Sunday, July 10, 2011

Part 3: நேர்காணல்: “பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்” தீபச்செல்வன்

நேர்காணல்: கே.பாலமுருகன்

 கேள்வி: சமீபத்தில் நான் பார்த்த ஒரு இலங்கை சினிமாவில், இலங்கை குடும்ப ஆண்களை இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதால் இலங்கையில் வசிக்கும் கீழ்த்தட்டு சமூகத்தின் குடும்ப அமைப்பு உடைந்து போவதைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது. போர்ச்சூழலில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவவீரர்கள் இலங்கை அரசின் தூண்டுதலால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போர் நிலை தமிழர்களைத் தவிர்த்து இலங்கையின் சிங்கள மக்களை எப்படிப் பாதிக்கிறது? இராணுவ வீரர்களின் மன அமைப்பு எப்படிப்பட்டது?

பதில் : இராணுவத்திற்கு ஆட்சேர்க்க மிகவும் வறுமைப்பட்ட பின்தங்கிய சூழலில் இருந்து ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். அதனால் பல சிங்களப் பெண்கள் கணவன்மார்களை பிரிந்து தவிக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்து தவிக்கிறார்கள். சகோதரர்கள் ஒத்தாசையின்றி தவிக்கிறார்கள். முப்பதாயிரத்திற்கு மேல் இப்பொழுது இராணுவத்தினருக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான இராணுவத்தினரின் குடும்பங்கள் அந்தச் சம்பளத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்குள் இப்படிப்பிரிவுகளும் சிதைவுகளும் உடைவுகளும் உள்ளன.

தங்கள் ஊதியத்தை அனுப்பி தொலைபேசியில் பேசி உருகிக் கொண்டிருக்கும் இராணுவத்தினர் பலரை நான் தினமும் இங்குள்ள வங்கிகளில் பார்க்கிறேன். தவிர நாங்கள் பயணிக்கும் பேருந்துகளில் சீருடையணியாத இராணுவத்தினர் தெற்கில் உள்ள வீடுகளுக்கு விடுமுறையில் செல்வதையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் போகும் பொழுது உள்ள மகிழ்ச்சியும் வரும் பொழுதுள்ள சோகமும்கூட தினம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அவர்களை இலங்கை அரசு தனது அதிகார வெறித்தனமான யுத்தத்திற்காகப் பலியாக்குகிறது என்றும் அது அவர்களில் தவறில்லை என்றும்கூட நமது சூழலில் சிலர் வாதிடுகிறார்கள். விடுதலைப் புலிகள்கூட குடும்பங்களைப் பிரியும் இராணுவத்தினரின் மனநிலை பற்றியும் யுத்தகள இராணுவத்திரின் மனநிலை பற்றியும் சில குறும்படங்கள் எடுத்திருந்தார்கள். இயக்குனர் பிரசன்ன விதானகேன கூட தனது படங்களில் இந்த விடயத்தை சித்திரித்திருக்கிறார்.


சாதாரணமான சிங்கள மக்களிடத்திலேயே இன்று அரசு தமிழ் இனத்திற்கெதிரான இன வெறியை ஊட்டி வைத்திருக்கிறது. அதைவிடவும் படுகொலைகளுக்கும் வன்புணர்வுகளுக்கும் இன்னும் பிற கொடுஞ்செயல்களுக்கும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு நன்கு புத்தியூட்டப்பட்டுத்தான் படைகள் எமது மண்ணில் திரிகிறார்கள். சீருடை அணிந்த படைகளைப் பார்க்கும் பொழுது, எங்களுக்கு மிருகங்களாகவே தெரிகிறார்கள். அப்படித்தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். தமிழ் மண்ணில் நடமாடும் பொழுது எதையும் செய்யலாம் எப்படியும் செய்யலாம் என்கிற ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புப் புத்தி அவர்களுக்குள் நிறைந்திருக்கிறது. துப்பாக்கியும் இராணுவத்தொப்பியும் பதவி நட்சத்திரங்களும் அதிகாரங்களைக் கொடுக்கிறது. அதனால் அவர்கள் எங்கள் நிலத்தில் எங்கள் மங்களுக்கு நிகழ்த்திய அழிவுகள் தந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்மல்ல என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கேள்வி: இலங்கையில் இதற்கு முன் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் இருந்தும் எந்த மாற்றமும் சமரச பேச்சுகளும் தடைப்பட்டு போனதற்கு இலங்கையின் இராணுவ ஆட்சிதான் காரணமா? அல்லது மகிந்தாவின் தனிமனித அரசியலா? இப்பொழுது இலங்கையில் இராணுவ ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறதா? பிறகெதற்கு அங்குத் தேர்தலும் அரசியல் அமைப்புகளும்?

