Wednesday, November 25, 2015

அ.முத்துலிங்கத்தின் இலையுதிர் காலம் : வாழ்க்கையை நினைவிலிருந்து அழிப்பது

இவ்வாழ்க்கை நம்மை ஒவ்வொரு கணமும் நகர்த்திக் கொண்டே இருக்கிறது. நாம் நினைத்தப்படியும் நினைக்காதபடியும் எவ்விதத் திட்டமும் இல்லாமல் முன்னறிவுப்பும் இல்லாமல் வாழ்க்கை நம்மை நகர்த்தியப்படியே இருக்கிறது. வெறுமையிலிருந்து குதுகலத்திற்கும், சோகத்திலிருந்து சூன்யத்திற்கும், சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கும், ஏக்கத்திலிருந்து கவலைக்கும், கூட்டத்திலிருந்து தனிமைக்கும் என மாற்றி மாற்றி ஒவ்வொரு நாளும் நாம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நகர்ச்சி நம் வாழ்வின் நித்தியம்.

இரவுவரை சிரித்துக் கும்மாலம் அடித்துவிட்டுப் படுத்துறங்கி மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது சட்டென ஒரு சோகம் மனத்தை இழுத்துப் பிடித்திருக்கும். ஏன் என்றும் தெரியாது. மறுநாள் அதே சோகம் வெறுமையாகியிருக்கும். பின்னர் ஏதாவது ஒரு சம்பவத்தின் வழி நாமே அதனிலிருந்து நம்மை மீட்டுக்கொள்வோம். சிறுக சிறுக வாழ்க்கை நம்மை ஏதாவது ஒரு நிலைக்குத் தள்ளியப்படியே நகர்வதை உணர்ந்திருக்கிறோமா?

.முத்துலிங்கத்தின் இலையுதிர் காலம் சிறுகதை அத்தகையதொரு நகர்ச்சியின் யதார்த்தத்தின் முன்பே என்னைக் கொண்டு போய் நிறுத்தியது. அக்கதையின் வழி நான் அடைந்த இடம் அதுவாக இருந்தது. வாசகனுக்கு வாசகன் இவ்விடத்தில் வேறுபடலாம். நான் ஒட்டுமொத்த வாசகனுக்கான எல்லையை என் வாசிப்பின் வழியோ அல்லது இக்கதையில் நான் கண்டடைந்ததன் வழியோ நீர்த்துவிட முனையவில்லை. எல்லா நல்ல கதைகளுமே நமக்கான ஒரு திறப்பை வைத்திருக்கிறது. நம் முன் அனுபவங்களுடனோ நம் நம்பிக்கைகளுடனோ உரையாட விளைகிறது. எனக்கான திறப்புத்தான் எல்லோருக்குமானது என நிலைநிறுத்தும் எழுத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

.முத்துலிங்கம் அவர்களுடன் 2006ஆம் ஆண்டில் நிறைய மின்ன்ஞ்சல் உரையாடலை மேற்கொண்டுள்ளேன். மிகவும் தன்மையான மனிதர். அவருடைய உறவினர் பெயரும் என் பெயரும் ஒன்றாக இருப்பதால் அடிக்கடி மின்னஞ்சலில் பேசும்போது குழம்பிவிடுவார். அவ்வருடம் மட்டுமே அவருடன் தொடர்பில் இருந்தேன். அதன்பிறகு நானும் வேறு எழுத்தாளர்களுடன் பேசத் தொடங்கியதும் அவரிடமிருந்து நகர்ந்துவிட்டேன். நகர்வு எத்தனை கசப்பானதாகத் தோன்றினாலும் அது யதார்த்தம் என்பதை நம்முடைய வாழ்பனுவங்கள் உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன.

