Tuesday, January 11, 2011

சிறுகதை விமர்சனம்: சில நேரங்களில் சில ஏவாள்கள் - தொன்ம குறியீடும் ஆதியில் தோற்றுப்போன ஏவாளும்

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசிய பத்திரிக்கைகளில் இதழ்களில் பிரசுரமாகும் கதைகளில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்குப் பரிசுக் கொடுப்பதோடு, அந்தச் சிறுகதைகளை நூலாகத் தொகுத்தும் வெளியிட்டு வருகின்றது. இந்த ஆண்டு மலேசிய தினசரி பத்திரிக்கைகளிலும் இதழ்களிலும் வந்த கதைகளிலிருந்து 20 கதைகள் சிறந்த கதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் கதைகளில் மார்க்ரெட் செல்லதுரை எழுதிய ‘சில நேரங்களில் சில ஏவாள்கள்’ கதை 2009-க்கான சிறந்த கதையாக எழுத்தாளர் பிரபஞ்சனால் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

மார்கரெட் செல்லதுரையின் சில சிறுகதைகளைப் பத்திரிகையில் வாசித்த அனுபவம் உண்டு. இவருடைய இந்தச் சிறுகதை அவருடைய கடந்தகால கதைகளைவிட கொஞ்சம் தரமானதாகவே கருத வாய்ப்புண்டு. இந்தச் சிறுகதை இங்கு விமர்சிக்கப்படுவதற்குக் காரணம் 2009-க்கான சிறந்த சிறுகதையை ஒரு பொதுவான வாசிப்பிற்கும் அதன் மூலம் பெறப்படும் பலவகையான வாசிப்பு அனுபவத்தையும் முன்வைக்க வேண்டும் என்கிற நோக்கமே ஆகும்.

அடர்ந்து தூறும் ஒரு மழைப்பொழுதில் பேரங்காடியினோரமாக ஒதுங்கி நிற்கும் ஏவாளிடமிருந்து சிறுகதை தொடங்குகிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில் அவள் தனக்கு மிகப் பழக்கமான ஒருவனை வெகுநாட்களுக்குப் பிறகு சந்தித்துவிடுகிறாள். கதையில் அவன் ‘சாத்தானாக’ கருதப்படுகிறான். வீட்டிற்கு வந்ததும் கதையினூடே அவன் ஏவாளின் உடலையும் அழகையும் இரசித்தப்படியே இருக்கிறான்.

1. கலை தொடர்பற்ற தாவுதலும் பிரச்சாரத்தன்மையும்

இதற்கிடையில் கதை மிகவும் வலுவாக நடைமுறை யதார்த்தத்திலிருந்து ஒரு பிரச்சார பிரதிக்குள் நுழைகிறது. சாத்தான் உங்கள் உலகம் எப்படி இருக்கிறது என ஏவாளிடம் வினவ, உடனே ஏவாள் உலகில் நிகழும் கொடுமைகள் பற்றி பிரசங்கம் செய்யத் துவங்குகிறாள். இன்றுதான் அவள் புதியதாக உலகக் கொடுமைகளைத் தரிசித்தவள் போல மிகவும் போலியாகப் பதற்றமும் வெறுப்பும் அடைகிறாள். வெகு நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரு நண்பர்கள் என்கிற தோரணையில் நம்மை இழுத்துக் கொண்டு போகும் கதை திடீரென தொடர்பற்ற நிலையில் பெரும் குறியீடுகளுக்குள் தாவுகிறது. அவன் சாத்தானாகவும் அவள் உலகில் தோன்றிய முதல் பெண்ணாகவும் மாறிவிடுகிறார்கள். இயற்கை பேரிடர், புயல் வெள்ளம் என அரைப்பக்கத்திற்குச் செய்திகள் போல விவாதம் நீள்கிறது.

Saturday, January 8, 2011

மலேசியத் தமிழிலக்கியத் துறையில் சிறுகதை – எழுத்தாளர் சீ.முத்துசாமி

இன்று (08.01.2011) சனிக்கிழமை கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் ஏற்பாட்டில் ஒரு நாள் தமிழிழக்கிய கருத்தரங்கம் சுங்கைப்பட்டாணியில் நடைப்பெற்றது. சிறுகதை சார்ந்து மூத்த எழுத்தாளர் சீ.முத்துசாமியும், கவிதை துறை சார்ந்து மூத்தக் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களும், எ.ம்.இளஞ்செல்வன் அவர்களின் இலக்கிய பார்வை என்கிற தலைப்பில் கோலாலம்பூர் எழுத்தாளர் மு.அன்பு செல்வனும் கருத்தரங்கத்தை வழிநடத்தினார்கள். காலை 9.00 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கம் மூன்று அமர்வுகளாகவும் விவாத அரங்கமும் என மாலை மணி 4.30 வரை நீடித்து முடிவுற்றது.

எழுத்தாளர் சீ.முத்துசாமி தன் உரையில் இலக்கிய பிரக்ஞை இல்லாமல் போய்விட்ட தமிழாசிரியர்கள் குறித்து தனது எதிர்வினையைக் கடுமையாக முன்வைத்தார். பல நூறு தமிழாசிரியர்கள் உள்ள கடாரத்தில், இன்றைய நிகழ்விற்கு 3 பேர் கூட வராதது பெரிய தேக்கமாகவும், இலக்கியத்தில் ஆர்வமில்லாமல் போய்விட்ட ஆசிரியர்களை அடையாளம் காட்டுகிறது எனவும் கூறினார். மேலும் தற்போதைய சில இளம் படைப்பாளர்களுக்கு வரலாறு சார்ந்த ஆர்வமும் பிரக்ஞையும் குறைவாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் இந்த இலக்கியம் பற்றியும் இலக்கிய வரலாறு பற்றியும் தகவல்களும் ஆர்வமும் குறைவாக இருப்பதற்கு முக்கியக்காரணமாக சீ.முத்துசாமி முன்வைத்தது, கல்விதுறையில் தமிழ் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் இல்லை, மேலும் இலக்கியத்தைப் பற்றிய அறிமுகமும் இருப்பதில்லை எனச் சாடினார். மொழி சார்ந்து அடிப்படை அறிவைப் பெற வேண்டுமென்றால் அந்த மொழி சார்ந்து மண்ணில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும் என அழுத்தமாகக் கூறினார்.

Tuesday, January 4, 2011

கரிகாற்சோழன் விருதளிப்பு நிகழ்வு 2010

ஜனவரி முதலாம் நாள் சிங்கப்பூரில் மிகவும் ஆடம்பரமான ஓர் அரங்கில் கரிகாற் சோழன் விருதளிப்பு விழா தொடங்கியது. தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு.இராசேந்திரன் அவர்களும் பாடலாசிரியரும் கவிஞருமான நா.முத்துகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் இந்த விழாவை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். செயலாளர் சுப.அருணாச்சலம் அவர்கள் வழிநடத்த நிகழ்வு வரையறுக்கப்பட்ட நேரத்தின்படி நடைப்பெற்றது.

மண்டபத்தினுள் நுழைந்ததுமே சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சிக்காக நேர்காணல் ஒன்று செய்யப்பட்டது. கரிகாற் சோழன் விருது மூலம் புலம் பெயர் இலக்கியங்களின் மீது உலகப் பார்வையை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் முஸ்தப்பா அறக்கட்டளையின் இந்த முயற்சி பாராட்டத்தக்கவையாகும் எனக் குறிப்பிட்டேன்.

துணைவேந்தர் திரு.இராசேந்திரன் உரையாற்றும்போது இந்தாண்டிற்கான விருதுகள் வழங்கப்படுவதிலிருக்கும் தகுதிகளை மேலோட்டமாகக் கூறினார். மலேசியாவின் தொழிலாளர்களின் வாழ்வையும் நகர்ச்சையையும் அவர்களின் விளிம்பு நிலையையும் காட்டும் வகையில் எழுதப்பட்ட நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள் ஒரு அருமையான நாவல் எனவும் குறிப்பிட்டார். ஒரு தோட்டத் தொழிலாளியின் குடும்பத்தில் நடக்கும் மனச்சிதைவுகளை மையமாகக் கொண்டு பட்டணத்தில் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதைக் காட்டும் நல்ல நாவல் எனவும் குறிப்பிட்டார்.

Friday, December 31, 2010

துண்டிக்கப்பட்ட நகரத்துக் கிழவர்கள்

நகரத்தில் எப்பொழுதும் ஆங்காங்கே பல தொடர் அல்லது தொடர்பற்ற நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒன்றோடு ஒன்று சார்ந்திருக்காததைப் போலத் தோன்றினாலும் நகரம் என்கிற மையம் அனைத்தையும் இணைத்து வைத்திருக்கின்றது. நகரத்தின் மீது நீங்காது சில கனவுகள் வெயில் போல எரிந்தபடியே பரபரப்பிற்கு மத்தியில் படிந்திருக்கின்றன. கட்டற்ற நிலையில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் சிலவற்றைத் தொகுக்கும்போது சில மனிதர்களும் சில நிகழ்வுகளும் தற்செயலாகச் சிக்கிக் கொள்கின்றன.

நிதானமின்றி ஒருவர் மீது ஒருவர் அவசரத்தையும் வெறுப்பையும் தூக்கி வீசிக் கொண்டு பரபரத்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எங்காவது ஓர் இடத்தில் இதற்கெல்லாம் தொடர்பே இல்லாமல் ஒரு கிழவர் அமர்ந்திருக்கக்கூடும். அவர்தான் நகரம் இழந்துவிட்டிருக்கும் அமைதியின் கடைசித் தூதர்போல எல்லாவற்றையும் அசைபோட்டுக் கொண்டு உட்காந்திருப்பார். அவர் யார்? அவர் யாரை அல்லது எதை அப்படிக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற கேள்வி எழ வாய்ப்புண்டு.

இதுபோல ஒரு மதியத்தில் நான் அத்தகைய ஒரு கிழவரை நகரத்தில் சந்திக்க நேர்ந்தது. முன்பு ஒருமுறை இதே கிழவரைத்தான் சம்சு கடையிலிருந்து துரட்டப்படுவதையும் அவர் படியிலிருந்து இடறிச் சாலையில் விழுவதையும் பார்த்திருக்கிறேன். எல்லாரையும் போல அதைக் கணநேர வேடிக்கையாகக் கடந்து போய்விட்டேன். இன்று மீண்டும் அதைவிட மோசமான தோற்றத்துடன் ஆப்போய் காய்க்கறி கடையில் மூலையில் அமர்ந்திருக்கக் கண்டேன். பலநெடுங்காலத்தின் சோர்வு அவர் முகத்தில் ஒட்டியிருந்தது. உடலைச் சுத்தப்படுத்திக்கொள்ளாமல் குறைந்தது இரண்டு மாதம் அவர் இந்த நகரத்தில் சுற்றி அலைந்திருக்க வேண்டும்.

Saturday, December 25, 2010

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருது

2007 ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ வானவில்லும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய தமிழ் நாவல் எழுதும் போட்டியில் முதல் பரிசை வென்ற எனது நாவலான " நகர்ந்துகொண்டிருக்கும் வாசல்கள்" தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கரிகாற்சோழன் விருதைப் பெற்றுள்ளது.

பரிசளிப்பு விழா வருகின்ற 1.01.2011 ஆம் தேதி மாலை மணி 6.00க்கு சிங்கப்பூரில் நடைப்பெறவுள்ளது.

கே.பாலமுருகன்
மலேசியா


Friday, December 24, 2010

பாராட்டு விழா - மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு தியான ஆசிரம இலக்கிய விருது

நாவலாசிரியர் உயர்திரு அ.ரெங்கசாமி ஐயாஅவர்களுக்கு நாளை (24/12/2010), வெள்ளிக்கிழமை இரவு 8-லிருந்து 10 வரை கூலிம் தியான ஆசிரமத்தில் (பாயா பெசார், லுனாஸ், கூலிம் கெடா) பாராட்டு விழா நடைப்பெறவிருக்கின்றது. ஐயா அவர்களின் முக்கிய படைப்புகளில் உயிர் பெறும் உண்மைகள், புரட்சிப்பூக்கள், புயலும் தென்றலும், புதியதோர் உலகம், நினைவுச்சின்னம், இமயத்தியாகம், லங்காட் நதிக்கரை போன்ற நாவல்களும் அடங்கும். 2005-யில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய மலேசியத் தமிழ் நாவல் எழுதும் போட்டியில் இவரது 'லங்காட் நதிக்கரை' என்ற நாவல் முதன்மைப் பரிசை வென்றது.
நன்றி: தகவல்: மு.வேலன்

வருடந்தோறும் ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களையும் கூலிம் தியான ஆசிரமம் சிறப்பித்து வருகிறது. இந்த வருடம் வரலாற்று நாவலாசிரியரான அ.ரெங்கசாமி விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்படவிருக்கிறார். அவருக்கு வழங்கப்படும் இந்த இலக்கிய விருது மிகவும் முக்கியமானதாகும். வல்லினம் தைப்பிங் சந்திப்புக்கூட்டத்திற்குப் பிறகு அறியப்பட்ட மகிழ்ச்சிக்கரமான விசயம் என்பதால் அ.ரெங்கசாமி எனும் படைப்பாளியின் பங்களிப்பும் இருப்பும் மேலும் பெரியதொரு கவனத்திற்குச் செல்கிறது. அவர் தொடர்ந்து இன்னமும் ஆழமாக வாசிக்கப்பட வேண்டும்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி

Sunday, December 19, 2010

அநங்கம் இதழுக்காக செழியனுடன் ஒரு சந்திப்பு- சிங்கப்பூரில்

-எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் கதையை நேர்மையாகச் சொல்வதுதான் நல்ல சினிமா- செழியன்
(செழியனின் சினிமா பார்வை மூன்றாம்தர பார்வையாளன்/வாசகனையும் சினிமா பற்றிய நுகர்வெளிக்குள் கொண்டு வந்துவிடும் என்றே சொல்லலாம். ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக இதழின் வாசகர்களுக்கு அவர்களின் பிரக்ஞைக்கு ஏற்ப அதே சமயம் விரிந்த உளவியல் பார்வையுடன் தன் விமர்சனங்களை முன்வைக்கக்கூடியவர் செழியன். அவரது எல்லாம் சினிமா கட்டுரைகளிலும் மனத்துவ
அணுகுமுறையின் மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடிந்தது. எல்லாம் விளைவுகளுக்கும் ஓர் உளவியல் கட்டுமானங்களை முன்வைத்து அந்தச் சினிமாவின் மையப்புள்ளியை அடையக்கூடிய மொழி செழியனுடையது.விகடன் வெளியீடாக இவரது சினிமா விமர்சனம் தொகுப்பு இரு பிரிவுகளாக வெளிவந்திருக்கின்றன.)

கே.பா: சிறுகதையை அல்லது நாவலைப் படமாக்குதல் போன்ற மேற்கத்திய சினிமா பாணியைத் தமிழ் சூழலுக்குக் கொண்டு வந்தால் வெற்றிப் பெறும் அல்லது இரசனை மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

செழியன்: நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். பெரும்பாலும் நமது குறும்படங்களும் சினிமாக்களும் இயக்குனரின் கதையாகவும் தயாரிப்பாளரின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ற கதையாகவும் தான் இருக்கிறது. நம்மிடையே கதைகளே இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன. குறும்படத்தின் வடிவமே ஒரு மாற்று ஊடகம் அதாவது altanative media என்பதுதான். மாற்று ஊடகம் என்றால் வெகுஜன சினிமா செய்ய முடியாததை இந்த ஊடகம் செய்ய முடிந்தால் அது மாற்று ஊடகம் எனலாம். உதாரணத்திற்குத் தீவிர இதழை வெகுஜன இதழுக்கு எதிரான பண்பாட்டில் நடத்துவது போலத்தான். அதுபோல தீவிரமான ஒரு விஷயத்தைப் பதிவு செய்யும் சினிமாத்தான் மாற்று முயற்சிகளை முன்னெடுக்க முடியும். இந்த மாற்று முயற்சியைக் கொண்டு அவரவரின் சொந்தக் கதைகளைப் படமாக்குவதைவிட ஏற்கனவே கண்கானிக்காமல் விடப்பட்ட நமது தமிழ் அடையாளங்களை கலாச்சாரங்களை, வாழ்வைப் படமாக்கினால் தீவிர இரசனை மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். எத்துனையோ தமிழ்
கலாச்சாரத்தை முன்னிறுத்தக்கூடிய சிறுகதைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன, அதையெல்லாம் நாம் முறையாகப் படமாக்கினால் கண்டிப்பாக முக்கியமான கவனம் பெறும்.

தும்பி: மாணவர்அறிவியல் இதழ்

மாணவர்கள் அறிவியல் என்பதை எப்பொழுதிலிருந்து அறியத் துவங்குகிறார்கள்? இந்த ஒரு கேள்வி ஒவ்வொருவரின் வாழ்வின் அறிதல் முறைகளை நோக்கியும் மிக வேகமாகப் பாயக்கூடியது. ஒரு கல்லை எடுத்து ஆற்றில் வீசியதும் மூழ்கிவிட்ட கல்லின் தன்மையை உணர்வதிலிருந்தும் எட்டுக் கால் பூச்சிக்கு எட்டுக்கால் எனச் சொல்வதிலிருந்தும்கூட நம்முடைய முதல் அறிவியல் சிந்தனை உருவாகியிருக்கக்கூடும். அறிவியல் நம் அன்றாட வாழ்வின் மிக நெருக்கமான ஒன்று. நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவற்றையும் தெரிந்துகொள்வதில் நமக்குக் கிடைக்கும் கூடுதலான புலனே அறிவியல்.

அறிவியல் குறித்த கவனம் சமீபத்தில் இந்தியர்கள் மத்தியில்  அதிகமாகவே குவிந்துள்ளது என்றே சொல்லலாம். பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ள வரும் பெற்றோர்களின் அக்கறை அறிவியல் பக்கம் திரும்பியிருப்பதை உணர முடிந்தது. இனி அறிவியல் பாடம் அடுத்த வருடம் முதல் தமிழ் மொழியிலேயே போதிக்கப்படும்.  இந்த ஆண்டு முதல் "தும்பி" எனும் அறிவியல் காலாண்டிதழ் சு.யவராஜனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத் தூவங்கியிருக்கிறது.

தும்பி அறிவியல் இதழ் மாணவர்களுக்காகப் பல சிறப்பு அம்சங்களுடன் பல அரிய தகவல்களை மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் காலாண்டிதழாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ஆகவே தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துகொண்டிருக்கும் தும்பியை வாங்க விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சல் செய்யலாம்.(yuvatozhi@gmail.com)
விண்வெளி, பசுமை அறிவியல் என ஒவ்வொரு இதழிலும் ஒரு தனிச் சிறப்பான தலைப்புகளுடன் எளிமையான ஆய்வுகளுடன் அறிவியல் மீதான மாணவர்களின் இடைவெளியையும் பயத்தையும் நீக்கும் விதத்தில் உங்களை நாடி வருகிறது “தும்பி”.

சிறப்பான தாளில் முழு வண்ணப் பக்கங்களுடன் வெளிவரும் தும்பியின் விலை வெறும் ரி.ம 2.50 மட்டுமே. இதுவரை தும்பி 2010 ஆம் ஆண்டின் சிறப்பிதழாக இரண்டு இதழ்கள் வெளிவந்துள்ளன. 

கே.பாலமுருகன்.
மலேசியா

Saturday, December 11, 2010

சிறுகதை: சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

1. தவிப்பெனும் கடல்

நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும். இருளில் சொற்கள் கரைந்துகொண்டிருக்கும் உணர்வைப்பெற முடியும். மின்சாரக் கம்பத்தில் வெகுநேரம் களைத்து அமர்ந்திருந்த சிட்டுக்குருவியின் படப்படப்பு மட்டும் அதீத ஓசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. நான் வீட்டிலிருந்து ஓடிவந்த முதல் நடுநிசி அது. நகரம் செத்து அநேகமாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கக்கூடும்.
“செவன் இலவன் எங்காது இருக்குமா?”

எதிரில் யாரும் இல்லை. கேட்டு விடவேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததில் எப்படிக் கேட்க வேண்டும் எனத் தொடர்ந்து பயிற்சி செய்துகொண்டே நடந்தேன். முதலில் சந்திப்பவரிடம் அதைக் கேட்டுவிட்டு கூடவே ஏதாவது சாப்பிடுவதற்குக் கொஞ்சம் பணமும் கேட்டுத்தான் ஆக
வேண்டும். நகரத்து சாலை இருளுக்குள் ஓடி மறையும்வரை எனது கண்களுக்குள் சூன்யமாக விரிந்து கிடந்தது. கண்கள் வழக்கமாக மாயையை உருவாக்கி அனுமானங்களின் மூலம் கிளர்ச்சியுறுவதில் பழகி போனதாயிற்றே. யாரோ வருகிறார்கள், வந்து விடுவார்கள், ஒரு வயதான பெண்மணி வருகிறாள் எனத் தொடர்ந்து தூரத்தைப் பற்றிய கனவை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. எங்காவது களைத்து மயங்கிவிட்டால் என்கிற உடல் குறித்த பயமும் தொடர்ந்து ஒட்டிக் கொண்டது.

Wednesday, December 8, 2010

மலாய் மொழிப்பெயர்ப்புக் கவிதை -2 Karuna (தமிழில் கே.பாலமுருகன்)

உன்னைப்போல உருவெடுத்த
இந்தப் பட்டாம்பூச்சியின் சிறகுகளாய்
ஓர் அமைதியான இரவில்
நான் மாறியிருந்தேன்.

இல்லாமலிருக்கும் நிலையிலேயே
நம் இல்லாமல் போகும் நாட்களை நோக்கி
தவம் கிடக்கிறேன்.
உன் வருகையைப் போல
உன் விடைப்பெறுதலும்
அதிசயமாக நிகழ்கிறது எனக்குள்.

எரிந்துவிட்ட உன் புகைப்படத்தின்
சாம்பல்களில்
உன் பொய்யான முகமும்
நான் எதிர்பார்க்கும் ஒரு செய்தியும்
ஒட்டிக்கிடக்கின்றன.

காலம் நகர்த்த முடியாத
ஒரு கெட்டியான இருளில்
கருகி விழுகின்றன
என் சிறகுகளும்
இந்தப் பட்டாம்பூச்சியும்.
இதுவும் ஒரு அதிசயம் போல.

மலாயில்: Karuna
தமிழில்: கே.பாலமுருகன்