Tuesday, November 19, 2013

வாசிப்புத் திறன் : சோர்ந்து போகும் தலைமுறை

வாசிப்புத் திறன் என்றதும் அதைப் பள்ளியின் பாடநூல் வாசிப்போடு மட்டும் தொடர்ப்படுத்திப் பார்க்கும் பழக்கத்திற்கு நம் சமூகம் ஆளாகியிருக்கின்றது. அதைக் கடந்து மாணவர்களின் மனநிலை, அனுபவத்திற்கேற்ப அவர்களின் கற்பனையாற்றையும் மொழியாற்றலையும் வளர்க்கும்படியான நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் நிலையிலிருந்து இன்றைய தலைமுறை சோர்ந்து போயிருக்கின்றன.

இன்றைய சமூகத்தின் கற்பனையாற்றல் சோர்ந்து போய்விடாமல் இருக்க வாசிப்பை மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும். பாடநூல் வாசிப்பைக் கடந்து பல்வகை வாசிப்பை முன்னெடுக்க வேண்டும். குழந்தைகள் வாசிப்பு என்றாலே பயப்படுகிறார்கள். சிறுவர்கள் அவர்களின் மனநிலை, வயதுகேற்ப அவர்களின் வாழ்வைச் சொல்லும் கதைகள் அடங்கிய நூல்கள் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆகவேதான் வாசிப்பைவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள்.

Harry potter , bed time stories எனப் பலவகை சிறுவர் நூல்கள் மேற்கத்திய வாசிப்புச் சூழலில் கவனத்திற்குரிய வகையில் செயலாற்றி வருவதைப் போல, மலேசிய சிறுவர்களின் வாழ்வைச் சொல்லும் கற்பனையாற்றல் மிகுந்த நூல்கள் இங்கும் வரவேண்டும்; எழுதப்பட வேண்டும்.

Wednesday, November 6, 2013

'Highland tower ' திரை விமர்சனம் - புதையுண்டுபோன மரணங்கள்

'Highland tower ' திரை விமர்சனம் 


11 டிசம்பர் 1993, சரியாக மதியம் 1மணிக்கு, உலு கிள்ளானிலுள்ள 12 மாடி கொண்ட மூன்று அடுக்குமாடி கட்டிடங்களில் ஒன்றான 'highland tower block 1' இடிந்து தரைமட்டமானது. மலேசிய வரலாற்றில் 48 உயிர்களைப் பறித்த அந்த மறக்க முடியாத சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மலாய்த் திரைப்படம் ' highland tower'. 20 வருடங்களாக மலேசிய மக்களின் நினைவுகளில் உறைந்து புதையுண்டுபோன ஒரு துர்சம்பவத்தை இப்படம் மீண்டும் பற்பல பீதியுடன் மீட்டுக் கொண்டு வருகிறது. ஒரு சினிமா என்பது மக்களின் மனசாட்சி என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். காலத்தால் மறக்கப்படும் சில உண்மைகளை மீண்டும் விசாரிப்பதோ அல்லது நினைவுக்குக் கொண்டு வருவதோ ஒரு நல்ல சினிமாவின் செயல்பாடுகளில் ஒன்று.


highland tower இடிந்து மக்கிப் போன ஒரு 12 மாடி கட்டிடத்துடன் இருளடைந்து ஆட்களே இல்லாத நிலையில் மற்ற இரு 12 மாடி கட்டிடங்களும் திகிலுடன் 20 வருடங்களாக அங்கேயே இருக்கின்றன. இடிந்த கட்டிடத்தின் அருகாமையில் இருந்த மற்ற இரு 12 மாடி கட்டிடங்களிலிருந்தும் அந்தத் துர்சம்பவத்திற்குப் பிறகு படிப்படியாக அனைவரும் வெளியேறிவிட்டனர். ஆளே இல்லாத அந்த 200 வீடுகள் கொண்ட 12 மாடி கட்டிடங்கள் 11 டிசம்பரின் கதறலையும் இரத்தப் பழியையும் நினைவுப்படுத்திக் கொண்டும் பற்பல திகில் சம்பவங்களை ஞாபகபப்டுத்திக் கொண்டும் இருக்கின்றன. அதனைக் கதைப்பொருளாகக் கொண்டு எடுக்கப்பட்ட பேய் படம்தான் highland tower. 