இக்கதையின் கதைச்சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. தன் பக்கத்து வீட்டுக்காரரான 70 வயது நிரம்பிய சூஸனைப் பற்றி விவரிப்பதிலிருந்து கதை ஆரம்பமாகிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தனிமையில் வாழும் ஒரு வயது முதிர்ந்த பெண்ணைப் பற்றிய சித்தரிப்புகள் அடங்கிய கதை. நான் அறிந்த பலர் எப்பொழுதும் வயதானவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. அவர்களைப் பற்றி பெரிதாக அபிமானங்களும் இருப்பதில்லை. வயது முதிர்ந்துவிட்டதாலே அவர்கள் மரணத்திற்காகக் காத்திருக்கும் ஒரு ஜடமாக மட்டுமே பார்த்துப் பழகிவிட்ட பொதுமனங்களுக்கு இக்கதை ஆழமான பாதிப்பை உருவாக்கக்கூடும்.

நாங்கள் கம்போங் ராஜாவில் இருந்தபோது என் வீட்டுப் பக்கத்திலும் ஒரு தனித்த சீனக்கிழவி பல வருடங்கள் தங்கியிருந்தார். அவருடைய மகன் மாதம் இருமுறை அல்லது ஒருமுறை வருவார். அங்கிருந்த இன்னொருவர் மூலம் அவருக்கு தினமும் உணவு வழங்கப்பட்டதைத் தவிர அவருக்கு வேறு நாதியில்லை. வீடு முழுக்க உலாவிக் கொண்டே இருப்பார். வீடு முழுக்க அவரே நிரம்பியிருந்தார். ஏதாவது செய்து கொண்டே இருப்பார்.


சலிப்புத் தட்டும்போதெல்லாம் அருகில் இருப்பவர்களிடம் சண்டையிடுவார். தேவையில்லாமல் வீடு தேடிப்போய் வம்படித்துவிட்டு வருவார். எல்லோரும் அவரைக் கண்டுக்கொள்ளாமல் நகர்ந்தோடிப் போய்க்கொண்டிருக்கும் ஒரு சூழலில் வன்மத்துடன் ஆக்ரோஷமாகத் தன்னை நோக்கி அங்குள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கச் செய்தார். அப்பொழுது எனக்கு அதெல்லாம் தெரியவில்லை. அவரைக் கல்லெறிந்து விளையாடியிருக்கிறேன். இச்சமூகம் முதியோர்களை நடத்தும் விதத்திலிருந்து சிறியவர்கள் கற்றுக் கொள்வது இதைத்தான்.

இலையுதிர்காலம் என்பது மனித வாழ்க்கையில் கட்டாயமாக இன்னொருவரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையுள்ள காலமாகும். அக்காலக்கட்டத்தில் ஒரு முதியோரைக் கைவிடுதல் என்பது எத்தனை கொடூரமானது? இச்சமூகம் இந்நிலையையே கதைகளிலும் கவிதைகளும் புகார்களாகவும் பிரச்சாரங்களாகவும் கதறி கதறி கூச்சலிட்டுள்ளன. ஆனால், இன்றும் ஒரு முதியோர் கைவிடப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார் என்பதே வாழ்வின் நிதர்சனம். பெருநகர் இரைச்சலில் அப்படிப்பட்ட பாட்டிகளையும் தாத்தாக்களையும் எதிர்க்கொள்ளும்போது சட்டென குற்றவுணர்ச்சி படர்கிறது. இருப்பினும் அவர்களும் நாமும் அடுத்து சில நிமிடங்களிலேயே நமக்கு வழங்கப்பட்ட இடங்களை நோக்கி நகரத் துவங்குகிறோம்.

.முத்துலிங்கத்தின் இக்கதை சூஸனின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவரது தனிமையை ஆராய்கிறது. அதில் படிந்திருக்கும் ஓர் ஈரத்தைத் தேடுகிறது. கதை முழுக்க ஒரு முதியோரின் தனிமையை உரையாடியிருந்தாலும் எங்குமே புகாருக்கான தொனியும் அழுது வடியும் மொழிநடையும் இல்லை என்பதே கதைக்குக் கூடுதலான யதார்த்தம். ஓர் ஒற்றை இலை ஆயாசமாய் பொறுமையாக ஆடி அசைந்து எக்கவலையும் இல்லாமல் வீழ்வதைப் போல கதை அசைந்து மனதின் ஆழத்தில் விழுகிறது. விழுந்த பின்னரே மனத்தில் அலையடிக்கிறது.

என் கணவருடன் 40 வருடங்கள் வாழ்ந்தேன்; என் மகனுடன் 20 வருடங்கள் வாழ்ந்தேன்; என்னுடன் 70 வருடங்கள் வாழ்ந்துவிட்டேன், அலுப்பாயிருக்கிறது

இவ்வரியிலுள்ள ஆழமே இக்கதையின் திறப்பாக எனக்குத் தோன்றியது. இந்த வரியிலிருந்து ஒரு வாசகன் உருவாக்கிக் கொள்ள பல வெற்றிடங்களை .முத்துலிங்கம் விட்டுச் செல்கிறார். வாழ்வது குறித்துப் பலர் எழுச்சிமிக்க வரிகள் எழுதிப் படித்திருக்கிறேன். உணர்ச்சிப் பொங்க மேடையில் உரைத்தும் கேட்டிருக்கிறேன். ஆனால், இந்த வரி என்னை மெல்ல அசைக்கிறது. என் மனத்தை நடுங்கச் செய்கிறது. என்னையே என்னைத் திரும்பி விசாரிக்க வைக்கிறது. இதுபோன்ற மேலும் பல திறப்புகள் இக்க்தையை வாசிப்பதன் மூலம் ஒரு வாசகனுக்கு உருவாகலாம். அதனை நோக்கி உங்களைத் தள்ளவே இதை எழுதுகிறேன். ஒரு நல்ல கதை உங்களுடன் உரையாடும். உங்களைக் கேட்கச் சொல்லி அது பேசிக்கொண்டே இருக்காது. இறுகிக் கிடக்கும் உங்களின் மனக்கதவுகளைத் திறந்து உள்ளே ஏதாவது ஒன்றை வைத்துவிடவே செய்யும்.

கதையின் இறுதியில்கூட ஒரு தத்துவார்த்தமான படிமத்தையே கதை விட்டுச் செல்கிறது. வாழ்க்கையைத் தன் மொழியில் இத்தனை கூர்மையாக ஒருவன் அசைப்போட முடியுமா என்கிற கேள்வியும் மனத்தில் தொற்றிக்கொள்ள செய்தது. முதியோர் இல்லத்திற்குச் செல்லப்போகும் சூஸன் நான்கு பெரிய அறைகளும், நிலவறையும் பெரிய மாடியும் கொண்ட தன் வசதியான வீட்டை ஒரு 20 கிலோ சூட்கேஷில் அடைத்துக் கொண்டு வந்து வீட்டுக்கு வெளியில் நின்றிருப்பார். சூஸன் செல்லவிருக்கும் இடமானது பணக்காரர்கள் தங்கும் முதியோர் இல்லம் என்பதால் ஒரு சிறிய பெட்டி அளவு பொருள்களை மட்டுமே கொண்டு போக முடியும். ஆகையால், சூஸன் தனக்குத் தேவையான சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார். வாழ்க்கை எத்தனை எளிமையாக நம்மை நகர்த்திவிடுகிறது?

சிறுகதை குறித்த எனது இந்தப் பார்வையிலிருந்து ஒரு தேர்ந்த வாசகன் எவ்வேளையிலும் மாறி நிற்கலாம்; மேலும் கூர்ந்து கதையைக் கவனிக்கலாம். அல்லது நானே கூட இன்னும் ஒரு வருடம் கழித்து இதனிலிருந்து மாறுப்பட்டு நிற்கலாம்.

குறிப்பு: காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக .முத்துலிங்கத்தின்பிள்ளை கடத்தல்காரன்எனும் சிறுகதை தொகுப்பில் இக்கதையை வாசிக்கலாம்.


-    கே.பாலமுருகன்

No comments: