Wednesday, September 14, 2011

மலேசிய - சிலாங்கூர் இளைஞர் கலை கலாச்சார விருது-2011

கடந்த வருடம் முதல் மலேசியாவிலுள்ள சிலாங்கூர் மாநிலம் மலேசிய இளைஞர்களின் கலைத்திறன்களை அங்கீகரிக்கும் வகையில் பல பிரிவுகளில் விருதுகள் கொடுத்து வருகின்றது. இந்த விருதளிப்பை சிலாங்கூர் இளைஞர் முன்னேற்ற இயக்கமும் சிலாங்கூர் மாநில விளையாட்டுத்துறையும் இணைந்து வழங்கி வருகின்றன.

தமிழ், ஆங்கிலம், மலாய் மற்றும் சீன மொழிகளைச் சேர்ந்த கலை இலக்கிய படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

Wednesday, September 7, 2011

சிறுகதை: கோழி தூக்கம்



கடிகாரம் கைப்பட்டு கீழே சரிந்து விழுந்தபோதுதான் முடிவை மாற்றிக்கொண்டேன். நாளை விடுமுறை. வெகுநாட்களுக்குப் பிறகு சிறிதும் பயமில்லாமல் குற்ற உணர்ச்சி இல்லாமல் விடுமுறை எடுக்க மனம் ஒத்துழைத்துள்ளது. நாளைய ஒரு நாளை மட்டும் விட்டுக்கொடுக்கக்கூடாது எனச் சட்டென தோன்றியதில் ஆச்சர்யம். ஒரு கடிகாரம் கீழே விழுவதன் மூலம் என்னிடம் எதையோ சாதித்துவிடுகிறது. அல்லது அந்தச் சத்தம் என் மனதின் இறுக்கங்களைக் கலைத்துவிடுகிறதா?

சன்னல் துணியை இலேசாகத் அகற்றும்போது கீறல் போட்ட காலையின் முதல் வெளிச்சம் இத்துனைக் குளிர்ச்சியாக இருந்ததில்லை. மனம் படர்ந்தது.

Monday, August 29, 2011

பினாங்கு போர் அருங்காட்சியகம்


இரண்டாம் உலக போர் சமயத்தில், தற்காப்புக்காக பிரிட்டிஷாரால் 1930-இல் கட்டப்பட்ட இரகசியக் கோட்டையைத்தான் 2002ஆம் ஆண்டு அருங்காட்சியமாக பொதுமக்களுக்குத் திறந்துவிட்டார்கள்.

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது

காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து பரவவிடும் தகரங்கள், பாதி நீரை நிரப்பிக்கொண்டு பல நாட்களாக இடைச்சட்டத்திலேயே உட்காந்திருக்கும் குவளை, என அனைத்தையும் வெகுநேரம் பார்த்திருக்க முடியவில்லை. எல்லாமும் காலத்தை உறிஞ்சி தனக்குள் நகரவிடாமல் தடுத்து வைத்துக்கொள்கின்றன.

இன்று இந்த வீட்டைக் காலி செய்தாக வேண்டும். தரையில் நான் படுத்திருக்கும் இடத்திலிருந்து மூன்று அடி தள்ளி சன்னல். கதவு திறந்தபடியிருக்க வெளியில் வீடுகளிலிருந்து திட்டு திட்டாக வெளிச்சம் ஒழுகியபடியே இருந்தது. வழக்கமாக மூன்று மாதமொருமுறை இப்படி வேறு வீடு தேடி அலைந்துகொண்டிருப்பது இந்தச் சிறுநகரத்தில் என்னைப் போன்ற குடும்பமற்ற மனிதனுக்கு மரபார்ந்த விசயம். அந்த மரபை உடைக்க முடியாமல் இடம்பெயர்ந்து இங்கு வந்து சேரும்போது நகரம் மழைக்காலத்தில் கரைந்திருந்தது.

Thursday, August 18, 2011

கவிதை: மௌனத்திற்குள் நிகழும் கொலை


1
சுவரோடு ஒரு தூசியைப் போல
படிந்து கிடப்பவர்களும்
படுக்கைக்குள் குழி விழுந்து
மூழ்கிப் போனவர்களும்
சன்னல்களின் இடுக்குகளில்
தன் மூச்சுக் காற்றை
ஒளித்து வைத்தவர்களும்
ஒளி இழந்த கண்களுக்குள்
ஆயிரமாயிரம் இரவுகளின்
தனிமையைப் பத்திரப்படுத்தியவர்களும்

Friday, August 12, 2011

அழகர்சாமியின் குதிரை : நாட்டார் தெய்வமும் ஒரு சாமன்யனும்

இந்தியாவின் ஒரு கிராமத்தில்(மல்லையாபுரம்) நடக்கும் கதை இது. வழக்கம்போல திருவிழா நடத்துவதில் சிக்கல். பங்காளி பிரச்சனைகளால் பலமுறை திருவிழா தடைப்பட்டுப் போகிறது. ஆகையால் கிராமத்தில் மழை இல்லை எங்கும் வரட்சி பரவிக் கிடக்கிறது. சாமியாடியின் மூலம் அழகர்சாமி தன் மனக்குமுறல்களை முன்வைப்பதாக அந்தக் கிராமத்தின் கோடாங்கி நாடகமாடி திருவிழாவை நடத்த வேண்டும் என எல்லோரின் மனதிலும் எண்ணத்தை விதைக்கிறான். கிராமங்களில் திருவிழாவும் நாட்டார் தெய்வங்களும் எல்லை காவல் தெய்வங்களும் மிக முக்கிய தொன்ம குறியீடுகளாகும். அவர்களின் ஒட்டு மொத்த ஆன்மாவையும் பிரதிபலிக்கும் சில நம்பிக்கைகள் சார்ந்த கட்டுமானங்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கின்றன.

Tuesday, August 9, 2011

நேர்காணல்: “முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்” - மஹாத்மன்

நேர்காணல் / நிழல்படம்: கே.பாலமுருகன்

மஹாத்மன் சிறுகதைகள்' எனும் சிறுகதை தொகுப்பின் மூலம் பரவலான வாசக கவனத்தைப் பெற்றவர் எழுத்தாளர் மஹாத்மன். சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு எழுத்துப்பிரதிகளைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் இவர் ஒரு நிலைத்தன்மையற்ற வாழ்வினைக் கொண்டிருக்கிறார். அதையே அவர் படைப்பின் மைய சக்தியாகவும் உருமாற்றுகிறார். தன்னைப் பல நேரங்களில் 'பரதேசி' என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் இவரின் இடமும் இருப்பும் சூட்சுமமானது. ஆனாலும் எல்லாவகை வாழ்வியல் சிக்கல்களோடும் அவர் தன்னை இலக்கியத்தில் பிணைத்தே வருகிறார். 'வல்லினம்' இதழின் நேர்காணலுக்காகச் சுங்கைப்பட்டாணி வந்த அவரிடம் சில கேள்விகள் கேட்டேன். சில இடை கேள்விகள் தொலைபேசிவழி கேட்டுப்பெற்றது. நேர்காணலை எழுதி முடித்தப்பின் வாசித்தபோது ஒரு வெறுமை இருந்தது. அது அவ்வப்போது மஹாத்மன் ஏற்படுத்தும் வெறுமையா என்று புரியவில்லை.
கேள்வி: எப்பொழுது எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவானது? உங்கள் எழுத்தின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

மஹாத்மன்: தைப்பிங் சிறையில் இருக்கும்போது இடைவிடாமல் எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் உருவாயின. சக கைதிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்குக் கடிதங்கள் எழுதினேன். சிறுகதை தொகுப்பிற்கு பிறகு கூடுமானால் இவ்வாண்டில் ஒரு கவிதை தொகுப்பும் அடுத்தாண்டு ஒரு நாவலும் வெளியிட உத்தேசம். அந்த எழுத்துப் பணிகளில் முழு மூச்சாய் என்னை ஈடுப்படுத்திக்கொண்டு வருகிறேன்.

கேள்வி: நீங்கள் உங்களை ஏன் தொடர்ந்து ‘பரதேசி’ என அடையாளப்படுத்திக்கொள்கிறீர்கள்?

மஹாத்மன்: ஒரு காலக்கட்டத்தில் முற்றிலுமாய் பரதேசியாய் அலைந்து திரிந்தேன். படைத்தவன் மீதான என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை வெளிப்படுத்துவதற்காகச் செயல்படுத்தியதுதான் பரதேசி திரிதல். படைத்தவனிடமிருந்து பேரற்புதம், பேராச்சரியம், பேரதிசயம் ஒன்றும் நிகழ்த்தப்படாததால் என் அதிருப்தியை, எதிர்வினையை, காட்டத்தை எழுத்தில் வெளிப்படுத்தி வருகிறேன்.

கேள்வி: ஆரம்பக்காலத்தில் தாங்கள் மஹாத்மன் மற்றும் நண்பர்கள் எனும் பெயரில் எழுதி வந்தீர்கள். யார் அந்த நண்பர்கள்? புனை பெயரின் அவசியம் என்னவாக இருந்தது?

Monday, July 25, 2011

புத்தக அறிமுக உரை: உலகின் ஒரே அலைவரிசை நாட்டுப்புறப்பாடல்கள்

வல்லினம் கலை, இலக்கிய விழா 3-ல் நிகழ்த்தப்பட்ட உரை
நாட்டுப்புற இலக்கியமும் பாடல்களும்

உலகம் முழுக்கவும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெவ்வேறான வடிவங்களில் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. லத்தின் அமெரிக்கா நாட்டுப்புற கதைகள், பிரான்ஸ் நாட்டுப்புறக்கதைகள், வியாட்நாம், என ஒவ்வொரு சமூகமும் நாட்டுப்புற வாழ்வோடு பிணைந்திருக்கின்றன. பாடலும் கதையும்தான் நாட்டுப்புற இலக்கியத்தின் உச்சமான கலை வடிவமாகக் கருதப்படுகின்றன. முதுகுடி மக்களின் வாழ்வும் நிலப்பரப்பும் கதைகளாலும் பாடல்களாலும் ஆனவை.

Friday, July 15, 2011

சினிமா விமர்சனம்: 127 hours : பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்த பாறை


நேற்று Donny Boyle இயக்கி .ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த '127 hours' படத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்திருந்தது. இதற்கு முன்பாக 'buried' படம் பார்த்து இலேசான மன உளைச்சலுக்கு ஆளான மனம் நேற்று மீண்டும் அதை உணர்ந்தது. இப்படத்தின் கதை நகர்ச்சியின் மூலம்  மெல்ல மெல்ல மனநெருக்கடிக்கு ஆளாகிய நான் படத்தின் கடைசி 15 நிமிடக் காட்சிகளில் இறுகி உறைந்து போனேன். இயற்கை மனிதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவன் ஆளுமையை வேரறுக்கும் ஒரு கொலை முயற்சிதான் இப்படம்.

படத்தில் அதிகமான கதைமாந்தர்கள் கிடையாது. படத்தின் மையமாக ஒரு மாபெரும் மலைப்பிரதேசமும் 

Wednesday, July 13, 2011

நாவலும் விமர்சனமும்

2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டி-2 இல் முதல் பரிசை வென்ற என் நாவலுக்கு மலாயாப்பலகலைக்கழக இந்திய ஆய்வியல் துறை பேராசரியர் வெ.சபாபதி எழுதிய "மலேசிய நாவல்கள் ஒரு பார்வை" கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.

விமர்சனம்: நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் (கே.பாலமுருகன்)

      பட்டணப்பிரவேசம் செய்யும் தோட்டப்புறக் குடும்பமொன்றின் சீர்கெட்ட கதையைக் காட்டும் படைப்பு இது.  இந்நாவலின் கதை வழக்கமாகத் தோட்டப்புறக் குடும்பங்களில் காணப்படும் சாதாரண நடைமுறைச் சித்திரமாக இருப்பினும், கதாசிரியரின் கதைகூறும் திறானல் நாவலின் கதை சிறப்படைந்துள்ளது.  கதைகூறுவதில் நனவோடை உத்தியின் கூறுகளும் பின்நவீனத்துவத்தின் கூறுகளும் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் இப்படைப்பு சிறப்பிற்குரியதாகக் காணப்படுகின்றது.  கதாசிரியர் கதை கூறுவதற்குத் தற்கூற்றுமுறையைப் (அகநோக்குநிலை) பயன்படுத்தியுள்ளார்.  இப்படைப்பு இக்கதாசிரியரின் முதல் நாவல் படைப்பு முயற்சியாகும்.  எனினும், முதல் முயற்சி என்று தெரியாத அளவிற்குப் பண்பட்ட தன்மையும் முதிர்ச்சியும் எழுத்தில் காணப்படுகின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள் தங்களின் கதையைக் கூறிச் செல்கின்றனர்.