1998களின் இறுதிவரை அந்த இடிந்த கட்டிடடத்தை வைத்துப் பல பேய் கதைகள் பேசப்பட்டு வந்தன. மலேசியா முழுவதும் பல வருடங்களுக்கு அந்தச் சம்பவம் ஓர் ஈர்ப்பை உருவாக்கி வைத்திருந்தன. கோலாலம்பூரில் இருக்கும் என் அக்காள் ஒருமுறை இதை வைத்தே ஒரு கதையைச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் பக்கமாகச் செல்லும் வாடகைக் கார்களை  அடையாளம் தெரியாத நபர்கள் நிறுத்த முயன்றிருப்பதாகவும், சிலர் வாகனத்தைத் துரத்திக் கொண்டு சில தூரம்வரை வந்திருப்பதாகவும் வாடகைக் கார் ஓட்டுனர்களால் பல கதைகள் சொல்லப்பட்டன. இது அங்குச் சில காலம்வரை வாடிக்கையாக நிகழ்ந்துள்ளது. 

Monday, November 4, 2013

மூடர் கூடம்: கஞ்சா விற்பனின் அபத்தமான கம்யூனிச உணர்வு


கதைச்சுருக்கம்: மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்கு இரகசியமாக ஓடத் திட்டமிட்டிருக்கும் ஒரு பணக்காரனின் வீட்டில் திருடுவதற்காக நுழையும் நான்கு அடித்தட்டு இளைஞர்கள், எப்படி இறுதியில் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட்வாதிகளாக மாறி எல்லோரையும் விட்டுவிட்டு வெளியேறுகிறார்கள் என்பதே. வர்க்க ரீதியில் பிரிந்து சிதைந்து கிடக்கும் சமூகத்திடம் ஒரு பொதுவான அற உணர்வையும் நியாத்தையும் நிறுவ முயன்று படம் விழிப் பிதுங்கி நிற்கின்றது. 


கடவுள் என நாம் சொல்லக்கூடிய ஒன்று முழுக்க கம்யூனிசம்தான். இந்த நிலம், இந்தக் காற்று, இந்த ஆகாயம், இந்த நிலத்தில் விளையும் அனைத்துமே எல்லோருக்குமானது. ஆனால் கடவுள் வழிபாட்டை/ கடவுள் நம்பிக்கையை முன்னெடுக்கும் சில நாடுகளில் 'கம்யூனிசம்' தடை செய்யப்பட்டிருப்பது ஆச்சர்யமான விசயமாகும். மூடர் கூடம் படமும் முழுக்க கம்யூனிசத்தைத்தான் கொஞ்சம் காலாவதியான முறையில் பேசுகிறது.

Friday, September 13, 2013

கலை இலக்கிய விழா- 5 - என் சிறுகதை தொகுப்பு வெளியீடு- என் நேர்காணலும்

எதிர்வரும் 15.09.2013 ஞாயிற்றுக்கிழமை கலை இலக்கிய விழா - 5இல் என் சிறுகதை தொகுப்பு வெளியிடு செய்யப்படவுள்ளது. மொத்தம் 12 சிறுகதைகள்.


செப்டம்பர் 15 ஆம் திகதி நடக்கவிருக்கின்ற கலை இலக்கிய விழா 5 ல் மூன்று இளம் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீடு காணவிருக்கின்றன. மலேசிய சிறுகதை உலகில் முக்கிய ஆளுமையாக இருக்கும் கே.பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவு’ எனும் நூல் அதில் ஒன்று. எழுத்தாளர் கே.பாலமுருகன் தனது அந்த நூலைப்பற்றி கருத்துகளைப் பகிர்ந்தார்.
k.balamuruganகேள்வி : உங்களுடைய தனி அடையாளமே சிறுகதைகள் என்று சொல்லலாமா?

கே.பாலமுருகன்: ஓர் எழுத்தாளர் மீது உருவாகும் இலக்கிய அடையாளங்கள் என்பது அவரின் ஆரம்பக்கால ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வைத்து மதிப்பிடப்படுகின்றன. அதுவே நிலையான அடையாளமாகவும் போய்விடக்கூடாது. அவ்வகையில் நான் முதலில் எழுதியதே சிறுகதைகள்தான். 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியத் தமிழ்ப்பத்திரிகைகளிலும் உலகலாவிய தமிழ் இலக்கிய இணையத்தலங்களிலும் அதிகமாகச் சிறுகதைகள் எழுதியே இலக்கிய சூழலில் அறிமுகம் பெற்றேன். வல்லினம் இதழுக்கு முதலில் அனுப்பிய படைப்பும் சிறுகதைத்தான். இன்றளவும் வல்லினத்தில் என்னுடைய சிறுகதைகள் அதிகமாகப் பிரசுரம் கண்டுள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் பெரும்பாலானவை ‘வல்லினம்’ இதழில் பிரசுரமானவையே. ‘வல்லினம்’ எனக்கு அளித்த பயிற்சியும் களமும் மிக முக்கியமானவை. என்னிடமிருந்த அலட்சியப்போக்கை அகற்றவும் இலக்கியம் சார்ந்து கூடுதல் கவனம் பெறவும் வாய்ப்பாக இருந்த காலக்கட்டம் அது. மேலும் படைப்பு என்பது எங்குமே தேக்கமடைந்துவிடக்கூடாது. அது நகரும் தன்மையுடையது.

Tuesday, September 3, 2013

ஓர் எழுத்தாளனின் நியாயமான கோரிக்கையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் இயக்கமும்

உடனடியான கவனத்திற்கு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சர்ச்சையும் மலேசியப் படைப்பாளர்களும்.

மக்கள் ஓசை ஞாயிறு பத்திரிகைகளில் தொடர்ந்து 'தயாஜி' எனும் எழுத்தாளரின் மீது அடிப்படை நியாயமற்ற அவதூறுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. (வாசிக்க Makkal Osai, 01.09.2013). ஒரு சங்கத்தின் செயல்பாட்டுக்கு எதிராக ஆற்றிய எதிர்வினைக்குப் பொறுப்பு வகித்து பதிலளிக்காமல் தயாஜி எனும் தனிநபர் உரிமை குறித்துக் கேட்டதற்காக எல்லோரும் ஒன்று திரண்டு பத்திரிகையில் அவருக்கு எதிராக அவதூறுகள் கிளப்புகிறார்கள். மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளும் சேகரிக்கப்பட்டு அதிலுள்ள தனிமனிதர் அவதூறுகள் தொடர்பான வரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் அவர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.(இந்த வரிசையில் நாட்டின் மூத்த எழுத்தாளரான ரெ.கார்த்திகேசு அவர்களும் அடங்குவார்).

இந்த விவாதம் தொடங்கப்பட்டது: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.பெ.ராஜெந்திரன் அவர்கள் கோலாலம்பூரில் நிகழ்ந்த பெண்ணிய இலக்கியத் தொகுப்பு நிகழ்ச்சியின் மேடையில் இலக்கியத்திற்கு எதிரான கண்டனத்திற்குரிய கருத்துகளைச் சொல்லியிருந்தார். யோகியின் மூலம் அவர் ஆற்றிய உரை முகநூல் பார்வைக்கு வந்ததை அனைவரும் அறிவர். வீடியோ பதிவைக் காண: ( http://www.facebook.com/photo.php?v=549519475112486&set=vb.100001633141369&type=3&theater) ஆனால் இதுநாள் வரை தனக்கு எதிராக வந்த அந்தக் கண்டனம் குறித்து அவர் பொதுவில் கருத்துரைக்காதது வருத்தத்தை அளிக்கின்றது. ஆகையால், அதனைக் கண்டித்துத் தொடர்ந்து எழுத்தாளர் சங்கம் நடத்திய சிறுகதை பரிசளிப்பும் தொகுப்பு வெளியீடும் விழாவில் மூன்று எழுத்தாளர்கள் கலந்துகொள்ளவில்லை என்று முடிவெடுத்து முகநூலில் தெரிவித்திருந்தனர். (கே.பாலமுருகன், அ.பாண்டியன், தயாஜி).

Sunday, September 1, 2013

மின்னல் வானொலியில் ஒலிப்பரப்பாகிய எனது நேர்காணல்


இன்று - 01.09.2013-இல் மலேசிய மின்னல் வானொலியில் ஒலிப்பரப்பாகிய என்னுடைய சிறு நேர்காணலில் கானொலி தொகுப்பு இது. எதிர்வரும் 15.09.2013ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் என் சிறுகதை தொகுப்பு வெளியீடு தொடர்பாக இந்த நேர்காணல் அமைந்திருந்தது. நேர்காணல் செய்தவர் எழுத்தாளரும் மின்னல் வானொலியின் அறிவிப்பாளருமான தயாஜி.





Friday, August 23, 2013

Elysium - 21 ஆம் நூற்றாண்டை நோக்கிய மிகைக்கற்பனை சினிமா

Neill Blomkamp என்கிற இயக்குனரின் இன்னொரு மகத்தான அறிவியல் புனைவு ' Elysium'. இவர் ஏற்கனவே 'district 9 ' என்கிற படத்தை இயக்கியவர். 21ஆம் நூற்றாண்டில் பூமி மனீதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக மாறுகின்றது. ஜனத்தொகை பெருக்கம், நோய்கள் என உலகம் சீரழிகிறது. அப்பொழுது இரண்டு வகையான சூழல் உருவாகின்றது. ஒன்று இந்தச் சிதைவிலேயே வாழ்ந்து சாகும் எளிய மனிதர்கள், இன்னொன்று பூமியைவிட்டு எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருக்கும் செயற்கை விண்வெளி உலகத்தில் வாழும் உயர்தர மேல்வர்க்கத்து மக்கள். சக்கர வடிவில் இருக்கும். பூமி அந்த மேட்டுக்குடி வர்க்கத்தால் கண்கானிக்கப்படுகின்றன. அவர்களின் சட்டத்திட்டங்களுக்கேற்ப உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விண்வெளி உலகத்திலிருந்து வரும் முதலாளிமார்களின் தொழிற்சாலைகளில் வேலை வாங்கப்படுகிறார்கள். குற்றம் இழைத்தவர்கள் சிறைக்குப் பதிலாகத் தொழிலாளிகளாக மாற்றப்பட்டு வருடக் கணக்கில் உழைக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

பூமியில் வாழும் எளிய மக்களின் கனவே அந்த விண்வெளி உலகத்தில் எப்படியாவது ஒருநாள் போய் சேர்ந்துவிட வேண்டும் என்பதே. அங்குள்ளவர்களுக்கு வயதாகுவதில்லை, எந்தவிதமான நோயும் அண்டுவதில்லை. பூமியிலிருந்து கள்ளத்தனமாக அந்த விண்வெளி உலகத்திற்குள் நுழைய நினைக்கும் விமானங்கள் தகர்க்கப்படுகின்றன. ஏறக்குறைய கள்ளக்கூடியேறிகளின் மீது ஒரு நாடு விதிக்கும் அத்தனை தடைகளையும் பூமியில் வாழ்பவர்களின் மீது விதிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கற்பனையாக இந்தப் படத்தைக் காண்கிறேன்.

Monday, July 8, 2013

சிறுகதை: புத்தகப்பை

பெக்கான் பாரு முற்சந்தி. அடிக்கடி விபத்து நடந்து பழகிப் போய்விட்ட பகுதி. எப்பொழுதாவது யாராவது நகரத்தில் விபத்து எனச் சொன்னால் உடனே ‘பெக்கான் பாரு முச்சந்தியா?’ என்றுதான் கேட்கத் தோன்றும். எல்லாம் நகரங்களிலும் அப்படிப்பட்ட விபத்திற்குப் பேர்போன ஒரு பகுதி இருக்கும்.

எப்பொழுது வெளியே கிளம்பினாலும் ‘டேய் அந்தப் பெக்கான் பாரு முச்சந்தி பக்கம் பாத்து போ’ என்றுதான் எல்லாம் வீட்டிலும் சொல்வார்கள். நம் வீட்டிலோ அல்லது நண்பர்களிலோ யாராவது அங்கு விபத்துள்ளாகி இறந்திருக்கக்கூடும். அல்லது இடையில் தென்படுவோர் யாரிடம் கேட்டாலும் அந்த முற்சந்தியில் நிகழ்ந்த ஒரு கோரவிபத்துக் குறித்து ஆச்சரியங்களை வைத்திருப்பார்கள்.

கன்சில் சிறிய காரும், எக்ஸ்சோரா பெரிய காரும் அன்று அங்கு பெக்கான் பாரு முற்சந்தியில் மோதிக் கொண்டன. தூரத்திலிருந்து பார்க்கும்போது அதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. வழக்கமான ஒரு காலையை எந்தச் சுரணையுமின்றி கடந்தாக வேண்டும். ஏதோ ஒரு சிலர் மட்டும் காரை ஓரமாக வைத்துவிட்டு விசாரிப்பதற்காக இறங்கிக் கொண்டிருந்தனர். காலை என்பது திட்டவட்டமானது. அதில் ஒரு நிமிடத்தைக்கூட இழக்க யாரும் தயாராக இருப்பதில்லை.

Saturday, July 6, 2013

குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மலர்



தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.

கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.

 rநிலாந்தன்  rசோலைக்கிளி  rயோ. கர்ணன்  rஅ.முத்துலிங்கம்  rதமிழ்க்கவி rமு. நித்தியானந்தன்  rசண்முகம் சிவலிங்கம் rந.இரவீந்திரன்  rஸர்மிளா ஸெய்யித்  rதேவகாந்தன் rபொ.கருணாகரமூர்த்தி rஏ.பி.எம். இத்ரீஸ்   rஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  rகற்சுறா  rசெல்வம் அருளானந்தம்  rலெனின் மதிவானம் rலிவிங் ஸ்மைல் வித்யா rறியாஸ் குரானா  rஎம் .ரிஷான் ஷெரீப்  rம.நவீன்  rஓட்டமாவடி அறபாத்  rஹரி ராஜலட்சுமி  rகருணாகரன்   rமா. சண்முகசிவா  rகறுப்பி  rமோனிகா  rதமயந்தி  rபூங்குழலி வீரன்  rஎம்.ஆர்.ஸ்ராலின்   r திருக்கோவில் கவியுவன்  rஇராகவன்  rலீனா மணிமேகலை rராகவன்  rதேவ அபிரா  rகே.பாலமுருகன்

Wednesday, June 26, 2013

தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகள் - 2013

மலேசியத் தேர்வு வாரியம் தமிழ் மொழி தாள் 2 ஏற்படுத்திய மாற்றங்களுக்கேற்ப சிறுவர் சிறுகதை எழுதுவது குறித்து நாடெங்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து பட்டறைகள் வழங்கி வருகின்றேன். கடந்தாண்டு மலாக்கா மாநிலம் சென்று தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறுகதை பட்டறை வழங்கியதன் விளைவாக பல மாணவர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதோடு சிறுகதை எழுதும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.

இந்தாண்டும், பினாங்கு, கெடா, கூலிம் எனப் பல பட்டறைகள் நடத்தினேன். கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஜொகூர் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினேன். மாணவர்கள் கற்பனைவளமிக்கவர்களால இருந்தனர். ஆகையால் அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதில் எளிமையாக இருந்தது.