Monday, May 9, 2011

சிவா பெரியண்ணனின் வாடகை வீடு- தூக்கில் தொங்கிய அறை

கடந்த வாரம் பெத்தாலிங் ஜெயாவிலுள்ள சிவா பெரியண்ணனின் வாடகை வீட்டுக்குப் போயிருந்தேன். சிவாவின் மேல்மாடி அறைக்குள் நுழையும்போதே சட்டென அதன் இருளும் சோர்வும் சிங்கப்பூர் பாலாஜி சொன்ன ஆத்மாநாம் தற்கொலை சட்டென ஞாபகத்திற்கு வந்தது. பாலாஜியின் வீட்டிற்கு மேல்மாடியில்தான் கவிஞர் ஆத்மாநாம் வசித்திருக்கிறார். யாருடனும் பேசாமல் எப்பொழுதும் மௌனமாக வந்து இருக்குமிடம் தெரியாமல் அவ்வப்போது கரையும் நிசப்தமான வெளி ஆத்மாநாமுடையது என அவர் சொன்னார். ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்ட பிறகு பாலாஜி அவர் தூக்குப் போட்டுக்கொண்ட அறையில் படுத்திருந்ததாகவும் கூறினார்.

Thursday, May 5, 2011

ஒரு தலைமுறையின் சாபம்

பல நெடுங்காலம்
மிகவும் கவனத்துடன்
கூர்மை மங்கிய பொழுதுகளில்
தனக்கு முன் வந்துபோன
அத்துனைப் பருவங்களையும் வெறித்துக்கொண்டிருந்தார்
முனிமா பாசார் முனியாண்டி.

கவுச்சி வாடையும்
சொருகப்பட்டிருக்கும் கோடாரி சுருட்டுகளும்
தவறுதலாக விட்டுப்போயிருந்த
நாலு நம்பர் தாட்களும்
மம்டி சாராயமும் என
ஒவ்வொரு தலைமுறையும்
சாபத்தில் நீள்கின்றன
முனியாண்டிக்கு.

வெகுநாட்களுக்குப் பிறகு
இந்தத் தேசம் ஒரு விடுதலைக்குத் தயாராகியிருந்தது.
ஈட்டியையும் கோடாரியையும் கொண்டு வந்தவர்கள்
மெல்ல மெல்ல தகர்த்தனர்.
இருந்த இடம் தெரியாமல்
மறுநாள் காலையில்
முனிமா பாசார் முனியாண்டி
காணாமல் போயிருந்தார்.

சுருட்டு வாசம்
குதிரை காலடி சப்தம்
சாட்டையடி
சாராய வாடை என
அங்கிருந்தவர்களுக்கு
மீதமாக இருந்தது
வெறும் பிரமை.

கே.பாலமுருகன்

Wednesday, April 27, 2011

இந்திய சினிமா : குட்டி - கனவுகள் சிதையும் நகரம்


சுங்கைப்பட்டாணி முன்பொரு காலத்தில் சிட்டுக்குருவிகளின் நகரமாக இருந்தது. இரவில் எங்கிருந்தோ வந்து சேரும் சிட்டுக்குருவிகள் மின்சார கம்பிகளில் அமர்ந்துகொண்டு நகரம் முழுக்க இரச்சலை ஏற்படுத்தியிருக்கும். தொடக்கத்தில் அதிசயமாக இருந்த இந்த வருகை பிறகு நகரப் பரப்பரப்பின் ஓர் அங்கமாகி போனது. அம்மாவுடன் ஜெயபாலன் வாத்தியார் வீட்டுக்குப் போய்விட்டு வரும் வழியில் பழைய யூ.டி.சி பேருந்தில் அமர்ந்துகொண்டு சன்னல் வழியாக அடர்ந்து காணப்படும் சிட்டுக்குருவிகளின் உலகத்தைத் தரிசித்திருக்கிறேன். சதா சிட்டுக்குருவின் எச்சம் அங்கு நடமாடும் மக்களின் மீது விழுந்தபடியேதான் இருந்தது. அதைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளைப் பின்னர் அனைவரும் கற்றுக்கொண்டார்கள். நகரத்தின் அந்தப் பகுதியைக் கடக்கும் எல்லோர் தலைக்கு மேலும் ஒரு நாளிதழ் விரிக்கப்பட்டுப் பிடிக்கப்பட்டிருக்கும்.

Sunday, April 24, 2011

கவிதை: மேசையின் மீதிருந்த வாக்கியம்

பருகிவிட்டு அரைநீருடன்
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.

நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.

Wednesday, April 13, 2011

கவிதைகள்: அப்புவின் நீங்காத உலகம்-2

1. வித்தைக்குப் பிறகும்

வித்தைக்குத் தயாராகும்
சிறுமிக்குப் பிறர் வியக்கக்கூடிய
அதிசயம் அல்லது கோமாளித்தனம் தேவைப்பட்டது.

நாக்கைச் சுழித்து
கருவிழி இரண்டையும்
இடம் மாற்றி அசைத்து அசைத்து
முன்பல்வரிசையை உதடுக்கு வெளியில் வைத்து
சத்தமாகச் சிரிப்பதன் மூலம்
ஒரு வித்தையைக் காட்டிவிட்ட மகிழ்ச்சி
சிறுமிக்கு.

Tuesday, April 5, 2011

சமீபத்திய கவிதைகள்: அப்புவின் நீங்காத உலகம்

கவிதை 1
கொலையுணர்வு

கைக்கு எட்டாத கரும்பலகை
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.

ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின்
பாதி உடல் அழிக்கப்படுகிறது.

எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.

உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு

Saturday, April 2, 2011

பினாங்கு நகரின் மாலையில்-3 (கௌதம் மேனனின் ‘நடுநிசி நாய்களும்’ ஜெயகாந்தனும்)


நான், தேவராஜன், பச்சைப்பாலன், மூர்த்தி அவர்களும் உரையாடிக்கொண்டே அருமாகையிலுள்ள உணவகத்திற்குச் சென்றோம். எல்லோரும் உணவருந்தும்போது கௌதம் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த “நடுநிசி நாய்கள்” படம் குறித்த உரையாடல் தொடங்கியது. சமீபத்தில் முகநூலில் அப்படம் குறித்து சிறிய விமர்சனம் செய்திருந்ததைப் படித்துவிட்டு எழுத்தாளர் பச்சைபாலன் தனியாகச் சென்று அப்படத்தைப் பார்த்து வந்தார். கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் படத்தை எந்தச் சலனமும் பதற்றமும் இல்லாமல் பார்க்கக்கூடிய ஒரு பார்வையாளன் இங்கு இல்லை என்பதுதான் பலவீனமே தவிர படமல்ல எனச் சொன்னேன். 15 ஆண்டுகளுக்கு முன் ஜெயகாந்தன் எழுதி தமிழில் அபாரமான சமூக ஒழுக்க நியதிகளுக்கு எதிரான பாய்ச்சலை ஏற்படுத்திய குறுநாவலான ரிஷி மூலத்தை இந்தப் படம் அடிக்கோடிட்டு ஞாபகப்படுத்துகிறது.

Thursday, March 31, 2011

அம்பு விடுதலும் வில் வித்தையும்- அன்பரசி சுப்ரமணியம் மலேசிய ஆளுமை


(Legend of archery-Ms.Anbarasi Subramaniam)

கடந்த 4 நாட்கள் அம்பு விடுதல் விளையாட்டிற்கான பயிற்றுனர் பயிற்சி பட்டறைக்குச் சென்றிருந்தேன்(archery coaching training). இந்த விளையாட்டைப் பற்றி தெரிந்துகொண்டு நம் இந்திய மாணவர்களைப் பயிற்றுவிக்கலாம் எனும் எண்ணம் உருவாகியபோதே இதுவரை அறிந்திராத இந்த விளையாட்டின் மீது விருப்பமும் ஆர்வமும் கூடியிருந்தது. பெரும்பாலும் இந்தியர்களுக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருப்பதில்லை அல்லது ஓட்டப்பந்தயமும் காற்பந்தையும் தவிர வெவ்வேறு விளையாட்டுகளில் இந்திய இளைஞர்கள் பங்கெடுப்பதில்லை எனவும் ஒரு பரவலான விமர்சனம் உண்டு. குறிப்பாக விளையாட்டுத் துறையில் இந்தியப் பெண்களின் அடைவும் பங்களிப்பும் என்ன? என்பதையே ஆழமாகச் சிந்திக்கக்கூடிய கேள்வியாகும்.

மலேசிய அம்பு விடுதல் கழகத்தின் முதண்மை பயிற்றுனரான திரு.புவனேஸ்வரன் அவர்களைக் கடந்த வாரங்களில் சந்தித்தப்போது அவரும் இப்படியொரு விமர்சனத்தையுடையவராகவே இருந்தார். நம் இந்திய மாணவர்களுக்கு இந்த விளையாட்டில் நல்ல எதிர்காலம் உண்டு எனவும் இதை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் நாம்தான் நமது ஈடுப்பாட்டையும் அக்கறையையும் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மலேசியாவிலேயே அம்பு விடுதல் விளையாட்டிற்கான முதண்மை பயிற்றுனராக பல நாடுகளுக்குச் சென்று தன் திறமையையும் வழிக்காட்டுதலையும் வழங்கி வரும் திரு.புவனேஸ்வரன் நம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். அவரின் மூலமே எனக்கு அம்பு விடுதல் விளையாட்டும் மலேசியாவைப் பிரதிநிதித்து பல நாடுகளில் தன் ஆளுமையை வெளிப்படுத்திய அன்பரசி சுப்ரமணியம்

Monday, March 28, 2011

ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் -3 (யாங்சே நதிக்கரையின் சோகமும் ஒரு தெரு விட்டுச் செல்லும் குழந்தைகளும் (ஹங்காங் சினிமா: மே மற்றும் ஆகஸ்ட்)

“ஜப்பானிய இராணுவத்தால் எரிக்கப்பட்ட
எங்களின் பெற்றோர்கள்
பின்னர் சாம்பலாகி மேகத்தோடு சேர்ந்து
மழையாகிப் பொழிந்து
இன்று யங்சே நதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்”

சீன இசை பின்னணி பெருகி ஒலிக்க சோகம் ததும்ப இரண்டாம் சீன ஜப்பானிய போரில் பெற்றோர்களை இழந்த பல்லாயிரக்கணக்கான சீன சிறுவர்கள் யங்சே நதிகரைக்கு வந்து சேர்கிறார்கள். நதியில் சலனமின்றி ஓடிக்கொண்டிருக்கும் நீரைப் பார்த்து “அப்பா... அம்மா... நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என எல்லோரும் கதறுகிறார்கள். அவர்களின் குரல்களைச் சேமித்துக் கொண்டு மீண்டும் எந்தச் சலனமுமின்றி யங்சே நதி தூரமாகத் தெரியும் வானத்தின் பரந்த விரிப்பின் அடியில் மறைந்து ஓட மே மற்றும் ஆகஸ்ட் என்கிற இந்த ஹங்காங் திரைப்படம் நிறைவடைகிறது.

Saturday, March 26, 2011

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் இளஞ்செல்வன் இலக்கிய விருதளிப்பு விழாவில் ஆற்றிய உரை

அந்த விழாவில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

நேற்று (25.03.2011) மாலை மணி 4 போல கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் இரண்டு மலேசிய எழுத்தாளர்களுக்கு "எம்.ஏ இளஞ்செல்வன் விருது" விருது கொடுத்து கௌரவித்திருந்தது. எம்.ஏ இளஞ்செல்வன் மலேசிய நவீன இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி எனத் தொடர்ந்து அடையாளப்படுத்தப்படுவதற்கு இந்த விருதளிப்பு ஒரு சான்றாகும் என இயக்கத் தலைவர் தெரிவித்திருந்தார்.