Thursday, September 24, 2009

இன்றும் மனிதர்களைத் தேடி

பூட்டிக் கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன். பழைய வீடுகள் சொன்ன சேதியில் இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. வண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசு என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள்வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறே நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். –கோணங்கி

முதன் முதலில் 2008-ல் கோணங்கியின் நாவலைப் படிக்க நேர்ந்தது. “உப்புக் கரையும் சிறுத்தை”. சீ.முத்துசாமி என்னிடம் கொடுத்த முதல் புத்தகம். வாங்கி இரு வாரங்கள் புத்தகத்தைப் பிரிக்காமலே வைத்து அழகு பார்த்தேன். அந்த நாவலின் தலைப்பே ஒரு வசீகரமான தோற்றத்தை எனக்குள் எழுப்பியிருந்தது. அப்பொழுது நான் வார்த்தைகளை, சொற்களைத் தேடி அலைபவனின் மனோபாவத்துடன் இருந்ததால், “உப்பு கத்தியில் எப்படி சிறுத்தை மறையும்?” என்ற சந்தேகத்துடன் அந்தச் சொற்களை வெறுமனே கடக்க முயற்சித்தும் எங்கோ ஒர் இடத்தில் தேங்கி விடுவதால் அந்த நாவலைப் படிக்கவே முடியவில்லை.

ஒரு மாதத்திற்குப் பிறகு அந்த நாவலைத் திறந்து முதல் இரு பக்கங்கள் படிக்கத் துவங்கினேன். மூன்றாவது பக்கத்திற்குப் போகும்போது நாவலிலிருந்து வெகு சீக்கிரத்திலேயே வெளியே தூக்கி வீசப்பட்டிருந்ததை உணர முடிந்தது. மீண்டும் அந்த இரு பக்கங்களையும் வாசிக்க முயற்சி செய்தபோது கோணங்கியின் அந்த நாவல் வரிகளை ஓர் இருண்மையான உலகம் என்ற கற்பித்தத்திற்குள் வந்துவிட்டிருந்தேன். இரண்டாவது பக்கத்தைக் கடக்க முடியாமல் அப்படியே தேங்கிவிட்டேன். வாசிப்பு மேலும் வலுப்பட வேண்டும் என்று, கோணங்கியை ஒரு மூலையில் போட்டுவிட்டு எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வண்ணதாசன், ஜீ.நாகராஜன், ஜெயகாந்தன், என வாசிப்பை தீவிரப்படுத்தினேன். முதலில் படித்த புதுமைப்பித்தனின் “கயிற்றரவு” கதை எப்படி என்னை வாசிப்பிற்குள் இழுத்துவிட்டதோ அதே போலத்தான் கோனங்கியின் நாவலும் வாசிப்பின் பின்னால் என்னை அலையவிட்டது.

பல நாவல்களைப் படித்து முடித்த பிறகும் இன்றும் கோணங்கியின் அந்த, “உப்பு கத்தியில் மறையும் சிறுத்தை” நாவலை எடுத்து படிக்க வேண்டும் என்று தோன்றவேயில்லை. இந்த வருடத்தின் தொடக்கத்தில் கவிஞர் ஒருவரின் மூலம், கோணங்கியுடன் தொலைப்பேசியில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. மிகவும் எளிமையான சொற்களுடன் மென்மையான குரலில் கோணங்கி பேசினார். அவருடன் என் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட போது, நேரில் சந்திக்க நேர்ந்தால் அவரது நாவல் அனுபவங்களைச் சொல்வதாகக் கூறினார்.

மனிதர்களைத் தேடி அலைந்து நான் பெற்ற வாழ்பனுபவங்கள்தான் என் படைப்பும் என் இலக்கியமும் என்று இன்றும் ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு தெருவில், இலக்கற்று, பயணித்துக் கொண்டிருக்கிறார் கோணங்கி மனித வாழ்வின் அதிசயங்களைத் தேடி. வாழ்வு ஒரு சுருங்கலான வடிவத்திற்குள் சிக்கிக் கொண்டு, நீ நான் நினைப்பது போல வடிவமைத்துக் கொள்ளும் களிமண் அல்ல. அது நீருற்று, காட்டாறு, வாழ்வெனும் நதி ஓடிக் கொண்டேயிருக்கிறது.

கே.பாலமுருகன்

எவன் வாழ்விற்கு எவன் இலக்கு சொல்கிறான்?

1
சில அறங்களும்
சில கற்பிதங்களும்
சில நெறிகளும்
சில போதனைகளும்
எல்லாம் சிலவற்றையும்
துண்டித்துக் கொண்டு
வெறும் படைப்பாக
வந்து வீழ்கின்றன.

மலம் திண்ணு வாழ நேர்ந்த
தலித்துகளுக்கும்
மலத்தில் தேய்ந்து மலம் அள்ளி
மானுடமாக வாழ்ந்துகொண்டிருக்கும்
விளிம்புகளுக்கும்
காலால் எட்டி உதைத்து
விரட்டடிக்கப்பட்ட
அடிமைகளுக்கும்
வரலாற்றால் உருகுலைந்த
உருவங்களுக்கும்
அடக்கி அடக்கி
அடிமட்ட பிணமாய் மடிந்த
ஈழத்து மண்ணுக்கும்
வேறாய் அறுந்து நடையாய் நடந்து
தலைமுறை இழந்த அப்பாவிகளுக்கும்
வயிறு கிழிந்து தொங்கிய
தாய்க்குலத்தின் உக்கிர கொடுமைகளுக்கும்

மலம் கழிக்க
அவமானங்களையும் பொழுதுகளையும்
பாசா காட்டில் ஒளித்து வைத்த வாழ்வையும்
இரவோடு இரவாக மடிந்த இருளுக்குள்
துடித்த 3ஆம் நம்பர் லயத்தின்
பீ கொட்டாய்களையும்

முன்னோர்களின் இழப்புகளையும்
கொண்டாட்டங்களையும்
காட்டுப் பன்றி துரட்டிய துடிதுடிப்புகளையும்
லெண்டின் விளக்கு எரிய
பக்கத்து தோட்டத்திற்கு எம்.ஜி.ஆர் பாடலுடன்
நடந்து சென்ற இரவுகளையும்

மேட்டுப் பாலத்தின் அருகில்
மூத்திரம் பெய்து தொலைத்த
மதியங்களையும்
துப்பாகிச் சூட்டிற்குப் பயந்து
வீடு தேடி வந்த தோட்டத்து நாய்களின்
மழைப்பொழுதுகளையும்

தாத்தாவின் உடலை
தோட்டத்தின் வடக்கில் வைத்துக்
கழுவும்போது பிரிந்து விலகிய சதைப் பிடிப்புகளையும்
மரணம் கொடுத்த இடைவெளியையும் கடைசியில் கழிந்து
வெளியேறிய மலங்களையும்

இதெல்லாம் வாழ்பனுவமல்ல
இதெல்லாம் இலக்கியம் ஆகாது
இலக்கைச் சிதைக்கும் துரோகம் என. . .

எவன் வாழ்வுக்கு எவன் அறம் சொல்கிறான் பார்.

2

இன்னும் இதிகாசங்களுக்குள்
புரளும் செத்த தலைமுறைகள்
தற்கால அரசியல் துரோகங்களுக்கு முன்
மண்டியிட்டு சொகுசான மனோபாவங்களுடன்
தமிழனுக்கு இழைந்த வாழ்வின் நெருக்கடிகளுக்கும்
பத்து காசு மீ கோரேங்கிற்காக
பக்கத்தில் அமர்ந்திருந்த பணக்காரனின் வாயில் ஒழுகும்
எச்சிலைப் பார்த்த ஏழ்மையின் முன்னும்
கொஞ்சமும் மனம் கூசாமல்
இதெல்லாம் இலக்கியமாகாது, இலக்குமாகாது
என துரோகியாக
வாழ்பனுவத்தை மென்று விழுங்கும்
உண்மைக்கு முன் கலாச்சார போர்வைக்குள்
பதுங்கும் காகித புலியாக. . .

எவன் வாழ்வுக்கு எவன் இலக்கு சொல்கிறான் பார்.

3

ஈழத்து இலக்கியத்தில்
இரத்தமும் கற்பழிப்பும்
சதையும்
துண்டித்து துண்டித்து
வீழும் உன் சொகுசான
இலக்கின் மீது.
எடுத்து முகர்ந்து பார்
அது இலக்கற்று
அலையும் கால்களின் ஆல்பமாக
வலிகளின் துயர் கதையாக
எவ்வித இலக்கணமும் இல்லாமல்
இழந்த வாழ்வின் மீதங்களை மட்டும்
காட்டிக் கொண்டிருக்கும்.

எவன் வாழ்வுக்கு எவன் புத்தி சொல்கிறான் பார்.

கே.பாலமுருகன்

Wednesday, September 23, 2009

அநங்கம் – சிறுகதை சிறப்பிதழ்

அநங்கம் மலேசிய இலக்கிய இதழ் மேலும் வலுவான தனித்துவங்களுடன் சமரசமற்ற இருப்புடன் தொடர்ந்து அடுத்த கட்டத்தை/களத்தை எட்டும். அடுத்த இதழ் நவம்பர் மாதத்தில் சிறுகதை சிறப்பிதழாக வரவிருக்கிறது. தேர்ந்தெடுத்த எழுத்தாளர்கள் மட்டும் தங்களின் பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்வது போன்ற வாய்ப்புகளுக்கு இடம் தராமல் புதியவர்களையும் தீவிர எழுத்தில் ஆர்வமுள்ள இளைய படைப்பாளிகளையும் இதில் பங்களிப்பு செய்ய வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம்.

அயல் நாட்டில் இருக்கும் நண்பர்கள் வேறு எங்கும் பிரசுரமாகாத தங்களின் சிறுகதைகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மலேசியாவின் நிலப்பரப்பில் வாழ்ந்து சென்ற அயலக எழுத்தாளர்களின் அனுபவங்களும் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு தனி பக்கமாக அநங்கத்தில் இடம்பெறும்.

அநங்கத்தில் மலேசிய படைப்பாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மலேசியாவின் தீவிர இலக்கியத்திற்கு “அநங்கம்” தனியொரு இடத்தினை ஓர் அடையாளமாக நிறுவும். நம் கதைகளுக்கான ஒரு களத்தை அச்சு இதழில் கொண்டு வருவோம். அதைப் பரவலான மீள்வாசிப்பிற்குக் கொண்டு செல்வது மிக அவசியமானது.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: Tscu-inaimathi/ paranar/ Unicode-font

bala_barathi@hotmail.com
ananggam@hotmail.com


அநங்கம் ஆசிரியர்
கே.பாலமுருகன்

Thursday, September 17, 2009

சமாட் சைட் மலாய் கவிதைகள் - தமிழில்: கே.பாலமுருகன்


1. அந்திம விருந்தாளி

ஓர் அந்திம விருந்தாளியாக வந்திருக்கிறோம்
பொழுதுகள் தீர்ந்ததும் திரும்ப வேண்டியதுதான்
வெறுங்கையுடன் வந்துவிட்டோம்
புறப்படும்போது கைகளில் பாவங்களையும்
தீரா ஆசைகளையும் சுமந்து கொள்வோம்

மீண்டும் திரும்புவதற்கான வழிகள் அறிந்து
வந்திருந்த அந்திம விருந்தாளி
கடவுளுக்கும் உயிர்களுக்கும்
பக்தியையும் இன்பத்தையும் கொண்டு செல்லலாம்
வழி மறந்து திசை தொலைத்த விருந்தாளி
கடவுளுக்கும் உயிர்களுக்கும்
சுமையாக வந்து சேரலாம்

ஒருவேளை
அந்திம விருந்தாளி
மனிதர்களைப் பார்த்துவிட்டால்
இருப்பிடத்தை மறந்து
பதவியையும் இனத்தையும்
கொண்டாடத் துவங்குகிறான்

ஓர் உயிர் ஓர் அணுவாக
வந்திருக்கிறோம்
அந்திம விருந்தாளியாக
விடைப்பெறும் கணத்தில்
பக்தியைக் கொண்டு
செல்லலாம்.

2. நூல் நிலையத்தின் உள்ளே

நூல் நிலையத்தின் உள்ளே
குறுகி போயிருந்த என்னைப் பார்த்து
ஒரு முதியவர் கூறினார் :
“கண்களை மூடிக் கொண்டு
புத்தகங்களைத் திறப்பதில்
அர்த்தமில்லை.
புத்தகத்தை மூடிவிட்டு
கண்களைத் திறந்து பார்”

நாளையலிருந்து
நான் நூல் நிலையத்தில் குறுகலாக
இருக்கப் இல்லை
அந்த முதியவரைப் பார்த்து
வெகுநாளாகியும்

இப்பொழுதுதெல்லாம்
நூல் நிலையத்தில்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்
திறந்த கண்களுடன்
அந்த முதியவர்
இல்லாத நாற்காலியின்
வெறுமையைப் பார்த்தவாறே.

3. அலை

என் கால்களை
ஒருமுறை தொட்டுவிட்டு
போகும் அலையை
நான் மீண்டும்
அறிவதில்லை

4. வரம்

தேவையான அத்துனையும்
வரமளிக்கப்பட்டும்
அது கிடைக்காமலே
போவதுதான்
கடவுளின் மிக நெருக்கடியான
அன்பளிப்பு

சமாட் சைட் பற்றி

1986களில் பிரபல மலேசிய இலக்கியவாதியாக அறியப்பட்டவர் அப்துல் சமாட் பின் முகமாட் சைட் (சமாட் சைட்). 9 ஏப்ரல் 1935-இல் கம்போங் பலீம்பில் பிறந்த சமாட் சைட் இதுவரை இலக்கியத்தில் பல ஆசிய விருதுகளைப் பெற்றுள்ளார். சலீனா, இரவு வானம், காலை மழை என்று பல புகழ் பெற்ற நாவல்களை எழுதியுள்ளார். ‘தீவுக்கு முன்பான நினைவுகள்’ என்கிற இவருடைய நாடகம் மலேசிய மலாய் நாடகத் துறையில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றது. 2003-இல் இவருடைய கவிதைகள் “சுவரிலிருந்து வந்த குரல்கள்” எனும் தலைப்பில் பிரசுரமாகி மலேசிய மக்களின் கவனத்தைப் பெற்றது.

கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: அம்ருதா இதழ்
bala_barathi@hotmail.com

எழுத்தாளர் பாவண்ணனுடன் அநங்கம் இதழுக்காக கேள்வி/பதில்

அநங்கம் இதழ் 3க்காக (பிப்ரவரி 2009) எழுத்தாளர் பாவண்ணனை மின்னஞ்சல் மூலம் தொடர்புக் கொண்டு சில கேள்விகளை முன் வைக்க வாய்ப்புக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுடன் ஏற்கனவே மின்னஞ்சலின் மூலம் நட்பு இருந்ததால், அதன் அடிப்படையில் அவருடன் இந்தக் கேள்வி/பதிலை நடத்தினேன்.

1. இன்றைய இலக்கியச் சூழலில் பின்நவீனத்துவம், மாய எதார்த்தம் போன்றவற்றின் பாதிப்புகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் குறிப்பிடும் பின்நவீனத்துவம் என்பது இலக்கியம் உட்பட்ட பிற அறிவுத்துறைகளையும் கலைத்துறைகளையும் மதிப்பீடு செய்கிற ஓர் உலகப்போக்கு. மாய எதார்த்தம் என்பது ஓர் இலக்கிய உத்தி. இரண்டுமே வேறுவேறானவை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இவ்விரண்டையும் இணைத்துப் புரிந்துகொள்கிற அவசரம் நிலவியது. ஆனால் அந்த அவசரம் இப்போது இல்லை. ஆவேசங்கள் மெல்லத் தணிந்து, இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்கும் நிதானம் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் கைவந்திருக்கிறது. அதீத கற்பனை என்பது நம்முடைய கதைமரபில் தொடக்க காலத்திலிருந்தே இடம்பெற்று வந்திருக்கிற ஓர் அம்சம். நம் புராணங்களில் அது அழகான உத்தியாக நன்கு பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம்.
எதார்த்தவாதப் பார்வை நம் மண்ணில் காலூன்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் வாழ்க்கையை மண்ணின் தளத்தில் வைத்துப் பரிசீலிக்கிற எதார்த்த இலக்கியப் போக்கு உருவானது.


மன இயக்கங்களையும் புதிர்களையும் சிக்கல்களையும் எதார்த்த வாழ்விலிருந்தே கண்டடைகிற குறிப்புகள் வழியாகவும் படிமங்கள் வழியாகவும் எதார்த்தவாத இலக்கியப் படைப்புகள் முன்வைக்கத் தொடங்கின. ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியின் முடிவில் இக்குறியீடுகளும் படிமங்களும் பழகிவிட்டன என்பது ஒரு காரணம். சிக்கல்களின் தீவிரத்தை உணர்த்த எதார்த்தவாதம் போதுமான அளவுக்கு இடம் தரவில்லை என்பது இன்னொரு காரணம். புதிய குறியீடுகளையும் படிமங்களையும் கண்டடைகிற ஒரு மனநெருக்கடிக்கு ஆளானார்கள் படைப்பாளிகள்.


இதன் விளைவாக அதீத கற்பனை உத்திகள் பயன்பாட்டுக்கு வந்தன. இது எதார்த்தவாதப் பார்வைக்கு எதிரான ஒன்றல்ல. எதார்த்தவாதப் பார்வையின் எல்லையில் கண்டறியப்பட்ட இன்னொரு கிளைப்பாதை. மாய எதார்த்தவாதப் படைப்பகள் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலில் உருவாகின. அந்நாடுகளின் அரசியல் சமூகச்சூழல்களும் நெருக்கடிகளும் மாய எதார்த்தவாத உத்திகளைக் கையாளும் வேகத்தை அந்த நாட்டுப் படைப்பாளிகளுக்குத் தந்தன என்பது மிகையான கூற்றாகாது. நம் கதைமரபின் அதீதக் கற்பனைக்கும் மாய எதார்த்தத்துக்கும் இடையே ஒரு சில நுட்பமான வேறுபாடுகள்மட்டுமே உண்டு. அதீதக்கற்பனையில் நாம் இன்னொரு உலகத்தையே உருவாக்கி, பாத்திரங்களை உலவவிடமுடியும். ஆனால் அப்பாத்திரங்களின் உணர்வுகள் உண்மையானவை. மானுடப் பாத்திரங்களைப்போலவே எண்ணுபவை. கனவில் உரையாடுவதுபோல. மாய எதார்த்தத்தில் நாம் வாழும் உலகமே இடம்பெறுகிறது. ஆனால் எங்கோ ஒரு சில தெருக்களை அல்லது பூங்காக்களை அல்லது கட்டிடங்களை அல்லது மனிதர்களை நம் தேவைக்கு ஏற்றவகையில் அதீதமான குணாம்சங்களோடு புனைய முடியும். அந்தப் புனைவுதான் ஒரு படைப்பாளி முன்வைக்க விரும்புகிற விமர்சனம் அல்லது கிண்டல் அல்லது சீற்றம் என்று சொல்லலாம்.


இப்படித்தான் இந்த உத்தி செயல்படுகிறது. தமிழ்ச்சூழலில் இந்த உத்தி அறிமுகமான தருணத்தில், படைப்பாளிகள் மற்றும் வாசகர்கள் நடுவே அதீத அளவுக்கு ஆர்வம் பொங்கியிருந்தது. இப்போது சற்றே தணிந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். பின் நவீனத்துவப் பார்வை படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் மனஉலகையும் பார்வையையும் விரிவாக்கி வளப்படுத்தி இருக்கிறது. விளிம்பில் இடம்பெற்றிருந்த பல அம்சங்கள் இன்று மையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அலசி ஆய்வுக்குள்ளாவதை பின்நவீனத்துப்போக்கின் சாதனை என்றே நான் நம்புகிறேன்.

2. எத்தகைய சிறுகதைகள் உங்களைக் கவர்கின்றன?

ஒரு சிறுகதையின் முடிவுப்புள்ளி என்பது மிகமுக்கியமான ஒரு கணம் அல்லது தருணம். சில சிறுகதைகளில் இது ஒரு திருப்பமாக இருக்கலாம். அல்லது மரத்திலிருந்து உதிரும் ஓர் இலை தன் பயணத்தின் ஊடே மண்ணைத் தீண்டும் இறுதிக்கணமாக இருக்கலாம். ஓர் ஓவியன் தூரிகையால் இழுக்கும் கோட்டின் கடைசிப்புள்ளியாகவும் அமையலாம். அப்புள்ளி கிட்டத்தட்ட ஒரு ரகசியக்கதவாகச் செயல்படுகிறது. ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்தைநோக்கி தாவவைத்துவிடுகிறது. இப்படி தளமாற்றங்களுக்கு வாய்ப்புகள் கூடுதலாக இருக்கிற சிறுகதைகள் என்னை எப்போதும் கவர்கின்றன.

3. வளரும் இளம்எழுத்தாளர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல நினைக்கிறீர்கள்?

ஆலோசனை என்பதைவிட பகிர்ந்துகொள்வதற்கான ஒரு விஷயமாக ஒன்றை முன்வைக்க விரும்புகிறேன். விரிவான வாசிப்பை விரும்புகிறவர்களாகவும் ஆழ்ந்த விவாதங்களில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் எழுத்துப் பயிற்சிகளில் நம்பிக்கை உள்ளவர்களாகவும் நாம் இருக்கவேண்டும். நம் சாதனைகளே நமக்கான தடைக்கற்களாக மாற நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எழுத்தாளன் என்பவன் இடையறாது விண்ணிலேறி பறந்தபடி இருக்கும் பறவை போன்றவன். பறத்தல் ஓர் அனுபவம். பறத்தலே ஒரு வாழ்க்கை.

4. மலேசிய இலக்கியம் படைப்புகள் குறித்த உங்களின் பார்வை?

ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்கிற அளவுக்கு அதிக அளவில் நான் மலேசிய இலக்கயப்படைப்புகளை நான் வாசித்ததில்லை என்பதால் இக்கேள்விக்கு பதில் சொல்ல தயக்கமாக உள்ளது.


குறிப்பு: இனியாவது புலம்பெயர் தமிழர்களின் இலக்கியம் மீது உங்களின் வாசிப்பை முன் வைய்யுங்கள். மலேசிய இலக்கியம் இன்று அடைந்துள்ள நவீனத்துவ வளர்ச்சியும் படைப்பாக்க முயற்சிகளும் மிக முக்கியமான இடத்தை எட்டியுள்ளது.


நன்றி: அநங்கம் பிப்ரவரி 2009 இதழ்


-கே.பாலமுருகன்-

Tuesday, September 15, 2009

புரட்சியின் குறியீடு சே (விளிம்புநிலைகளின் எதிர்க்குரல்)





சே குவேரா என்கிற போராளியின் மிகவும் முக்கியமான புத்தகங்களில் "பொலிவியா நாட்குறிப்புகள்" மிக முக்கியமான பதிவுகளாகும். தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டு முதன் முதலில் வெளிவந்த சே-வின் புத்தகம் இது. காலனியமும், ஏகாதிபத்தியமும் சுரண்டும் எல்லா நாடுகளையும் போல கியுபாவும் பொருளாதாரத்தில் சுருங்கிய நிலையிலும் விளிம்பு மனிதர்களை உற்பத்திக்கும் களமாகவும் இருந்ததைத் தனது புரட்சிக்கரமான எதிர்க்குரலில் மூலம் சுரண்டப்பட்டவர்களுக்காக ஒலிக்க்ச் செய்கிறார் சே.

-கே.பாலமுருகன்



சே-பற்றிய அறிமுகம்


சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ( ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்சியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.

கவனம் பெறும் நிகழ்வுகள்





•1929 ஜூன் 14 - பிறப்பு
•1945 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்
•1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்

•1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா, வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்
•1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.
oஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்

•1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
oஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.

•1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
oஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
•1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
oடிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.

•1959
oஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
oஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
oஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
oஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
oமே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
oஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
oஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
oஅக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
oநவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

•1960
oஅக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
oநவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.

•1961
oஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
oபெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
oஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரஙகில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.

•1962
oமே 20 - சேவுக்கும் அலெய்டாவுக்கும் கமீலா பிறக்கிறான்
oஆகஸ்ட் 27 - சே சோவியத்துக்கு பயணம் மேற்கொள்கிறார்

•1963
oஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
oஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.

•1964
oபெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
oமார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
oஅக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
oடிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.

•1966
oநவம்பர் - சே மாறு வேடத்தில் பொலிவியா போய் சேருகிறார்.
•1967
oமார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
oஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
oஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
oசெப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
oஅக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
oஅக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்

•1968
oஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய
நாட்குறிப்புகள் கியூபாவில் வெளியிடப்படுகிறது.

•1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.

•1997
oஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
oஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
oஅக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
oஅக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.


மூலம்: வீக்கியோபிடியா

கே.பாலமுருகன்

Monday, September 14, 2009

மொழியும் இலக்கியமும் - மீண்டும் ஓர் உடைதல்

1. இது பின்நவீனத்துவமல்ல என்ற இரு கட்டுரை தொடரிலும் நம்முடைய பிந்தைய சமூகம் எப்படி பின்நவீனத்துவ கற்பிதங்கள் இல்லாமலே பின்நவீனத்துத்தில் கையாளப்பட்டிருக்கும் மொழி/அரசியல்/வாழ்வியல் கூறுகளை வாழ்ந்து சென்றிருக்கிறது என்று கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருந்தேன். அது மேலும் தொடரும்.
2. இக்கட்டுரை மரபின் இறுக்கங்கள் பற்றியது. இருப்பின் அடையாளமும் அடையாளத்தின் இருப்பும் தற்கால அரசியல் சூழலின் மிகப்பெரிய சவால். அதை அதன் தன்மைகளுடன் புரிந்து கொண்டு விவாதிப்பதே சரியாகும்.
மொழி தனியான ஒரு மரபில் திடீரென்று தோன்றியது கிடையாது. ஒவ்வொரு மொழிக்கும் அதன் மரபு உருவாகிய பின்புலத்தில் சில வாழ்வியல் தர்க்கங்களும், வரலாற்று ஆக்கமும், நிலவியல்/ மனிதவியல் கூறுகளும், பல குறியீட்டுத் தன்மைகளும் என்று பலவேறான தளத்தில் வைத்து ஆழமாக விவாதிக்கவும் தேடவும் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளன. மொழியின் மீது பற்றும் அதீத இருப்பும் கொண்டதால் அதைக் கேள்விக்குள்ளாக்கும் போது மிகுந்த கோபமும் தடுமாற்றமும் ஏற்படுகின்றது.

நம்மைச் சார்ந்த எதையுமே நாம் ஆராயலாம், கேள்விக்குட்படுத்தலாம். இன்று தமிழ் உலக அளவில் வளர்ந்து திடமாக உருவாகவே பல அறிஞர்கள், மொழி ஆய்வாளர்கள் தமிழை விவாதப் பொருளாகவும், ஆய்க்குட்படுத்தியும், தேடலின் களமாகவும் அதைக் கட்டுடைத்து மீண்டும் கட்டுவதிலிருந்து வளர்த்துள்ளார்கள்.

