“உடல் நோயைவிட மனநோய்தான் மனிதனை அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது” – சிசரோ எனும் உளவியல் நிபுணர் குறிப்பிடும் ஒரு மகத்தான கருத்து.
சமூக நடைமுறைக்கும் சமூகத்தின் பொது புத்திக்கும் சற்றும் பொருத்தமில்லாத நடவடிக்கைகளையும் மனதையும் கொண்டவர்களை “functional psychoses” எனக் குறிப்பிடுவார்கள். மூளை பாதிப்பு ஏதும் இல்லாமல் மனதளவில் பாதிக்கப்பட்டதன் விளைவுகளை சமூகத்தின் மைய அறத்திற்கு எதிராகப் பாவிப்பதைத்தான் இப்படி அடையாளப்படுத்தலாம். அத்தகைய ஒரு பிரச்சனையைத்தான் நான் மகான் அல்ல படம் மையக் கருவாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் இப்பிரச்சனை மையக் கதைப்பாத்திரத்தைச் சுற்றி மிகவும் மிதமான தன்மையுடன் புனையப்பட்டிருக்கிறது.
கமல் நடித்து வெளிவந்து பழைய படமான “சத்யா”வில் வேலையில்லாமல் நகரத்தில் தனக்கென ஒரு அறத்தையும் அதற்கு உடனான ஒரு மனதையும் உருவாக்கிக் கொண்டு சுற்றி அலையும் கதைப்பாத்திரத்தின் இன்னொரு வடிவமாகத்தான் இந்தப் படத்தில் கார்த்தி செய்திருக்கும் வேடத்தைப் புரிந்துகொள்ளக்கூடும். மேலும் பல தமிழ்ப்படங்களில் இப்படி மையக்கதைப்பாத்திரம் வேலை ஏதும் இல்லாத நாடோடியாகவும் அதே சமயம் வீட்டில் அடிக்கடி திட்டப்படும், அப்படித் திட்டப்பட்டும் கொஞ்சம்கூட கவலையில்லாமல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவதும் என வாடிக்கையாகக் காட்டப்பட்டிருக்கிறது. இது போன்ற நாடோடிகள் கட்டாயம் வெளியே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்களாகவும் இருப்பார்கள்.
‘சத்யா’ படத்திலும் ‘சுப்ரமணியபுரத்திலும்’ வேலையில்லாமல் சுற்றி திரியும் இளைஞர்களைப் பற்றிய வாழ்வும் அது எப்படி தன்னை பொதுபுத்திக்கு எதிராக நிறுவிக்கொள்கிறது என்பதைப் பற்றியும் விரிவாகச் சொல்லப்படுகின்றன. ஒரே மாதிரியான பிரச்சனையை எப்படி வெவ்வேறு வகையில் சலிப்பை ஏற்படுத்தாமல் சொல்வதென்பது மிகப் பெரிய சாமர்த்தியம் எனக் கருதுகிறேன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கார்த்தி வேலையில்லாமல் நண்பர்களுடன் திரிவது முதல், அவருடைய அப்பா அவருக்குச் சாதகமாக இருப்பதும், அம்மா எப்பொழுதும் திட்டிக் கொண்டிருப்பதும், அத்தகையதொரு சூழலிலும் திடீரென அவருக்கு ஒரு காதல் மலர்வதையும் பெண்ணின் அப்பா நல்ல வேலை கிடைத்தவுடன் மீண்டும் வா எனச் சொல்வதுவரை வழக்கம்போல தமிழ் சினிமாக்களில் அளித்து அளித்துப் புளித்துப்போன ஒரு அமைப்புமுறைத்தான்.
தேர்ந்த பார்வையாளன் இதைக் கட்டாயம் கடந்து வந்து கதைக்குள் இருக்கும் இன்னொரு பகுதியை அடைய வேண்டியிருக்கிறது. இப்பொழுது அந்தப் பகுதித்தான் கதையின் பலத்தை அதிகரிக்கிறது. வழக்கமான கதைச்சொல்லும் முறையிலான ஒரு படத்தை கூர்மையாக்கும் பகுதியே அதன் தீவிரம்தான். அப்படியொரு தீவிரம்தான் இப்படத்தில் காட்டப்படும் இளம் குற்றவாளிகளின் மிகவும் சிதைந்துபோன அக உலகம். ஆனால் இந்தத் தீவிரத்தை படத்தில் வலுவாக வளர்த்தெடுக்க முடியாத தோல்வியைப் படம் அடைந்துள்ளது.
கல்லூரி மாணவர்களான அந்த நால்வரும் மிக இயல்பாக சமூகத்தில் எல்லோரையும் போல நடமாடக்கூடியவர்கள், பழகக்கூடியவர்கள். ஆனால் இவர்களின் அகம் ஏதோ ஒரு காரணத்தால் ஆழமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் தன் இருப்பைப் பற்றிய பிரக்ஞையும் அதே சமயத்தில் ஆழ்மான பாதிப்பையும் கொண்ட சீரான ஒரு மனச்சிதவை கொண்ட 4 இளைஞர்களை இப்படத்தில் பார்க்க முடிகிறது. தொடர்ந்து சில கொலைகளைச் செய்யக்கூடிய இவர்களின் பாதிப்புகளும் குற்றங்களுக்கான மூலமும் படத்தில் எந்த இடத்திலும் வலுவாகப் பதிக்கப்படவில்லை. ஆகையால் ஏன் இவர்கள் இப்படியொரு மோசமான வன்கொலைகளை நிகழ்த்தியாக வேண்டும் என்கிற அளவில் கேள்வி உருவாகிறது.
மேலும் தனக்கு ஓர் அழகான காதலி கிடைக்க மாட்டுகிறாள் என அந்த 4 இளைஞர்களின் ஒருவன் சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால் இதைச் சொல்லும் இளைஞர் பார்க்க அழகாகவும் சீரான தோற்றத்துடனும் இருப்பான். அதெப்படி அத்துனை இருந்தும் இன்னமும் ஒரு நல்ல காதலி இவனுக்கு அமையவில்லை எனும் கேள்வி தோன்றக்கூடும். ஆனால் சராசரியாக ஒரு இளைஞன் அனுபவிக்கும் சில பருவத் தேவைகள் இவர்களுக்குக் கிட்டாமல் போகவே, அதை வன்மையாக நுகர்வதற்குத் தூண்டப்படுகிறார்கள்.
கரிகாடு குப்பம் என்கிற ஓர் இடம். சுனாமியால் அந்தக் கிராமம் பாதிக்கப்பட்ட பிறகு அங்குள்ள மக்கள் வேறு இடத்திற்குப் புலம் பெயர்ந்துவிட்டார்கள். ஆகவே அந்தக் கிராமம் விடப்பட்ட இடமாக இடிந்த வீடுகளுக்கும் அடர்ந்த சூன்யத்திற்கும் மத்தியில் கிடக்கிறது. இந்த நால்வரும் அங்கு வரும் காதல் ஜோடிகளை அடித்து வீழ்த்தி பெண்களை மட்டும் கொடூரமாகக் கற்பழித்து தனது பருவத் தேவையைத் தீர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் இப்படியொரு சம்பவம் படத்தின் தொடக்கத்தில் மட்டுமே நிகழ்கிறது. ஆகையால் இது தொடர்க் கொலைகளா எனத் தெரியவில்லை. இருப்பினும் அது அவர்களின் வாடிக்கையான கொலைகளாக இருந்தாலும் ஏன் அவையனைத்தும் கண்டுபிடிக்கப்படவில்லை எனக் கேள்வியும் எழுகிறது.
நண்பனையும் அவள் காதலியையும் திருமணம் செய்து வைப்பதற்காக நால்வரில் ஒருவன் அவர்களை அவனின் வீட்டிற்குக் கொண்டு வருகிறான். அங்குள்ள மற்றவர்கள் (மூவரும்) அந்த இளம் காதலர்களின் காமச் சேட்டையை அறைக்கு வெளியேயிருந்து கேட்டு, அதைத் தானும் அனுபவிக்க வேண்டும் என்கிற நிலைக்குத் தூண்டப்படுகிறார்கள். கதவைத் தட்டி உள்ளே சென்று அவளின் காதலனைக் கொன்றுவிட்டு அவளையும் ஒவ்வொருவனாகக் கற்பழித்துவிட்டு கழுத்தை அறுத்துக் கொன்றுவிடுகிறார்கள். இதுதான் இவர்களின் உக்கிரமான வன்முறைமிக்க மனதைக் காட்டுகிறது. காம இச்சையால் பாதிக்கப்பட்ட மனநிலையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் அதிக நடமாட்டமுள்ள வசிப்பிடத்தில் இந்தக் கொலையை செய்துவிட்டதால், இதை மறைப்பதற்குக் கொலை செய்யப்பட்டவர்களின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி வேறு வேறு இடங்களில் வீசிவிடுகிறார்கள். ஆனால் அந்த உடல் பாகங்கள் காவல்துறையினரால் கண்டறியப்படுகின்றன. இந்த இடத்தில்தான் கதையில் வரும் இந்த இளம் குற்றவாளிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கதைநாயகனான கார்த்திக்கும் தொடர்பு ஏற்படுகிறது. கார்த்திக்கின் அப்பா ஒரு call taxi ஓட்டுனர். கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணை அவளுடைய வசிப்பிடத்திலிருந்து அவளுடைய காதலனும் நால்வரின் ஒருவனும் இவரின் வாடகை வண்டியில்தான் கடத்திக் கொண்டு வருகிறார்கள். அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் கார்த்திக்கின் அப்பா அவர்களைக் காட்டிக் கொடுக்க தீர்மானிக்கிறார். இதற்கிடையில் அந்த நால்வரும் கார்த்திக்கின் அப்பாவைத் திட்டமிட்டு கொலை செய்துவிடுகிறார்கள். இறுதியாகக் கார்த்திக் அந்த நால்வரையும் பழிவாங்குவதாகப் படம் நிறைவடைகிறது. கதைச்சுருக்கத்தைச் சொல்லிவிட்டுத்தான் கதைக்குள் ஒளிந்திருக்கும் வெவ்வேறு தரிசனங்களுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது.
1. நடுத்தர வர்க்கத்திற்கு முரணான கதைநாயகன்
கார்த்திக்கின் கதைப்பாத்திரம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலைக்கு முரணாகக் காட்டப்படுகிறது. பணக்காரப் பையன்கள் வாழ்வில் எந்த நோக்கமுமின்றி நண்பர்களுடன் கலாட்டா செய்து கொண்டும் திரிந்து கொண்டும் இருப்பது வழக்கமாகும். ஆனால் கார்த்திக் அப்பா மட்டும் வேலை செய்து காப்பாற்றப்படும் வாடகை வீட்டில் குடியிருக்கும் மிக மிக நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு காதலி வந்து சொல்லும் வரையா குடும்பம் குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருப்பான்?
இது தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த அபத்தம். எல்லாம் சினிமாக்களிலும் காதலி வந்து கற்பிக்கும்வரை குடும்பம், வாழ்க்கை என எது குறித்தும் தெளிவில்லாத முட்டாளாகத்தான் கதைநாயகர்களைக் காட்டப்பட்டிருக்கிறார்கள். அதே பாணியை தீவிரமான களத்தை நோக்கி நகர்ந்த்தக்கூடிய எல்லாம் சாத்தியங்களும் உள்ள இப்படத்திலும் காட்டப்பட்டிருப்பது உறுத்தலாக இருக்கிறது.
மேலும் படத்தில் கார்த்திக்கின் அப்பா கொல்லப்பட்ட பிறகு உருவாகும் கார்த்திக் முற்றிலும் வேறு மாதிரியானவனாக இருக்கிறான். வீட்டிற்கு வாடகைக் கட்ட வேண்டும் என்பதுகூட அவனுக்கு அப்பொழுதுதான் தெரிகிறது. அந்த அளவிற்குத் தத்தியாக இருந்திருக்கிறான். ஓரிரு நாட்களிலே எல்லாம் குற்றவாளிகளையும் துரத்திப் பிடித்து கொன்றும் விடுகிறான். ஆகவே இந்தப் படத்தின் மையக்கருவைப் பற்றி பேசுவதற்கு முன் கதையிலிருந்து இந்தத் தமிழ் சினிமா கதைநாயகனை நீக்க வேண்டியுள்ளது.
2. குற்றவாளிகளின் நகரம்
மூன்று முக்கியமான இடங்கள் குற்றவாளிகளின் நிகழ்த்து களமாகப் படத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. முதலில் கரிகாடு குப்பம். ஆள்நடமாட்டமில்லாத சூன்மயமான பகுதியைக் குற்றவாளிகள் தேந்தெடுக்கிறார்கள். இங்குத்தான் காதலர்கள் இரகசியமாகவும் சந்தித்துக் கொள்கிறார்கள். குற்றம் நடப்பதற்கான அத்துனைச் சாத்தியங்களையும் சூழலையும் அள்ளி வீசும் மிரட்டல் எங்கும் பரவியிருக்கிறது.
மேலும் அந்த விடப்பட்ட கிராமம் தனக்குள் ஓர் அமைதியை விழுங்கிக் கொண்டு ஒரு துறவியைப் போல அமர்ந்திருக்கிறது. பெரும் சலனமாக அந்த அமைதிக்குள் சிதைந்து மேலிடுகிறது குற்றவாளிகளின் இருப்பு. இதை வலுப்படுத்துவதற்கான சரியான தேர்வுதான் அந்தக் கரிகாடு குப்பம். அடுத்ததாக அந்தக் ககதல் ஜோடிகளை தங்க வைத்துக் கொலை செய்யும் வீடும் அந்தத் தெருவும். மிகவும் பரப்பரப்பாக மக்கள் நடமாட்டம் அடர்த்தியாகக் காணப்படும் சூழலில் பண்பாட்டையும் வாழ்வையும் நெருக்குவது போன்ற தோற்றத்தில் காணப்படும் குறுகிய தெரு குற்றவாளியின் கவனிக்கப்படாத மனதைப் பிரதிபலிப்பது போல இருக்கிறது. அத்துனை இரச்சலுக்கு மத்தியிலும் கொடூரமான ஒரு கொலை சாதாரண சம்பவம் போல நடப்பதற்குரிய அமானுடத்தைத் தெறிக்கவிடுகிறது அந்தப் பரப்பரப்பும் அடர்த்தியும்.
3. இரு முரண்களின் தோன்றலும் அழிவும்
கரிகாடு குப்பத்திற்குக் காதல் செய்ய வரும் காதலர்களுக்கும் காமத்தால் தூண்டப்பட்ட இளைஞர்களுக்கும் மத்தியில் நிகழ்வது என்ன? இரு முரண்களுக்குள் நிகழும் ஆக்கி அழித்தல் என்கிற பண்பாட்டு கொலைகளாக இந்த விசயத்தைப் பார்க்கக்கூடும். ஒன்று காமத்ததல் மனச்சிதைவுக்குள் ஆளான இளைஞர்கள், மற்றொன்று அதே காமத்தால் அங்கு இரகசியமாகக் காதலிக்க வரும் காதலர்கள். தனக்குள் முளைத்திருக்கும் பருவத் தடயங்களில் ஒன்றான பால் ஈர்ப்பு காரணமாக உருவாகும் காமத்தை இப்படிக் கண்ட இடங்களில் தீர்த்துக் கொள்ள முயலும் இந்தக் காதலர்களின் இருப்பும் அவர்களைப் பிடித்து, அந்தப் பெண்ணின் உடலை மட்டும் மிக மோசமாக நுகரும் காமுகர்களின் இருப்பும் ஒன்றையொன்று பாதித்துக் கொண்டு ஆக்கி அழித்து தன் இருப்பைத் தானே முடித்துக் கொள்கிறது.
இந்த அழித்தல் தொழிலைக் கடைசியாக முடித்து வைக்கப் பயன்படுத்தப்படும் பிம்பம்தான் கார்த்தி. அதாவது தமிழ் சினிமாவிற்கே உரிய கதைநாயகனின் தொழில். ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞன் தன் அப்பாவை இழக்க நேர்ந்தால் தன் கோபத்தை நியாயமான முறையில்தான் காட்டுவான் எனச் சொல்வதற்கில்லை. அந்தக் கோபம் கெட்ட சக்தியை அழிக்கவும் பாவிக்கப்படும் எனும் பழங்காலத்து போர்மூலாவை அப்படியே கொஞ்சம் வேறு மாதிரி தந்திருக்கிறார்கள். பழிவாங்கும் படல்ம்தான் ஆனால் இதில் இரண்டு நாட்களிலே எல்லாவற்றையும் சமன்படுத்திவிடுகிறான் கதைநாயகன்.
கொலைகளை மிகக் கொடூரமாகவும் தந்திரமாகவும் செய்து முடிக்கும் அந்த நால்வரும் கார்த்தி ஒருவனிடம் அடி வாங்கி சாகிறார்கள். இதுவும்கூட முரண்தான். கார்த்தி படத்தில் கராத்தே கற்றவன் என்பதால் இதைச் சகித்துக் கொள்ளலாம். மற்றப்படி “நான் மகான் அல்ல” இன்னும் ஆழமாகக் குற்றவாளிகளின் அகத்தை ஆராய்ந்திருக்கலாம். கதையில் வரும் அந்த நால்வரும் மனநோய்க்கு ஆளானவர்கள். அந்த மனநோயின் வேர்கள் எங்கு இருக்கின்றன என்கிற தேடல் படத்தில் எங்கேயும் தேடப்படவில்லை. கதையில் அந்த நான்கு இளைஞர்களுக்கும் வாழ்வின் மீதான பயங்கரமான வெறுப்பு இருக்கிறது. குறிப்பாக காமத்தின் மீது அதீதமான வெறியைக் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்துதான் அவர்களின் வன்முறைக்கான வேர்கள் சமூகத்தின் அடித்தட்டு தளத்தை எட்டியிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் சாதாரண வில்லன்களாக மட்டுமே காட்டப்பட்டு ஒரு தட்டையான பிம்பங்களாக கரைந்துவிடுகிறார்கள்.
நன்றி: வல்லினம் இணைய இதழ்(அக்டோபர்)
கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா