Friday, December 26, 2014

பெரும் வெள்ளக்காடாக மாறிக்கொண்டிருக்கும் மலேசியா 2014 : ஆம் ஆண்டின் மூன்றாவது துயரமிக்க கணம்

"என் குடும்பத்தார் சிலர் கடைசியாக மேட்டுப் பகுதிக்குப் போவதாகச் சொல்லிக் கிளம்பினர். அவர்கள் அங்கு உயிருடன் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. நாங்கள் பிழைத்துக் கொண்டோம் என்கிற தகவலும் அவர்களுக்குத் தெரியாது" கெராய் மருத்துவமனையின் இருளுக்குள்ளிருந்து வரும் குரல்கள்.

//bius melalui hidung) kepada seorang bayi dalam gelap untuk menyelamatkan nyawanya selepas generator di Hospital Kuala Krai kehabisan minyak hari ini.//

பிறந்த குழந்தையொன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசர சிகிச்சை வழங்கப்பட்டது. மின்சார நிறுத்தப்பட்டதால் கெராய் மருத்துவமனையில் பெரும் அவதி.




இன்று சுனாமி நினைவு நாள். கடந்த 10 வருடங்களுக்கு முன் 2004ஆம் ஆண்டு ஒரு இறப்பு வீட்டில் பஜனையை முடித்துவிட்டு புக்கிட் மெர்த்தாஜமிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தோம். (அப்பொழுது ஹரே ராமா ஹரே கிருஷ்ணாவில் இருந்த காலம்) தொலைப்பேசியின் மூலம் உலகம் முழுக்க சுனாமி ஏற்பட்டதுள்ளதாக அறியப்பட்டோம். உடனே காரில் இருந்த ஒரு பக்தர் இந்தப் பூமிக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது என்றார். நான் வெளியில் பார்த்தேன். சுகந்தமான காற்றும் அமைதியுமே நிலவியிருந்தது. பிறகெப்படி இது கெட்ட காலம் எனத் தோன்றியது.

உலகில் இந்தக் கணம் எங்கோ ஓர் இறப்பு நடந்து கொண்டிருக்கலாம். ஒரு கொலை நடந்து கொண்டிருக்கலாம். ஒரு குழந்தை பிறந்து கொண்டிருக்கலாம். ஒரு நாட்டில் குண்டு போடப்பட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது யாரோ ஒருவர் பட்டினியில் வாடிக் கொண்டிருக்கலாம். அல்லது ஒரு பெரிய விருந்து நடந்து கொண்டிருக்கலாம். இதில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது பொறுத்தே வாழ்வு. வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டிருப்பவனும் எல்லோருமே கடைசியாக உணர்வது வாழ்க்கை அத்தனை எளிமையானது அல்ல; வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து எல்லோருக்கும் பயம் உண்டு. குறிப்பாக மரணம் குறித்து அனைவருக்கும் தீராத ஒரு திகில் உள்ளுக்குள் உறைந்து போய்க் கிடக்கின்றது. அதிலிருந்து மீள பக்தி, கடவுள், தன்முணைப்பு, துறவு என மனித மனம் பல களங்களைத் தாண்டி வந்துவிட்டது. இதில் எது உண்மை எது பொய் என விவாதிக்கும் சூழல் இல்லாமல் தினம் தினம் ஒரு கார்ப்பரேட் சாமியார்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

சடாரென்று அன்று காரில் அமர்ந்திருந்த அவரும் ஒரு கார்ப்பரேட் சாமியாருக்குரிய பொய்யான சமாதானம் சொன்னதாகவே இப்பொழுது தோன்றுகிறது. ஏதோ ஓர் இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டால் போதும் நம்மை ஒரு பாதுகாப்பான சூழலில் அமர்த்திக் கொண்டுவிட்டோம் என மனம் அமைதியடைகிறது. ஆனால், இது போன்ற சுனாமியின் போது நல்லவன் கெட்டவன், சாமியார் பக்தன், அரசன் ஆண்டி எனப் பேதம் பார்க்காமல் அனைவரையும் அடித்துத் தள்ளித் துடைத்துவிடுகிறது இயற்கை.


பத்து வருடம் நினைவுகளைக் கடந்து நிற்கும் இன்றைய மலேசியா, திடீரென்று பெரும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொடர்ச்சியாகப் பெய்யும் மழையால் மலேசியாவின் ஐந்து மாநிலங்களில் (கிளாந்தான், பேராக், பகாங், பெர்லிஸ் & திரங்காணு) பயங்கர வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அநேகமாக மலேசியாவின் வரலாற்றில் மிகக் கொடுமையான வெள்ளம் எனப் பேசப்படும் 1982ஆம் ஆண்டில் நடந்ததைவிட இவ்வாண்டின் வெள்ளம் பெரும் சரித்திரமாக மாறக்கூடும். இதுவரை 100,000 க்கும் மேற்பட்டோர் வெள்ளைத் துயர்த்துடைப்பு மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,000-ஐ தாண்டுகிறது.

Tuesday, December 23, 2014

பிசாசு: திரைவிமர்சனம் - ஒரு கொடூரமான மன்னிப்பு


வழக்கமாக மிஷ்கின் படம் என்றாலே அதன் ஒளிப்பதிவும் மனிதர்களின் பாத்திரப்படைப்பும் கொஞ்சம் பேய்த்தனமாக மிரட்டலாகத்தான் இருக்கும். அவர் கேமராவைக் கையாளும் விதமே ஒரு சராசரி திரைப்படங்களின் பார்வையாளனைப் பயங்கரமாகத் தொந்தரவு செய்துவிடும்; அவன் பொறுமையைச் சோதித்துவிடும். அப்படிப்பட்ட மிஷ்கின் ஒரு பேய் படத்தை எடுத்திருக்கிறார் என்றால் மிரட்டலுக்கா பஞ்சம்?

மிஷ்கின் படம் எப்பொழுதும் எனக்கு மிகவும் விருப்பம். அவர் தழுவல் கதைகளைக் கையாண்டாலும் தமிழ் சினிமா சூழலில் அவருக்கென்று ஒரு சினிமா மொழி உண்டு. அது தமிழுக்கு மிகவும் அழுத்தமானவை. இதுவரை மிகவும் மோசமாக/இழிவாகக்/ ஒரு பிரதானத்தன்மையற்று காட்டப்பட்ட விளிம்புநிலை மனிதர்களே மிஷ்கின் படத்தில் கவனத்திற்குரிய பாத்திரங்களாக வருவார்கள். மிஷ்கின் பொருளாதார ரீதியில் பல படங்களால் தோல்வி அடைந்தாலும் அவர் ஒரு சிறந்த கதைச்சொல்லி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனாலும், மிஷ்கினின் திரைப்பட அரசியலும் விமர்சனத்திற்குரியதுதான். அதை அப்படியே போற்ற வேண்டிய அவசியமும் இல்லை.

பிசாசு: ஒரு நல்ல பேயின் கதை என்றும், கதாநாயகனின் வீட்டில் தங்கியிருக்கும் பேயின் கதை என்றும் பல பொறுப்பற்ற வலைத்தல விமர்சகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சினிமா விமர்சனம் என்பது ஒரு வாடிக்கையான விசயமாக ஆகிவிட்டது. போகிற போக்கில் கதையின் தொடக்கம் முதல் இறுதிகட்டம் வரையிலான காட்சிகளை வாந்தியெடுத்துவிட்டு, அதை விமர்சனம் என்கிறார்கள்.

படைப்பின் ஊடாக வாழ்வைப் பார்க்கும் மகத்தான ஒரு பார்வைத்தான் விமர்சனம். நமக்கு முன் வழங்கப்பட்ட ஒரு படிமத்தை உடைக்கத் தெரிந்தவனே விமர்சகன். ஒன்றை அப்பட்டமாகப் புரிந்துகொள்வது விமர்சனநிலை அல்ல. அதையும் தாண்ட தெரிந்தவனே விமர்சகன். இல்லையென்றால் விமர்சிக்கக்கூடாது. மிஷ்கின் நிறைய திருப்பமிக்க காட்சிகளைப் படத்தில் கொடுத்திருக்கிறார். அதனை பார்வையாளனே நேரில் கண்டு உணர வேண்டும்.

எந்தப் படம் பார்த்தாலும், எந்தக் கதை படித்தாலும் ஏன் பலருக்கு எவ்விதமான தத்துவப் பார்வையோ உளவியல் பார்வையோ, வாழ்வியல் பார்வையோ எழுவதில்லை? பொதுவாக எல்லோரும் அக்கலைப் படைப்பின் மூலம் சமூகத்திற்கான ஒரு கருத்தைத் தேடுகிறார்கள். பிறகு அதனுடன் ஒத்துப் போகிறார்கள். அவ்வளவுத்தான் என சமாதானம் கொள்கிறார்கள். அவர்களின் தேடல், ருசி அக்கட்டத்தைத் தாண்டி நகர்வதில்லை. படைப்பாளன் பற்றி கவலைக்கொள்ள வேண்டாம். மிஷ்கின் அவர்களால் இவ்வளவுத்தான் தர முடியும் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், படைப்பு அப்படியல்ல. ஒவ்வொருமுறையும் அதனை நாம் நுகரும்போது நமக்கு அது விந்தையான ஒரு திறப்பைக் கொடுக்கக்கூடும். யாரும் பார்த்திராத ஒரு நுட்பமான இடத்தைக் காட்டக்கூடும். இது நுகர்வோனுக்கும் படைப்பிற்குமான சந்திப்பு. அதை ஏன் நாம் சீக்கிரத்திலேயே முடித்துக்கொள்ள வேண்டும்? வெகு எளிமையாகச் சமாதானம் அடைந்துகொள்ள வேண்டும்?

Saturday, December 6, 2014

சிறுநகர் கதைகள் : கவிதை 6, பகலின் வேடிக்கை

பகலின் ஒரு சோர்வான வேளையில்
சூடான தேநீருடன்
நகரத்தை வேடிக்கை பார்த்தப்படி
அமர்ந்திருந்து கொண்டு
வாழ்க்கையை அசைப்போட
எனது அனைத்துப் பலவீனங்களையும் அறிந்த
என் துன்பமான நேரத்தில் மட்டும்
என்னுடன் இருக்கப் பழகிய
ஒரு நண்பன் வேண்டும்.

என்னிடம் பேசவிட்டாலும்
பரவாயில்லை
எனது புகார்கள் குறித்து
அவனிடம் ஆட்சேபனை இருக்காது.

Thursday, December 4, 2014

எது சினிமா?


சினிமா ஒரு மாபெரும் சிம்பனி இசையின் கோர்வையைப் போல. ஒவ்வொரு இசைக்கருவியும் இசைக்கத் துவங்கி அனைத்தும் ஓர் பேரோசையாக மாறி ஓர் உச்சத்தை அடையும் நிலையில் இதற்கு முன்பான நம்மை/ நம் இரசனையை உடைக்கக்கூடும். ஒரு நல்ல கதை மட்டும் நல்ல சினிமாவாகிவிடாது. அல்லது பேரரசை இயக்கச் சொல்லிவிட்டு சந்தோஷ் சிவன் அவர்கள் ஒளிப்பதிவு செய்வதன் மூலம் ஒரு நல்ல சினிமா உருவாகிவிடாது, அல்லது ஏ.ஆர் ரஹ்மான் சங்கர் படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் ஒரு நல்ல படம் உருவாகிவிடாது.

சினிமா என்பது எப்பொழுதுமே ஒரு கூட்டு முயற்சியே. தனியாளாக இருந்து கற்பனை செய்யக்கூடியவை அல்ல சினிமா. அது பலருடைய கனவின் ஆதாரம். இசை, ஒளிப்பதிவு, கலை, துணை இயக்கம், பின்னணி இசை, ஒப்பனை, உடை, குரல் பதிவு, திரைக்கதை, வசனம் எனப் பலதுறைகளின் விரிவாக்கமே சினிமா. இவை அனைத்தையும் உள்ளடக்கியே ஒரு சினிமா முழுமைப் பெறுகிறது.

அந்த முழுமையையும் நாம் நம் இரசனை அடிப்படையிலும் ஆய்வின் அடைப்படையிலும் விமர்சிக்க முடிகிறது. பெரும்பாலும் இரசனைகள் வேறுப்பட்டு நிற்கும். சிலருக்கு சூரிய உதயத்தைக் காட்டினால் பிடிக்கும்; சிலருக்கு சூரிய உதயத்தில் சில பறவைகளையும் சேர்த்துக் காட்டினால் பிடிக்கும். சிலருக்கு படம் இருளில் நகர்வது பிடிக்காது, சிலருக்கு படம் குறைவான வெளிச்சத்தில் போவது பிடிக்கும். ஆனால், சினிமாவில் காட்சியின் தேவைக்கேற்ப வர்ணங்களையும் வெளிச்சத்தையும் எப்படிக் கையாள்வது என ஒரு தேவையே இருக்கிறது. அதனை ஒரு விமர்சகன்/பார்வையாளன் தெரிந்து கொள்வது அவசியம். அதுவும் ஒரு கற்றலே. அதே போல ஒளிப்பதிவிலும் சில நுட்பங்கள் அடங்கியுள்ளன.