"தமிழ்" சோறு போடுவதால் அதைக் கேள்விக்குள்ளாக்குபவனைத் துரோகி என்பது சரியன்று. தமிழை தொழிலாகவோ/ சோறு போடும் கருவியாகவோ பார்க்கக்க்கூடிய மதிப்பீடுகள், மிகப் பெரிய தவறு. இங்கு நமது கேள்வியும் வினாவும் மொழியைக் குறித்தும் மொழியின் மரபு குறித்து மட்டுமே. நிறுவப்பட்டவைகளை தலைமுறை தலைமுறையாக அப்படியே அதன் புனித கட்டுமானங்களுடன் ஏற்பது ஒரு வழி தோன்றலின் பின்பற்றுதல். அதற்கு முரணாகச் சிந்திக்கக்கூடியவன் அல்லது கேள்விகளை எழுப்பக்கூடியவன் சமூகப் பார்வையிலிருந்து வேறானவனாகவும் புறம்பானவனாகவும் காட்சிப்படுத்தப்படுவதும் அடையாளப்படுத்தப்படுவதும் மரபின் அரசியல். தவிர்க்க முடியாதவை.
ஒவ்வோரு காலமாற்றத்திலும் தமிழ் தனக்குரிய தனித்தன்மையுடன் தன்னை வளர்த்துக் கொண்டது. மரபை மீள்கட்டுமானம் செய்து கொண்டது. பல அறிவியல் புரட்சிகளை எதிர்க்கொள்ள தன் மரபை மீள் உருவாக்கம் மூலம் புதுப்பித்துக் கொண்டது. இன்னும் காலம் வளர வளர மாற்றங்களுக்குத் தகுந்தாற்போல தமிழ் தனக்கான தனித்துவங்களை மரபின் நீட்சியாக மேலும் வலுப்படுத்திக் கொள்ளும்.

நமது வாழ்வின் வெளிப்பாடுகளின் ஒரு வடிவம் மொழி. இன்னும் ஆழமாக மனிதவியல் கோட்பாடுகளில் வைத்து மதிபீட்டால், மொழி பிறருடன் தொடர்புக் கொள்ளக்கூடிய ஒரு வடிவம். அதன் தனித்தன்மையை இழக்கவிடாமல் பாதுகாப்பது மனிதனின் கடமையும்கூட. ஆனால் அதன் தனித்தன்மையின் உள் அமைப்புகளை வரலாற்றுச் சான்றுகளுடனும் எதார்த்தவாத அமைப்பியல்வாதங்களுடன் அணுகக்கூடிய முற்போக்குவாதம் மிக அவசியமானது.

மேலும் தமிழ் இந்துக்களால் மட்டும் பேசப்பட்டு வளர்க்கப்பட்ட ஒரு மொழியல்ல. தமிழ் ஒரு தேசியம். இஸ்லாமியர்கள், கிறிஸ்த்துவர்கள் என்று பல இனத்தவர்கள் தங்கள் மதத்தை/கலாச்சாரங்களைப் பிராச்சாரம் செய்ய தமிழைப் பயன்படுத்தியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக எம்.ஏ நுக்மான் எழுதிய இக்கட்டுரையைப் பார்க்கவும்:

மொழியும் இலக்கியமும்- எம்.ஏ.நுக்மான்



மொழி பிரதானமாக ஒரு தொடர் பாடல் சாதனம் என்ற வகையில் மொழிமரபு நவீன தொடர் பாடலுக்கு இடையூறாக அமையும்போது அம்மரபு மாறவேண்டியிருக்குமே தவிர மரபைப் பேணுவதற்காக மொழி தன் தொடர்ப்பாடல் திறனை இழந்துவிடக்கூடாது.

பிறமொழி சொற்களை நீக்குதல் அல்லது அவற்றை தமிழ் மயமாக்குதல் தொடர்பாக இன்னும் ஒரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழித்தூய்மையாளர்கள் தமிழ் ஒரு குறிப்பிட்ட சமூக பிரிவினருக்கு உரியதாக அன்றி பல்லின, பல்கலாச்சார சமூகத்திற்குரிய மொழியாக வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது என்பதை மறந்துவிடுகிறார்கள். மறைமலை அடிகள் தமிழ் மொழி வளர்ச்சியை சைவத்தோடு மட்டுமே இணைத்துப் பார்த்தார்.

அவரது கருத்துப்படி பண்டைக்காலம் முதல் தமிழைப் பயன்படுத்தியவர்களும் வளர்த்தவர்களும் சைவர்களே. பின்னர் வந்த பௌளத்தர்களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்த்தவர்களும், முஸ்லீம்களும், தங்கள் மதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக மட்டுமே தமிழைப் பயன்படுத்தினார்கள். எந்தவித கட்டுபாடுமின்றி வடச்சொற்களையும் பிறமொழி சொற்களையும் கலந்து ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை வழக்கில் இருந்து அழிந்து போகச் செய்ததில் இருந்தே அவர்கள் தமிழை வளர்க்க வரவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்றும், தமிழ்மொழிக்கு மட்டும் உரிய சைவத் தமிழர்களே தமிழை அதன் தூய வடிவத்தில் பயன்படுத்தி அதனை வளர்த்தனர் என்றும் அவ்ர் கருதுகின்றார். (மறைமலை அடிகள் 1972).

மொழிமாற்றம், வளர்ச்சிப்பற்றி எவ்வித ஆழ்ந்த அறிவும் இன்றி, வெறும் உணர்ச்சி நிலை நின்று மறைமலை அடிகள் பிரச்சனையை நோக்கியிருக்கிறார் என்பது தெளிவு. எந்த மக்கள் கூட்டமும் மொழியை வளர்க்கும் நோக்கில் மொழியைப் பயன்படுத்துவதில்லை. பதிலாக மொழியைப் பயன்படுத்துவதன் மூலமே மொழி வளர்கின்றது. பழைய சொற்கள் வழக்கிலிருந்து மறைவதும், புதிய சொற்கள் வழக்குக்கு வருவதும் மொழி வளர்ச்சியின் இயல்பான நிகழ்வாகும். சங்க காலத்தில் வழங்கிய ஆயிரக்கணக்கான சொற்கள் இடைக்காலத்தில் வழக்கிறந்தன என்றால், தமிழரின் பண்பாடு பெரிதும் மாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது என்பதே பொருள். பல்வேறு பண்பாட்டை உடைய மக்கள் ஒரு மொழியைப் பயன்படுத்தும்போது அம்மொழி பன்முகப்பட்ட வளர்ச்சி பெறுகின்றது.

ஆங்கிலம் உலகப் பெருமொழியாக இவ்வாறே வளர்ந்தது. தமிழும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளது. பௌளத்தர்களும், சமணர்களும், வைஷ்ணவர்களும், கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் தங்கள் தேவைகளுக்காகத் தமிழ் மொழியைப் பயன்படுத்தியபோது தமிழ் அதற்கெல்லாம் வளைந்து நெகிழ்ந்து கொடுத்து வளர்ந்துள்ளது. அதன் சொல்வளமும் பொருள்வளமும் பெருகியுள்ளன. ஒரு வாழும் மொழியின் இயல்பு இது.

