Wednesday, June 26, 2013

தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகள் - 2013

மலேசியத் தேர்வு வாரியம் தமிழ் மொழி தாள் 2 ஏற்படுத்திய மாற்றங்களுக்கேற்ப சிறுவர் சிறுகதை எழுதுவது குறித்து நாடெங்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து பட்டறைகள் வழங்கி வருகின்றேன். கடந்தாண்டு மலாக்கா மாநிலம் சென்று தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறுகதை பட்டறை வழங்கியதன் விளைவாக பல மாணவர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதோடு சிறுகதை எழுதும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.

இந்தாண்டும், பினாங்கு, கெடா, கூலிம் எனப் பல பட்டறைகள் நடத்தினேன். கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஜொகூர் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினேன். மாணவர்கள் கற்பனைவளமிக்கவர்களால இருந்தனர். ஆகையால் அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதில் எளிமையாக இருந்தது.

Friday, June 7, 2013

2012ஆம் ஆண்டின் கவனம் பெற்ற நல்ல தமிழ் திரைப்படங்கள்



2012 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் விமர்சகன் அல்லது பார்வையாளன் என்கிற முறையில் பலர் அந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தினார்கள். அவர்களின் வரிசைப்படுத்தல்களுக்குப் பலவிதமான பின்புலம் இருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாம் படங்களையும் ஒரே விமர்சனப் பார்வையில் வைத்து மதிப்பிடுவது தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சாத்தியமில்லை. 

2012ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களைப் பல வகைகளில் பிரித்து விமர்சிக்க வேண்டும். விஜய் விருது விழாவிலும் கூட முக்கியமான படங்கள் ஏதும் விருதுகள் பெறாமல் போனதற்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன். மக்கள் இரசனையை முன்னிட்டுத்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என கட்டாயம் நேர்ந்தால் கண்டிப்பாக விஜய் படமான 'துப்பாக்கி' படத்திற்குத்தான் அனைத்து ஓட்டுகளும் போய் சேரும். ஆனால், சமரசமே இல்லாத தீவிர விமர்சனப் போக்கில் தமிழ்ப்படங்களை அணுகினால் மட்டுமே சல்லடை செய்து மிக முக்கியமான கலையையும் சமூகப் பொறுப்புமிக்க படங்களையும் அடையாளம் கண்டு மக்களின் இரசனையைப் புதுப்பிப்பதோடு சினிமா இயக்குனர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்க இயலும். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்கிற புத்திமதியாக விமர்சனம் ஒருபோதும் இருக்கக்கூடாது. காரணம் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அல்லது கலை மட்டும் அல்ல, அது ஒரு தொழிலும்கூட.

Thursday, June 6, 2013

After earth: திரைவிமர்சனம்

After Earth : ஒரு அறிவியல் புனைக்கதையாக இருந்தாலும்கூட வாழ்க்கை குறித்த பற்பல விசயங்களை உரையாடியுள்ளது. மேற்குலகு சிந்தனையுடைய ஒரு பிரமாண்டமான அறிவியல்/ scinece fiction இயக்குனரால் அப்படிப் படைத்துவிட முடியும் என்பது குறைவான சாத்தியம்தான். ஆனால், இப்படத்தை இயக்கிய night syamalan கீழை சிந்தனையுடைய பின்புலத்திருந்து சென்றவர். 'ஆபத்து என்பதுதான் உண்மை ஆனால் அதன் முன்னால் நாம் அடையும் பயம் என்பது நம்முடைய தேர்வாகும்' என்பது தொடங்கி, எதிர்காலத்தைக் குறித்து ஒருவேளை இல்லாமலே போகக்கூடிய கற்பனைகளை உருவாக்கி அதைக் கண்டு பயப்படுவதுதான் மனித இயல்பு என வில் ஸ்மித் குறிப்பிடுவது வரை, தன் இளைய மகனை அவர் உற்சாகப்படுத்த உபயோகிக்கும் அனைத்துமே தத்துவம்.

'பூமிக்கு அடுத்தது' எனும் தலைப்பில் இரண்டு விசயங்கள் அடங்கியுள்ளன. அது கதையினூடாகவும் வந்துவிடுகின்றன. ஒன்று, பூமியில் பண்டைய காலத்தில் நிகழ்ந்த உயிர் பரிணாமம் மீண்டும் மனித உயிர்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகையில் தலைக்கீழாக நடக்கிறது. எஞ்சியிருக்கும் உயிர்வாழிகள் மீண்டும் டைனசோர் காலத்திற்குட்பட்ட உயிர் பரிணாமத்தை அடைகின்றன. அப்படியொரு சமயத்தில்தான் வேற்றுக்கிரகத்திலுள்ள மனிதர்கள் பூமிக்கு வருவதாகக் காட்டப்படுகிறது. எப்பொழுதும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதைக் காட்டுவார்கள். ஆனால் இப்படத்தில் பூமியே ஒரு வேற்றுக்கிரகமாக இருக்கின்றது. பிரபஞ்சத்தில் இதைப் போல எண்ணற்ற சூரிய குடும்பங்கள் இருக்கலாம் என்றும் ஆங்கே பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடும் என்றும் நம்பிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே இன்னொரு உலகத்திலிருந்து மனிதர்கள் பிரபஞ்ச எல்லையை உடைத்துக்கொண்டு பூமிக்கு வருகிறார்கள்.

Saturday, June 1, 2013

நான் புகைப்படக்காரன் - 1

மூன்று மாதத்திற்கு முன்புத்தான் நிக்கோன் புகைப்படக்கருவி வாங்கினேன். பல நாள் சேமிப்பிற்குப் பிறகு நிக்கோன் D3200 மட்டுமே வாங்க முடிந்தது. ஏறக்குறைய 8 வருடத் திட்டம் இது. புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தும் அதை முறையாகக் கற்றுக்கொள்ள முதலில் ஒருவனுக்கு புகைப்படக்கருவி தேவை.



சராசரியாக நாம் காணும் காட்சிகளை அழகுப்படுத்தி அதன் அற்புதமான தருணங்களை காட்சியாக்கி நிறுத்தி நம்மிடம் காட்டுபவனே புகைப்படக்காரன். சிரிப்பு, அழுகை, நகரம், மரங்கள், மனிதர்கள் என அவனுடைய கண்கள் அலையும் தேசம் அனைத்தையும் உராய்ந்துகொண்டே நகர்கின்றன.