப் பிடித்துக் கொண்டு நகர்ந்தே பழக்கப்பட்டுவிட்ட தமிழ் சினிமா சூழலில் மேலுமொரு பழி வாங்கும் பாங்கில் வரக்கூடிய படம் திரைக்கதையைக் கவனப்படுத்தினால் வெற்றிப் பெற்றுவிடும் நிலையே தற்பொழுது உருவாகியுள்ளது.
ஆகவே, வேதாளம் படத்தின் கதையில் எங்குமே புதுமை இல்லையென்றாலும் திரைக்கதையில் முன்னும் பின்னுக்குமான திருப்பங்களை வைத்து சமாளித்துவிட்டார்கள். அடுத்து, வேதாளம் படத்தின் பலம் என்றால் அது அஜித் தான். எப்பொழுதும் போல் இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமான வன்முறை வெளிப்பாடுகளைத் தன் நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ரோஷமான தன் உணர்வுகளின் ஆழ்நிலை அலைகளைப் பிதுக்கி தன் முகப்பாவனையில் வெளிப்படுத்துவது ஆச்சரியமாக இருந்தது. தமிழ் சினிமாவின் வழக்கமான மாஸ் கதாநாயகர்களின் சண்டை காட்சிகள் என்பது நிறைய ‘பன்ச்’ வசனங்களும் ஓர் ஒற்றை கோபமும் மட்டும் இழையோடும். ஆனால், அஜித் தோன்றும் சண்டை காட்சிகளில் சிலவற்றில் வழக்கத்தைவிட்டு உணர்ச்சிப்பூர்வமான ஒரு தளத்திற்குள் நின்று தன்னை வெளிப்படுத்துகிறார். அது மட்டுமே வேதாளம் படத்தின் கூடுதல் பலம். இயக்குனர் சிவா மேலும் தமிழ் சினிமா கவனப்படுத்தாத நல்ல கதைகளைக் கொண்டு சமூகத்திடம் உரையாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தூங்காவனம்
‘Sleepless
night’ என்கிற மாற்றுமொழி சினிமாவின் அதிகாரப்பூர்வ மறு உருவாக்கம்தான் தூங்காவனம். தமிழ் சூழலைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் உருவாக்கப்பட்ட படம் என்பதால் கதையோடு ஒட்ட முடியவில்லை. தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி என எடுத்துக் கொண்டாலும் முற்றிலுமாக ஓர் அந்நியத்தன்மை படத்தோடு பயணிக்கிறது.
நம்மைக் கொஞ்சமும் அசையவிடாமல் படத்தைத் தொடர்ந்து பார்க்க வைக்கும் திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தியுள்ளார்கள். கமல் படத்தில் தனது யதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். வழக்கமான அவருடைய ஆக்கிரமிப்பு இப்படத்தில் இல்லை என்றே சொல்லலாம். கமலை நீக்கிவிட்டு வேறு யாரையும் அக்கதைப்பாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்ற அளவிலேயே கச்சிதமாக நடித்திருக்கிறார். தூங்காவனம் பொறுத்தவரை கதையும் புதிய தளத்தில் நிற்கிறது; திரைக்கதையும் ஆர்வமூட்டுகிறது. ஆனாலும் இது நம் கதை அல்ல; வேறொரு மொழியில் நன்கு கவனிக்கப்பட்ட படத்தின் தழுவல் என நினைக்கும்போதே ஓர் அந்நியமான உணர்வு மேலிடுவதைத் தடுக்க முடியவில்லை.
- கே.பாலமுருகன்
No comments:
Post a Comment