மறைமலை அடிகள் கருதுவது போல் பழந்தமிழ் மரபைச் சைவத்தமிழ் மரபாகக் காண்பதும், பிற பண்பாட்டுக் கலப்பினால் தமிழ் மரபில் ஏற்படும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் தமிழின் அழிவாகக் கருதுவதும், தூய சைவத்தமிழ் மரபு எனத் தாம் கருதுவதைப் பிற பண்பாட்டினர் மேல் திணிப்பதும் சமூகவியல் நோக்கிலும் மொழியியல் நோக்கிலும் ஆரோக்கியமற்றதாகும். கிருட்டினன் என்பதைவிட கிருஷ்ணன் என்றும், கிறித்தவர் என்பதைவிட கிறிஸ்த்தவர் என்றும், இசுலாமியர் என்பதைவிட இஸ்லாமியர் என்றும் எழுதுவதையே அச்சமூகப்பிரிவினர் விரும்புவராயின் மொழி மரபிற்கு விரோதமானது எனக்கூறி தடுப்பது மொழி வளர்ச்சிக்கு எதிரானது என்பதோடு ஒரு பல்லினச் சமூக நோக்கில் உகந்ததல்ல என்பதையும் நாம் அழுத்திக்கூற வேண்டும்.


வழங்கியவர்: மா.சண்முகசிவா (அநங்கம் இதழ் ஆகஸ்ட்)


1. பேச்சு மொழி/ வட்டார மொழியைப் பற்றி ஆராய்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன் (சிறிது காலம் கழித்தே வரக்கூடும்- உடனடி பதில் சரியான முரண் ஆகாது)


2. அடுத்து (ஜெயமோகன் இணையத்தளத்தில் பரிந்துரைக்கப்பட்டிருந்த திருக்குறள் எப்படி கடவுள் மையமாக்கப்பட்டது என்ற சமணப் பார்வையின் ஒரு கட்டுரையுடன். . ) விவாதிக்க வேண்டிய ஒரு கட்டுரை அது


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

டாக்டர் சண்முகசிவாவின் இலக்கிய உரை-(கலை இலக்கிய விழா (காணொளி)


"தனக்கு எது தேவை என்கிற உணர்வுடன் இளைஞர்கள் முரண்பட வேண்டும் ஆனால் அவர்களின் முரண்பாடுகள் தனது மொழியையும் இனத்தையும் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு போக வேண்டும். . மாற்றுச் சிந்தனையுடன் செயல்படுவது இளைஞர்களின் சிந்தனையை வலுப்படுத்தும், நான் சிந்திப்பது போல நீ சிந்திக்காதே, நீ வேறு மாதிரி சிந்திக்க வேண்டும். . . . "

"பெரியார் தனது புதிய சிந்தனைகளினால்தான் இளைஞர்களைக் கவர்ந்தார். .

இளைஞர்கள் எப்பொழுதும் எதிர்க்கக்கூடிய சக்தியாக இருக்கிறார்கள், இது தமிழ்ச் சூழலுக்கு ஆரோக்கியமற்ற தோற்றம் என்கிற தவறான கருத்துச் சொல்லப்படுகிறது. . "

"நிகழ்கால பிரச்சனைகளை நீ எதிர்க்கொள்ளும்போது, இலக்கியத்தின்வழியாக, எப்படிப் புதிய மொழியைப் பயன்படுத்தப் போகிறாய், எப்படிப் புதிய சிந்தனையைப் பயன்படுத்த போகிறாய், என்று பார்க்க வேண்டும், காரணம் இது புதிய பிரச்சனையல்லவா. . "

"புதிய மொழியாடலை அதன் தர்க்கம் சார்ந்து எதிர்க்கொள்ள இயலாததால், அதைக் கொச்சையான மொழியென்று முத்திரை குத்துகிறோம், ஆனால் அதிலிருந்துதானே நாம் வந்தோம். . "-Dr.sanmugasiva
கே.பாலமுருகன்

Sunday, September 13, 2009

விமர்சனங்கள் எதற்காக?

இளைய படைப்பாளிகள் விமர்சன துறைக்கு வருவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பலர் மாற்றுச் சிந்தனையாகத் தெரியப்படுத்துகிறார்கள். ஆகையால் இதற்கு முன் இருந்த மரபார்ந்த விமர்சன அம்சங்களை முழுவதும் பின்பற்றாமல் தனக்குரிய பார்வையில் புதிய வடிவத்துடன் அல்லது சில மாற்றங்களுடன் விமர்சனம் செய்வது ஏதுவாக இருக்கிறது. இது பயிற்சியாக இருக்கட்டும்.

விமர்சனங்களில் விரைவான புரிதலையும் எளிமையான விவரிப்புகளையும் அல்லது முழுமையான திருப்திகளையும் எதிர்பார்ப்பென்பது ஒரு சோம்பேறித்தனத்தின் அறிகுறி. விமர்சனம் மூலமே எல்லாவற்றையும் அல்லது படைப்பின் எல்லாம் தரிசனங்களையும் உடைத்துக் காட்டி வாசிப்பவனுக்கு மூலை உழைப்பைத் தவிர்த்து விடுவதாக விமர்சனம் மீது பலருக்கு மோகமுண்டு. ஆகையால் சில விமர்சனங்களின் மீது அதிருப்தியும் ஆற்றாமையும் ஏற்படுவது இயல்பு. விமர்சனங்கள் படைப்பின் கணத்தை சிறுக சிறுக இலகுவாக்கி மேற்பரப்பிற்குக் கொண்டு வருவதோடு அதன் வேலை முடிந்துவிடும் என்று நம்புகிறேன். இனி அதை அடைவது வாசகனின் தனித்திறமையைச் சார்ந்தது. விமர்சனங்கள் இன்றி சுயமாகப் படைப்பை அணுகக்கூடியவர்களுக்கு விமர்சனங்களே அனாவசியமாகிவிடும்.

மலேசிய சூழலைப் பொருத்தவரை விமர்சனம் கவனிக்கப்பட வேண்டிய வரவேற்க்கப்பட வேண்டிய அம்சமாகும். மலேசிய படைப்பாளிகளின் படைப்புகளை நேர்மையான விமர்சனங்களுக்கு உட்படுத்தி அதைப் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும். நமக்கான படைப்பாளியை (அவர் யார் என்பது முக்கியமில்லை) நம்மிடம் உள்ள படைப்பாற்றல்மிக்க ஒரு படைப்பாளியைப் பரவலாக பலரும் அறியும்படி சொல்வது ஒரு அக்கறை சார்ந்த விஷயமாகும். நவீன இலக்கியத்தின் முக்கியமான அம்சம் இது.