பதில் : இலங்கையில் ஈழப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் காட்டிய தலையீடுகள் என்பது ஈழத்தில் சமரசத்தையோ சமாதானத்தையோ உருவாக்குகிற எண்ணத்தை அல்லது இலக்கை கொண்டிருக்கவில்லை. அவை அந்நிய தேசத்தின் ஆதிக்கத்தையும் அவர்களின் தலையீடுகளையும் நுழைக்கிறதை அடிப்படையாகக் கொண்டவை. அந்த அடிப்படையில்தான் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அமைந்திருந்தன. செப்டம்பர் 2001 இதற்கு பின்னரான சர்வதேச அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தை சர்வதேச ரீதியாக நட்புறவுகளுக்கும் புரிதல்களுக்குமான களமாகவே சமரப் பேச்சு வார்த்தைகளுக்குச் சென்றார்கள்.

இலங்கையின் ஆட்சி வரலாறு முழுக்க இராணுவ மனோநிலை சார்ந்துதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையை ஆண்ட பிதாமர்களும் ஜனாதிபதிகளும் இந்த மனோ நிலையில்தான் உள்நாட்டுப் பிரச்சினையை அணுகித் தூண்டினார்கள். ‘சமாதானம் என்றால் சமாதானம் யுத்தம் என்றால் யுத்தம்’ என்று யுத்தத்தை விரும்பி அழைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் ‘மனிதாபிமான யுத்தத்தை நடத்தி பயங்கரவாதிகளைத் துடைப்பேன்’ என்ற மகிந்தராஜபக்ஷேவும் யுத்தத்தில் மிகத் தீவிரமானவர்கள். இதனால் தமிழர்களும் யுத்த தீர்வுகளுக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். வன்னி யுத்தம் தொடங்கும் முன்பே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சமாதான வழிகளுக்குச் செல்ல பல தடவைகள் அழைத்தார்கள். ஆனால் அரசு யுத்தம் மூலமாகத் தமிழர்களிடம் இருக்கிற சகலத்தையும் துடைத்தெறிய வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தது.

சமரசத்தை முறித்துக் கொண்டு யுத்தத்தைத் தொடங்கி அதன் அரசனாக சிங்கள மக்கள் மத்தியில் திகழ வேண்டும் என்கிற மகிந்தவின் அவசியத்தில் யுத்தம் அவரது தனிமனித அரசியலானது. அவரது தனிமனித அரசியலுக்காகவே பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, நிலம் அழிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது. இதனால் ஆட்சியையும் பதவிகளையும் அதிகாரங்களையும் மகிந்த ராஜபக்சவின் குடும்பம் தக்க வைத்திருக்கிறது.

இந்த அடிப்படையில் தொடர்ந்தும் தன்னை இராஜாவாகக் காட்டிக் கொள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இராணுவ ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். வடக்கு கிழக்கு முழுவதும் இராணுவம்தான் நிறைக்கப்பட்டுள்ளது. மக்களின் நடவடிக்கைகள், மனநிலைகள் போன்றவற்றை கண்காணித்து அவற்றில் கட்டுப்பாடுகளை இராணுவம் செலுத்திக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட மக்களுக்குரிய பல சிவில் நடவடிக்கைகளைகூட இராணுவம்தான் செய்து கொண்டிருக்கிறது. யுத்தம் செய்ய வந்த இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் காலூன்றி இராணுவ ஆட்சியைத் தழைக்கப் பண்ணுகின்றனர். தேர்தலும் அரசியலும் இலங்கையில் பெறுமதியற்றவை. ஆனால் அந்தத் தேர்தலிலும் அரசியலிலும் தமிழர்கள் இலங்கை அரசுக்கு பாடம் கற்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

கேள்வி: சர்வதேச அமைப்புகள் ஒன்றினைந்து இலங்கையில் கடைசி கட்டங்களில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தப் போவதாகவும், ஒரு பக்கம் அந்தப் போர்க் குற்றங்கள் தொடர்பான தடயங்களை இலங்கை அழித்துக்கொண்டு வருவதாகவும் பேசப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உண்மை நிலவரம் என்ன?

பதில் : யுத்தம் நடந்த வன்னி போர்க்குற்றங்கள் பலவும் புதைக்கப்பட்ட பெருநிலமாகும். இறுதிக் கட்ட யுத்த களத்தில் மக்களையும் போராளிகளையும் மிக கொடுமையாக இராணுவத்தினர் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள். போராளிகளினதும் மக்களினதும் குருதியை இராணுவத்தினர் பயங்கரமாக நிலத்தில் வெட்டியும் சுட்டும் கொட்டியிருக்கிறார்கள். போராளிகளைப் பின் பக்கமாக சுட்டுக் கொல்வதையும் போராளிகளை வரிசையாக இருத்தி பின் பக்கமாகக் கைகளைக் கட்டி கொல்வதையும் போர்க் குற்றப் புகைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இசைப்பிரியா என்ற பெண் போராளியைப் பாலியல் வல்லுறவு புரிந்து கொன்று போட்ட படங்களும் வெளியாகியுள்ளன. இலங்கை அரசியன் யுத்தக் குற்றங்கள் இறுதிக்களத்தில் மட்டும் நடந்தவை அல்ல. தமிழர்களின் நிலத்தில் எப்பொழுது இராணுவத்தினர் நுழைந்தனரோ அன்று முதல் போர் மற்றும் இராணுவக் குற்றங்களான இந்தப் பேரழிவுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. யுத்த களத்தில் இருந்தும் மக்கள் சரணடைந்த சோதனை தடுப்பு நிலைகளிலிருந்தும் கொண்டு செல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான போராளிகள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை கடத்திச் சென்றதும் அவர்களை என்னவோ செய்து விட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மறைப்பதும் யுத்தக் குற்றந்தான். பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்.

இறுதி யுத்த களமான முள்ளி வாய்க்கால் பகுதியில் கிடந்த யுத்தத் தடங்களை யுத்தம் முடிந்து சில நாட்களிலேயே இராணுவத்தினர் அழித்துள்ளார்கள் என்பதை அய்நாவின் புகைப்படங்கள் வெளிகாட்டியுள்ளன. யுத்தம் முடிந்த நாட்களில் இதற்குரிய நடவடிக்கைகளில் படையினர் தீவிரமாக இறங்கியிருந்தனர். தாங்கள் இழைத்த குற்றங்கள் அம்பலமாகக் கூடாது என்பதற்காக முள்ளிவாய்க்காலையே அழித்துப் புதைத்திருக்கிறார்கள். இலங்கை அரசினதும் படைகளினதும் இந்தக் குற்றங்கள் தொடர்பில் அய்நா பரிந்துரைத்திருக்கும் போர்க் குற்ற விசாரணைக்கு சில நாடுகள் ஒப்புதலளித்திருக்கின்றன. சில நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

போர்க்குற்றங்களைப் பாவித்து இலங்கை அரசை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் சர்வதேச அரசியல் அதிகார சமன்பாடுகளைத் தீர்க்கிற நிலைகளை உருவாக்கும் தந்திரங்களை விடுத்து இயன்ற சுயப்புத்தியுடன் அய்நா செயற்பட வேண்டும். ஈழத்தில் வாழும் ஒவ்வொரு மக்களும் போரின் தடங்களாகப் போர்க் குற்ற ஆதாரங்களாகவே வாழ்கிறார்கள். ஒரு கழுத்து இறுக்கப்பட்ட சூழலில் மக்கள் வாழ்கிறார்கள். எதைப் பற்றியும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். போர்க் குற்ற அறிக்கை மக்களுக்கு ஓரளவு நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுத்திருக்கின்றன.

கேள்வி: இன்று இலக்கியங்களில் சமூகப் புறக்கணிப்பு, குடும்பச் சிக்கல் என பல விடயங்களில் காணாமல் போகுபவர்களைப் பற்றி புனைந்தும் எழுதியும் வாசித்தும் வருகிறோம். அவர்களுடையவை வெறும் கதைகளாக அணுக முடியும் என்கிற நம்பிக்கை என்னிடம் இல்லை. ஆனால் இரத்தமும் சதையுமாகப் போர்க்களத்தில் காணாமல் போனவர்களின் மர்மம் நம்மைப் பயங்கரமாக வதை செய்யும் தன்மையுடவை. போர்ச் சூழலிலும் போருக்குப் பிந்தைய நிலையிலும் காணாமல் போனவர்களைப் குறித்துச் சொல்லுங்கள்?

பதில் : யுத்தகளத்தில், இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில், அரசியல் பிரச்சினைகளில் காணாமல் போதல் மிகுந்த பயங்கரமானது. முக்கியமாக கொலை வெறியும் சித்திரவதையும் நிரம்பிய கணங்களை ஏற்படுத்தும். இன்று வரை இப்படியான பயங்கரமான கணங்களால் நிறைந்த நிலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போரில் சிக்கியிருந்து காணாமல் போனவர்களில் பலர் எனக்கு நண்பர்களாக உறவினர்களாக இருந்திருக்கிறார்கள். குழந்தைப் போராளியான எனது தங்கை காணாமல் போய் உக்கிர யுத்தம் நடந்த பொழுது ஒரு கொடிய இரவில் எனது அம்மாவின் கையில் ஏதேர்ச்சையாக கிடைத்திருந்தாள்.

இதைப்போல எனது உயிர் நண்பனான கஜானந் யுத்த களத்தில் இறுதியில் காணாமல் போயிருந்தான். காணாமல் போன அவன் கிளிநொச்சியின் நினைவுகளில் எனக்கு மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகிறான். இன்று கிளிநொச்சி வெறுமையாயிருக்கிற மாதிரி இருப்பதற்கு அவன் இல்லாத கணங்களே காரணமாயிருக்கின்றன. அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவனின் அம்மா அவன் திரும்பி வருவான் என்றே காத்துக் கிடக்கிறார். உருகி உருகி பார்க்கப் பொறுக்க முடியாத கோலத்தையும் கண்ணீர் நிரம்பிய வாழ்க்கையையும் யுத்தகளம் அவனின் அம்மாவுக்குக் கொடுத்திருக்கிறது.

இதைப்போல சிறிய வயதில் என்னுடன் முதலாம் வகுப்பிலிருந்து படித்த கோபிநாத் என்கிற நண்பனும் காணாமல் போயிருக்கிறான். அவனின் அம்மா ஒரு பைத்திய நிலையை அடைந்து விட்டார். தலையில் முடி உதிர்ந்து கொட்டி விட்டது. புலம்பாத நேரங்களில்லை. காணாமல் போனவர்களுக்கு என்ன கதி நடந்திருக்கும் என்ற இரத்தமும் சதையும் பயங்கரங்களும் கொண்ட கணங்கள்தான் நினைவுகளை வதைக்கின்றன. இரக்கமற்ற இராணுவப் படைகள் அவர்களை என்ன செய்திருக்கும் என்ற தவிப்பும் அவர்களுக்கு எதுவும் நடக்காது திரும்பி விடுவார்கள் என்றும் மனம் சுழன்று கொண்டு சிதைந்தபடியிருக்கிறது. இன்றைய ஈழத்தில் காணாமல் போனவர்களுக்காய் வடியும் கண்ணீரும் தவிக்கும் பொழுதுகளும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன.

கேள்வி: இலங்கையில் தலித்துகளின் மீது சுமத்தப்படும் சாதிய ஒடுக்குமுறைகள் தமிழ் தேசிய உருவாக்கத்தை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது? அதிகமாகப் போர் குறித்த விளைவுகளைப் பற்றி பேசும் மண்ணின் சாதிய ஒடுக்கு முறைகள் குறித்துப் பேசப்பட்டனவா? அதற்கான என்ன நடவடிக்கைகள் இடம்பெற்றன?

பதில் : ஈழத்தில் தமிழ் பேசும் மக்கள் இருப்புக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். பெரும்பான்மை இனத்தால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தினர் தமக்குள் உள்ள மக்களை ஒடுக்குவது மிகவும் ஆபத்தானது. இது போராடும் இனம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தேசிய உருவாக்கத்தில் பாதிப்புக்களை உருவாக்கக் கூடியது. விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட இனம் என்ற வகையில் சாதிய வேறுபாடுகளைத் துடைத்து மக்களை ஒரு அணியில் திரட்டியவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து போராட்டத்தைக் கட்டமைத்தவர்கள்.

ஈழத்தில் முதலில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமே எழுச்சியடைந்தது. முதலில் இனத்திற்குள் இடம்பெற்ற ஒடுக்குமுறைகளைத் துடைக்கும் போராட்டம் பின்னர் இனத்தின்மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து வெடித்தது. ஈழப் போராட்டத்தில் எழுச்சியுடன் பங்கெடுத்த பலரும் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களே பின்னர் மக்களின் போராளிகளாகவும் தலைவர்களாவும் மாறினார்கள். சாதியத்திற்கு எதிரான எழுச்சி இனத்தைப் பாதுகாக்கிற போராட்டத்தை உருவாக்கிய வகையில் முக்கியம் பெற்றது.

போரையும் அதன் விளைவுகளையும் முதல் நிலையில் வைத்து பேசுவதால் தேசிய இனத்திற்குள் உள்ள பல விதமான நுண் ஒடுக்குமுறைகள் பேசப்படாது போகின்றன. ஆனால் விளிம்பு நிலை மக்களின் கதைகளை பேசும் அதைப் பதிவு செய்யும் நிலைமையும் காணப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வேலைகள் பலவும் ஈழத்தில் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இல்லாத இன்றைய சூழலில் சாதிய ஒடுக்குமுறைகள் மீண்டும் தலை தூக்கப் பார்க்கின்றன. இது தேசிய இனத்தின் இலட்சியத்தையும் அதன் அடிப்படைகளையும் பாதிக்கும். குறிப்பாக இன்றைய ஒடுக்குமுறைகள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழும்புகின்றன. கல்வி, வசதிகள், வாய்ப்புக்கள், அரசியல் போன்றவற்றாலும் ஏற்படுகின்றன. போர் மக்களை வறுமையானவர்களாகவும் நிலமற்றவர்களுமாக்கிய நிலையில் அந்த மக்கள் சில கட்டங்களில் ஒடுக்கப்படுகிறார்கள்.

தொழில் சார்ந்து சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று அந்த ஒடுக்குமுறைகளை வென்றிருக்கிறார்கள். ஈழத்தில் ஏற்பட்ட சாதியத்திற்கு எதிரான எழுச்சி பலமான அடிக் கட்டுமானத்தை இட்டியிருக்கிறது என்ற பொழுதும் மலையக மக்களை அவர்களின் பூர்வீகம் தொடர்பான நிலையில் ஒடுக்கப்படுவது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது யாழ்ப்பாணம் மற்றும் வன்னி நிலத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. இனத்திற்குள்ளான முரண்பாடுகளை ஒடுக்குமுறைகளைத் துடைத்து இனத்தின் இருப்பைப் பாதுகாக்க தேசிய இனத்தைக் காப்பாற்ற ஒன்றினைவது தேசிய உருவாக்கத்தில் மிகவும் அவசியமானது.

கேள்வி : உங்கள் தாயுடனும் தங்கையுடன் மீள்குடியேற்றம் செய்துள்ளீர்கள் என அறிந்தேன்.  உங்களது மீள் குடியேற்றத்தின் நிலை என்ன?

பதில்: அந்த மீள்குடியேற்ற நாளுக்காக எத்தனை காலம் காத்திருந்தோம் என்பது மிகக் கொடுமையானது. தடுப்பு முகாமிலிருந்த எனது அம்மாவும் தங்கையும் மீள்குடியேற்றத்திற்காகக் காத்திருப்பின் விரக்திக் கட்டங்களைக் கடந்தும் காத்திருந்தவர்கள். எங்கள் நிலத்திற்குத் திரும்பி விட்டோம் என்ற ஆறுதல் மட்டுமே எங்களிடம் இருக்கிறது. தறப்பாள் கூடார வாழ்க்கையைக் கடப்பதைப் போல துன்பம் எதுவுமில்லை. இன்னும் அதற்குள்தான் வாழ்க்கை கழிகிறது. கடந்த மாரி மழை காலத்திலேயே தாங்க முடியாத கூடாரம் வரப் போகும் மழைக்கு என்ன செய்யப் போகிறது என்று அம்மா கேட்டார்?

இது எங்கள் அம்மாவுடைய கேள்வி மட்டுமல்ல. இப்படிப் பல அம்மாக்கள், பல சனங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்களது பழைய வீடு மண் வீடுதான். ஆனால் அதைக் கட்டுவதற்கு நாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டிருந்தோம். இன்று அந்த வீடு இடிந்து மண் மேடாக உள்ள இடத்தில்தான் ஒரு தறப்பாளில் கூடாரம் அமைத்திருக்கிறோம். எங்கள் கிராமமே தறப்பாள் கூடார கிராமம்தான். யாருக்கும் இன்னும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவில்லை. தற்காலிகமான வீட்டைக் கூட அமைத்துத் தரவில்லை. இன்று நாளை என்று ஒரு வருடமாக தறப்பாள் வாழ்க்கை கழிந்து விட்டது. அதேநேரம் யுத்தம் முடிந்து இரண்டு வருடமும் ஆகி விட்டது.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வெறும் காரணங்களையும் அவகாசங்களையும்தான் தருகிறார்கள். ஆனால் அந்தக் கொடுமையான கூடாரத்திற்குள் அவர்களால் சில நிமிடங்கள் கூட குந்தியிருக்க முடியாது. எல்லாவகையிலும் பாதுகாப்பற்ற கூடாரங்கள். நோய்களை உருவாக்கும் ஆபத்துக் கொண்டவை. எங்கள் மக்களால் தாங்களாக ஒரு வீட்டைக் கட்ட முடியவில்லை. எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் எல்லோருமே மலையகத்திலிருந்து வந்து குடியேறிய மக்கள். மிகவும் வறுமைப்பட்டவர்கள். ஒரு ஓலையிலான மண் வீட்டைக் கூட கட்டிக் கொள்ள முடியாத நிலமையில் அந்த மக்கள் இப்பொழுது வாழ்கிறார்கள். இந்தத் துயரங்களைப் பற்றி மக்கள் சொல்லாத இடங்களில்லை. மீள்குடியேற்றம் என்றால் இப்படித்தானிருக்கும் என்பதைப் போல செயலற்ற, முடிவற்ற மௌனமே நீடிக்கிறது.

எமது மக்களின் வாழ்க்கையும் போராட்டமும் இன்று அடைந்திருக்கிற நிலமையைத்தான் இந்தக் கூடாரங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் இதற்குள் மழையை வெயிலை அதன் துயர் செறிந்த காலங்களைக் கடந்து நாங்கள் நம்பிக்கையுடன் உயிருடன் இருக்கிறோம். எத்தகைய துயர சூழலிலும் நெருக்கடியிலும் நாங்கள் நம்பிக்கையைக் கட்டி எழுப்பிக் கொண்டு இவைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. இந்த வாழ்க்கையும் எதிர்காலமும் எப்படியிருக்கப் போகின்றன என்பதை இதே சூழல் நிச்சயமாகத் தீர்மானிக்கும். மீள்குடியேற்றத்தில் மக்கள் மீள நிலமடைந்து வாழ்வது என்பது இப்படித்தானிருக்கிறது.

கேள்வி : வன்னியில் பள்ளிகள் மீண்டும் இயங்குகின்றனவா? எப்படி இத்தகைய சூழலில் இயங்குகின்றன? அங்கு படிக்கும் மாணவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில் : வன்னியில் பாடசாலைகள் 2010 ஜனவரியில் இருந்து மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான பாடசாலைகள் மீளத் தொடங்கி விட்டன. முல்லைத்தீவில், புதுக்குடியிருப்பில் சில பாடசாலைகள் இன்னும் இயங்காதிருக்கின்றன. யுத்தம் காரணமாகப் பலத்த இழப்புக்களுக்குப் பாடசாலைகள் முகம் கொடுத்திருக்கின்றன. பாடசாலைகள் பௌதீக வளங்களையும் ஆள் வளங்களையும் இழந்திருக்கின்றன. பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்க வேண்டும் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியிருகின்றன.

யுத்தத்தின் பின்னரான பல பாடசாலைகளுக்குச் சென்று வருகிறேன். யுத்தத்தில் இடிந்து, கூரையை இழந்து, கட்டிடங்களை இழந்து பல பாடசாலைகள் அழிவின் எச்சமாகியுள்ளன. அந்தக் கட்டிடங்களில்தான் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கரும்பலகைகள் இல்லாமல் அழிந்த கட்டிடங்களில் மாணவர்கள் எழுதிப் படிக்கிறார்கள். அழிவோடும் துயரத்தோடும் இருக்கிற சூழலிலும் மாணவர்கள் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

எல்லாப் பாடசாலைகளிலும் யுத்தம் காரணமாக அநாதையாக்கப்பட்ட சிறுவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். வன்னியின் வரண்ட நிலப் பாடசலைகளின் துயரம் மோசமானது. கனகபுரம் பாடசாலை, பூநகரி மகாவித்தியாலம் போன்ற பாடசாலையில் பல பிள்ளைகள் யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் படிக்கிறார்கள். இப்படிப் பல பாடசாலைகளில் அநாதையான பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களுக்குப் பாடசாலைச் சூழல் ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அவர்களின் காயங்கள் ஆறுகிற சூழலாகப் பாடசாலை இருக்கிறது.

விவேகானந்த வித்தியாலம் என்ற கிளிநொச்சியில் உள்ள பாடசாலைக்கு அண்மையில் சென்ற பொழுது யுத்தத்தில் தனது தாய் தந்தை, சகோதரர்கள் அனைவரையும் ஷெல் தாக்குதலில் இழந்த தமிழ்ச்செல்வி என்ற சிறுமியைச் சந்தித்தேன். அவருக்கு இருக்கும் ஒரே ஒரு உறவான சசோதரன் ஒருவனும் போராளித் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். தமிழ்செல்வியைப் போல பல சிறுவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள்.

பல மாணவர்கள் அங்கங்களை இழந்த நிலையில் கல்வி கற்கிறார்கள். கைகளை, கால்களை, கண்களை இழந்த பல மாணவர்கள் மீண்டும் கல்வி கற்கத் தொடங்கியிருக்கிறார்கள். போருக்குப் பிந்திய நெருக்கடியான வாழ்க்கையிலிருந்தே அவர்களின் மீள் கல்வி தொடங்கியிருக்கிறது. பாதுகாப்பற்ற வளமற்ற நெருக்கடியான சூழலில் இந்த மாணவர்கள் வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்த பொழுதும் இழக்க முடியாத, இழக்கக் கூடாத கல்வியை எமது மாணவர்கள் நம்பிக்கையுடன் கற்கிறார்கள். இடைவிலகிய பலர் கல்வியைத் தொடர்ந்தாலும் சில பிள்ளைகளின் சூழல் கல்வியைத் தொடர முடியாத சோக நிலைக்கு தள்ளுண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

கேள்வி: தமிழ் தேசியம் உருவாக்கத்தில் மார்க்சியத்தின் பங்கு முக்கியமானதா? மக்களைத் தத்துவ ரீதியில் கட்டி எழுப்பாமல் வெறும் போர், ஆயுதம் என்று நகர்த்தப்படுவது சரியா?

பதில் : தமிழ் தேசியத்தில் மார்க்சியத்தின் பங்கு அவசியமானது. இனத்திற்குள் இடம்பெறும் ஒடுக்குமுறைகளை, முரண்பாடுகளை துடைக்க மார்க்கசியம் அவசியமானது. இனத்திற்குள்ளான மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள மிகவும் முக்கியமானது. சாதிய முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் வர்க்க முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் தேசியப் போராட்டத்தை பாதிக்கின்றன.

ஈழப் போராட்டத்தில் இன விடுதலைப் போராட்டம் என்கிற தத்துவ அடிப்படையில் மக்கள் கட்டி எழுப்பட்டார்கள். ஒரு கால கட்டத்தில் வேவ்வேறான தத்துவங்களை அல்லது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஈழப் போராட்ட அமைப்புக்கள் போராட்டத்தை முன் வைத்திருந்தன. ஆனால் எல்லா அமைப்புக்களினதும் இலட்சியமாக ஈழமும் விடுதலையுமே இருந்தன.

எண்பதுகளின் இறுதியில் அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைபெற்று இந்திய இராணுவத்தின் வருகையுடன் ஏற்பட்ட சூழலிலும், அதன் பின்னரும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து முன்னெடுத்த கொள்கை மக்கள் மத்தியில் முதன்மை பெற்றது. அவர்களின் போக்கிற்கும் நடவடிக்கைகளும் மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள்.

இலங்கை, இந்திய, சர்வதேச அரசியல் சூழலில் ஈழத்து மக்கள் ஆயுதம் ஏந்தி தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது ஈழத்தின் போர் உக்கிரமான கட்டங்களில் அதிகரித்துச் சென்றது. வரலாற்றடிப்படையில் மக்களின் மனநிலைகளின் அடிப்படையில் போராளிகளின் கொள்கையின் அடிப்படையில் போரே தீர்வாகியது.

ஈழத்தில் முன் வைக்கப்பட்ட தத்துவம் என்பது இனவிடுதலை, நில விடுதலை, மொழி விடுதலை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பன ஈழத்து மக்களால் பெரும்பாண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாகும். அந்த அடிப்படையில்தான் ஈழத்து மக்கள் ஒன்றிணைந்தார்கள். அந்த அடிப்படையில்தான் ஈழப் போராட்டம் நடைபெற்றது.

ஈழப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்து இன்று வரை மார்க்கிசக் கொள்கைகள் ஈழத்திலும் தமிழ்ச் சூழல்களிலும் முன் வைக்கப்பட்டு வரப்படுகின்றன. மாற்றுக் கொள்கைகளும் முன் வைக்கப்படுகின்றன. பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் கருதிய கொள்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் ஈழக் கொள்கையையே தொடர்ந்து அங்கிகரித்து வழியுறுத்தி வருகிறார்கள். அது சிங்கள இனவாத ஆட்சியாலும் அது ஏற்படுத்திய அழிவுகளாலும் உருவாகிய சூழல். எனவே இந்தப் பயணம் என்பதும் இந்தத் திரட்சி என்பதும் மக்களுடையது.

கேள்வி: நீங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது போருக்கு எதிராகத் செயற்பட்டீர்கள் என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்பட்டதா? போர் குறித்தும் அதன் அரசியல் குறித்தும் மாணவர்கள் மத்தியில் உருவான மனநிலைகளைப் பற்றி சொல்லுங்கள். அதில் உங்கள் பங்கு என்ன?

பதில் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஈழப்போராட்டத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஈழப் போராட்டம் தொடர்பான வலுவான கருத்தாடல்களை உருவாக்கிய களம். யாழ் பல்கலைக்கழகம் இலங்கை அரசின் இன அழிப்புப் போரைத் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறது. இன விடுதலைப் போராட்டத்தை வலியுறுத்தி வந்திருக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி வந்திருக்கிறது.

நான் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராகப் பொறுப்பு வகித்தேன். 2008இல் யுத்தம் மூண்ட சூழலில் பல மாணவர்களும் மாணவத் தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் குறித்த பதவியைப் பொறுப்பு வகிக்க மாணவர்கள் அஞ்சிய சூழலில் பொறுப்பேற்றேன். அம்மா வன்னி யுத்தக் களத்தில் துயரப் பாதைகளை ஆபத்தைக் கடந்து கொண்டிருந்ததுவே என்னையும் பல்ககைலக்கழகத்தில் இயங்க தூண்டியது.

நான் பொறுப்பு வகித்த காலத்தில்தான் போர் உக்கிரமாகியது. மிக இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலிலும் போரை நிறுத்தும்படி தொடர்ந்து குரல் கொடுத்தோம். எமது மக்கள் நாளும் பொழுதும் கொல்லப்பட்டு இரத்தமும் சதையுமாகக் கிடந்த வன்னிப் பெருநிலத்தில், மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தி, சமாதானப் பேச்சுக்களுக்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம்.

வன்னிப் போரை நிறுத்தும்படியும் வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மௌனப் பிரார்த்தனை என்ற போராட்டத்தை ஒரு மாதகாலமாக இறுதிக் கட்டத்தில் நடத்தினோம். பல தடவைகள் வகுப்புக்களைப் புறக்கணித்து போர் நிறுத்தக் கோரிக்கைகளை முன் வைத்தோம். நாங்கள் கேட்டது எல்லாம் போரை நிறுத்தும்படியும், மக்களின் உயிர்களைக் காப்பாற்றும்படியுமே.

ஈழம் என்கிற அரசியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்களிப்புடன் இருந்தார்கள். இன அழிப்புப் போரை நிறுத்த வேண்டும். மக்களைக் காப்பற்ற வேண்டும் என்று துடித்தவர்கள். பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களே பதவிகளை விட்டு விலகினார்கள். மாணவர் ஒன்றியத் தலைவரே பதவியை விட்டு ஒதுங்கினார். மாணவர்களுக்கு தலைமை வகிக்க ஒருவர் தேவைப்பட்டார். அதனால் அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். பதவியை விட்டு நான் விலகவில்லை. போரின் இறுதிக் கணம் வரை எங்கள் குரல்கள் அடங்காது ஒலித்துக் கொண்டுதானிருந்தன.

போரைத் தொடர்ந்து நடத்தி அழிப்பை மேற்கொண்ட சூழலில், போருக்கு எதிரான யாழ் பல்கலைக்கழக மாணவர்களினதும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே எங்கள் மீதான குற்றமாக சுமத்தப்பட்டது.

கேள்வி: "இறுதி எச்சரிக்கை" எனும் சுவரொட்டியின் மூலம் உங்களுக்கும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்திருப்பதை அறிகிறேன். இந்த எச்சரிக்கை ஏன் விடுக்கப்பட்டது? எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் என்ன செய்தீர்கள்?

பதில்: நான் மாணவர் ஒன்றியத்தில் பொறுப்பேற்று பத்து நாட்கள் இருக்குமென்று நினைக்கிறேன். இறுதி எச்சரிக்கை என்ற மரணப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் என்னுடன் 14 பேருக்கு மரண எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. கொலைகள் மலிந்த காலத்தில் மிகச் சாதாரணமாக எங்கள் பெயர்களை அறிவித்திருந்தார்கள். அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருந்தார்கள். நான் பேரதிர்ச்சியடைந்தேன். நாங்கள் கொல்லப்படுவதை எங்களுக்கு அறிவிக்கும் நிலையில் அதற்குப் பிறகு வாழும் ஒவ்வொரு கணங்களும் மிகப் பயங்கரமாகக் கழிந்தன.

பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என்று யாழ் பல்கலைக்கழகச் சமூகத்தைச் சேர்ந்த 14 பேருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவுடன் சில விரிவுரையாளர்களும் மாணவர்களும் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள். சில மாணவர் பிரதிநிதிகள் தமது பதவிகளைத் துறந்தார்கள். அன்றைய சூழலில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவர்களில் வன்னியைச் சேர்ந்த மாணவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு உணவு, நிதி உதவி போன்ற மனிதாபிமான உதவிகளையும் உளவியல் ரீதியாக நம்பிக்கையளிக்கும் ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தோம்.

பல்கலைக்கழக மாணவ நலச்சேவையுடன் இணைந்து, தொண்டு நிறுவனத்தினரிடமும் புலம்பெயர்ந்த மக்களிடமும் பழைய மாணவர்களிடமும் கிடைத்த உதவிகள் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன. அவற்றை ஒழுங்குப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் பெரும் வேலையையும் ஒரு கட்டத்தில் தனித்து நின்று செய்து கொண்டிருந்தேன். முக்கியமாக மாணவர்களின் இந்த மனிதாபிமான வேலைகளுக்காக நான் பதவியைத் துறக்காமல் செயற்பட்டேன். கடுமையான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்தும் போருக்கு எதிரான போராட்டங்களும் அறிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தேன்.

என்னைச் சுற்றி வளைப்பில் விசாரணை செய்த பொழுது இராணுவம் மிகக் கடுமையாக எச்சரித்திருந்தது. ஈழக் கனவைக் கைவிட வேண்டும் என்று சொல்லியிருந்தது. எனக்கு நாளும் பொழுதுமாக நெருக்கடிகள் தரப்பட்டன. வேவ்வேறு விதமாக அந்த நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களிலும் அன்றைய நெருக்கடிக்காலத்தில் செய்ய முடிந்த பணி மட்டுமே ஆறுதலைத் தந்தது. எனது கல்வியைவிட அந்தப் பணிக்கே முதன்மையளித்தேன். எந்தக் கட்டத்திலும் எனது மாணவர்கள் என்னுடன் இருந்தார்கள். எனக்கு ஆறுதலையும் நம்பிக்கையும் அவர்கள் அளித்திருந்தார்கள். அப்பொழுது பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் என். சண்முலிங்கன் மாணவர்களுக்கு ஆற்ற வேண்டிய மனிதாபிமானத் தேவைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.

யுத்தம் முடிந்த நிலையிலும் எச்சரிக்கை அழுத்தங்கள் நீடித்தன. அப்பொழுது தடுப்பு முகாங்களிலும் போராளித் தடுப்புமுகாங்களிலும் அகப்பட்டிருந்த மாணவர்களை மீட்க வேண்டிய வேலையிருந்தது. அந்தத் கட்டத்தில் மீண்டும் மாணவர் ஒன்றியத் தலைவர் பிரசன்னா என்னுடன் இணைந்து கொண்டார். இருவரும் அதற்காகப் பல வகையான முயற்சிகளை எடுத்தோம். அப்பொழுதும் துணைவேந்தரின் கடும் உழைப்பு இருந்தது. இரவு பகல் பாராது முகாம்களிலிருந்து மாணவர்களை விடுவித்து அவர்களை மீண்டும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர வேலை செய்தோம். ஏற்கனவே கல்வி கற்ற மாணவர்களின் தேவைகளுடன் மேலும் இந்த மாணவர்களின் தேவைகளையும் கவனித்துக் கொள்ளும் முக்கிய பொறுப்பு எங்களுக்கு இருந்தது. எனது படிப்பின் இறுதிக்கட்டம் வரை, மாணவர் ஒன்றியப் பொறுப்பிலிருந்த இறுதிவரை எனது கடமையைச் செய்தேன். அதுவரை மட்டுமல்ல அதற்குப் பின்னரும் எச்சரிக்கை அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன.


நேர்காணல்: கே.பாலமுருகன்

-end-

No comments: