கீர்த்திகா வெகுநேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அடுத்து அவள் அழப்போகிறாள் என அவள் முகம் முன்னெச்சரிக்கை செய்து கொண்டிருந்தது. கீர்த்திகாவைச் சுற்றி காஞ்சனா, துர்கா, ஏஞ்சலின், முகமாட் நின்றிருந்தார்கள்.
சரியாக 10 மணிக்குத்தான் இந்தச் சம்பவம் நடந்தது. அப்பொழுது ஓய்வு நேரம். வழக்கமாக மாணவர்கள் ஓடியாடி விளையாடும் நேரம் அது. வகுப்பில் எப்பொழுதும் பார்த்துக்கொள்ளும் அதே நண்பர்களைத்தான், ஓய்வு நேரத்தில் துரத்திப் பிடித்து விளையாடுவார்கள். வகுப்பறை ஒரு திட்டவட்டமான சட்டங்களால் நிரம்பியவை. ஆகவே, ஓய்வு நேரம் தற்காலிகமான ஒரு விடுதலையைக் கொடுப்பதால் மாணவர்களின் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் எல்லையே இல்லை.
அப்படிப்பட்ட சமயத்தில்தான் முருகேசன் துரத்த கீர்த்திகா தரையில் வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சியைக் கவனிக்காமல் அதனை மிதித்தாள். எங்கு அடிப்பட்டது எனச் சரியாக ஊகிக்க முடியாமல் அவர்கள் எல்லோரும் தடுமாறிப் போய்விட்டார்கள். மஞ்சள் வர்ண வண்ணத்துப்பூச்சி சிறிது நேரம் தரையில் துடித்துக் கொண்டிருந்தது. கீர்த்திகா அதனைக் கையில் பிடித்து மேலே தூக்கி அருகாமையில் பார்த்தாள். மிக அழகான ஒரு சிற்றுயிர் அது. முதன் முதலாக ஒரு வண்ணத்துப் பூச்சியை அத்தனை நெருக்கத்தில் பார்க்கிறாள்.
வண்ணத்துப்பூச்சியை வெறும் வர்ணம் என்றுத்தான் அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். அதன் அழகான வர்ணத்தை மட்டுமே அதிகப்படி எல்லோரும் இரசிப்பார்கள். ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒட்டுமொத்த அழகை அதன் சிறகுகளிலும் அதன் வர்ணத்திலும் கொண்டு போய் சேர்ப்பிப்பதே பொதுவான இரசனையாக இருக்கிறது. ஆனால், அதனையும் தாண்டி அதற்கொரு உடல் இருக்கிறது; மெல்லிய கை கால்கள் இருக்கின்றன; கண்கள் இருக்கின்றன என்பதை அன்றே அவள் ஆச்சர்யமாகக் கவனித்தாள்.
“இது கிருஸ்த்துவப் பாப்பாத்திதான்” என வெகுநேரம் அங்கிருந்த மௌனத்தைக் களைத்தாள் ஏஞ்சலின்.
“அதெப்படி நீ சொல்ற?” முருகேசன் அப்பொழுதுதான் அங்கு வந்தான். அனைத்திற்கும் அவன்தான் காரணம் என்பதைப் போல கீர்த்திகா கோபமாகப் பார்த்தாள்.
“ஏய்ய்ய். நீ என்ன என்னையே முறைச்சிக்கிட்டு இருக்க? நான் என்னா உன்னை பாப்பாத்தியெ கொல்லச் சொல்லி தூண்டியா விட்டேன்?”
கீர்த்திகாவின் முகத்திலும் பார்வையிலும் சோகம் மட்டுமே ததும்பி நின்றது.
“நான் சொல்றேன்ல நம்புங்க. இது கிருஸ்த்துவப் பாப்பாத்திதான். நான் ஜெபம் செய்றன். எல்லோரும் வேண்டிக்கிட்டு மண்ணுல புதைச்சிருவோம்”
“இந்தக் கதை இங்க வேணாம்….இது மலாய் பாப்பாத்தி” முகமட் அழுத்தமாகக் கூறினான்.
“இல்லலா… நான் அடிச்சி சொல்றன் இது ஒரு இந்து பாப்பாத்தி. நல்லா அதோட உடம்பெ பாருங்க. ரெக்கையிலெ நாமம் போட்டுருக்குப் பாருங்க” துர்கா கைக்காட்டிய இடத்தை எல்லோரும் ஒன்றுசேரப் பார்த்தார்கள்.
“டேய்ய்ய் இங்க பாருடா… அது அதோட ரெக்கையில உள்ள கோடு. உடனே உனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்குவியா?”
“சொன்னா கேளுங்க. நான் சாமிப் பாட்டுப் பாடறென் அதைக் கொண்டு போய் எரிச்சிருவோம். அப்பத்தான் அடுத்த பிறவியில அது மனுசனா பிறக்கும்”
துர்கா அப்படிச் சொல்லும்போது கண்களைச் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டாள். பேசும்போது அடிக்கடி கண் சிமிட்டினால் அது நம்பிக்கையின்மையைக் காட்டிவிடும் என அவள் நம்பினாள்.
அதற்குள் பெரிய வாத்தியார் அவர்கள் இருக்கும் திசையை நோக்கி நடந்து வருவதை முருகேசன் பார்த்துவிட்டான். எந்தெந்த ஆசிரியர்கள் எங்கெங்கே வருகிறார்கள் எனும் அரிய தகவல் மட்டும் முருகேசனுக்கு உடனே தெரிந்துவிடும். அவன்தான் எந்த நேரமும் அவர்களெல்லாம் விரும்பாத வேலைகளைச் செய்து கொண்டிருப்பதால் அப்படியொரு ஞானம் அவனுக்கு.
“ஓடுங்கடா…” என அவன் கூச்சலிட, கீர்த்திகா பயப்பக்தியுடன் அந்த இறந்துபோன வண்ணத்துப்பூச்சியைப் பத்திரமாக உள்ளங்கையில் வைத்து மூடிக்கொண்டே ஓடத் துவங்கினாள்.
அனைவரும் முப்பது அடி தள்ளியிருக்கும் மாமரத்திற்கு அடியில் வந்து சேர்ந்தனர்.
“சரி உடனே இப்ப ஒரு முடிவெடுங்க. இதை என்னா செய்யப் போறோம்? நான் சொல்றேன் கேளுங்க. எங்க தாத்தா இறந்தப்ப என்னா செஞ்சாங்கனு எனக்குத் தெரியும். நானே செய்றன்”
“முகமட்…அதெப்படி உனக்கு தெரியும்? இது இந்து பாப்பாத்தியா இருந்தா…அது தப்பில்லையா?” துர்கா கோபக்காரியாக மாறி கோபக்கனலைக் கக்கினாள்.
“நான் சிவப்புராணம் படிக்கிறேன். எனக்கு நல்லா தெரியும். இது சிவனோட ஆசீர்வாதம் கிடைச்சுதுனா நேரா சிவலோகம் போய்ரும்”
“போதும்…முடியாது. ஆண்டவர் இந்தப் பாப்பாத்தியை இரட்சிப்பார். நான் இப்பயே அவருகிட்ட சொல்றன்”
“நான் சொல்லிட்டன்…சொன்னா கேளுங்க. நான்தான் இது சாவுக்குக் காரணமுனு கீர்த்திகா சொல்லுது. அதனாலே நானே இதைப் பொதைச்சி பாவத்தைக் கழிச்சிக்குறேன்” முருகேசன் திடீரென ஆவேசம் பொங்கப் பேசினான்.
“நீயே சொல்ற பாவம் கழிஞ்சிரும்னு? உனக்கு யார் சொன்னா?” அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த காஞ்சனா அப்பொழுதுதான் பேசினாள்.
“எங்கம்மா சொல்லிருக்காங்க…கொன்னா பாவம் தின்னா போய்டும்னு”
“அப்பன்னா நீ பாப்பாத்திய சாப்ட போறியா? பாவம் போய்டும்” எனக் காஞ்சனா சொன்னதை அடுத்து எல்லோரும் சிரிப்பை அடக்க முயற்சி செய்தார்கள்.
“பிளிஸ்…யாரும் சிரிச்சிறாதீங்க. நான் ஜோக் பண்ணல. சாவு வீட்டுல சிரிக்க கூடாதுனு பெரியவங்க சொல்லித் தரலயா?” காஞ்சனா இப்பொழுது அந்தக் கூட்டத்திற்குத் தலைவரானதைப் போல தோன்றினாள்.
“எவ்ள நேரம் இந்தப் பாப்பாத்திய இப்படியே வச்சிருக்கப் போறிங்க? கீர்த்திகாதான் மிதிச்சி கொன்னுச்சி. நீயே முடிவெடு… மணியாவது…”
கீர்த்திகாவின் கண்கள் கலங்கியிருந்தன. அவள் அந்த வண்ணத்துப்பூச்சி அசைவற்று கிடப்பதையே பார்த்துக்கொண்டிருந்தாள். ஏஞ்சலின் கீர்த்திகாவின் தோளில் கையை வைத்தாள். அவளருகில் சென்றாள்.'
“கீர்த்திகா… நான் உண்மையிலே சொல்றேன். இது கிருஸ்த்துவப் பாப்பாத்தி. அது படுத்திருக்கிறத பாரு…அப்படியே….”
ஏஞ்சலின் முணுமுணுப்பு சரியாக யாருக்கும் கேட்கவில்லை.
“இது என்னா நியாயம்? நீ மட்டும் போய் தனியா என்னவோ சொல்ற?”
“வேணும்னா நீங்களும் போய் சொல்லுங்க”
துர்கா கீர்த்திகாவிடம் சென்றாள்.
“துர்கா இது நம்ம பாப்பாத்தி. விட்டுக்கொடுக்கக் கூடாது. என்னத்தான் இருந்தாலும் நம்ம பாப்பாத்தியெ நம்மத்தான் எல்லாம் செய்யணும். நீதானே கொன்ன…கடவுள் மன்னிச்சிருவாரு. கவலைப்படாத” துர்கா கீர்த்திகாவின் தோளில் ஆதரவாகக் கையை வைத்தாள்.
“என்னா நீங்களாம் இப்படி இருக்கீங்க? இந்தப் பாப்பாத்தியெ கொன்னதுக்காக எனக்கு தண்டனை வேணும். அதை யாராவது தர முடியுமா?” கீர்த்திகா அப்படிச் சொன்னதும் எல்லோரும் ஒருவருக்கொருவரைப் பார்த்துக்கொண்டனர்.
“அது தெரியலையே…எங்க அப்பாக்கிட்டத்தான் கேட்டுச் சொல்லணும்”
“எனக்கு மனசு ஆறாது. பாவம் இந்தச் சின்ன பூச்சி. அது என்னா பாவம் செஞ்சிச்சி? என்னால அழுகையெ அடக்க முடியல”
முருகேசனும் ஏஞ்சலினும் அதற்கு மேல் ஏதும் பேச முடியாமல் அமைதியானார்கள்.
“கீர்த்திகா…நீ சும்மா இப்படிலாம் பேசிக்கிட்டு இருக்காத. இதெல்லாம் ஒரு விசயமா? அதை பேசாம அங்கத் தூக்கிப்போட்டுட்டு வா கிளாஸ்க்குப் போகலாம்” எனச் சொன்ன காஞ்சனாவை எல்லோரும் ஆத்திரத்துடன் பார்த்தார்கள்.
“என்னாலா இங்க என்னா கொலையா நடந்துருச்சி?”
கீர்த்திகா எழுந்து காஞ்சனாவைப் பார்த்தாள்.
“இதுக்கு பேரு வேற என்னா?” கீர்த்திகாவின் கண்கள் கலங்கின.
“அதான் நான் சொல்றன். விறுவிறுன்னு இதைப் பொதைச்சுருவோம். இந்தப் பாப்பாத்தி என்ன மதம்னு கண்டுபிடிங்க” என முகமட் கூறினான்.
அந்த வண்ணத்துப்பூச்சியின் சிறகு காற்றில் இலேசாக உதிரத் தயாராக இருந்தது. அதனைக் கண்ட கீர்த்திகா உடனே வகுப்பறையை நோக்கி ஓடினாள். பள்ளியின் மணியும் அலறியது. எல்லோரும் அதனைக் கண்டு விழித்துக்கொண்டிருந்தனர்.
கையில் ஒரு கண்ணாடிப் புட்டியுடன் வந்தாள். அந்த வண்ணத்துப்பூச்சியை எடுத்து அதற்குள் போட்டாள்.
“என்ன செய்ற கீர்த்திகா? அதை அடக்கம் செய்யணும்” எனத் துர்கா பதறினாள்.
“உங்களுக்கெல்லாம் தெரியாதா? இதை பாடம் செஞ்சி எத்தன மாசம் வேணும்னாலும் அழுகிப் போகாமல் வச்சிருக்கலாம். க்ளோரோபோம், டுட்டும்மென்… எல்லாம் நீங்க சைன்ஸ்லே படிக்கலையா?”
ஏஞ்சலின், முகமட், துர்கா அவள் பேச்சைக் கேட்டு ஆச்சர்யத்துடன் திகைப்புக் கலந்த நிலையில் நின்றிருந்தினர்.
“உடம்பை ஏன் அழிக்கணும்?” எனக் கூறிவிட்டு அந்த வண்ணத்துப்பூச்சியின் உடலோடு அறிவியல் ஆசிரியரைச் சந்திக்க கீர்த்திகா வேகமாக ஓடினாள்.
முருகேசன் அனைவரையும் பார்த்துச் சொன்னான்.
“சைன்ஸ்…ம்ம்ம் வாங்க போகலாம் நமக்கு இங்க வேலை இல்ல”
“டேய்ய்ய் அப்படியே அழுகாமல் உடம்பைப் பதப்படுத்துறது எகிப்தியர்கள் கண்டு பிடிச்சதுதானே?”
“அப்பனா அது எகிப்து பாப்பாத்தியேதான்”
“அப்படியே எகிப்துலேந்து பறந்து வந்திருக்குமோ?”
“எகிப்து எங்க இருக்குடா?”
“அது அப்படியே கோலாலம்பூர் தாண்டி போகணும் போல”
“அங்க பாப்பாத்தி நிறைய இருக்குமோ?”
- கே.பாலமுருகன்
2 comments:
சிறு பிள்ளைகளின் எதார்த குணங்களின் வெளிப்பாடு, எனது பள்ளி வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்தமைக்கு நன்றி.
வண்ணத்துப்பூச்சிக்கு கதை உருவானது, இக்கால மாணவர்களின் அறிவும் திறமையும் புலப்படுத்திய இச்சிறுகதை ஆசிரியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
Nice bro.
Post a Comment