இதற்கு ஏன் தனிப்பட்ட அக்கறை? ஒரு படைப்பாளியின் புத்தகம் பிரசுரம் கண்டு அது பொது மக்களை அடைந்த பிறகு, அதன் மீது யார் வேண்டுமென்றாலும் விமர்சனங்களை முன் வைக்கலாம். அதன் முக்கியத்துவங்களை, பலவீனங்களை யாரும் சுட்டிக் காட்டலாம். இதில் தனிப்பட்ட யாரையும் வசீகரிக்க வேண்டுமென்ற நோக்கங்கள் கிடையாது. (பெரும்பாலும் ஒரு சக படைப்பாளியைப் புகழ்வதில்கூட இன்னமும் நம்மிடம் சொற்கள் இல்லாமல் நிராயுதபானியாக நின்று கொண்டிருக்கிறோம்). நமக்கு வேண்டியவர்களை, நம்முடைய விருப்பமானவர்களைப் புகழ்வது வேறு, நமக்கு தொடர்பே இல்லாத, அல்லது நமது எதிரியாகவும் இருக்கலாம், அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாது அந்தப் படைப்பை மட்டும் அணுகி விமர்சனத்தை முன் வைப்பது வேறாகும். இது மிக அவசியமானது. முதுகு சொரிந்துவிட வேண்டாம் ஆனால் படைப்பின் நிதர்சனத்தைச் சொல்லும்போது அது நிறைவாக இருந்தால் அதை வெளிப்படுத்துவதில் தயக்கமும் காட்டக்கூடாது.

சிங்கையில் இருக்கும் கண்ணபிரான் அவர்கள், யுவராஜன் அவர்களின் காதல்/வல்லினத்தில் வந்த சிறுகதைகளை விமர்சனம் செய்து யுவராஜனை வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். யுவராஜனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி அதை யுகமாயினிக்கும் அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தார். (வல்லினம் மூலம் ஏற்கனவே யுவராஜன் என்கிற படைப்பாளி வெளிநாடுகளில் பரிச்சயமானர்வதான்)
சிங்கையில் கண்ணபிரானைச் சந்தித்தபோது, “யுவராஜன் நல்ல படைப்பாளி, எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய மலேசிய படைப்பாளி” என்று ஒரு அக்கறையுடன் இதைத் தெரிவித்தபோது அவரைக் கண்டு மகிழ்ந்தேன். முக்கியமாக, “மலேசிய படைப்பாளி” என்கிற சொல் எனக்குள் ஆழமான நெருடலை ஏற்படுத்தியது. இதுவரை எத்தனை மலேசிய படைப்பாளியின் படைப்புகள் குறித்து நான் அக்கறை காட்டியுள்ளேன்/ விமர்சித்துள்ளேன், என்கிற சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்தன. இனி விமர்சன உரிமைகள் மூத்த இலக்கியவாதிகளிடம்தான் இருப்பதாக எந்தக் கற்பிதமும் இல்லாமல், என் நுகர்வு சார்ந்து, வாசகப் பார்வை சார்ந்து சக படைப்பாளிகளின் படைப்புகளை விமர்சனம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. கையில் இருப்பது மஹாதமன் சிறுதைகள்தான் ( புத்தக வடிவில்). அடுத்ததாக கோ.புண்ணியவான் சிறுகதைகளையும் விமர்சிக்க வேண்டும்.. தொடர்ந்து சை.பீர்முகமது. . இனி அடுத்த படைப்பாளிகளின் புத்தகங்களுக்குக் காத்திருக்க வேண்டும்.

3 வருடத்திற்கு முன்பே மஹாத்மனின் சிறுகதைகளை வல்லினம் இதழிம்/ காதல் இதழில் படித்த அனுபவம் இருப்பதால் நான் அவருடைய வாசசன் என்பதில் எனக்கே எந்த முரணும் இல்லை. ஒரு சிலர் எனக்கு அழைத்து, “ஏன் இவ்வளவு நீளமான விமர்சனம்?” என்று கேட்டபோது, என்னால் முடிகிறது நான் செய்கிறேன் என்றேன். அழைப்புத் திடீரென்று துண்டித்துக் கொண்டது. இன்னும் ஒருவர், “மஹாதமன்தான் உங்களை அப்படி விமர்சனம் செய்து கேலியெல்லாம் செய்துள்ளாரே, பிறகு ஏன் அவருக்கு இதையெல்லாம் செய்து, இறங்கிப் போகிறீர்கள்? ” என்று. எனக்கு மஹாதமன் என்கிற முழு தனி நபர் அனாவசியம். என் கைகளுக்குக் கிடைத்தவிட்ட அவர் முழு தொகுப்பில் வெளிப்படும் மஹாத்மன் என்கிற படைப்பாளியும் 3 வருடமாக அவர் கதைகளைப் படித்து வரும் வாசகன் என்பதாலும் நான் எப்படி வேண்டுமென்றலும் விமர்சனம் செய்யலாம். அது வாசகனுக்குரிய உரிமை. இதைக்கூட சொந்த வாழ்வுடன் தொடர்புப்படுத்தி பார்க்கும் அளவிற்கு உங்கள் மனதில் ஏதோ ஒரு குரோதம் வளர்ந்திருக்கிறது” என்றதும் அவர் அமைதியாகிவிட்டார். இந்த விமர்சனத்தை எழுதுவதால் மஹாதமன் என்ன எனக்கு பணமா கொடுக்கப் போகிறார்?

அடுத்து வரும் மஹாத்மனின் சில கதைகளில் என் பார்வையின் அடிப்படையில் தெரிந்த சில பலவீனங்களும் உண்டு. அந்தப் பலவீனங்களை நாகரிகமான முறையில் வெளிப்படுத்த முயல்வேன். அவர் அதை ஏற்றுக் கொள்வாரா அல்லது புறக்கணிப்பாரா என்கிற கவலைக் கொஞ்சம்கூட இல்லாமல், தொடர்ந்து விமர்சிப்பேன்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Friday, September 11, 2009

கடவுளின் சட்டையும் மாணவர்களும்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வியாழக்கிழமையும் சபையில் தேசிய பாடல் ஒலிக்க துவங்கியதும் மாணவர்கள் உடல் உற்சாகம் பெரும். உடலை நிமிர்த்தி நேர்க்கோட்டில் வைத்து வானொலியில் பாடல் ஒலித்ததும் அதனுடன் சேர்ந்து வாயை அசைப்பார்கள். அருகில் செல்ல நேரும்போது அவர்கள் பாடலை இராகம் தப்பியும் வரிகள் விட்டும் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும்.

சில ஆசிரியர்கள் பாடலை உடனேயே நிறுத்திவிட்டு மாணவர்கள் தவறவிட்ட சொற்களை அல்லது வரிகளைச் சீர்ப்படுத்தி மீண்டும் பாடலை ஒலிக்கச் செய்து பாட வைப்பார்கள். அப்படியும்கூட இன்னமும் ஒரு சில மாணவர்கள் வாயை மட்டும் அசைத்துக் கொண்டு முகப்பாவனைகளால் ஏமாற்றுவதை அறிய முடிகிறது. நாம் மாணவர்களுக்கு நாட்டுப் பற்றை உணர்த்துவதில் காட்டும் அக்கறையைக்கூட சில சமயங்களில் தேசிய பாடல் அல்லது நாட்டுப் பற்று பாடலைக் கற்றுக் கொடுப்பதில் அவ்வளவாகக் கவனம் செலுத்துவது கிடையாது. பள்ளியின் முதல்நாளில் எல்லோருக்கும் பாடல் வரிகள் அடங்கிய தாளைப் பிரதியெடுத்து வழங்கி அவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப் பழக்குவோம். வாசிக்கத் தெரியாத மாணவர்களின் கைகளிலுள்ள பாடல் வரிகள் பூச்சாண்டியைப் போல அவர்களைப் பயமுறுத்துமே தவிர அது அவர்களுக்குப் பரிச்சியமாகப் போவதில்லை.

பள்ளிக்குப் புதியதாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் ஒன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் சில மாதங்களுக்குத் தேசிய பாடல் வாயில் நுழைய சிரமப்பட்டு மறுத்துக் கொண்டிருக்கும். அவர்களைப் பாடச் சொல்லி கேட்கும்போது அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் மழலைத்தன்மை அடைந்து ஒரு குழந்தைத் தவழ்ந்து வருவது போல இருக்கும்.

அப்படியொருமுறை ஒர் ஒன்றாம் ஆண்டு மாணவனைப் பாடச் சொல்லிக் கேட்கும் அனுபவம் கிடைத்தது. மிகவும் உற்சாகமாக உடலை நிமிர்த்தி கைகளைப் பக்கவாட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டு பாடத் துவங்கினான்.

“tuhan baju. .”

என்கிற ஒரு வரி பாடலின் இடையில் சிக்கியிருந்தது. மீண்டும் பாட சொன்ன போது அதே வரி மீண்டும் ஒலித்தது. அந்த மாணவனை மீண்டும் அந்த வரியை உச்சரிக்கச் சொல்லி அதைத் திருத்தினேன். “tuhan kurniakan. “ மீண்டும் அவன் அந்த வரியை விடமுடியாமல் அதையும் இழுத்துக் கொண்டே பாடலைப் பாடிய போது சிரிப்பு வந்தது.

“டே. . கடவுளோட சட்டையா? அப்படி இல்லடா. . இப்படி. . என்ன சொல்லுவியா ஒழுங்கா? நீ என்ன கடவுளோட சட்டைய பத்தில்லாம் பேசறெ?”

“tuhan baju. . “

“தம்பி. .யப்பா. . கடவுள் என்ன சட்டை போட்டிருப்பார்னு தெரியுமா?”

“தெரியும் சார். . சுக்குல் சட்டை போட்டுருப்பாரு”
தனது சட்டையைக் காட்டி அதைக் கூறினான். அப்பொழுதுதான் அவனுடைய சட்டையில் இரண்டு பட்டன்கள் இல்லாமல் அதில் ஊக்கு சொருகி குத்தியிருப்பது தெரிந்தது. சட்டை பாக்கெட்டில் பள்ளியின் சின்னம் இருக்க வேண்டிய இடத்தில் வெளிறிய வேறு ஒரு பள்ளியின் சின்னம் உருகுலைந்து இருப்பதைப் பார்க்க முடிந்தது.

“யாரோட சட்டெ இது?”

“எங்க அண்ணனோட சட்டெ சார்”

“உனக்குன்னு சட்டெ இல்லையா?”

“அப்பா அடுத்த வாரம் பாசார் மாலாம்லெ வாங்கி தரேனு சொல்லிருக்காரு சார்”

“சரி நீ வகுப்புக்குப் போ. . உனக்கு புது பள்ளிச் சின்னம் தரச் சொல்லி உங்க வாத்தியார்கிட்ட சொல்றேன்” என்றதும் கடவுளின் சட்டையைச் சரிசெய்துவிட்டு அவன் நகர்ந்தான். அவன் உடலில் தொங்கிக் கொண்டிருப்பது கடவுளின் சட்டையாகத்தான் இருக்க முடியும்.

நமது அன்றாட அவசர அலுவல்களுக்கு நடுவில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் சீறுடைகளைக் கொஞ்சம் கவனிக்க நேர்ந்தால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக உடுத்துவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சில மாணவர்களின் சட்டையில் பட்டன்களுக்குப் பதிலாக சிறியதும் பெரியதுமான ஊக்குகள்தான் பல்லிழித்துக் கொண்டிருக்கும். அவர்கள் அதை மறைப்பதற்காகச் செய்யும் சாகசங்கள் மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கும். வகுப்பில் பிற மாணவர்களை எதிர்க்கொள்ள துணிவில்லாமல் எப்பொழுதும் சட்டையை மேசையின் விளிம்பில் வைத்து மறைத்துக் கொண்டு அமர்ந்தே இருக்கத்தான் முயற்சி செய்வார்கள்.

“சட்டெ யேண்டா கிழிஞ்சிருக்கு? தைக்க முடியாதா?”

“சட்டெ யேன் இப்படி வெளுத்துப் போச்சி? உங்க வீட்டுல ஒரு சட்டை வாங்கித் தர மாட்டாங்களா உனக்கு?”

“நாளைக்கு சட்டையில பள்ளிச் சின்னம் இருக்கனும், இல்லைனா அப்பறம் அவ்ளத்தான் நீ”

மாணவர்களின் சட்டைகளில் தென்படும் கிழசல்களையும் நேர்த்தியின்மைகளையும் நாம் அணுகும் விதமே ஒரு மிரட்டலாகவும் தண்டனை கொடுக்கக்கூடிய ஒரு நாட்டாமையாகவும்தான் இருக்கிறதே தவிர அதன் பின்னனியை அறிந்து அந்தக் கடவுள்களின் சட்டையைச் சரிசெய்ய ஏதாவது ஒரு முயற்சியை எடுக்கும் சிந்தனைகள் மிகக்குறைவாகத்தான் இருக்கின்றன போல. குறைந்தது அந்தச் சட்டையுடன் அவனைப் பிறமாணவர்களுக்கு நிகராக நடத்துவதற்காகவாது நாம் முயற்சிக்க வேண்டும்.

“சார் பாக்கெட்டு கிழ்ஞ்சி தொங்குது பாருங்க”

சில சமயங்களில் நமது சக்திக்கேற்ப எல்லாம் மாணவர்களுக்கும் உதவ முடியாமல் போகும்போது, நம்மிடம் இருப்பது அவர்களுக்கான ஆதரவும் அல்லது அவர்களின் நிலையைச் சரிப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக் கண்டறியும் அக்கறையும்தான். இன்றும் பேருந்தில் கண்ணாடியோர சன்னலைத் தேடிப் பிடித்து தனது புத்தகப்பையால் தனது சட்டையை மறைத்துக் கொண்டு ஏதும் அறியாத பாவனையில் பள்ளிக்கு வந்திறங்கும் மாணவர்கள் அணிந்திருக்கும் கடவுளின் சட்டையை நீங்கள் பார்த்ததுண்டா?

ஆக்கம்
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி