Saturday, July 6, 2013

குவர்னிகா - 41வது இலக்கியச் சந்திப்பு மலர்



தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும்  விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.

கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான  களம்.

 rநிலாந்தன்  rசோலைக்கிளி  rயோ. கர்ணன்  rஅ.முத்துலிங்கம்  rதமிழ்க்கவி rமு. நித்தியானந்தன்  rசண்முகம் சிவலிங்கம் rந.இரவீந்திரன்  rஸர்மிளா ஸெய்யித்  rதேவகாந்தன் rபொ.கருணாகரமூர்த்தி rஏ.பி.எம். இத்ரீஸ்   rஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  rகற்சுறா  rசெல்வம் அருளானந்தம்  rலெனின் மதிவானம் rலிவிங் ஸ்மைல் வித்யா rறியாஸ் குரானா  rஎம் .ரிஷான் ஷெரீப்  rம.நவீன்  rஓட்டமாவடி அறபாத்  rஹரி ராஜலட்சுமி  rகருணாகரன்   rமா. சண்முகசிவா  rகறுப்பி  rமோனிகா  rதமயந்தி  rபூங்குழலி வீரன்  rஎம்.ஆர்.ஸ்ராலின்   r திருக்கோவில் கவியுவன்  rஇராகவன்  rலீனா மணிமேகலை rராகவன்  rதேவ அபிரா  rகே.பாலமுருகன்

Wednesday, June 26, 2013

தமிழ் மொழி பயிற்சிப் பட்டறைகள் - 2013

மலேசியத் தேர்வு வாரியம் தமிழ் மொழி தாள் 2 ஏற்படுத்திய மாற்றங்களுக்கேற்ப சிறுவர் சிறுகதை எழுதுவது குறித்து நாடெங்கும் சென்று மாணவர்களைச் சந்தித்து பட்டறைகள் வழங்கி வருகின்றேன். கடந்தாண்டு மலாக்கா மாநிலம் சென்று தமிழ் ஆசிரியர்களுக்குச் சிறுகதை பட்டறை வழங்கியதன் விளைவாக பல மாணவர்கள் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டதோடு சிறுகதை எழுதும் ஆற்றலையும் பெற்றுள்ளனர்.

இந்தாண்டும், பினாங்கு, கெடா, கூலிம் எனப் பல பட்டறைகள் நடத்தினேன். கடந்த வாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஜொகூர் மாநிலத்திற்குச் சென்று அங்குள்ள துன் அமீனா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி பயிற்சிப் பட்டறையை வழிநடத்தினேன். மாணவர்கள் கற்பனைவளமிக்கவர்களால இருந்தனர். ஆகையால் அவர்களுக்குப் பயிற்சி வழங்குவதில் எளிமையாக இருந்தது.

Friday, June 7, 2013

2012ஆம் ஆண்டின் கவனம் பெற்ற நல்ல தமிழ் திரைப்படங்கள்



2012 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் விமர்சகன் அல்லது பார்வையாளன் என்கிற முறையில் பலர் அந்த வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களை வரிசைப்படுத்தினார்கள். அவர்களின் வரிசைப்படுத்தல்களுக்குப் பலவிதமான பின்புலம் இருந்தன. ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாம் படங்களையும் ஒரே விமர்சனப் பார்வையில் வைத்து மதிப்பிடுவது தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சாத்தியமில்லை. 

2012ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களைப் பல வகைகளில் பிரித்து விமர்சிக்க வேண்டும். விஜய் விருது விழாவிலும் கூட முக்கியமான படங்கள் ஏதும் விருதுகள் பெறாமல் போனதற்கும் இதுதான் காரணம் என நினைக்கிறேன். மக்கள் இரசனையை முன்னிட்டுத்தான் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என கட்டாயம் நேர்ந்தால் கண்டிப்பாக விஜய் படமான 'துப்பாக்கி' படத்திற்குத்தான் அனைத்து ஓட்டுகளும் போய் சேரும். ஆனால், சமரசமே இல்லாத தீவிர விமர்சனப் போக்கில் தமிழ்ப்படங்களை அணுகினால் மட்டுமே சல்லடை செய்து மிக முக்கியமான கலையையும் சமூகப் பொறுப்புமிக்க படங்களையும் அடையாளம் கண்டு மக்களின் இரசனையைப் புதுப்பிப்பதோடு சினிமா இயக்குனர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்க இயலும். இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்கிற புத்திமதியாக விமர்சனம் ஒருபோதும் இருக்கக்கூடாது. காரணம் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அல்லது கலை மட்டும் அல்ல, அது ஒரு தொழிலும்கூட.

Thursday, June 6, 2013

After earth: திரைவிமர்சனம்

After Earth : ஒரு அறிவியல் புனைக்கதையாக இருந்தாலும்கூட வாழ்க்கை குறித்த பற்பல விசயங்களை உரையாடியுள்ளது. மேற்குலகு சிந்தனையுடைய ஒரு பிரமாண்டமான அறிவியல்/ scinece fiction இயக்குனரால் அப்படிப் படைத்துவிட முடியும் என்பது குறைவான சாத்தியம்தான். ஆனால், இப்படத்தை இயக்கிய night syamalan கீழை சிந்தனையுடைய பின்புலத்திருந்து சென்றவர். 'ஆபத்து என்பதுதான் உண்மை ஆனால் அதன் முன்னால் நாம் அடையும் பயம் என்பது நம்முடைய தேர்வாகும்' என்பது தொடங்கி, எதிர்காலத்தைக் குறித்து ஒருவேளை இல்லாமலே போகக்கூடிய கற்பனைகளை உருவாக்கி அதைக் கண்டு பயப்படுவதுதான் மனித இயல்பு என வில் ஸ்மித் குறிப்பிடுவது வரை, தன் இளைய மகனை அவர் உற்சாகப்படுத்த உபயோகிக்கும் அனைத்துமே தத்துவம்.

'பூமிக்கு அடுத்தது' எனும் தலைப்பில் இரண்டு விசயங்கள் அடங்கியுள்ளன. அது கதையினூடாகவும் வந்துவிடுகின்றன. ஒன்று, பூமியில் பண்டைய காலத்தில் நிகழ்ந்த உயிர் பரிணாமம் மீண்டும் மனித உயிர்கள் முற்றிலுமாக அழிந்துவிடுகையில் தலைக்கீழாக நடக்கிறது. எஞ்சியிருக்கும் உயிர்வாழிகள் மீண்டும் டைனசோர் காலத்திற்குட்பட்ட உயிர் பரிணாமத்தை அடைகின்றன. அப்படியொரு சமயத்தில்தான் வேற்றுக்கிரகத்திலுள்ள மனிதர்கள் பூமிக்கு வருவதாகக் காட்டப்படுகிறது. எப்பொழுதும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதைக் காட்டுவார்கள். ஆனால் இப்படத்தில் பூமியே ஒரு வேற்றுக்கிரகமாக இருக்கின்றது. பிரபஞ்சத்தில் இதைப் போல எண்ணற்ற சூரிய குடும்பங்கள் இருக்கலாம் என்றும் ஆங்கே பூமியைப் போலவே மனிதர்கள் வாழக்கூடும் என்றும் நம்பிக்கைகள் உள்ளன. அதன் அடிப்படையிலேயே இன்னொரு உலகத்திலிருந்து மனிதர்கள் பிரபஞ்ச எல்லையை உடைத்துக்கொண்டு பூமிக்கு வருகிறார்கள்.

Saturday, June 1, 2013

நான் புகைப்படக்காரன் - 1

மூன்று மாதத்திற்கு முன்புத்தான் நிக்கோன் புகைப்படக்கருவி வாங்கினேன். பல நாள் சேமிப்பிற்குப் பிறகு நிக்கோன் D3200 மட்டுமே வாங்க முடிந்தது. ஏறக்குறைய 8 வருடத் திட்டம் இது. புகைப்படக்கலையில் ஆர்வம் இருந்தும் அதை முறையாகக் கற்றுக்கொள்ள முதலில் ஒருவனுக்கு புகைப்படக்கருவி தேவை.



சராசரியாக நாம் காணும் காட்சிகளை அழகுப்படுத்தி அதன் அற்புதமான தருணங்களை காட்சியாக்கி நிறுத்தி நம்மிடம் காட்டுபவனே புகைப்படக்காரன். சிரிப்பு, அழுகை, நகரம், மரங்கள், மனிதர்கள் என அவனுடைய கண்கள் அலையும் தேசம் அனைத்தையும் உராய்ந்துகொண்டே நகர்கின்றன.

Thursday, May 23, 2013

Gandhi Is My Father – ஓர் இந்துத்துவ தந்தையின் அதிகாரம்


வரலாற்றில் பற்பல முறை உடைத்து உடைத்து மீண்டும் கட்டியெழுப்பப்பட்டவர் காந்தி. எழுத்தாளர் ஜெயமோகன் முதல் நடிகர் கமல்ஹாசன் வரை எல்லோராலும் மீண்டும் மீண்டும் புனையப்பட்ட அடையாளம்தான் காந்தி. சிலர் காந்தியின் அமைதி போராட்டத்தை வைத்து இந்தியாவின் மிகச் சிறந்த எதிர்ப்புணர்வு உண்ணாவிரதம்தான் எனக் கூறினார்கள். சிலர் காந்தியைச் சுதந்திர தந்தை என அடையாளப்படுத்தினார்கள். இன்னும் சிலர் காந்தி தன் ஆண்மையைத் தன் பேத்திகளிடமே பரிசோதித்துப் பார்த்தவர் என அவரின் ஒழுக்கத்தை விமர்சித்தார்கள். மேலும் சிலர் காந்தியின் அரசியல் தவற்றை வன்மையாகக் கண்டித்தனர். சிலர் காந்தியை இராமருக்கு நிகரான சமய அடையாளமாகப் புனைந்தார்கள். ஒரு பக்கம் அவரைக் கட்டியெழுப்பியவர்களும் இன்னொரு பக்கம் அவரை நிர்முலமாக்கியவர்களும் காலம் முழுக்க இருக்கவே செய்தார்கள்.

காந்தியின் வரலாற்று படமான ‘காந்தி’ 1982-இல் வெளியாகி ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. ஒரு வழக்கறிஞர் எப்படி இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல்வாதியாக மாறுகிறார் எனும் வரலாற்றை தகவல்கள் அடிப்படையில் மட்டுமே கொண்டு போய் சேர்த்த அப்படத்தை விட்டுவிடலாம். காந்தி குறித்து எந்தக் கேள்வியுமே எழுப்பாத முயற்சி அது. ஆனால், பிறகு வெளிவந்த இரு முக்கியமான படங்கள் கவனத்திற்குரியவை. இரண்டுமே இந்தி திரைப்படங்கள் ஆகும். இவ்விரண்டு படத்தையும் புரிந்து கொள்வதற்கு நமக்கு காந்தியைப் பற்றிய குறிப்புகளும் அவரின் அரசியல் ஈடுபாடுகளும் தெரிந்திருக்க வேண்டும்.

Saturday, May 11, 2013

சூது கவ்வும் திரைவிமர்சனம்: புத்திசாலித்தனமில்லாத குற்றம்


சூது கவ்வும்: நலன் குமரசாமி இயக்கத்தில் வெளியான, 'பீட்சா' , 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' வரிசையில் விஜய சேதுபதியின் அடுத்த முக்கியமான திரைப்படம். திரைக்கதை எவ்வித கொள்கையும் இலட்சியமும் இல்லாமல் வெறுமனே நம்மை இழுத்துக் கொண்டு நகர்கிறது. மிகப்பெரிய மிரட்டலான ஆள் கடத்தலை, சிதறுண்டு சிறிய அளவில் கடைப்பிடிக்கும் விஜய சேதுபதியுடன் சென்னையில் பிழைப்பின்றி போகும் மூன்று இளைஞர்கள் இணைகிறார்கள்.

அதில் ஒருவன் திருப்பூரில் நயந்தாராவிற்குக் கோவில் கட்டிவிட்டு மக்களால் அடித்துத் துரத்தப்பட்டவன். மற்றொருவன் காலையிலேயே சீக்கிரமாக எழுந்து குளித்துவிட்டு தண்ணியடிப்பவன், மற்றொருவனும் ஒரு பெண்ணால் வேலையைப் பறிக்கொடுத்தவன். சென்னையில் உதாசினப்படுத்தப்பட்ட இளைஞர்கள் எப்படி வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டு குற்றவாளிகளாக மாறுகிறார்கள் என்பதை மிதமானபோக்கில் அலட்டலில்லாமல் காட்டிச் செல்கிறது. 

Tuesday, April 2, 2013

கலை சினிமாவின் மாற்று தரிசனம்... 3 / சாட்டை : கல்வி நிறுவனம் என்கிற குழாய்


புது இயக்குனர் அன்பழகன் தன் முதல் படத்திலேயே கல்வியையும் கல்வி நிறுவனத்தையும் விமர்சித்துப் படம் எடுத்திருப்பது ஆரோக்கியமான தொடக்கமாகவே கருதுகிறேன். தன் முதல் படங்களில் பெரும்பாலும் கவனத்தை ஈர்க்கப் பொதுவாக கமர்சியல்தனங்களையே நாடுவார்கள். அன்பழகன் தனக்கிருந்த ஒரு மாற்றுக் கருத்தைப் படத்தின்வழி சமூகத்திடம் பகிர்ந்துள்ளார். இதனாலேயே அவரை 2012ஆம் ஆண்டின் கவனிக்கத்தக்க இயக்குனர் எனக் குறிப்பிட்டிருந்தேன்.

சமீபத்தில் இந்தித் திரை உலகில் தொடங்கிய அமீர்கானின் ‘தாரே சமீன் பார்’ படத்தின் மூலம் கல்வி குறித்து ஒரு பிரக்ஞை சினிமா உலகில் உருவாகியுள்ளது என்றே சொல்லலாம். அதனையடுத்து, 3 இடியட்ஸ்(இந்தி), நண்பன்(தமிழ்), டோனி, இப்பொழுது சாட்டை, ஹரிதாஸ் என இப்பட்டியல் நீள்கிறது. தங்கர் பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ படம் கல்வியை நோக்கிய விமர்சனம் கிடையாது. அப்படம் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை எக்கத்தொனியில் வெளிப்படுத்தியது.

Monday, March 25, 2013

கமலின் நினைவுகள்

கதாநாயக வழிபாட்டின் கீழ் புதைந்துபோன சினிமா சமூகத்தின் மனநிலையில் வளர்க்கப்பட்ட என்னிடமிருந்து கமல் என்கிற பிம்பத்தைப் பிரித்தெடுக்கவே முடிந்ததில்லை. முதன் முதலாக திரையரங்கில் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது 'கட்டை' கமலஹாசன் திரையில் தோன்றியதும் நாற்காலியின் மீது ஏறி கைத்தட்டினேன். அப்பொழுது எனக்கு வயது 7. வீடு திரும்பியதும் அதே போல காலை மடக்கிக் கட்டி கமலைப் போல செய்து எல்லோரின் கைத்தட்டலையும் பெற்றேன். வெறும் சிறுவனாக இருந்த காலங்களில் என்னை முற்றிலும் கவர்ந்தவர் கமல்.

இன்று ஒரு சினிமா விமர்சகனாக கமல் என்கிற தனிமனிதனின் சில வரலாற்று அரசியல் கருத்துகளின் மீது எதிர்வினையாற்றும்போது அவ்வப்போது அந்தச் சிறுவன் எனக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கின்றான். தமிழ் சினிமாவின் மோசமான கதாநாயகப் பிம்பங்களிலேயே காலத்திற்கும் தன்னை சினிமாவிற்காக மாற்றி மாற்றி தொய்ந்துபோன கமலின் மீது கூடுதல் மரியாதை உருவாகின்றது. சினிமாவிலும் நடிப்பிலும் கமல் என்றுமே நம் காலத்து கலைஞன்தான். 

Saturday, March 16, 2013

பரதேசி திரைவிமர்சனம் :கவனிக்கப்படாத ஒரு துயரவெளி


'ஒரு மாலை நேரத்தில் ஓய்வாக அமர்ந்து நாக்கின் ருசிக்காக நாம் உறிஞ்சும் ஒரு தேநீர் என்பது வெறும் நீராலும் தேயிலையாலும் மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல. அதில் ஓடுவது வலுக்கட்டாயமாக உறியப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்களின் இரத்தம் சகோதரர்களே.'

பாலாவின் முற்றிலும் மாறுபட்ட திரைப்படம் இது. 1939ஆம் ஆண்டில் சாலூர் கிராமத்திலிருந்து பச்சை மலைக்கு ஆசை வார்த்தைகள் காட்டி தேயிலை வேலைக்காக அழைத்துச் செல்லப்படும் தமிழர்களின் கதை இது. புலம்பெயர்ந்த ஓர் இனத்தின் வரலாற்று படமாக இதை அடையாளப்படுத்தலாம். இன்று இந்தியாவைத் தவிர்ந்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் புலம்பெயர்ந்தவர்களே. கூலி வேலைக்காக நாடு விட்டு நாடு வந்து உழைப்புச் சுரண்டப்பட்டு உறிஞ்சி சக்கையாக வெளியே வீசப்பட்டவர்களின் அவலக் குரலைப் பாலா எவ்வித அதிகார நெடியும் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளார். 19ஆம் ஆண்டின் தொடக்கம்தான் தமிழர்கள் கொத்தடிமைகளாக்கப்பட்ட காலக்கட்டம். அவர்கள் எப்படிக் கொத்தடிமைகளாக்கப்பட்டு பின்னர் சிறுக சிறுக முதலாளிய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை வரலாற்று பிழையில்லாமல் பாலா தமிழ் சினிமாவிற்குக் கொடுத்துள்ளார். 

புலம்பெயர்வு சமூகம்

இப்படம் சாலூர் கிராமத்தில் தொடங்கி பச்சைமலையில் முடிகிறது.1939ஆம் ஆண்டின் பின்னணி என்பதே அதிக உழைப்பிற்குரியது. நிஜமான கிராம சூழலையும், பேச்சு வழக்கையும் கவனமாகக் கையாண்டுள்ளார்கள். வழக்கமான பாலா படத்தில் வரும் எந்தவித திரட்சியான மிரட்டலான கதாநாயகப் பிம்பங்கள் மிகைப்படுத்தப்பட்ட முயற்சிகள் இல்லாமல் சர்வதேச புலம்பெயர் சமூகத்தின் வலியை வரலாற்றை பதிவு செய்துள்ளார். (இந்தப் பாராட்டுக்குரிய படம் இது).