Tuesday, April 21, 2015

திரைவிமர்சனம்: ஓ காதல் கண்மணி : கலாச்சார முதலாளிகளின் உலகம்

மணிரத்னம் படத்தில் நான் அதிகப்படியாக விரும்புவது அவர் மெனக்கெடும் ஒளிப்பதிவு, கலை, வசனம், இசை மட்டுமே. தமிழ்ச்சினிமாவில் ஒளிப்பதிவை மிக நேர்த்தியாகக் கதைக்களத்தை உயிரூட்டிக் காட்டும் ஒரே இயக்குனராக அறியப்பட்டவர் மணிரத்னம் ஆகும். ஆனால், தற்பொழுது நிறைய புதிய இயக்குனர்கள் அவ்விடத்திற்குள் வந்துவிட்டனர். பீ.சி அவர்கள் வேறு யாருக்காகவது ஒளிப்பதிவு செய்திருந்தாலும், மணிரத்னம் அளவிற்கு அவரிடமிருந்து உழைப்பைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஒளிப்பதிவு

மும்பை நகரின் பெரும்பகுதியைக் காட்டாவிட்டாலும் பீ.சியின் ஒளிப்பதிவில் மும்பை நகர் சிவப்பும் மஞ்சளுமாகப் படர்கிறது. இது தனித்த ஒளிப்பதிவுக்கான அம்சமாகும். மழை நேரத்தில் ஆட்டோக்களும், மனிதர்களுக்கும் மத்தியில் கேமரா அடர்த்தியாக விரிகிறது. பிரகாஷ்ராஜ் தங்கியிருக்கும் வீட்டின் சுவரிலும் படிக்கட்டிலும் சூழ்ந்து நிற்கும் சிவப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

லீலா

இந்தியாவின் எழுத்தாளர் என்றும் பாடகர் என்றும் பரதநாட்டிய கலைஞர் என்றும் பல அடையாளங்கள் உள்ள ஆளுமைமிக்க பெண்மணி. இப்படத்தில் அவருடைய நடிப்பே என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. பிரகாஷ் ராஜ் அவர்களின் யதார்த்தமான நடிப்பிற்கு நிகராக மிகவும் எளிமையாகக் கதையுடன் பொருந்தி நிற்கிறார்.

அதோடுமட்டுமல்லாமல் அவருடைய நினைவுகள் மெல்ல காணாமல் போகின்ற வியாதியாலும் அவர் அவதிப்படும் கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இரண்டு வேறு காட்சிகளில் அவர் வீட்டுக்கு வரும் வழியை மறந்துவிடுகிறார். பிரகாஷ்ராஜ் அவர்களும் கதாநாயகனுமே அவரை வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஒரு காட்சியில் மும்பையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அன்றைய மாலையில் லீலா வீட்டிலிருந்து வெளியேறி மீண்டும் வரவில்லை. அனைவரும் அவரைத் தேடுகிறார்கள். திடீரென மும்பையின் ஒரு சிறுநகரத்தின் நாற்சந்தியில் நைட்டியுடன் மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்குப் போகும் வழியை மறந்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார். மிகவும் அழுத்தமான காட்சி அது. முதுமைக்கே உரிய ஆக நிதர்சனமான பழக்கம் மறதி. அதுவே வியாதியாகிப் போகும்போது உடன் இருப்பவர்களையும் மறந்து அவர்கள் நினைவற்றவர்களாக மாறுகிறார்கள். அப்படியொரு நோயின் விளிம்பிலேயே லீலா கதைக்குள் இடம் பெறுகிறார்.

Saturday, April 18, 2015

நேர்காணல்: தோட்டங்களை விட்டு ஓடிவந்த தமிழர்களின் நிலவியல் வாழ்க்கையே கே.பாலமுருகனின் நாவல்!

http://www.selliyal.com/?p=88939
கோலாலம்பூர், ஏப்ரல் 18 – கே.பாலமுருகன் (படம்) எனும் படைப்பாளி மலேசிய தமிழிலக்கிய சூழலில் சிறுகதைகள், நாவல்கள் மூலம் நன்கு அறியப்பட்ட இளம் படைப்பாளி. தனது 23ஆவது வயதில் அவர் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ எனும் நாவல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் ஆஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய தேசிய அளவிலான தமிழ் நாவல் போட்டியில் 2007ஆம் ஆண்டில் முதல் பரிசை வென்று தமிழ் இலக்கியச் சூழலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதோடுமட்டுமல்லாமல் அவருடைய அந்த நாவல், தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் முஸ்தப்பா அறவாரியத்தின் வழியாக அவருக்கு ‘கரிகாற் சோழன்’ விருதைப் பெற்றுக் கொடுத்தது. நாவல் பயணத்தில் தனித்து விளங்கும் கே.பாலமுருகனின் அடுத்த இரண்டு குறுநாவல்கள் அடங்கிய ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் தொகுப்பு குறித்து அவரிடம் உரையாடியபோது:
unnamed (1)
கேள்வி: ‘ஆப்பே கடையில் நடந்த 236ஆவது மேசை உரையாடல்’ எனும் நாவல் எப்படி உருவானது? அதன் பின்னணி என்ன?
கே.பாலமுருகன்: நான் எனது 11ஆவது வயது முதல் 15ஆவது வயதுவரை ஆற்றோரக் கம்பத்தில்தான் வாழ்ந்தேன். பின்னர் அந்த ஆற்றோரம் இருந்தவர்களுக்கு ஒரு மலிவு அடுக்குமாடி கட்டித்தரப்பட்டது. நாங்கள் சீனக் கம்பத்திலேயே இருந்துவிட்டோம். என் நண்பர்கள் பெரும்பாலானோர் அடுக்குமாடிக்குப் போய்விட்டதால் வாரத்தில் நான்குமுறை அங்குப் போய் அவர்களுடன்தான் இருப்பேன்.

Friday, April 3, 2015

ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் ‘ அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ எனும் சிறுகதையை முன்வைத்து

காலச்சுவட்டின் வெளியீட்டில் எம்.எஸ் மொழிப்பெயர்ப்பில் வெளிவந்த ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனைகள்’ மொழிப்பெயர்ப்பு சிறுகதை தொகுப்பை வாசிக்க நேர்ந்தது. அர்ஜெண்டானாவில் பிறந்த ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ அவர்களின் கதைகள் ஆங்கீலம், போர்த்துகீஸ், ஜெர்மன், வியட்நாமீஸ், பிரெஞ்சு, இத்தாலி, பின்னிஷ், போலிஷ் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு மிகத் தீவிரமாகவும் உரையாடப்பட்டிருக்கின்றன.

 தன்னுடைய கதைகளை ஒரு அதீதமான கற்பனைக்குள் புனையப்படும் உண்மையையே ஆதாரமாகக் கொண்டிருப்பதாகப் பலராலும் விமர்சிக்கப்பட்டதாக ஃபெர்னாண்டோ ஸோரன்டினோ குறிப்பிடுகிறார். இந்தக் கதை தொகுதியைப் படித்து முடிக்கும்போது என்னாலும் அவர் உலகத்திற்குள் அவர் புனைந்திருக்கும் படிமங்களினூடாகவே பயணிக்க முடிகிறது. கதை என்பதோ கலை என்பதோ மேட்டிமைவாத குறிக்கோள்களுடன் அணுகக்கூடியதாக இருத்தல் கூடாது. அது கலைக்கான புரிதலைச் சாத்தியப்படுத்தாது. கலை என்பது பாராபட்சமின்றி மனித குலத்திற்கே உரியது. அது பேசும் உலகை வைத்தே அதன் தீவிரத்தையும் ஆழத்தையும் நம்மால் மதிப்பிட முடியும்.

ஃபெர்னாண்டோ ஸோரண்டினோ அவர்களின் இந்தத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையான ‘அவன் என்னைக் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான்’ முதல் வாசிப்பில் பெருமளவு சமூக உறவு குறித்தான அதிர்ச்சியையே அளித்தது. அதனைத் தாண்டி கதை கொண்டிருக்கும் வாதங்களுக்குள் நுழைய வேண்டி இருந்தது. கதையின் மேல்தட்டிலேயே ஒருவன் தங்கிவிட முடியும். ஆனால், அது கதையின் ஆழத்திற்குள் நம்மை கொண்டு போகாது. பூங்கா ஒன்றில் பத்திரிகை படிக்கச் செல்லும் ஒருவன் திடீரென தன் தலையில் யாரோ குடையால் அடிப்பதை உணர்கிறான். வலியை உண்டாக்காத அதே சமயம் எந்தவகையிலுமே ஆபத்தில்லாத அடி அது. அவனுடைய குடையால் தொடர்ந்து கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான். ஆத்திரம் அடைந்த கதைச்சொல்லி அவனை ஓங்கிக் குத்துகிறான். மூக்கில் இரத்தம் வடிய பலவீனத்துடன் எழுந்து மீண்டும் அவன் தலையில் குடையால் அடிக்கத் துவங்குகிறான். காலம் காலமாக அதே வேலையைச் செய்து செய்து சலித்துப் போனவனின் பாவனையில் அவன் குடையால் அடித்துக் கொண்டேயிருக்கிறான். அவனிடமிருந்து தப்பிக்கக் கதைச்சொல்லி அங்கிருந்து ஓடுகிறான். ஆனால், அந்தக் குடையால் அடிப்பவன் கதைச்சொல்லியைப் பின் தொடர்ந்து வருகிறான். அவனுடன் பேருந்தில் ஏறி எல்லோரும் கேலியாகச் சிரிக்க எந்த உணர்ச்சியுமில்லாமல் கதைச்சொல்லியின் தலையில் அடித்துக் கொண்டே இருக்கிறான்.

இப்படியாக ஐந்து வருடங்கள் கதைச்சொல்லியை அவன் குடையால் தலையில் அடித்து அடித்து, அது ஒரு வழக்கமான விசயமாக மாறுகிறது. அந்தக் குடை அடி இல்லாமல் தன்னால் உறங்க முடியாது என்கிற நிலைக்குக் கதைச்சொல்லி வந்துவிடுகிறான், மேலும் இனி தனக்கு இருக்கும் ஒரே பயம் ஒருவேளை தன்னைக் குடையால் அடித்துக் கொண்டிருப்பவனுக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இனி மிச்ச நாட்களை இந்தக் குடையால் அடிக்கப்படாமல் எப்படி வாழப்போகிறேன் என்கிற சந்தேகங்களுடன் கதை முடிகிறது.

Sunday, February 22, 2015

தற்கொலைகளும் இமையத்தின் பெத்தவனும்: ஒரு விமர்சனம்

அன்றிரவு அ.ராமசாமி ஐயா என்னை அலைப்பேசியில் தொடர்புக் கொண்டு அறைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். எழுத்தாளர் இமையமும் எங்களுக்காகக் காத்திருக்கிருப்பதாகக் கூறினார். மலாயாப்பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான தங்கும் விடுதி அது. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வந்ததில் அ.ராமசாமி ஐயாவையும் எழுத்தாளர் இமையத்தையும் சந்தித்து உரையாடுவது மகிழ்ச்சியாகவே இருந்தது. நானும் தினாவும் அறையிலேயே அவரின் நண்பர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்தக் கல்லூரி மாணவனை எனக்கும் நன்றாகத் தெரியும். ஓர் அதிர்ச்சியான இரவு அது. பிறகு அ.ராமசாமி அறைக்குப் போனதும் இந்தத் தற்கொலை தொடர்பான உரையாடல் கொஞ்சம் நேரம் நீண்டது.

பின்னர் இமையம் நான் எழுதிய ‘நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்’ நாவலைப் பற்றி விசாரித்தார். அக்கதையை முதலிலிருந்து சொல்லத் துவங்கினேன். அ.ராமசாமி இது முக்கியமான நாவலாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார். தோட்டத்துக்குப் புலம்பெயர்ந்ததைப் பற்றி நிறைய நாவல்கள் வந்துவிட்ட சூழலில் தோட்டத்திலிருந்து நகரத்துக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களின் வரலாறாக இந்த நாவல் இருக்கிறது. நாவலின் தேவை பிரிவேக்கமாக மட்டும் இருந்துவிடக்கூடாது, அது காலத்திற்கேற்ப பதிவுகளை முன்னகர்த்த வேண்டும் எனச் சொன்னார். இமையத்துக்கு என் நாவலை அனுப்பி வைப்பதாகச் சொன்னேன். தனது நாவல் ஆய்வுக் கட்டுரையில் அதை இணைத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு இமையம் உறக்கத்தில் ஆழ்ந்தார். பிறகு நாங்களும் அ.ராமசாமியுடன் கொஞ்சம் நேரம் பேசியிருந்துவிட்டு விடைப்பெற்றோம்.

அன்று முழுவதும் தினா கூறிய அந்தத் தற்கொலை தொடர்பான எண்ணங்களே நினைவுக்குள் மீந்திருந்தன. தற்கொலைகள் தொடர்பான ஒரு அழுத்தமான கதை வைத்திருக்கிறேன். ஆனால், அதனைக் கதையாக்க எப்பொழுதும் தடுமாற்றம் இருக்கும். எழுத நினைக்கும்போதெல்லாம் அக்கதை ஒரு மிரட்டலாக தெரியும். மரணத்தை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அது யதார்த்தம். ஆனால், தற்கொலை யதார்த்தம் கிடையாது. அது தூண்டுதல். அது ஒரு வகையான தேர்வு. அந்த உளவியலை இன்னமும் ஆழமாக விவாதிக்காமல்; படிக்காமல் ஏன் எழுத வேண்டும் என்றே தோன்றியது. 

தற்கொலைகள் பற்றி நாம் எவ்வளவோ விவாதிக்கலாம்; பொதுக் கருத்துக் கூறலாம். ஆனால், அந்த வெளிக்குள் குறைந்தது ஒரு நாளாவது நாம் நுழைந்திருப்போமா? நான் இரண்டு நாட்கள் அந்த மனநிலையில் அலைந்த அனுபவம் உண்டு. 2012ஆம் ஆண்டில் அது நடந்தது. இப்பொழுதும் உணர்கிறேன், வெளியிலிருந்து கொண்டு தற்கொலைகள் மீது ஆயிரம் கருத்துகளையும் வசைகளையும் அபிப்ராயங்களையும் சொல்லலாம்தான். ஆனால், அந்த வெளிக்குள் நுழைபவர்கள், அதிலிருந்து மீள்வதும் அல்லது அதிலேயே நீடித்து தன்னைத் தானே கொலை செய்து கொள்வதும் நம் பொதுப்புத்திக்கு அப்பாற்பட்டவை. அவர்களின் தேர்வின் மீது நமக்கு பயம் உண்டு. அதைக் கண்டு உண்மையில் நாம் இரக்கப்படவில்லை; பயப்படுகிறோம். மரணம் தன்னை வேறொரு ரூபத்தில் வந்து அச்சுறுத்துவதாகப் பயம் கொள்கிறோம். அந்தப் பயத்தைக் கருத்துகளாக்கி, வசைகளாக்கி, தண்டனைகளாக்கி வெளிப்படுத்துகிறோம்.

அன்று படுப்பதற்கு முன்பு நானும் தினாவிடம் அதையே கேட்டு வைத்தேன். “தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவனுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும்?”. இருவரிடமும் பதில் இல்லை. வாழ்க்கை எப்படியோ ஒரே ஒரு அழுத்தாக மனத்தைப் போட்டு வதைத்துவிடுவதால் இந்தத் தேர்வை அவர்கள் செய்கிறார்களா? அல்லது ஏதோ ஒரு சிக்கல் அவர்களைத் துரத்துகிறதா? அல்லது சமூகம் அவர்களைத் தூண்டுகிறதா? இமையத்தின் பெத்தவன் சிறுகதை மீண்டும் நினைவுக்கு வந்தது. திடீரென்று மனம் அடையும் சலனங்களுக்கு இலக்கியமே கைக்கொடுக்கிறது. யாரோ ஒரு படைப்பாளி எங்கோ ஒரு படைப்பின் மூலம் வாழ்க்கை குறித்தான எல்லாம் சந்தேகங்களையும் பதற்றங்களையும் பதிவுகளையும் தன் இலக்கியங்களில் சொல்லி வைத்திருக்கிறான். வாசிப்பும் தேடலும் அதனைக் கண்டடைய வைக்கிறது.

Tuesday, February 17, 2015

அ.ராமசாமியுடன் கழிந்த 7 நாட்கள்: பாகம் 1 (இமையத்தின் வருகை)

கடந்த வருடமே முகநூலின் வழி மலேசிய வருகையை எழுத்தாளர் பேராசரியர் அ.ராமசாமி அவர்கள் தெரிவித்திருந்தார். மலேசியாவில் இலக்கிய நண்பர்களைச் சந்திக்க ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். உடனடியாக இரண்டு இலக்கிய சந்திப்புகளுக்குச் சொல்லியிருந்தேன். அ.ராமசாமி ஐயா அவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்பும் அனுப்பியிருந்தேன்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக முன்னமே சிங்கப்பூர் வந்தவுடன் அவருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் உறுதியானது. இது தொடர்பாக நானும் அ.ராமசாமி அவர்களும் பலமுறை முகநூலில் பேசித் திட்டமிட்டோம். 29ஆம் திகதி காலையில் நானும் தினகரனும் விரிவுரைஞர் மணியரசன் அவர்களும் காரில் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது யோகியிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது.

“உங்க ஆளு இங்கத்தான் இருக்காருலா” என்றார். உடனே தெரிந்துவிட்டது அ.ராமசாமி ஐயாவைத்தான் யோகி அப்படிச் சொல்கிறார் என. மலாயாப்பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த அ.ராமசாமி அவர்களால் உடனே பதிய முடியாததால் தடுமாறிவிட்டார். காலை பதிவுக்கான நேரம் தாண்டிவிட்டதால் குறிப்பிட்ட நபர்கள் யாரும் பதிவிடத்தில் இல்லை. பின்னர், யோகிதான் அவரை அழைத்துக் கொண்டு போய் மாநாட்டின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவரை கவனித்துக்கொண்டார்.

பிறகு அ.ராமசாமி அவர்களை மாநாட்டின் துவக்க விழாவிற்கு முன் சந்தித்தேன். பயண அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தோம். மாநாட்டின் தொடக்க விழா பொது உரைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் குழலி அவர்கள் எழுத்தாளர் அண்ணன் இமையம் அவர்களை அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தார். அதுவரை இமையம் வருவது எனக்கு தெரியாது. தமிழர்களின் பொது அடையாளம் சார்ந்த உரையாடலாக இமையத்தின் பேச்சு இருந்தது. அவரின் இயற்பெயர் அண்ணாமலை. பள்ளி ஆசிரியர் ஆவார்.

அன்றைய இரவு இமையத்தின் மாநாட்டுக் கட்டுரை தலைப்பைக் கவனித்துவிட்டு நானும் தினகரனும் கட்டாயம் இந்த உரைக்குச் செல்ல வேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுதும் எங்களுக்குத் தெரியாது அண்ணாமலைத்தான் இமையம் என. ‘2000க்குப் பிறகு வந்த தமிழ் நாவல்கள்’ குறித்து யாரோ அண்ணாமலை பேசப்போகிறார் என நினைத்தோம். பிறகுத்தான் மறுநாள் காலையில் அண்ணாமலை என்பது இமையம் எனத் தெரிந்தது.

அ.ராமசாமி ஐயாவின் மாநாட்டுக் கட்டுரையைக் கேட்க மறுநாள் நானும் தினகரனும் சென்றிருந்தோம். பலர் கொடுக்கப்பட்ட சுருக்கமான நேரத்தில் முழுமையான ஆய்வையும் சுருக்கிச் சொல்ல முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த சூழலில் ஐயா அ.ராமசாமி அவர்கள் 13ஆவது நிமிடம் வரை மிகவும் கச்சிதமாகத் தன் ஆய்வை ஓர் இலக்கிய உரையைப் போல நிகழ்த்தினார். குறிப்பாக அவர் பேசிய தினைக் கோட்பாடுகள் பிரமிக்க வைத்தது. சங்க இலக்கியம் என்பது எத்துனைத் துல்லிதமான நுட்பமான இலக்கியம் என்பதை ஆழமாக உணர வாய்ப்பாக இருந்தது. உடல்கள் தீராப் பசியுடன் இன்னொரு உடல்களைத் தேடி அலைந்து கொண்டேயிருக்கின்றன என அவர் சொல்லும்போது உடல்களின் அரசியல் குறித்த புரிதல் உருவானது. உடல் என்பது வெறும் இரத்தத்தாலும் சதையாலும் ஆனது மட்டும் அல்ல; உடலுக்கு ஒரு மிகப்பெரிய தேவை இருக்கின்றது; உடலுக்கு பசி இருக்கின்றது; உடலுக்கு இயக்கம் இருக்கிறது; வயிற்றுப் பசியைப் போல உடலுக்கும் பசியிருக்கிறது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அன்று மாநாட்டிற்குப் பிறகு நானும் தினாவும் இரவில் அ.ராமசாமி தங்கியிருந்த அறைக்குச் சென்றோம். அங்கு இமையமும் இருந்தார். மலேசிய நாவல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அ.ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் சிலவற்றை கொடுத்தார். மேலும் கோட்பாடுகள் தொடர்பான எளிய விளக்கங்கள் உள்ள ஒரு நூலை நான் கேட்டதற்கிணங்க தமிழகத்திலிருந்து வாங்கி வந்திருந்தார். அதனையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.


மறுநாள் இமையத்தின் உரைக்குச் சென்றோம். அவர் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் போதே நேரம் முடிவடைந்துவிட்டதால் முழுக் கட்டுரையையும் வாசிக்க முடியாமல் போயிற்று. 2000க்குப் பிறகான நாவல்களில் பிராமணியத் தாக்கம் குறைந்து ஒடுக்கப்பட்டோருக்கான வாழ்க்கைகளைச் சொல்லும் நாவல்கள் அதிகம் வரத் துவங்கியதை மிகவும் விமர்சனப்பூர்வமாகக் குறிப்பிட்டார். அவரைப் பாதியிலேயே நிறுத்தும்படி கூறிய அரங்கத் தலைவரின் மீது தவிர்க்க முடியாத கோபம் உருவானது. நானும் தினாவும் முனகிக் கொண்டே அரங்கத்தைவிட்டு வெளியேறினோம்.

-    தொடரும்

கே.பாலமுருகன்